செவ்வாய், 4 மார்ச், 2025

ஒன்றிய அரசை எதிர்த்து நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் போர் முழக்கம்

 


விடுதலை நாளேடு
தமிழ்நாடு

* 1938ஆம் ஆண்டிலேயே ஹிந்தியை எதிர்த்து வெற்றிக் கொடி நாட்டியவர் தந்தை பெரியார்

* ஹிந்தித் திணிப்பு என்பது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு!
* ஹிந்தியை ஏற்றால்தான் நிதி ஒதுக்கீடு என்பதுதான் ஜனநாயகமா?
* இது வெறும் கட்சிப் போராட்டமல்ல – மக்கள் போராட்டம்
* 234 இடங்களிலும் எங்களை வெற்றி பெற வைக்கப் போகிறீர்கள்!
இறுதி வெற்றி எங்களுக்குத்தான் – நாங்கள் இங்கு
ஒன்றுபட்டு நிற்கிறோம் – போர்ச் சங்கு ஊதுகிறோம்!

சென்னை, பிப்.19 தமிழ்நாட்டின் சட்டப்பேரவைக்கான 234 இடங்களிலும் இந்தியா கூட்டணியே கைப்பற்றும் நிலையை ஹிந்தியை திணிப்பதின்மூலம் ஒன்றிய அரசே ஏற்படுத்துவதாகவும், ஒன்றுபட்டு நிற்கின்ற எமக்கே இறுதி வெற்றி என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டார்.
இந்தியா கூட்டணியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
நேற்று (18.2.2025) மாலை ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் மும்மொழித் திணிப்பைக் கண்டித்து இந்தியா கூட்டணியின் சார்பில் சென்னை சிங்காரவேலர் மாளிகை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரைற்றினார்.
அவரது கண்டன உரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடும், நெகிழ்ச்சியோடும் கூடியிருக் கின்ற இந்தக் கூட்டம் – இந்தக் கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டம் புதுமையான ஓர் அறைகூவல் கூட்டம்.
நம்மை வம்புக்கு இழுக்கக் கூடிய ஓர் ஆட்சி – ஒன்றிய ஆட்சி- காவி ஆட்சி – ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஆட்சி- தூங்காதே, எங்களை எதிர்த்து நில் என்று சொல்வதற்காக ஹிந்தி திணிப்பின் மூலமாக, தங்களுடைய முடிவுரையை எழுதக் கூடிய ஓர் ஆட்சி – இப்போது தயாராக வந்திருக்கின்ற நேரத்தில், இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஒரு மாறுதலை தெளிவாக நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளவேண்டும்.

அய்யா, அண்ணா தத்துவம்
இங்கே அமைச்சர்கள் இருக்கிறார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள், கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள், போராட்டக் களத்தையே வாழ்வாகக் கருதிக் கொண்டிருக்கின்ற எண்ணற்ற தோழர்கள் இங்கே இருக்கிறார்கள். இவ்வளவு திரளாக வந்திருக்கக்கூடிய மக்கள், கண்டனம் தெரிவிக்கக்கூடிய இந்தக் கூட்டத்தினுடைய அடிப்படை என்னவென்று சொன்னால், இதுவரையில் கண்டன ஆர்ப்பாட்டம், கிளர்ச்சி என்று சொன்னால், அதில் தலைவர்கள் இருப்பார்கள், பேசுவார்கள்.
ஆனால், இங்கே நம்முடைய துணை முதலமைச்சர் உள்பட, அமைச்சர்கள் உள்பட எல்லோரும் கலந்துகொள்கிறார்கள் என்றால், அண்ணா அவர்கள் சொன்ன தத்துவம், அய்யாவின் கருத்தோட்டம் இவை அத்துணையும் இங்கே முன்னால் நிற்கிறது- இந்தத் திணிப்பை எதிர்க்கின்ற, கண்டனத்தைத் தெரிவிக்கின்ற கூட்டம் இது!
மிரட்டிப் பார்க்கிறார்கள்!
அது என்னவென்று சொன்னால், அவர்கள் மிரட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள்; இந்த ஆட்சியை கொஞ்சம் உருட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள்.

நிதியைத் தராமல் நாம் கொஞ்சம் இழுத்துப் பார்த்தால், இவர்கள் வழிக்கு வருவார்கள் என்று நினைக்கிறார்கள்.
ஆனால், உங்கள் கனவு பலிக்காது; இது தமிழ் மண்; இது பெரியார் மண், திராவிட மண்; இந்த மண் உரிமை முழக்கத்தைச் சொல்லக்கூடிய மண் என்ற காரணத்தினால்தான், இங்கே எங்கள் துணை முதலமைச்சரிலிருந்து, அமைச்சர்கள்வரை இந்தப் போராட்டக் களத்தில் இருக்கிறார்கள்.
இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றவர்கள், கலந்து கொண்டிருக்கின்ற தலைவர்களைப் பார்த்தாலே உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
இரு மொழித் திட்டத்திற்கு வித்திட்ட நம்முடைய அண்ணா அவர்கள், முதலமைச்சராக இருந்த காலகட்டத் திலும் சொன்னார்கள்; பல நேரங்களிலும் சொன்னார்கள். எங்களை மிரட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கக் கூடாது என்பதற்காகச் சொன்னார்கள்.

‘‘எங்களுக்குப் பதவி என்பது அது மேல் துண்டு. ஆனால், கொள்கை என்பது எங்களுக்கு வேட்டி போன்றது -அதை மறந்துவிடாதீர்கள்’’ என்று அண்ணா சொன்னார்!
அதனை உணர்ந்த காரணத்தினால்தான், நாம் ஒன்றிய அரசை எதிர்த்து, அவர்களுடைய கொள்கைகளை எதிர்த்து முழங்கப் போகின்ற ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளலாமா? என்று யாரும் நினைக்கவில்லை.

தாளமுத்து நடராசன் பரம்பரை!

திராவிட முன்னேற்றக் கழகத்தில், அமைச்சர்களாக இவர்கள் வரவில்லை; கொள்கைக்காரர்களாகத்தான் வந்திருக்கிறார்கள். தாளமுத்து, நடராசன் பரம்பரை என்பதைக் காட்டுவதற்காகத்தான் வந்திருக்கின்றார்கள்.
அந்த உணர்வோடுதான் இந்தக் கண்டனக் கூட்டம், தலைவர்களின் முழக்கங்கள் அத்தனையும் நடைபெறு கின்றன.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்றெல்லாம் தொடங்கி, ஒரே கலாச்சாரம் என்று வந்தார்கள்.
அந்த ஒரே கலாச்சாரத்தில் என்ன இருக்கிறது என்று சொன்னால் நண்பர்களே, அந்தச் சூட்சமத்தை தந்தை பெரியார் அவர்கள், 1938 இல், தமிழறிஞர்களை கூட்டி, சிறப்பாகச் சொன்னார்.

வட சென்னைதான் தொடக்கம்!
நம்முடைய மொழி என்பதற்காக மட்டும் நாம் எதிர்க்கவில்லை. இதே வடசென்னைதான் அப்போதும் அடித்தளமிட்டது. அதே வடசென்னைதான் மீண்டும் ஒரு போர்க் குரலை எழுப்புவதற்கு களம் காணுவதற்காக வந்திருக்கிறது. தொடக்கம் இங்கேதான் – முடிவும் இங்கேதான் நடக்கப் போகிறது.
எங்கே தொடங்கினார்களோ ஹிந்த ஆதிக்கத்தை – அதன் முடிவு வரக்கூடிய அளவிற்கு இருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு அடையாளம் சொல்லவேண்டுமானால் நண்பர்களே, நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.
நம்முடைய துறையில் மிக முக்கியமாக இருக்கக்கூடியது – பண்பாட்டுத் துறை.
ஹிந்தியை நீங்கள் எதிர்க்கிறீர்களே என்று சொன்னார்கள். அந்தக் காலகட்டத்தில்தான் ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்கள் ஹிந்தியைத் திணித்தார்கள். இப்போது இருக்கின்ற காவி அமைச்சர்களுக்கு இந்த வரலாறு தெரியாது.

ஆச்சாரியாரின் அறைகூவல்!

நீங்கள் ராஜகோபாலாச்சாரியாரைவிட மிகவும் புத்திசாலி என்றோ, அரசியல் வியூகத்தை வைத்திருக்கின்றோம் என்றோ யாரும் தப்புக் கணக்குப் போடாதீர்கள்.
எந்த ஆச்சாரியார்?
அன்றைக்குத் தந்தை பெரியார் அவர்கள் ஆரம்பித்த அந்தப் போராட்டம் – அறிஞர் அண்ணா, ‘‘சர்வாதிகாரி’’ என்று அந்தப் போராட்டத்தில் சர்வாதிகாரியாக இருந்தார். இன்றைய இளைஞர்களுக்கு இந்த வரலாறு தெரியவேண்டும்.
இன்று, இளைஞர்களுக்கே தலைமை தாங்கக் கூடிய ஒருவர், இந்தக் களத்திலே நின்று கொண்டிருக்கின்றார் என்று சொன்னால், அவருக்குப் பதவி முக்கியமல்ல; அவருக்குத் துண்டு முக்கியமல்ல; வேட்டிதான் முக்கியம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, கொள்கைதான் முக்கியம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு எங்களுடைய துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் வந்திருக்கிறார்கள்.

அமைச்சர்கள் என்ற முறையில் அவர்கள் இங்கே வரவில்லை. அதற்குப் பதிலாக, இந்த இயக்கத்திற்காக உயிரைக் கொடுக்கக் கூடிய தொண்டர்கள் என்ற உரிமையோடு அவர்கள் இங்கே வந்திருக்கின்றார்கள் என்று சொன்னால், இங்கே எழுதாத இந்த சுவரெழுத்தை எழுதிக் கொள்ளவேண்டும்.
அண்ணா அவர்கள் அந்த முழக்கத்தைத்தான் சொன்னார்கள். 1938இல் ஹிந்தி எதிர்ப்புப் போர் நடந்தது என்று வரலாறு உண்டு. இந்த வரலாற்றை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.
ராஜகோபாலாச்சாரியார் அன்றைக்கு தோற்றுப் போனார். ஆனால், இந்த இயக்கம் ஒருபோதும் தோற்காது – வெற்றி பெற்றே தீரும் என்பதற்கு அடையாளம் என்னவென்றால், ஒன்றை அடையாளத்திற்குச் சொல்கிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இங்கே வந்து இருக்கக்கூடிய என்.வி.என். சோமுவின் மகள். அன்று நடந்த போராட்டத்தில் கருவுற்ற தாய்மார்கள் எல்லாம் ஹிந்திப் போராட்டத்திற்காக சிறைச்சாலையேகினர். சிறையிலேயே குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.
கருவுற்ற தாய்மார்கள் எல்லாம் இந்த இயக்கத்திற்காகப் பாடுபட்டபோது, ஆட்சிக்கு வருவோம்; நாம் அமைச்சர்களாக ஆவோம்; அல்லது பதவிகளைப் பெறுவோம் என்று நினைக்கவில்லை.

பதவியல்ல முக்கியம்!
உரிமைகளைப் பெறுவதற்காகத்தான் இந்தக் கூட்டம் இருக்கிறதே தவிர, வெறும் பதவி என்பது உரிமைப் பெறுவதற்கான ஒரு வழி – ஒரு மார்க்கமே தவிர வேறொன்றுமில்லை.
அப்போது ஆச்சாரியார், ‘‘ஆள்வது நானா? இராமசாமி நாயக்கரா?” என்று கேள்வி கேட்டார்.
அதற்குத் தந்தை பெரியார் அவர்கள் பதில் சொன்னார்.
காலத்தின் கோலம் எப்படி ஆயிற்று என்று சொன்னால், ஹிந்திதான் இருக்கும் என்று சொன்னார். அதுமட்டுமல்ல, அவர் ஒரு நாணயமான எதிரி என்கின்ற காரணத்தினால் வெளியிட்டார்.
‘‘ஹிந்தியை நாங்கள் கட்டாயப் பாடமாக்குவதற்கு அடிப்படை, வெறும் ஹிந்திக்காக அல்ல; சமஸ்கிருதத்தைக் கொண்டு வரவேண்டும்’’ என்பதற்காகத்தான் என்று, லயோலா கல்லூரியில் அவர் பேசினார்.
இப்போதும் புரிந்துகொள்ளவேண்டும் அவர்களுடைய சூட்சமத்தை! வெறும் ஹிந்தித் திணிப்புக்காக மட்டும் நாம் எதிர்க்கவில்லை. திணிப்பு எங்கே இருந்தாலும், எந்த ரூபத்தில் இருந்தாலும், திராவிடர் இயக்கமும், தி.மு.க. கூட்டணியும் எந்நாளும் எதிர்த்தே தீரும் என்பது ஒரு பக்கத்தில் இருந்தாலும், அதைவிட ஆழமான ஒரு தத்துவம் உண்டு – அதனை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

பண்பாட்டுப் படையெடுப்பு!

மும்மொழித் திட்டத்தை ஏன் எதிர்க்கிறீர்கள்? என்றெல்லாம் கேட்கின்றவர்கள் பாடம் கற்றுக்கொள்வதற்காகச் சொல்கிறேன்.
இது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு – சமஸ்கிருதம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு – பண்பாட்டுப் படையெடுப்பை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில், ஆட்சி மொழிகள் பகுதியில் இடம்பெறுகிறபோது என்ன சொல்லியிருக்கின் றார்கள் என்று சொன்னால்,
According to the Indian Constitution, “Hindi in Devanagari script” is the official language of the Union, as stated in Article 343(1)
தயவு செய்து இதனை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். Devanagari script என்று சொன்னால், தேவ பாஷை.
சமஸ்கிருதம் மட்டும்தான் தேவ பாஷையாம். நம்முடைய தமிழ் மொழி நீஷ பாஷையாம்.

செம்மொழியானது கலைஞரின் முயற்சியால்

தமிழ் மொழியை, செம்மொழியாக்கித் தந்த தலைவருடைய மேடை இந்த மேடை. கலைஞர் அவர்கள் அதனை செய்தார்.
அப்படிப்பட்ட தமிழ் மொழியை, செம்மொழியை நீஷ பாஷை என்று சொல்கிறார்கள்.
கோயிலில் கடவுளுக்குத் தமிழ்மொழி புரியாதா? என்று கேட்டவர்கள் நாம். இதோ செய்கிறோம் என்று சொல்லி, தமிழில் அர்ச்சனை என்று சாதனை செய்த ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சி.
எனவே, இந்த ஆட்சி தத்துவங்களை, கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்ற ஆட்சி.
அந்தக் காலட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் சொன்னார், ‘‘இது சமஸ்கிருத ஆதிக்கம்’’ என்று. தமிழறிஞர்கள், மறைமலையடிகள் போன்றவர்கள் எல்லாம் திரண்டார்கள்.

அப்படிப்பட்ட ஒரு ஆட்சிக் காலத்தில், ஹிந்தியை எதிர்த்துப் பல போராட்டங்கள் நடைபெற்றன. அப்போராட்டத்தில் எங்கள் தோழர்களைப் பலியாக்கி, தாளமுத்து நடராசனுக்கு அண்மையில்தான் நினைவிடத்தைப் புதுப்பித்தார் நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் – திராவிடத்தினுடைய தனிப்பெரும் தலைவராக இன்றைக்கு இந்தியாவே பார்த்து அலறக்கூடிய அளவிற்கு அவருடைய முழக்கங்களும், உரிமைகளும் இருக்கின்றன.
நீ, திமிர்த்தனமாகப் பேசாதே, உன் திமிரை இறக்கிக் காட்டக்கூடிய ஆற்றல், தமிழ் மண்ணுக்கு உண்டு; தமிழர்களுக்கு உண்டு என்று அவர்கள் உரையடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆச்சரியார் என்ன சொன்னார்?
அதே ராஜகோபாலாச்சாரியார், பிறகு என்ன சொன்னார் தெரியுமா?
யாரோ ஒருவர் இன்றைக்கு ஒன்றிய கல்வி அமைச்சராக இருக்கக்கூடிய அவருக்கு நாங்கள் சொல்கிறோம்.
ராஜாஜியை நீங்கள் வெறும் கவர்னர் ஜெனரலாக மட்டுமே படித்திருப்பீர்கள்; ஆனால், அதே ராஜாஜிதான், 1938 இல், ஹிந்தியைத் திணித்தார்.
‘‘ஆள்வது நானா? இராமசாமி நாயக்கயரா?’’ என்று கேள்வி கேட்ட காலம் உண்டு. இதுபோன்ற மேடைகளில், ஆச்சாரியாரையே அண்ணா அவர்கள் அழைத்து, ஒரு முழக்கம் கொடுத்தார்.
இந்த வரலாற்றை, இன்றைக்கு ஒன்றிய கல்வி அமைச்சராக இருக்கக்கூடியவர் – மும்மொழித் திட்டம்தான் என்று ஆணவத்தோடு பேசக்கூடியவர். இன்னுங்கேட்டால், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் அழகாகச் சொன்னதைப்போல, திமிர்த்தனத்தோடு பேசினால், உன் திமிரை இறக்கிக் காட்டுவதற்குத் தமிழ்நாட்டில் மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கின்றார்.

அன்றைக்கு என்ன நடந்தது தெரியுமா? உங்களுக்கு நினைவூட்டுகிறோம்; டில்லிக்கு நினைவூட்டுகிறோம்.
ஆச்சாரியார், இதுபோன்ற மேடையில் அமர்ந்தார்; திராவிட மேடையில் வந்து அமர்ந்தார். அப்படி அமர்ந்தது மட்டுமல்ல, ஒரு புதிய முழக்கத்தைக் கொடுத்தார்.
வாழ்நாளிலேயே பெரியார், அந்த வெற்றியைப் பார்த்தார்; அண்ணா பார்த்தார், இந்த இயக்கம் பார்த்தது.
இன்னமும் உங்கள் காலத்திலும் காட்டப் போகிறோம்; நீங்கள் பார்க்கவிருக்கிறீர்கள்.
ராஜகோபாலாச்சாரியார் என்ன சொன்னார் தெரியுமா?
‘‘Hindi Never; English Ever’’ என்று சொன்னார்.
எந்த ஹிந்தியை ஆச்சாரியார் திணித்தாரோ, அந்த ஆச்சாரியாரையே பணிய வைத்து, வளைய வைத்தது, இந்த இயக்கம், ஹிந்திக்கு இங்கே வேலையில்லை என்று சொல்ல வைத்தது.

English Ever என்பது அப்புறம்; Hindi Never என்பதற்கு என்ன பொருள்?
ஒருபோதும் ஹிந்தி வராது என்று, கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த ஆச்சாரியார் சொன்னாரே, அவரைவிட நீங்கள் என்ன மிகப்பெரிய அறிவாளிகளா?
எனவே, இந்த மேடை வெறும் அலங்கார மேடையல்ல; அறைகூவல் மேடையாகும்.
நிதிக்கும் மறுப்பு – நீதிக்கும் மறுப்பு!
அரசமைப்புச் சட்டத்தில் எங்களுக்கு இருக்கின்ற உரிமை இது. நிதி வேண்டும் என்று உங்களிடம் கேட்டபோது, நிதியையும் மறுக்கிறீர்கள்; நீதியையும் மறுக்கிறீர்கள்.
சமூகநீதிக்கும் இடந்தர மறுக்கிறீர்கள். உங்களிடத்தில் நாங்கள் சலுகையோ, பிச்சையோ கேட்கவில்லை. நாங்கள், எங்களுடைய பணத்தைத்தான் உரிமையோடு கேட்கிறோம்.

எனவேதான், எங்களுடைய உரிமைகளை நிலை நாட்டுகின்ற உரிமைப் போராட்டம்தான் இந்தப் போராட்டம்.
எனவே, இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகின்ற நேரத்தில், ஒன்றை மட்டும் சொல்கிறேன். ஏனென்றால், அடுத்து, நம்முடைய இளைஞர்களை எழுப்பி, இந்த ஆட்சியினுடைய கொள்கை என்ன? என்பதை எடுத்துக் காட்டும் வகையில், ‘‘முறியடிக்கப்படாத முப்பெரும் சாதனைகள்’’ என்று புத்தகமே போட்டிருக்கின்றோம்.
அண்ணா அவர்கள் ஓராண்டு ஆட்சியில் இருந்தார்கள். அந்த ஓராண்டு ஆட்சிக்காலத்தில் அண்ணா அவர்கள் பேசிய பேச்சு ஆவணம் போன்றது.
இங்கே நம்முடைய வைகோ அவர்கள் சிறப்பான முறையில் அதனைக் குறிப்பிட்டார்கள்.

அண்ணாவின் உருக்கமான பேச்சு!
அண்ணா அவர்கள் பேசும்பொழுது அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்களில் ஒருவன் நான்.
அண்ணா அவர்கள் உருக்கமாக பேசினார். உடல்நலக் குறைவோடு பேசினார். கலைவாணர் அரங்கத்தில்!
அப்போது அவர் சொன்னார், ‘‘நங்கள் மூன்று பெரும் சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றோம்.
ஒன்று, தாய்த்திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர் வைத்தோம்.
இரண்டு, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லும். நடந்த திருமணங்களும் செல்லும்; நடக்கும் திருமணங்களும் செல்லும்; இனி நடக்கப் போகின்ற திருமணங்களும் செல்லும்.
மூன்றாவது, இருமொழிக் கொள்கைதான் தமிழ் – ஆங்கிலம்தான்! மூன்றாவது மொழிக்கு இங்கே இடமில்லை என்று தெளிவாகச் சொன்னார்.

ஓராண்டு காலத்தில், இந்த முப்பெரும் சாதனைகளைச் செய்திருக்கின்றோம். நான் கேள்விப்பட்டேன், இங்கே இருக்கின்ற ஆதிக்கவாதிகள் எப்படியாவது இதனை மாற்றிவிடவேண்டும் என்று ஆட்சியைக் கலைத்து விடலாம் என்றெல்லாம் பேசுகிறார்கள் என்று என் காதில் விழுந்தது.
உங்களால் முடியுமா? என்றால், உங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி எதையும் செய்யலாம் என்பதை நான் தெளிவாக ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஒன்றே ஒன்று.
அது என்னவென்று சொன்னால்,
தமிழ்நாடு பெயரை பழையபடி சென்னை மாகாணமே இருக்கவேண்டும்; சுயமரியாதைத் திருமணம் செல்லாது; தமிழ்நாட்டில் இருமொழித் திட்டத்தை எடுத்துவிட்டு, மும்மொழித் திட்டத்தைக் கொண்டு வரலாம் என்று நீங்கள் முயற்சி செய்வீர்கள். அந்த அதிகாரம் உங்களிடம் இருக்கலாம். ஆட்சியைப் பயன்படுத்தி செய்யலாம் என்று நினைப்பீர்கள்.
ஆனால், இவற்றையெல்லாம் செய்கின்ற நேரத்தில், ஓர் அச்சம் உங்களை உலுக்கும்; இதைச் செய்துவிட்டு வெளியே போக முடியுமா? என்கிற அச்சம் உங்களை உலுக்கும். அந்த அச்சம் உங்களை உலுக்கும்பொழுதெல்லாம், அண்ணாதுரைதான் இந்த நாட்டை எந்நாளும் ஆளுகிறான் என்று பொருள்” என்று அண்ணா விளக்கம் சொன்னார்.
இதற்கு என்ன அர்த்தம்?

எங்கள் போரட்டம் தொடரும்!
அண்ணாவினுடைய ஆட்சி, திராவிட ஆட்சி, பெரியார் மண்ணின் ஆட்சி என்று சொன்னால், என்றைக்கும் இந்தப் போராட்டம் தொடரும். நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதற்கு அடையாளம்.
எனவே நண்பர்களே, இது உலைக்களத்தில் அடித்திருக் கின்ற முதல் வாய்ப்பு.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு போர்ச் சங்கு முழக்கம். இது வெறும் கண்டன முழக்கமல்ல. போர்ச் சங்கு ஊதியாகிவிட்டது என்று சொல்லக்கூடிய அளவிற்குத் தோழர்களே, தயாராக இருக்கவேண்டும்; தயாராக இருக்கவேண்டும்.
இன்னுங்கேட்டால், 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று அரசியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற நேரத்தில், 200 இடங்களில் அல்ல; 234 இடங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று சொல்வதற்காகத்தான் – இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றீர்கள்.
நீங்கள் வேகமாகச் செல்லுங்கள்; விரைவாக வெற்றியும் எங்களிடம் வரும்.
வெல்க தமிழ்!
வீழ்க திணிப்பு!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.



அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எழுச்சி முழக்கம்!


தமிழ்நாடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக