* தந்தை பெரியார் உடலால் மறைந்து 50 ஆண்டுகள் ஆகியிருக்கலாம்
* கொள்கையால் உலகம் முழுவதும் உலா வருகிறார்!
* வைக்கம் போராட்டம் தொடங்கி – அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வரை வெற்றி பெற்றுள்ளார்!
‘‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு” என்றார் பெரியார்!
மனிதத்திற்கே தேவையான உலகக் கொள்கை இது!
தந்தை பெரியார் பேசியது இறுதி முழக்கமல்ல – அவர் கொள்கை வழி நாம் மேற்கொள்ளவேண்டிய உறுதி முழக்கம்!
சென்னை, டிச.19 தந்தை பெரியார் உடலால் மறைந்து 50 ஆண்டுகள் ஆகியிருக்கலாம்; கொள்கையால் உலகம் முழுவதும் உலா வருகிறார்! வைக்கம் போராட்டம் தொடங்கி – அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வரை வெற்றி பெற்றுள்ளார்! ‘‘மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’’ என்றார் பெரியார்! மனிதத்திற்கே தேவையான உலகக் கொள்கை இது!
தந்தை பெரியார் பேசியது இறுதி முழக்கமல்ல – அவர் கொள்கை வழி நாம் மேற்கொள்ளவேண்டிய உறுதி முழக்கம்! தந்தை பெரியாரின் இறுதி முழக்கமும் -நமது உறுதி முழக்கமும் என்று முழங்கினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தந்தை பெரியாரின் இறுதி முழக்கமும் –
நமது உறுதி முழக்கமும்!
நேற்று (18.12.2023) மாலை சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பிட்டி. தியாகராயர் அரங்கில், ‘‘தந்தை பெரியார் இறுதி முழக்கமும் – நமது உறுதி முழக்கமும்” என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
நமக்கெல்லாம் கொள்கைப் பாடம் –
வெளிச்சம்!
தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய இறுதி முழக்கம் – உறுதி முழக்கமாக நமக்கெல்லாம் கொள்கைப் பாடம் – வெளிச்சம் – அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற பணி – பிரச்சாரக் களம் – போராட்டக் களம் என எல்லாவற்றையுமே சுட்டிக்காட்டி, தன்னுடைய முக்கால் நூற்றாண்டு பொதுவாழ்க்கை – அந்தப் பொதுவாழ்க்கையில் அவருடைய கனிந்த உழைப்பு – அது தந்த மிக முக்கியமான விழுமிய பலன்கள் இவற்றையெல்லாம் நினைவூட்டி – அந்தக் கொள்கை என்றைக்குமே தோற்காத கொள்கை – எப்பொழுதும் வெற்றியடையக் கூடிய கொள்கை என்பதை மய்யப் புலமாகக் கொண்டு தந்தை பெரியார் தந்த அந்த உறுதி – எழுத்து ஆவணம்போல் அவர் வழங்கிய இறுதிப் பொதுக்கூட்டம் இதே தியாகராயர் நகரில் 50 ஆண்டுகளுக்கு முன்னால், சற்றுத் தள்ளி உள்ள அந்த இடத்தில் நடைபெற்றது – இப்போது அந்த இடம் மாறிவிட்டது – ஆனால், அதே இடத்தில், தியாகராயர் பெயரில் அமைந்த இந்த அரங்கத்தில் – இந்த நிகழ்ச்சி – வரலாற்றுக் குறிப்போடு – அரை நூற்றாண்டுக் காலத் தில் எப்படியெல்லாம் நம்முடைய பயணங்கள் அமைந் திருக்கின்றன என்பதை விளக்கக்கூடிய, நமது உறுதி முழக்கமாக அமைந்திருக்கக்கூடிய இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து, குறுகிய காலத்தில் சிறப்பாக இதனை நடத்திக் கொண்டிருக்கக் கூடிய தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு இரா.வில்வநாதன் அவர்களே,
வரவேற்புரையாற்றிய தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் மானமிகு செ.ர.பார்த்தசாரதி அவர்களே,
இணைப்புரையை வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் என்னா ரெசு பிரின்சு பெரியார் அவர்களே,
இங்கே சிறப்பான முறையில் தொடக்கவுரையை ஆற்றியுள்ள கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
சிறப்புரையாற்றிய கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி அவர்களே,
கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர்
அ.அருள்மொழி அவர்களே,
‘‘மனிதத்தை மீட்பதற்குத்தான்
பெரியார் தொண்டு!’’
‘‘மனிதத்தை மீட்பதற்குத்தான் பெரியார் தொண்டு” என்று அழகாகச் சொன்னார்கள். ஜாதி, பிரிவுகள் என்ப தெல்லாம் வருணம் என்பதெல்லாம், மனிதர்களைப் பிரித்து, மனிதர்களைக் குறைத்து மதிப்பிட்டு, மனிதத்தை மறைத்து செய்தக் கொடுமையால் நாம் இழந்திருக்கக் கூடிய ஒன்றை மீட்டெடுத்தவர் தந்தை பெரியார்! அந்தப் பணியைத் தொடர்வோம் என்று உரையாற்று கையில் குறிப்பிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் அருமைச் சகோதரர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களே,
நன்றியுரையாற்றவிருக்கக் கூடிய சைதை மு.ந.மதிய ழகன் அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கக் கூடிய அருமை மகளிரணித் தோழர்களே, சான்றோர்ப் பெருமக்களே, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘‘பெரியார் மறையவில்லை; பெரியார் அவர்கள் ஒருபோதும் மறையமாட்டார்!’’
50 ஆண்டுகளுக்கு முன்னால் என்று சொல்லு கிறபொழுது, இது ஒரு காலக் கணக்கு. இங்கே கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார், ‘‘பெரியார் மறையவில்லை; பெரியார் அவர்கள் ஒருபோதும் மறையமாட்டார்’’ என்பதை அழகாகச் சொன்னார்.
உடலால் பெரியார் அவர்கள் மறைந்தார் என்பது இருக்கிறதே, அது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள்.
இந்த வரலாற்றுக் குறிப்பை வைத்துக்கொண்டு, நாம் ஒரு அரை நூற்றாண்டு காலத்தில் என்ன நடந்தது என்பதை, இன்றையத் தலைமுறை யினருக்கு ஒரு காலக் கணக்கீட்டைத் தரவேண்டும்.
என்னுடைய வெற்றிகள் வேண்டுமானால் கொஞ்சம் காலதாமதமாகலாமே தவிர,
நான் ஒருபோதும் தோற்றதில்லை!
தந்தை பெரியார் ஒருபோதும் தோற்கமாட்டார். ‘‘என்னுடைய வெற்றிகள் வேண்டுமானால் கொஞ்சம் காலதாமதமாகலாமே தவிர, நான் ஒருபோதும் தோற்றதில்லை” என்பதை, தந்தை பெரியார் அவர்களே, அவருடைய சொற்களால் பலமுறை சொல்லியிருக்கிறார்கள்.
அப்படி சொன்னது மட்டுமல்ல, எதிர்பாராத ஒரு சிறப்பு – தந்தை பெரியார் அவர்களுடைய அன்றைய சிறப்புரை யாருக்கும் தெரியாது – அதுதான் அவரது இறுதி உரையாக அமையப் போகிறது என்று.
நாங்கள் எல்லோரும், குறிப்பாக நானும், புலவர் இமயவரம்பன் அவர்களும், நிர்வாகி என்.எஸ். சம்பந்தம் ஆகியோரும் காரில் வந்து இறங்கி, அய்யா அவர்கள் உரையாற்றும்பொழுது கேட்டுக் கொண்டிருந்தோம்.
அவர் தொடர்ந்து ஒரு பெரிய பயணத்தில் இருந்தார்.
‘‘தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு!’’
டிசம்பர் 1973, 8, 9 ஆகிய தேதிகளில் ‘‘தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு” – அந்த மாநாட்டில்தான், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்குரிய போராட்ட அறிவிப்பைத் தந்தார்கள்.
அதற்கு முன்னர், அய்யா அவர்கள் வைக்கத்தில் எப்படி ஜாதி ஒழிப்பிற்கு, தீண்டாமை அழிப்புக்கு அமைத்த தளத்தில் முன்னால் எப்படி வென்றார்களோ, அந்தப் பணியைத் தொடர்ந்து செய்தார்.
இதுவரை மனிதத்தைப்பற்றி சொன்னார்கள், சகோ தரர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள்.
மனிதத்தில் மிக முக்கியமானது என்னவென்று சொன்னால், உலகத்தில் எங்குமில்லாத ஒரு கொடுமை – ஆனால், அது எல்லோருக்கும் பழகிப் போயிற்று.
பெரியார் சொல்லும் எளிய உதாரணம்!
பெரியார் ஒரு உதாரணம் சொல்லுவார் – எளிய மக்களுக்குப் புரியும்படியாகத்தான் நம்முடைய அய்யா அவர்கள் உதாரணம் சொல்லுவார்கள்.
‘‘மலம் எடுப்பவர்களுக்கு அதனுடைய நாற்றமே தெரியாது. காரணம், மூக்குப் பழகிப் போய்விட்ட கார ணத்தால். அதுபோன்று சூத்திரப் பட்டம் – அதுமாதிரி இழிவுப்பட்டம் – அதைக் கேட்டு, கேட்டு, அவனுக்கு அது அவமானம் என்றே தெரிவதில்லை.”
இன்னுங்கேட்டால், பெரியாருடைய இயக்கம் – சுயமரியாதை இயக்கம் பிறந்திருக்காவிட்டால், என்ன வாகியிருக்கும்?
நாவலர் நெடுஞ்செழியன்
நம்முடைய நாவலர் அவர்கள் வேடிக்கையாக மேடையில் சொல்லுவார்கள்.
சூத்திரன் என்று நெற்றியில் பச்சைக் குத்திக் கொள்ளவேண்டும் என்று சொன்னால், அதை வேண் டாம், குத்தவேண்டாம் என்று எதிர்த்துச் சொல்வதற்கு ஆளில்லை, பெரியார் பிறக்கவில்லை என்றால் – நல்ல இடத்தில் பச்சைக் குத்துங்கள் – பளிச்சென்று தெரிகின்ற இடத்தில் குத்துங்கள் என்று சொல்வார்களே தவிர, மான உணர்ச்சி இருக்காது.
அந்த மான உணர்ச்சியை உண்டாக்கிய மகத்தான புரட்சியாளர்தான் தந்தை பெரியார்.
ஏன் சூத்திரன் என்று கேட்ட இயக்கம், இந்தியாவில் எங்கேயாவது ஒரு மூலையில் உண்டா?
சுயமரியாதை என்ற சொல்லுக்கு ஈடாக ஒரு சொல்லை
சொல்ல முடியுமா?
ஓர் இயக்கத்திற்கு உலகத்திலேயே சுயமரி யாதை இயக்கம் என்று பெயர் வைத்த தலைவரும், அந்த இயக்கமும் தேடிப் பாருங்கள் – எங்கும் கிடையாது.
அய்யா சொல்லுகிறார்,
‘‘உலக அகராதிகளையெல்லாம் எடுத்துத் தேடிப் பாருங்கள் – சுயமரியாதை என்ற சொல் லுக்கு ஈடாக ஒரு சொல்லை சொல்ல முடியுமா?” என்கிறார்.
சுயமரியாதை என்பது மனிதர்களுக்கு மட்டும் தான். மிருகங்களுக்கோ, அய்ந்தறிவு படைத்தவை களுக்கோ உண்டா? கிடையாது.
ஆனால், நம்மை அந்த சுயமரியாதைக்கு உந்து, உந்து என்று உந்தி உயர்த்தவேண்டும் என்று நினைத்தார். தன்னுடைய உழைப்பு எந்த அள விற்குப் பயன்பட்டது, பயன்படவேண்டும் – எது பாக்கி இருக்கிறது என்பதையெல்லாம் ஒரு கணக்குப் போட்டு, ஒரு காலக்கணக்கீடு சொல்லி, ஒரு வரவு – செலவு திட்டம் போன்று – அரிமா நோக்கு மாதிரி – திரும்பிப் பார்ப்பது என்று சொல்வார்கள்.
அன்றைக்குப் பேசியவன் –
இன்றைக்கும் பேசக்கூடிய அந்த வாய்ப்பை
நான் பெற்றிருக்கிறேன்!
அதுபோன்று இயற்கையிலேயே அமைந்த ஓர் உரைதான் 50 ஆண்டுகளுக்கு முன்னால், இதே பகுதி யிலே அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் பேசிய பேச்சாகும்.
இயற்கை அமைத்த நல்வாய்ப்பாகவே, அன்றைக்குப் பேசியவன் – இன்றைக்கும் பேசக்கூடிய அந்த வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். அதற்குப் பல காரணங்கள்.
அறிவியல் காரணம் – சமூகவியல் காரணம் – இயக்கவியல் காரணம் – வாழ்வியல் காரணம்.
வாழ்வியலில், அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடியவர்கள்; சமூகவியலில், நம்முடைய அமைப்பு, எந்தக் கட்சிக்காரர்களாக இருந்தாலும் உற்சாகம் கொடுப் பது. அதையும் தாண்டி, இயக்கவியலில் – தோழர்கள் என்னைத் தோளின்மீது தூக்கி, உற்சாகத்தோடு, அய்யா அவர்களுடைய பணி நடந்தாகவேண்டும் என்று எனக்குச் சொல்வது.
ஆகவே, கணக்குப் பார்த்துச் சொல்லும்போது, பெருமிதத்தோடு சொல்லுகிறேன்.
‘‘அம்மா, அம்மா’’ என்று
அய்யா அவர்கள் வலி தாள முடியாமல் பேசினார்!
தந்தை பெரியார் அவர்களுடைய இறுதி உரையின் தொடக்கத்தில் மிகக் கோபத்தோடு சொல்லுவார். கடுமையான கோபம்! இதுவரையில், அய்யாவின் உரையை நான் எழுதியிருக்கிறேன். நானும், புலவர் அவர்களோ, மற்றவர்களும் எழுதினாலும் – இந்த உரையில் கொப்பளிக்கின்ற கோபாவேசம் இருக்கிறதே – அது சாதாரணம் அல்ல! அவ்வளவு வேகமாகப் பேசுவார். அப்படி வேகமாகப் பேசும்பொழுது, ‘‘அம்மா, அம்மா” என்று அவர்கள் வலி தாள முடியாமல், அந்த வேனிலேயே புரண்டு எழுந்து பேசிய காட்சி.
மக்கள் எல்லாம் அதைப் பார்த்து, ‘‘அய்யா, நிறுத்திக் கொள்ளுங்கள், நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று சத்தம் போடுகிறார்கள்.
ஆனால், அய்யா நிறுத்தவில்லை. உரையைத் தொடருகிறார்.
அப்படிப் பேசும்பொழுது, தொடக்கத்திலிருந்து எங்கள் கொள்கை என்ன என்று ஆரம்பித்தார்.
தயவு தாட்சண்யம் இல்லாமல் அடையாளப்படுத்திச் சொன்னார்!
அய்ந்து கொள்கைகள் – நான் எதை ஒழிக்கவேண்டும் என்று நினைத்தேனோ – முதலில் ஜாதி ஒழியவேண்டும் என்று சொல்லி, ஜாதிக்கு ஆதரவாக யாரெல்லாம் இருக் கிறார்களோ, அவர்களையெல்லாம் தயவு தாட்சண்யம் இல்லாமல் அடையாளப்படுத்திச் சொன்னார்.
முதலில், மனிதம், சமத்துவம்தான் முக்கியம் என்றார்.
உலகத்தில் வேறு எங்கும் பார்க்க முடியாதபடி, இங்கே மட்டும் ஏன் மனிதனாகப் பிறக்கவில்லை?
ஒருவன் பார்ப்பானாகப் பிறக்கிறான்,
இன்னொருவன் பறையனாகப் பிறக்கிறான்
ஒருவன் பிராமணனாகப் பிறக்கிறார்ன்,
இன்னொருவன் சூத்திரனாகப் பிறக்கிறான்.
பார்ப்பான்தான் படிக்கவேண்டும், அவன்தான் உத்தி யோகத்திற்குப் போகவேண்டும்; அவன்தான் முன்னேற வேண்டும். இந்தக் கொடுமை வேறு எங்கு இருக்கிறது?
சுயமரியாதை இயக்கத்திற்கு
முதல் கொள்கை – பிறவி பேதம் கூடாது!
எனவே, சுயமரியாதை இயக்கத்திற்கு முதல் கொள்கை – பிறவி பேதம் கூடாது என்பதுதான்.
அந்தப் பிறவி பேதத்திற்கு தந்தை பெரியார் அவர்கள் கொடுத்த விளக்கம் – விரிவான விளக்கமாகும்.
இதுவரையில் பிறவி பேதம் என்று சொன்னால்,
உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி
தொடக்கூடியவன் – தொடக் கூடாதவன்
பார்க்கக் கூடியவன் – பார்க்கக் கூடாதவன்
என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தோம்.
ஆனால், தந்தை பெரியார் அவர்கள், பிறவியினால் ஆண் உயர்ந்தவன்; பிறவியினால் பெண் தாழ்ந்தவள், அடிமை என்பது ஏன் என்று கேட்டு, ‘‘பெண் ஏன் அடிமையானாள்?” என்று நீண்ட நாள்களுக்கு முன்பு கேள்வி கேட்டு, அதற்குப் பதில் சொன்னார்.
ஆகவே, பிறவி பேதம் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதனை அழிக்கவேண்டும் என்று சொன்னார்.
அதை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும், சமரசமின்றி தன்னுடைய கொள்கைத் துப்பாக்கியை அங்கே நீட்டினார்.
எந்த விலை வேண்டுமானாலும்
கொடுக்கிறேன் என்றார்!
யாராக இருந்தாலும் – கடவுளா, அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. காந்தியாரா, அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. அன்றைய காங்கிரசா, அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. மதமா, அதை நான் எதிர்க்கிறேன். அதற்காக எந்த விலை வேண்டு மானாலும் கொடுக்கிறேன் என்றார்.
அதைத் தன்னந்தனியராகத்தான் தொடங்கினார். இன்றைக்கு அவர் மறைந்து 50 ஆண்டுகள் ஆனது என்று சொன்னால், மறுபடியும் சொல்கிறேன், உடலால் மறைந்தார்; தத்துவத்தால் இன்றைக்கு உலகப் பெரியாராக தந்தை பெரியார் உயர்ந்திருக்கிறார்.
அவர் வாழ்ந்த காலத்தில் பயணம் செய்யாத அவருடைய கொள்கைகள் – 1973 ஆம் ஆண்டிற்குப் பிறகு, அவர் மறைந்த பிறகு விரிவாகப்பரவி இன்றுவரை யில், உலகப் பெரியாராக ஆகியிருக்கிறார். உலகத் தத்துவமாக ஆகியிருக்கிறார்.அதுதான் அவரது தத்து வத்தினுடைய பெருமை.
தனி மனிதன் வேண்டுமானால் மறையலாமே தவிர, தத்துவங்களுக்கு ஒருபோதும் மறைவு என்பது கிடை யாது – இறப்பு என்பது கிடையாது.
பிறப்பு உண்டு – இறப்பு கிடையாது. அந்தத் தத்துவங்கள் மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கின்றன.
தந்தை பெரியாருக்கு
தவறான நம்பிக்கையை ஊட்டினார்கள்
தொடக்கத்தில் அவருடைய உரையைத் பார்த்தீர் களானால், முதலில் கொள்கைக்காகத்தான் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினேன் என்கிறார். காங்கிரஸ் கட்சியிலிருந்து பாடுபட்டு, அந்த அனுபவங்களை யெல்லாம் அவர் பெற்று வந்தபோது, ஜாதி ஒழிப்பு, சமூகநீதி, இவற்றையெல்லாம் தேசிய ரீதியாகவே அடைந்துவிடலாம் என்று தந்தை பெரியாருக்கு தவறான நம்பிக்கையை ஊட்டினார்கள்.
அதை நம்பினார். சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பு, தேசியத்தில் அவரைப் போன்று அதற்காக உழைத்தவர்கள் யாரும் கிடையாது.
நாங்கள் அதற்குப்
பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை!
இன்னுங்கேட்டால், இன்றைக்குத் தந்தை பெரியாரை கொச்சைப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்ற சிலர் இருக்கிறார்கள். இன்று சமூக ஊடகங்களில் ஓர் உருவத்தைப் போட்டு இருக்கிறார்கள் என்று தோழர்கள் காட்டினார்கள். அவரைக் கொச்சைப்படுத்துகிறார்கள் என்று நாம் நினைக்கவேண்டிய அவசியமில்லை. அதற்கு நம்முடைய தோழர்களே பதில் சொல்லிவிடு வார்கள்; அதனால், நாங்கள் அதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
பன்றி உருவம்போன்று போட்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு என்ன அர்த்தம்?
பன்றி உருவமாகப் பார்க்கவேண்டிய அவசிய மில்லை. பெரியாரை, அவர்கள் கடவுளாக்கலாம் என்று தான் பார்க்கிறார்கள்.
யார் யாருடைய கொள்கையெல்லாம் பரவக்கூடாது என்று நினைக்கிறார்களோ, அவரையெல்லாம் கடவு ளாக ஆக்குகிறார்கள். வராக அவதாரமாக – பெரியாரை அவதாரமாக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
ஒருபோதும் பெரியாரை, அவதாரமாக்க நாங்கள் விடமாட்டோம். அவர் மனிதர்களுக்கு, இயக்கத்திற்கு வழிகாட்டி – புரட்சியாளராகத்தான் உலக வரலாறு அவரைப் பார்க்கும்.
பெரியாருடைய கருத்தை – மேற்கோளை கேட்டவுடனே, அலறுகிறார்கள்!
தி.மு.க. உறுப்பினர் அப்துல்லா அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசுகிறார்; பெரியாருடைய கருத்தை – மேற்கோளை எடுத்துக்காட்டுகிறார். மறைந்த ஒருவருடைய மேற்கோளை காட்டுகின்ற நேரத்தில், அவர்களுடைய கணக்குப்படி, நம் முடைய கணக்கல்ல – உயிரோடு இருக்கிறார் என்றுதானே அர்த்தம். அந்த, அவரது மேற் கோளை கேட்டவுடனே, அலறுகிறார்கள். மாநிலங் களவையில் எந்தக் கருத்தையும் சொல்வதற்கு உரிமை உண்டு. எந்த அளவிற்கு நாடாளுமன்றத்தில் உரிமைகள் உண்டு என்பதை, நாடாளுமன்ற உறுப்பினராக பல ஆண்டுகாலம் இருந்த
டி.கே.எஸ்.இளங்கோவன் நன்றாக அறிவார்.
ஒன்றைச் சொல்லவேண்டும் – ‘‘‘Immunity”’ என்று பேசினார். வெளியில் பேசினால், வழக்குத் தொடரலாம். ஆனால், நாடாளுமன்றத்திற்குள் பேசினால், வழக்குப் போட முடியாது. அவ்வளவு உரிமை இருக்கிறது. ஆனால், அந்த உரிமையினுடைய கழுத்து இன்றைக்கு நெரிக்கப்படுகிறது.
அப்துல்லா அவர்கள் பேசியவை அவைக் குறிப்பி லிருந்து நீக்கப்படுகிறது என்று சொல்கிறார்கள் என்றால், அதைக் கேட்டு நாங்கள் பதற்றப்படவில்லை; மகிழ்ச்சியடைந்தோம்.
காரணம் என்ன?
இன்னமும் அவர்களை அச்சுறுத்தக்கூடிய மிகப்பெரிய சக்தியாக இருக்கிறார் பெரியார்!
பெரியார் மறையவில்லை. பெரியார் இன்னமும் அவர்களை அச்சுறுத்தக்கூடிய மிகப்பெரிய சக்தியாக இருக்கிறார்.
பெரியார் என்ற சொல்லை மக்கள் மறந்துவிட்டார்கள் என்றால், இன்றைக்கு அவர்கள் அதைப்பற்றி கவலைப்படமாட்டார்கள்.
ஏனென்றால், இராமனைப்பற்றியோ, கிருஷ்ண னைப்பற்றியோ பேசினால், எதுவுமில்லை. ஏனென்றால், அவையெல்லாம் கற்பனைகள்.
பெரியார் என்பது நடைமுறை
பெரியார் என்பது மிகப்பெரிய பாடம்
பெரியார் என்பது மிகப்பெரிய ஆயுதம் – போராயுதம் – பேராயுதம்.
அதனால்தான் அவர்கள் இன்னமும் பெரியார் சிலைக்கருகில் போகிறார்கள். பெரியார் என்ற சொல் லைக் கேட்டவுடன் பயப்படுகிறார்கள். அப்படிப்பட்ட உரிமை மீட்பு இயக்கத்தை அவர் உருவாக்கினார்.
அந்த இயக்கம் என்ன செய்தது என்பதை கடைசி தன்னுடைய இறுதிப் பேருரையில் எப்பொழுது வழங்கி னார்கள்? தன்னுடைய அறப்போராட்டம் – அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான- ஜாதி ஒழிப்பிற்கான அறப்போராட்டம் நடத்த இருந்த நிலையில் அறிவித்தார்கள்.
ஜாதி ஒழிப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்ததும், கலைஞர் அவர்கள் நேரில் வந்து, தந்தை பெரியாரிடம் கேட்டதுபற்றிய செய்திகளையெல்லாம் இங்கே சொன்னார்கள் நண்பர்கள்.
மனிதத்தை நினைவூட்டுவதற்கு
எது தடை?
ஜாதி ஒழிப்பிற்காக – உலகத்தில் ஒரு தலைவரைபற்றி அழைக்கும் நேரத்தில், ஒரே ஒரு கொள்கை ‘‘மனிதத்தை” என்று சொன்னார்கள் பாருங்கள், அந்த மனிதத்தை நினைவூட்டுவதற்கு எது தடை?
ஜாதி, அதனுடைய விளைவான தீண்டாமை. பிறவி அடிப்படைப்பற்றியெல்லாம் விளக்கம் சொல்லிவிட்டார்.
அப்படி சொன்ன பிறகு, அதை நடைமுறையில் கொண்டு வருகிறபொழுது, வைக்கத்தில் தொடங்கினார் 1924 ஆம் ஆண்டில்! 1973 ஆம் ஆண்டு, அதே அடிப்படையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம் என்ற களத்தில் நின்றார்.
ஜாதி ஒழிப்புப் போராட்டம் – ஒவ்வொரு கட்டங்களாகத்
தாண்டி தாண்டி…
ஜாதி எந்த ரூபத்தில் இருந்தாலும், ஓட்டலில் உணவு உண்பதற்கு பார்ப்பனர்களுக்குத் தனி இடம்; சூத்திராள்களுக்குத் தனி இடம்! இப்படி எல்லாவற்றிலும் போட்டிப் போட்டுக்கொண்ட வந்து – தெருக்களில் நடப்பதற்கு அவர்கள் போரா டியத் தொடங்கிய அந்த ஜாதி ஒழிப்புப் போராட்டம் – ஒவ்வொரு கட்டங்களாகத் தாண்டி தாண்டி, கடைசியாக அதைக் அவர் கண்டுபிடித்தார்.
அந்த ஜாதிப் பாம்பை அடித்துக்கொண்டே வந்தார். அது பாதுகாப்பான ஓரிடத்திற்குப் போயிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தார். அதுதான் கோவில் கருவறை.
பாம்பிற்கே பால் ஊற்றுபவன்;
பாம்பையே கடவுளாகக் கும்பிடுபவன் ஆயிற்றே!
அங்கே உட்கார்ந்துகொண்டிருக்கிறது. அது தெரி யாமல், நம்மாள் கும்பிடுகிறான். ஏனென்றால், இவன் பாம்பிற்கே பால் ஊற்றுபவன். பாம்பையே கடவுளாகக் கும்பிடுபவன் ஆயிற்றே!
அந்த இடத்தில் ஒளிந்திருக்கிறாயா? அங்கேயும் நான் வருகிறேன், விடமாட்டேன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு – அதுதான் ஜாதி ஒழிப்பிற்காக – அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பது – பேத ஒழிப்பு.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சொல்வது, மோட்சத்தில் முன் சீட்டைப் பிடிப் பதற்காகவா? அல்லது வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கா? அல்ல!
அழகு என்பதற்கே
ஒரு புதிய தத்துவம் சொன்ன தலைவர்!
மான மீட்பர்! மானத்தைத் திரும்பப் பெறுவது.
‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு”
அழகு என்பதற்கே ஒரு புதிய தத்துவம் சொன்ன தலைவர் அவர்.
இதுவரையில் அழகை ஒப்பனைக் கடைக்குப் போய்ச் சேர்த்தார்கள். ஆனால், அழகை சுயமரியாதை மூலமாகத் தந்த ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.
எப்பொழுது நீ சுயமரியாதையைப் பெறுகிறாயோ, எப்பொழுது உனக்கு மானமும், அறிவும் இருக்கிறதோ – அதுதான் அழகு. அந்த அழகு நீடிக்கும்.
ஒப்பனை செய்கின்ற அழகு சில மணிநேரம்தான் – அல்லது சில வயது வரைதான்.
ஒப்பனை இல்லாத அழகுதான்
தந்தை பெரியார் சொன்ன அழகு!
திருநெல்வேலி அருகே என்னைப் பார்த்து ஒருவர் கேட்டார், ‘‘அய்யா, உங்களை 30 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறேன். உங்கள் தலைமுடி சுருள் சுருளாக அழகாக இருந்ததே – இப்பொழுது இப்படி ஆகிவிட் டதே?” என்று.
வயதானால் அப்படித்தான் ஆகும். அறிவு வளருதோ, இல்லையோ, முடி எல்லோருக்கும் வளரும் என்று சொன்னேன். ஆகவே, ஒப்பனை இல்லாத அழகுதான் தந்தை பெரியார் சொன்ன அழகு.
மனிதருக்கு அழகு மானமும், அறிவும். இதுபோன்று உலகத்தில் வேறு யாராவது சொல்லியிருக்கிறார்களா?
அழகை வேறுவிதமாகத்தான் வருணித்திருப்பார்கள். ஆனால், அழகிற்கு புது தத்துவம், புது வரையறை சொன்ன ஒரே தலைவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள்தான்.
மனிதர்களுக்காக வாதாடியவர் யார்? மனிதத்திற்காக வாதாடியவர் யார்?
அந்த மானமும், அறிவையும்தான் பெறவேண்டும் என்று சொல்லுகிறபொழுது, என்னை எப்படி ஒருவன், தொடாதே, பார்க்காதே, படிக்காதே என்று சொல்ல முடியும்?
அய்யா அவர்கள் போன்று மனிதர்களுக்காக வாதாடியவர் யார்? மனிதத்திற்காக வாதாடியவர் யார்? என்பதை எண்ணிப் பாருங்கள்.
வைக்கம் போராட்டத்தை 1924 ஆம் ஆண்டு தொடங்கினார், இன்றைக்கு நூற்றாண்டு விழா – நம்முடைய அரசாங்கம் இருப்பதினால், சிறப்பாக அதனைக் கொண்டாடுகிறார்கள். சென்ற முறை கேரள அரசு, அங்கே விழா நடத்தினார்கள். இந்த முறை, 28 ஆம் தேதி அந்த விழாவினை – நிறைவு விழாவினை சென்னையில் நடத்தவிருக்கிறார்கள்.
ஜாதி ஒழிப்பிற்காக மிகப்பெரிய
அளவிற்கு அறிவிப்பு கொடுத்தார்!
அதனுடைய தொடர்ச்சி பல கட்டங்களில் வந்து, இறுதியில் சமுதாய இழிவு ஒழிப்பு என்று வருகிறபொழுது, தந்தை பெரியார் போராட்டத்தில் குதிக்கவேண்டும் – அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் – நாம் அதற்காக உயிரை வேண்டுமானாலும் விடவேண் டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, ஜாதி ஒழிப்பிற் காக அரசமைப்புச் சட்ட எரிப்பு என்று எல்லாவற்றையும் செய்து, மிகப்பெரிய அளவிற்கு அறிவிப்புக் கொடுத்து, அதற்காக சுற்றுப்பயணம் போனார்.
திருநெல்வேலி வரையில் சுற்றுப்பயணம் சென்றார். கரூர், கும்பகோணம் போன்ற ஊர்களில் உரையாற்றி விட்டு, அதற்கடுத்து இங்கே சென்னைக்கு வந்து டிசம்பர் 19 ஆம் தேதி பேசுகிறார்.
அப்படி உரையாற்றும்பொழுது, தொடங்கும்பொழுது வித்தியாசமாகத் தொடங்குகிறார்.
இயக்கத்திற்கு ஒரு தனி அடையாளத்தைச் சொல்லுகிறார்!
என்னுடைய இயக்கத்தினுடைய கொள்கை என்ன? என்று அவர் சொல்லிவிட்டு, இயக்கம் என் பதற்கு என்ன அடையாளம்? இயக்கம் என்பதினு டைய சிறப்பு என்ன? என்று சொல்லுகிறபொழுது, அந்த இயக்கத்திற்கு ஒரு தனி அடையாளத்தைச் சொல்லுகிறார்.
என்னுடைய இயக்கம் – திராவிடர் கழகம் ஒரு கட்சி அல்ல; திராவிடர் கழகம் ஓர் இயக்கம்.
கட்சியும், இயக்கமும் இணைந்தது திராவிடர் இயக்கம் – அரசியல் கட்சியாக இருப்பதினால், அது கட்சி.
ஆனால், அய்யா அவர்கள் விளக்கம் சொல்கிறார்.
தந்தை பெரியார் பேசுகிறார்!
நமது பெரியார் பேசுகிறார் கேளுங்கள்,
‘‘நமது திராவிடர் கழகம் என்பது கட்சியல்ல; இயக்க மாகும். கட்சி என்பது தோல்விக்கும், வெற்றிக்கும் கட்டுப்பட்டது. இயக்கம் என்பது இவற்றுக்கெல்லாம் கட்டுப்பட்டது அல்ல. ஒரே ஒரு தனி மனிதனுடைய உள்ளத்தில் உணர்ச்சி இருக்கும்வரை, அது இருந்துதான் தீரும். ஒரு தனி மனிதனே இயக்கமாக இருக்க முடியும். எதைச் சொன்னால், மக்கள் ஆதரிப்பார்கள்; எதைச் சொன்னால், மக்களுடைய ஆதரவு கிடைக்கும். எதைச் சொன்னால் மக்களுடைய ஆதரவு கிடைக்காது என்றெல்லாம் சிந்தித்து சிந்தித்து – கட்சி என்பது பணியாற்றும். ஆனால், இயக்கத்தவர்களாகிய நாம், மக்களைத் திருத்தவேண்டும். அவர்களுடைய மனதை மாற்றவேண்டும்; அவர்களுக்கு விளக்கிக் கூறவேண்டும். அவர்களுடைய புத்தித் திருந்தவேண்டும். அவர்கள் உள்ளத்தில் மாறுதல் அடையவேண்டும் என்று வேலை செய்கிறவர்கள். அப்பொழுதுதான் நம்முடைய லட்சியம் வெற்றியடையும். மக்களுடைய ஆதரவுக்காக நாம் கவலைப்படமாட்டோம். மக்கள் ஏற்றாலும், வைதாலும் கவலைப்படாமல் இருப்போம்.
எங்களுக்கு ஓரளவிற்கு
வெற்றி கிடைத்திருக்கிறது!
நம்மைப் பொறுத்தவரையில், நம் பின்னாலே மக்கள் வரவேண்டுமே தவிர, பாமர மக்கள் பின்னால் ஓடுவது அல்ல. கல்லடி பட்டாலும் சரி, வெற்றி அடைந்தாலும் சரி, நமக்குப் பட்டதை சொல்லியே தீருவோம். அப்படி நாங்கள், எங்களுடைய பின்னாலேயே மக்கள் பின் தொடரவேண்டும் என்று வேலை செய்ததினாலேதான், இப்பொழுது எங்களுக்கு ஓரளவிற்கு வெற்றி கிடைத் திருக்கிறது” என்றார்.
அந்த ஓரளவு வெற்றி, அவருக்குப் பிறகு மறைந்ததா? தேய்ந்ததா? வளர்ந்ததா? என்று கணக்குப் பார்க்கின்ற கூட்டம்தான் இந்தக் கூட்டம்.
தந்தை பெரியார் காலத்தில் இருந்ததைவிட, இன்று வளர்ந்திருக்கிறது!
இங்கே கணக்கை சொல்லியிருக்கிறார்கள் நண்பர்கள். கொள்கை ரீதியாக தந்தை பெரியார் காலத்தில் இருந்ததைவிட, இன்று வளர்ந்திருக்கிறது.
சமூகநீதிக்காகத்தான் இயக்கத்தைத் தொடங்கி னார் தந்தை பெரியார் அவர்கள். இங்கே 69 சதவிகித இட ஒதுக்கீடுபற்றி சொன்னார்களே – எப்படிப்பட்ட சூழ்நிலையில் செய்தோம்?
மூன்று பார்ப்பனர்கள் – ஒரு பார்ப்பன முதல மைச்சர், தன்னை பாப்பாத்தி என்று மிகத் தெளி வாக சட்டமன்றத்திலேயே பிரகடனப்படுத்துவதற்கு சங்கடப்படாதவர். அவர் மூலமாக, 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வந்தோம்.
அரசாங்க ஆணை என்பது வேறு;
அரசாங்க சட்டம் என்பது வேறு!
அதுவரையில் இந்தியாவில் இட ஒதுக்கீட்டிற்கு, சமூகநீதிக்கு என்று தனிச் சட்டம் கிடையாது. ஆணை தான் உண்டு. அரசாங்க ஆணைதான் இருந்தது. அரசாங்க ஆணை என்பது வேறு; அரசாங்க சட்டம் என்பது வேறு.
69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக சட்டமன்றம் கூட்டப்பட்டு, அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது என் பது வரலாறு. தமிழ்நாட்டின் வரலாறு – சமூகநீதியினுடைய வெற்றியினுடைய வரலாறு.
அதற்கடுத்தது பிரதமர் நரசிம்மராவ் – ஆந்திர பார்ப்பனர் அவர்.
நாடாளுமன்ற அவையே நடைபெறவில்லை. அர்ஷத்மேத்தா பிரச்சினையால் – அப்பொழுது வி.பி.சிங் போன்றவர்களிடம் சொல்கிறோம். உடனே அவர்கள் உதவி செய்கிறார்கள். சீதாராம் கேசரி போன்ற வர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பேயி அவர் களிடம் பேசுகிறார்கள். ஒரு நிபந்தனை போட்டார்கள்.
நாடாளுமன்றத்தில்
ஒருவர்கூட எதிர்க்கவில்லை
எந்த நிபந்தனை போட்டாலும் சரி, அந்த சட்டத்திற்கு ஒப்புதல் கொடுங்கள் – தமிழ்நாட்டில் மிக முக்கியமான பிரச்சினை அது என்று சொன்னவுடன், சட்டத் திருத்தம் 76 ஆவது சட்டத் திருத்தமாக நிறைவேற்றப்பட்ட அந்த சட்டம் 69 சதவித இட ஒதுக்கீடு சட்டம் வந்தபொழுது, நாடாளுமன்றத்தில் ஒருவர்கூட எதிர்க்கவில்லை. இந்த உண்மை பல பேருக்குத் தெரியாது.
இன்றைக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கக்கூடியவருடைய மகன், வழக்குரைஞராக இருக்கக்கூடியவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதில் இந்தத் தகவல்கள் இருக்கின்றன.
ஒரே ஒரு நிபந்தனை வைத்தார் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பேயி – விவாதமே இருக்கக்கூடாது என்று சொன்னார்கள்.
அர்ஷத் மேத்தா விவகாரத்தில், நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்துகொண்டிருக்கிறோம். ஆகவே, இதற்கு மட்டும் நாங்கள் ஒப்புதல் கொடுக்கிறோம்; அந்த மசோதாவை, விவாதமின்றி நிறைவேற்றச் சொல்லுங்கள். அதுகுறித்து யாரும் பேசக்கூடாது என்றார்.
அதற்கு சீதாராம் கேசரி ஒப்புக்கொண்டார். வி.பி.சிங் அவர்கள் அதனை ஒப்புக்கொள்ள வைத்தார். உடனே அந்த சட்டம் நிறைவேறியது.
அன்றைக்குக் குடியரசுத் தலைவராக இருந்தவர் யார்?
உத்தரப்பிரதேசத்தினுடைய பார்ப்பனர் சங்கர் தயாள் சர்மா – அவர் அந்த சட்டத்திற்கு ஒப்புதலளித்துக் கையெழுத்திட்டார்.
அப்படி கையெழுத்துப் போட்டு அனுப்பிவிட்டு, ஒரு வார்த்தையைச் சொன்னார் – ‘‘பார்ப்பனர்களுடைய பங்கைத்தான் நீங்கள் எடுக்கலாமே, தவிர, எங்களுடைய மூளை அப்படியேதான் இருக்கும்” என்றார்.
உங்கள் மூளை எங்களுக்கு ஒருபோதும் வேண்டாம் –
அது விஷமமான மூளை!
அதற்கு வி.பி.சிங் அவர்கள் பதில் சொன்னார், ‘‘உங்கள் மூளை எங்களுக்கு ஒருபோதும் வேண் டாம். அது விஷமமான மூளை. நல்ல மூளைதான் எங்களுக்கு வேண்டும்” என்று சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொன்விழா மாநாட்டில் பதில் கூறினார்.
அதுமட்டுமல்ல நண்பர்களே, பெரியாரை இன்றைக்கு இவர்கள் கொச்சைப்படுத்திப் படம் போட்டு வர்ணிக்கிறார்களே, அந்த ‘முண்டங்கள்’ – நான் இந்த வார்த்தையைத் தெளிவாகப் பயன்படுத்துகிறேன். ஏன் முண்டம் என்று சொல்கிறேன் என்றால், முண்டம் என்றால், தலை இல்லாதவன் என்று அர்த்தம்.
தலை இருந்தால், உயிர் இருக்கின்றவன் என்று அர்த்தம்; தலை இருந்தால் மூளை இருக்கிறது என்று அர்த்தம் இருக்கவேண்டும். எனவே, தலை இல்லாதவன் தான் முண்டம். முண்டம் இல்லாமல், உருவமாக இருந்து என்ன பயன்?
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு அஞ்சல் தலை!
இதோ இது அவர்களது ஜனதா அரசு, ஆர்.எஸ்.எஸ். உள்பட அன்றைய ஜனசங்கம் பிறகுதான் அது பா.ஜ.க. அவ்வாட்சியில் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டனர். அவர்கள் வெளியிட்டு இருக்கின்ற பெரியார் நூற்றாண்டு – வாழ்த்து இருமொழியில் வெளிவந்துள்ளது. ஒன்று ஆங்கிலம்; இன்னொன்று ஹிந்தி.
அதிலே அவர்கள் சொல்லுகின்றபொழுது, பெரியாரு டைய பெருமைகளை அன்றைய ஒன்றிய அரசு தெளி வாகச் சொல்லுகின்றபொழுது, பெரியார் காங்கிரசில் எவ்வளவு பாடுபட்டார் என்பதைப் பதிவு செய் திருக்கிறார்கள்.
The Patriotic fervour of Ramasami led him to give up to his lucrative business and join the Indian National Congress in is its struggle for freedom. He became an ardent fighter and came to be closely associated with Rajaji. Ramasamy courted imprisonment several times during the freedom movement.
The Satyagraha he launched at Vaikkom in Kerala against the despicable practice of barring entry of people of certain castes into the streets where people of other castes lived was a success and he earned the title ‘Vaikkom Hero.”
இதன் தமிழாக்கம் வருமாறு:
‘‘தந்தை பெரியார் இந்திய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட வணிகராக இருந்த போதே காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் தீவிரமாக விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போது ராஜகோபாலாச் சாரியுடன் நெருங்கிய நட்பில் இருந்தார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் பல்வேறு காலகட்டங் களில் சிறைதண்டனையும் பெற்றார்.
வைக்கம் தெருக்களில் குறிப்பிட்ட வகுப்பாரைத்தவிர மற்றவர்கள் நடக்க கூடாது என்ற கொடுங் தீண்டாமை அவலம் இருந்ததை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினார். இது கேரளா முழுக்க பரவி தீண்டாமைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்த போராட்டத்தில் பெரியார் வெற்றி பெற்றார். இதனால் தந்தை பெரியா வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார்.”
‘தேச விரோதி’ என்று பேசுகின்றவர்களுடைய நாக்கு என்ன ஆவது? இதைப் படிக்கவேண்டும்.
இவர்களுடைய ‘சர்டிபிகேட்’ எங்களுக்குத் தேவை யில்லை. பெரியார் தேசத்திற்கு ஆதரவானவரா? இல்லையா? என்று.
ஆனால், இது வரலாற்றுக் குறிப்பு. எப்பொழுது நடந்தது?
எங்களைப் போன்ற சாதாரணமானவர்கள் – சாமானியர்களான உங்களைப் போன்றவர்களுடைய ஆதரவோடு!
பெரியார் நூற்றாண்டு வருகிறது- தலைவர் அன்னை மணியம்மையார் இல்லை. எங்களைப் போன்ற சாதாரண மானவர்கள் – சாமானியர்களான உங்களைப் போன்றவர்களுடைய ஆதரவோடு – அந்த நேரத்தில், பெரியார் நூற்றாண்டுக்கு இந்த சிறப்பு அஞ்சல் தலை. ஒன்றிய அரசாங்கம் வெளியிட்டு இருக்கின்ற சிறப்பு அஞ்சல் தலை.
இது எப்பொழுது வந்தது?
பெரியார் மறைந்தாரா? அல்லது வடநாட்டிற்குப் பயணம் செய்தாரா? இந்தியாவிற்குத் தலைவரானார் பெரியார்.
அவர் வாழும்பொழுது சில நேரங்களில் வடநாடு களுக்குச் சென்று வந்தார். உருவத்தால், உடலால் மறைந்த பிறகு, அவர் இந்தியத் தலைவராக ஆனார்.
பெரியார் பன்னாட்டமைப்பு!
பெரியார் இன்டர்நேஷனல் – பெரியார் பன்னாட் டமைப்பு அமெரிக்கா, சிகாகோவில் தொடங்கப்பட்டு- 27 ஆவது ஆண்டாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பெரியார் உருவத்தால் வாழ்ந்த காலத்தில், மேற்கே சென்றதில்லை; கிழக்கே சென்றார்; தென்கிழக்கு ஆசியாவிற்குச் சென்றார். மலேசியாவிற்குப் போனார், சிங்கப்பூருக்குப் போனார்.
அங்கே அமைப்புகள் உருவாயின. அங்கேயும் ஜாதியை எதிர்த்துப் பேசினார். ‘‘தோட்டத் தொழி லாளிகளாக இருக்கின்ற இந்த நேரத்தில், எதற்கு உங்களுக்கு ஜாதி? அதைத் தூக்கி எறியுங்கள்” என்று அந்த மக்களிடையே சொல்லி, அறிவுறுத்தினார்.
அப்பொழுது இரண்டு நாடுகளுக்கு மட்டும் போனார். பிறகு சிங்கப்பூர் தனி நாடாயிற்று. எனவே, மலேசியா, சிங்கப்பூர், பர்மா ஆகிய மூன்று நாடுகளுக்குத்தான் பெரியார் சென்றார், கொள்கை ரீதியாக
‘‘பெரியார் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார்!’’
1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதிக்குப் பிறகு, ‘‘பெரியார் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார்” என்று கலைஞர் அவர்கள் அழகாகச் சொன்னார்களே, அதற்குப் பிறகு என்ன நிலை என்று சொன்னால், மற்ற நாடுகளுக்குப் பெரியார் சென்றார் – கொள்கை ரீதியாக.
‘‘பெரியாரின் மண்டைச் சுரப்பை
உலகு தொழும்’’
இந்தியாவின் தலைநகர் டில்லிக்குப் போனார் என்பதற்கு அடையாளம் இது. இந்தியாவேயே தாண்டினார்; ஆசியாவையே தாண்டினார்; உலகத் திற்கே போனார் என்பதற்கு அடையாளம்தான் ஜெர்மனியில் நடைபெற்ற சுயமரியாதை மாநாடு; அதற்கடுத்து அமெரிக்காவில் சுயமரியாதை மாநாடு. அதற்கடுத்து, கனடாவில் சுயமரியாதை மாநாடு. உலகம் முழுவதும் பெரியார் பன்னாட்ட மைப்பு என்ற அளவிற்கு வந்திருக்கிறது என்று சொன்னால், ‘‘பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்” என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்.
மண்டைச் சுரப்பு – எங்களுக்கு என்ன தைரியம்? நாங்கள் எப்படியும் வெற்றி பெறுவோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வெற்றி பெற்றாக வேண்டும் என்று சொன்னார்கள் அல்லவா! அந்த வெற்றிக்கு அடையாளம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று சொல்லுகின்ற நேரத்தில், ஓரிடத்தில் மிக அழகாகச் சொல்லுகிறார்.
ஜெயித்தே ஆகணும்!
‘‘தயவு செய்து நீங்கள் விஷயங்களைத் தீவிரமாகக் கவனிக்கணும். ரொம்பத் தீவிரமாய்க் கவனிக்கணும். ஜெயித்தே ஆகணும்! நால் சொல்கிறேன் என்று கேலி பண்ணாதீர்கள் – நீ என்ன நாளைக்குச் சாகப் போறே, துணிந்து வந்திருப்பாய் என்று. நானே பண்ணவேண்டும் என்று இல்லை. நீங்கள் பண்ண வேண்டிய காரியத்தைத் தானே நான் செய்கிறேன். அதனாலே எல்லோரும் துணியணும்; மளமளவென்று கலந்துகொள்ளணும். ஆண் பிள்ளைகள் வர முடியவில்லை என்றால், அவர்கள் வீட்டுப் பொம்பளைங்களை அனுப்புங்கள். அனுப்ப முடியவில்லை என்றால், ஒரு நாலு பேரைப் பிடித்து அனுப்புங்கள். நீ போ எனக்காக என்று. நாம் எல்லோருமாகப் பாடுபட்டோம் என்று தெரியணும்” என்றார்.
ஜெயித்தே காட்டிவிட்டார். முதலில் கலைஞர் அவர்கள் போட்ட சட்டம்; இரண்டு முறை உச்சநீதிமன்றம் அந்தச் சட்டம் செல்லும் என்று சொல்லிவிட்டு, அங்கே ஒரு புள்ளி வைத்தது.
சட்டம் செல்லும்; ஆகமம் படிக்கவேண்டும்; அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம். பாரம்பரி யமாக என்றிருப்பதை ஒழிக்கின்றோம் என்கின்ற சட்டம் செல்லுபடியாகும்.
‘‘ஆபரேஷன் வெற்றி! நோயாளி செத்தார்’’ – ‘விடுதலை’ தலையங்கம்!
அப்பொழுதுதான் தலையங்கம் எழுதி விளக்கம் சொன்னோம். ‘‘ஆபரேஷன் வெற்றி! நோயாளி செத்தார்” என்ற தலைப்பில் அந்தத் தலையங்கம் எழுதப்பட்டது.
அதற்கடுத்து சட்டப் போராட்டம் – பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றவேண்டும் என்று கலைஞர் தொடர்ந்து முயற்சி எடுத்தார். அதனுடைய விளைவு, அடுத்தபடியாக அந்த சட்டம் – ஆகமப் பயிற்சி பள்ளிக்கூடம் – நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அறிக்கை கொடுத்த பிறகும் – பார்ப்பனத் தொல்லை முடியவில்லை.
ஜாதி ஆதிக்கம், ஆணவம் அதுதான். ஏனென்றால், காலங்காலமாக அதை அனுபவித்தவர்கள் – உள்ளே யாரையும் விடாமல் இருந்தார்கள் அல்லவா!
உச்சநீதிமன்ற வழக்கில் வெற்றி பெற்றோம்!
அதுபோன்றுதானே இப்பொழுது கல்வித் துறை யிலும் இருக்கிறார்கள். கருவறைப் பிரச்சினை போன்று அதனை எதிர்த்துக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு அதைத் தூக்கியாயிற்று. கடைசி நேரத்தில் உள்ளே போனவுடன், என்ன செய்தார்கள் என்றால், குறுக்குச்சால் விட்டார்கள் – உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என்று சொன்னார்கள்.
உச்சநீதிமன்றத்தில் 2016 இல் வழக்கின் தீர்ப்பு. அந்த வழக்கில்கூட வெற்றி பெற்றோம்.
சில பத்திரிகைகளில்கூட தவறான செய்திகளை வெளியிட்டனர். இந்தச் சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது என்று.
சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றத்தால் சொல்ல முடியாது. இரண்டு தீர்ப்புகளிலும் சட்டம் செல்லும் என்று சொல்லிவிட்டது. ஆனால், குறுக்குச்சால் விட்டார்கள், ஆகமம் படித்திருக்கவேண்டும் என்று. அதையும் நிறைவேற்றினார் கலைஞர்.
‘‘நெய் மணக்கும் நெய்வேலி தீர்மானம்!‘’
ஆனால், அதை எதிர்த்தும் வழக்குத் தொடர்ந்தார்கள். அன்றைக்கு இருந்தது அ.தி.மு.க. ஆட்சி – தேர்தல் நேரத்தில்கூட, திராவிடர் கழகமான தாய்க்கழகம் – நெய்வேலியில் நடத்திய மாநாட்டின் முதல் தீர்மானமே – ‘‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்திற்கு யார் ஆதரவு கொடுக்கிறார்களோ, அவர்களை ஆதரிப்போம்” என்று தீர்மானம் போடப்பட்டது.
கலைஞர் அவர்கள்தான் ‘‘நெய் மணக்கும் நெய்வேலி தீர்மானம்” என்று எழுதினார். அதைத் தொடர்ந்தும் வழிவகை செய்தார். அதற்குப் பிறகு வந்த ஆட்சியினருக்கு அதைப்பற்றி கவலையில்லை.
இந்தியாவிற்கே வழிகாட்டி – ‘இந்தியா’ கூட்டணி உருவாவதற்குக் காரணமான முதலமைச்சர்!
மீண்டும் அதனை நிறைவேற்றுவதற்கான ஆட்சி – தற்போது நல்வாய்ப்பாகக் கிடைத்தது. அந்த ஆட்சிதான் இன்றைக்குத் ‘திராவிட மாடல்’ ஆட்சியாக – இந்தியாவிற்கே வழிகாட்டி – ‘இந்தியா’ கூட்டணி உருவாவதற்குக் காரணமாக இருக்கக் கூடிய நம்முடைய சமூகநீதிக்கான சரித் திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய ஆட்சி.
ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஆகஸ்ட் 14 ஆம் தேதி, 2021 ஆம் ஆண்டு அனைத்து ஜாதியி னர் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களில் சிலருக்கு பதவி நியமன ஆணையைக் கொடுத்தார். பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் அகற்றப்பட்டது.
இது ஒரு தொடர்ச்சி – இங்கே ஒன்றும் இடைவெளி இல்லை. சரியான ஆட்சி அமைந்தது.
70 ஆண்டுகாலப் போராட்டம்!
எனவேதான், 70 ஆண்டுகாலப் போராட்டம் – 1960 ஆம் ஆண்டிலிருந்து மன்னார்குடி மாநாட்டுத் தீர்மானத்திலிருந்து தொடங்கியது.
டாக்டர் நாயர் அவர்கள் ஸ்பர்டாங்க் ரோடு உரை என்று சொல்லக்கூடியதில், 1917 ஆம் ஆண்டு பேசி யிருக்கிறார். ‘‘ஒரு ஆதிதிராவிடர் அர்ச்சகர் ஆக முடியுமா?” என்று.
அப்படிப் பார்த்தால், ஒரு நூற்றாண்டு வரலாறு இது. அதை அத்தனையும் இந்தத் திராவிட மாடல் ஆட்சி செய்திருக்கிறது.
இன்றைக்குக் கோவில் கருவறைக்குள் பெண் மணியாட்டுகிறார். அதனால் எந்த சாமி செத்துப் போச்சு? பெரியார் மொழியில் கேட்கிறேன்.
நம்முடைய தமிழ் மொழியில் அர்ச்சனை செய்தால், அந்த சாமி செத்துப் போய்விடுமா?
பெரியார்தான் சொல்லுவார், ‘‘நம்முடைய தமிழ் மொழியில் அர்ச்சனை செய்தால், அந்த சாமி செத்துப் போய்விடுமா?” என்று கேட்பார்.
தீட்டாயிடும், தீட்டாயிடும் என்பார்கள்.
‘‘என்னடா, தீட்டாயிடும்?” என்று கேட்பார் பெரியார்.
ஆகவே, இன்றைக்கு 50 ஆண்டு காலத்திற்குப் பிறகு இது.
அடுத்த கட்டம் – இன்னொன்று!
எதற்காகப் பெரியார் களத்தில் நின்றாரோ, அதில் பெரியார் வென்றார்!
அதுதான் பெரியார் வாழுகிறார்
என்பதற்கு அடையாளம்!
ஜெயித்தே ஆகணும் என்று சொன்னார் அல்லவா – ஜெயித்தே காட்டியிருக்கிறோம். அதுதான் பெரியார் வாழுகிறார் என்பதற்கு அடையாளம். இன்றைக்கு அவர் களால், அதைத் தடுக்க முடியவில்லை.
என்னென்னவோ குறுக்குச்சால் விட்டுப் பார்த் தார்கள், ஆனாலும், அவர்களால் தடுக்க முடியவில்லை.
அடுத்த கட்டம் மிக முக்கியமான ஒன்று –
50 ஆண்டுகள் உழைத்ததினாலே
ஏதோ கொஞ்சம் மாறுதல்…
இறுதி உரையில் ஓர் எச்சரிக்கை செய்கிறார் தந்தை பெரியார் அவர்கள்!
50 ஆண்டுகள் உழைத்ததினாலே ஏதோ கொஞ்சம் மாறுதல். என்ன மாறுதல் என்பதை விளக்குகிறார் அய்யா.
நாமெல்லாம் அவாளுக்குத் தேவடியாள் மக்கள் – அதுவும் எதிரே நம்மைப் பார்த்து சூத்திரன் என்று சொல்லமாட்டான்.
நம்முடைய வீட்டில் வேலை செய்கிற பெண்ணைப் பற்றி உயர்ஜாதி பார்ப்பனர்கள் வீட்டில் அல்ல – அதற்கு அடுத்தபடியாக தன்னை உயர்ஜாதி என்று நினைத்துக் கொண்டிருக்கும் முதலியார் வீட்டில்கூட, ‘‘சூத்திரச்சி வந்தாளா?” என்று கேட்பார்கள். அது ஒரு ஃபேஷன், அது ஒரு நாகரிகம்.
அதை அப்படியே சொன்னார் அய்யா அவர்கள் ஒரு கூட்டத்தில்.
ஏனென்றால், சற்சூத்திரர் என்று சொல்வதில் பெருமை அடைந்தவர்கள் அல்லவா அவர்கள்.
50 வருஷமா உழைத்ததினால், கொஞ்சம் மாறுதல். அது என்ன?
‘சூத்தரச்சி வேலைக்காரி வந்தாளா?’ என்று கேட்கின்ற பழக்கம் இருக்கிறதே!
அதுவும், எதிரே நம்மைப் பார்த்து சூத்திரன் என்று சொல்லமாட்டான். முகத்திற்கு நேரே பேசமாட்டான். அது இப்பொழுது மாறியிருக்கலாம். ஆனால், சட்டம் மாறவில்லையே, சட்டத்தில் வைத்திருக்கிறானே! தங்கள் வீட்டிற்கு இன்னும் ‘சூத்தரச்சி வேலைக்காரி வந்தாளா?’ என்று கேட்கின்ற பழக்கம் இருக்கிறதே! இந்த சூத்திரப் பசங்க என்றுதான் பேசுவார்கள்.
இந்த இழிவிலிருந்து நீங்கவேண்டும்.
இது என்ன தவறா?
நான் காலங்காலமாக இருக்கின்ற இழிவிலிருந்து, அவமானப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் – அந்த அவமானத்திலிருந்து வெளியே வரவேண்டும் என்று நினைப்பது தவறா?
மனிதம் என்னைக் காப்பாற்றவேண்டும்; மனிதனாக இருக்கவேண்டும் என்று வாதாடுவது தவறா?
மனிதம் என்னைக் காப்பாற்றவேண்டும். நான் மனித னாக இருக்கவேண்டும் என்று வாதாடுவது தவறா? அது என்னுடைய உரிமை அல்லவா! பிறப்புரிமை அல்லவா! அதையல்லவா தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய இறுதி முழக்கமாக ஆக்கினார்.
மாநாடு கூட்டியது டிசம்பர் 8 ஆம் தேதி இரவு. தொண்டர்களை அறப்போராட்டத்திற்கு அழைத்தார்.
அடுத்தகட்டமாக எச்சரிக்கை செய்தார்!
நாங்கள் ஏதோ கொஞ்சம் உணர்ச்சியோடு இருக்கி றோம். அதனால், அவன் இன்றைக்கு வாயை மூடிக்கொண்டு இருக்கிறான்.
சில பேர் புரியாமல் கேட்கிறார்கள்!
சில பேர் புரியாமல் கேட்பார்கள், ‘‘ஏங்க, மனுதர்மத் தில் படித்தால் நாக்கை அறுக்கவேண்டும்; காதில் ஈயத் தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று சொன்னார்களே, இப்பொழுதும் ஊற்றிக் கொண்டிருக்கிறார்களா?” என்று புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பது போன்று கேட் பார்கள்.
அதற்கு நான் பல மேடைகளில் பதில் சொல்லி யிருக்கிறேன். ‘‘இப்பொழுது இல்லை.!”
ஏன் இல்லை?
நாங்கள் இருக்கிறோம், அதனால் இல்லை!
கடைசி ரத்த அணுக்கள் இருக்கின்றவரை நாங்கள் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம்!
நாங்கள் உயிரோடு இருக்கிறோம். கடைசி ஆள் எங்கள் ஆள், கடைசி ரத்த அணுக்கள் இருக்கின்றவரை நாங்கள் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில்,
தந்தை பெரியார் பேசுகிறார்!
தந்தை பெரியார் கேட்கிறார்,
‘‘அய்ம்பது வருஷமாய் உழைத்ததிலே ஏதோ கொஞ்சம் மாறுதல். அதுவும் எதிரே நம்மைப் பார்த்து, சூத்திரன் என்று சொல்லமாட்டான். வீட்டிலே பேசுவான் – இந்தச் சூத்திரப் பசங்க என்றுதான் பேசுவான். இந்த இழிவிலே இருந்து நீங்கணும். ஏதோ சட்டம், சமத்துவம், கடவுள் என்று சொன்னால், ஏதோ அதை உதைக்கிறோம், கடவுளை நாளைக்குச் செருப்பாலே அடிக்கச் சொல்கிறோம்; பல தடவை அடிச்சாச்சு. நாளைக்கும் அடிக்கச் சொல்கிறோம். நம் தாய்மார்களையும் நல்லா சாப்பிட்டு விளக்குமாற்றலே போடச் சொல்கிறோம். சட்டத்திலே இருக்கிறதை என்ன பண்ணுகிறது? ஏதோ கொஞ்சம் உணர்ச்சியோடு இருக்கிறோம்; இன்றைக்கு அவன் வாயை மூடிக்கிட்டு இருக்கிறான். நாளைன் னைக்கு பார்ப்பான் வந்துவிட்டான் என்றால், என்ன ஆகும்? எங்களைத் தவிர நாதி இல்லையே இந்த நாட்டில். எத்தனை நாளைக்கு நாம் இப்படியே கட்டிக் காத்துக்கிட்டு இருப்போம்!
எல்லாக் கட்சிக்காரனும் ஒன்றாய்ச் சேர்ந்து இன் றைக்கு இருக்கிற ஆட்சியை ஒழிக்கணும் என்கிறான். ஒழித்தால் ஒழித்துவிட்டுப் போ, எனக்கு ஒன்றும் கவலையில்லை. அப்புறம் என்ன? இன்றைக்குத் திருட்டுத்தனமாக மறைவாகப் பேசுகிறவர்கள் – நாளைக்கு வெளிப்படையாகப் பேசுகிறான். பேசுகிற வனை பார்ப்பான் மாலை போட்டு வரவேற்கிறான். அவனுக்கு விளம்பரம் கொடுக்கிறான். எனவே, தோழர்களே, நம்முடைய நிலைமை உலகத்திலேயே பெரிய மானக்கேடான நிலைமையாகும்.” என்றார் தந்தை பெரியார்.
பெரியார் சொன்னது இன்றைக்கு நூற்றுக்கு நூறு சரியாக இருக்கிறதா, இல்லையா?
இன்றைக்கு ஏன் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறவேண்டும்!
இன்றைக்கு ஏன் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறவேண்டும் என்று நாம் நினைக்கின்றோம்.
ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று ஏன் சொல்கிறோம்?
பார்ப்பனியம் – பிராமிணோகிரசி – பார்ப்பன நாயகம் முழுக்க முழுக்க இருக்கிறது என்பதுதானே அதன் காரணம்.
பெரியாருடைய நுண்ணறிவு, அனுபவ அறிவைப் பாருங்கள்.
இன்று நாம் காணும் காட்சி ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சி.
நம்முடைய இயக்கம், நம்முடைய கொள்கை, நம்முடைய ஆட்சி மாறவேண்டும் என்றுதானே அவர்கள் துடிக்கிறார்கள்.
தெலங்கானா மாநில தேர்தலில்
காங்கிரஸ் வெற்றி நிரூபித்தது!
இன்றைக்கு அதற்காக வெறிபிடித்துப் பாடுபடு கிறார்கள். அவர்கள் என்னதான் செய்தாலும், தமிழ் நாட்டில் அவர்களால் காலூன்ற முடியாது. தமிழ்நாடு மட்டுமல்ல, தென்னாடு முழுவதும் தெளிவாக இருக் கிறது என்பதற்கு அடையாளமாக தெலங்கானா மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி நிரூபித்தது.
வடபுலத்தை கைகளில் வைத்திருக்கிறார்கள். அங்கேயும் பெரிய வித்தியாசமில்லை. இரண்டு சத விகிதம் அல்லது மூன்று சதவிகிதம்தான் வாக்குகள் வித்தியாசம்!
நடந்ததைப்பற்றி கவலையில்லை. இனி நடப்பதைப் பற்றி கவலைப்படவேண்டும் என்பதுதான் பெரியாரு டைய பாடம்.
பெரியார் தோற்கமாட்டார்!
அன்றைக்குப் பெரியார் அவர்கள் காங்கிரசைவிட்டு வெளியேறினாரோ, அந்த நிலைமை காங்கிரசில் இன்றைக்கு மாறிவிட்டதே!
பெரியார் வெற்றி பெற்றுவிட்டாரே!
பெரியாருடைய சமூகநீதிக் கொள்கைப்படி காங்கிரஸ் கட்சியை நிர்வாகம் செய்யக்கூடிய வர்கள்கூட இன்னின்னார் இருக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பெரியார் வெற்றி பெற்றுவிட்டாரே!
இன்றைக்கு இங்கே சொன்னார்களே, ராகுல் காந்தி அவர்கள் சமூகநீதியைப் பேசுவதைப்பற்றி!
ஆகவே, நண்பர்களே! இந்த 50 ஆண்டு காலத் தில் ‘‘ஜெயித்தே ஆகணும்” என்று சொன்னார் பெரியார்.
ஜெயித்துக் கொண்டிருப்போம்; ஜெயிப்போம், வெற்றி பெறுவோம், நிச்சயமாக!
அது இல்லையானால், இன்னும் வேகமாகப் போவோம்.
எங்களால் அந்த ஆபத்து வராது- இளைஞர்களால் வரும்!
ஒருமுறை கலைஞர் சொன்னதை நான் சொல்லி என்னுரையை முடிக்கிறேன்.
‘‘தண்ணீரின் உள்ளே இருந்தால் பாஸ்பரஸ், அது வெளியே வந்தால், ஆபத்து!”
ஆகவே, எங்களால் அந்த ஆபத்து வராது- இளைஞர்களால் வரும். இளைஞர்கள் எப்படிப்பட்ட உணர்வைப் பெற்றிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
வேலை வாய்ப்பு இல்லை, மற்ற மற்ற நலன்கள் இல்லை- ஜனநாயகம் இல்லை – கருத்துரிமை இல்லை என்றால், என்ன ஆகும்? பெரியாருடைய தொலை நோக்கு என்பது சாதாரணமானதல்ல – அந்த வழியிலே நாம் நடைபோடுகிறோம்!
அந்த வகையில்தான், இந்த இயக்கம்!
இங்கே சொன்னார்கள் தோழர்கள் – என்னுடைய பெருமையோ, மற்ற பெருமையோ எதுவும் கிடையாது.
பெரியார் தந்த புத்திதான் எனக்கு!
பெரியார் தந்த புத்திதான் எனக்கு! ஆகவே, அந்த தந்த புத்திக்குக் கிடைத்த வெற்றிதான் இவையே தவிர, வேறில்லை.
பெரியார் தந்த புத்தி ஒருபோதும் தோற்காது!
அண்ணா மறைந்தபொழுது, கலைஞர் அவர்கள் தன்னுடைய கவிதையின் மூலமாக, ‘‘ஆற்றல் வாய்ந்த அண்ணா அவர்களே, உங்களுடைய இதயத்தைத் தாருங்கள்” என்று கேட்டார்.
நான் கவிஞன் அல்ல, கலைஞர் அல்ல!
நான் ஒரு சாதாரண பெரியார் தொண்டன். பெரியாரால் உருவாக்கப்பட்டவன்.
எதிரிகள் தோற்பது நிச்சயம்!
எனவேதான், நான் பெரியாரை மூளைத் தாருங்கள் என்று வெளிப்படையாகக் கேட்கவில்லை.
நடைமுறையிலே, பெரியார் தந்த புத்தியைப் பயன் படுத்துகிறேன்.
மூளையும் முக்கியம், இதயமும் முக்கியம்!
இரண்டும் இணைந்ததால்தான், எதிரிகள் தோற்பது நிச்சயம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக