சனி, 18 நவம்பர், 2023

சங்கரய்யா அவர்கள் காண விரும்பிய ஜாதியற்ற, வர்க்க பேதமற்ற ஒரு புரட்சிகரமான புதியதோர் சமுதாயம் அமைப்போம்!


உலகெலாம் பொதுவுடைமை திக்கெட்டும் பரப்புவதற்காக வாழ்ந்தாரே, அதனைத் தொடருவதுதான் சங்கரய்யாவிற்கு நாம் காட்டுகின்ற மரியாதை!

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா மறைவிற்கு இரங்கல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் - இரங்கலுரை

2

சென்னை, நவ.17  சங்கரய்யா அவர்கள் காண விரும் பிய ஜாதியற்ற, வர்க்கபேதமற்ற ஒரு புரட்சிகர மான புதியதோர் சமுதாயம் அமைப்போம்! கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்! உலகெலாம் பொதுவுடைமை திக்கெட்டும் பரப்புவோம் என்ற எண்ணத்தைப் பரப்புவதற்காக வாழ்ந்தாரே, அதனைத் தொடருவோம்! தொடருவதுதான் சங்கரய்யாவிற்கு நாம் காட்டுகின்ற மரியாதை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (16.11.2023) முற்பகல் மறைந்த மூத்த கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர் சங்கரய்யாவின் இறுதி நிகழ்வின்போது நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரங்கலுரையாற்றினார்.

அவரது இரங்கலுரை  வருமாறு:

தொண்டறத்தினுடைய எடுத்துக்காட்டாக, தூய தொண்டறம் என்பதற்கு இலக்கணமாக 102 ஆண்டுகள் வாழ்ந்து - பிறந்த பொழுது அவர் அனைவரையும் போன்றே குழந்தையாக, பின்பு ஒரு சாதாரண மனித ராக எளிமையோடு இருந்தார்.

அகில இந்தியாவும் இங்கே வந்திருக்கிறது;  கோடானு கோடி மக்கள் மரியாதை செலுத்துகிறார்கள்!

அவர்கள் இன்றைக்கு இறுதி மரியாதையைப் பெறுகின்ற நேரத்தில், அகில இந்தியாவும் இங்கே வந்திருக்கிறது.  கோடானு கோடி மக்கள் மரியாதை செலுத்துகிறார்கள்.  

அவருக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற இந்நிகழ்ச் சிக்குத் தலைமையேற்று இருக்கின்ற அருமைச் சகோதரர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்களே,

இவ்வியக்கத்தில் அவரோடு போராட்டக் களத்தில் நின்றவரும், அகில இந்திய பொதுச்செயலாளருமான காம்ரேட் சீதாராம் யெச்சூரி அவர்களே,

அகில இந்திய அளவிலிருந்து இங்கு வந்திருக்க க்கூடிய தமிழர்களே,

தமிழ்நாட்டினுடைய அனைத்து இயக்கங்களைச் சார்ந்த பெருமக்களே,

நம் கொள்கையில் நிறைந்த சங்கரய்யாவாகத்தான் அவரை இன்றைக்கு 

நாம் வழியனுப்புகின்றோம்!

மறைந்தசங்கரய்யாஎன்று நாம் அழைக்கவேண் டிய அவசியமில்லை. நம் கொள்கையில் நிறைந்த சங்கரய்யாவாகத்தான்அவரைஇன்றைக்குநாம் வழியனுப்புகின்றோம். கொள்கையில் நிறைந்த சங் கரய்யாவாக மட்டுமே அவரை நாம் வழியனுப்ப வில்லை. போராளிகளுடைய ரத்தத்தில் உறைந்த சங்கரய்யாவாக, லட்சியங்களில் உறைந்த சங்கரய்யா வாகத்தான்,  கொள்கைகளில் நிறைந்த சங்கரய்யாவாக, அவரை இன்றைக்கு நாம் வழியனுப்புகின்றோம்.

அவருடைய பொதுவாழ்க்கை, பெரியாருடைய கொள்கையிலிருந்து முகிழ்ந்தது. அவருடைய குடும்பம், 'குடிஅரசு' ஏட்டை வளர்த்து படித்தது. அந்தப் பச்சை அட்டை குடிஅரசுதான் தமிழ்நாட்டில் ஓர் அமைதிப் புரட்சியை, அறிவுப் புரட்சியை, ஆயுதம் ஏந்தாதப் புரட்சியை, ரத்தம் சிந்தாதப் புரட்சியை பெரியார் காலத்தில் உருவாக்கியபொழுது, அவருடைய குடும்பத்தில் மாணவராக இருந்த தோழர் சங்கரய்யா அவர்கள் அதன்பால் ஈர்க்கப்பட்டார்.

கொள்கையில் சமரசமற்ற ஒரு மாமனிதர்

அன்றைக்கு எந்தக் கொள்கையை அவர்கள் ஏற்று கடைப்பிடித்தார்களோ, அதன்படி ஜாதி இல்லை, மதம் இல்லை, கட்சி இல்லை - மனிதத் தன்மை உண்டு - அனைவருக்கும் அனைத்தும்' என்ற சமூகநீதி என்பது இருக்கிறதே - அதுதான் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகத்தான் அவருடைய இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில், கொள்கையில் சமரசமற்ற ஒரு மாமனிதராக இன்றைக்கும் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். என்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பார். எப்பொழுதும் நமக்குப் பாடமாக இருப்பார் - வெறும் படமாக இருக்கமாட்டார். பாடமாக இருக்கக்கூடிய அளவில், அவருடைய தொண்டறம் என்பது தலைசிறந்த ஒப்பற்ற தொண்டறமாக இருக்கும்.

பொது வாழ்க்கையில் தன்னலமறுப்பு!

பொதுவாழ்க்கையில் சிக்கனம்!

பொதுவாழ்க்கையில் எளிமை!

கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாதவர்

அவரது பொதுவாழ்க்கை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டிய ஒரு பாடம் - கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாதவர்.

அப்படி சமரசம் இல்லாத ஒரு மாமனிதரை, மக்கள் என்றைக்கும் தங்கள் நெஞ்சிலே ஏந்துவார்கள்.

''உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்''

என்ற குறளின்படி உலகத்தார் உள்ளத்தெல்லாம் இன்றைக்கு வாழ்கிறார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அந்தப் பெருமை அவருக்கு என்றைக்கும் உண்டு.

சங்கரய்யா அவர்கள் 102 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். அதுவே நமக்குப் பெருமை, ஓர் ஆறுதல்.

இந்த நேரத்தில், எத்தனை ஆண்டுகாலம் வாழ்ந்தாலும், அவருடைய இழப்பு என்பது ஏற்க முடியாத ஒன்று என்று சொன்னாலும்கூட, ஒன்றை நினைத்து நாம் ஆறுதல் கொள்ளவேண்டும்.

சங்கரய்யா அவர்கள் 

ஒரு திறந்த பாடப் புத்தகம்!

இறுதி வரையில் அவர் ஒரு போராளியாக களமாடிய போராளி. 102 ஆண்டுகள், 108 ஆண்டுகள்கூட எத்தனையோ பேர் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், சமுதாயத்திற்கு, மக்களுக்கு, உலகத்திற்கு அவர்களால் என்ன லாபம் என்று கருதுகின்ற நேரத்தில், சங்கரய்யா அவர்கள் ஒரு திறந்த புத்தகம் - பாடப் புத்தகம்.

இனிமை - எளிமை - கொள்கை - உறுதி - சமரசமற்ற பொதுவாழ்க்கைக்கு அடையாளமாக அவர்கள் திகழ்ந்த காரணத்தினால்தான், இத்தனை லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்கள் அவருக்கு வீர வணக்கம் செலுத்துவதற்காக வந்திருக்கிறார்கள்.

நம்முடைய சகோதரர்கள் இங்கே சொன்னதைப்போல, சங்கரய்யா அவர்களுக்கு மிகப்பெரிய பெருமை என்னவென்றால், அரசு மரியாதையோடு அவருடைய இறுதி நிகழ்வு நடைபெற்றது.

பல நேரங்களில், அரசாங்கத்தை எதிர்த்துத்தான் போராடுகிறோம். அது எந்த அரசாங்கமாக இருந்தாலும், அவர் கொள்கைக்காகப் போராடக் கூடிய போராளியாக களத்தில் நின்றவர்.

எல்லோரும் தமிழ்நாடு அரசாங்கத்தைப் பாராட்டினார்கள், வாழ்த்தினார்கள்!

14

அப்படிப்பட்ட நேரத்தில், இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கும் அரசாங்கம் - நம்முடைய முதலமைச்சர்  'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் அமைந்தவுடன், இங்கே நண்பர்கள் குறிப்பிட்டதைப்போல, 'தகைசால் தமிழர்' விருது என்ற ஒரு விருதை உருவாக்கி, முதல் விருது கொடுத்தது அவருக்குத்தான் என்ற பெருமை இருக்கிறதே - அதில் ஒருவர்கூட எந்தக் குறையும் சொல்லாமல், எல்லோரும் அரசாங்கத்தைப் பாராட்டினார்கள், வாழ்த்தினார்கள். 

இடைவெளி கிடையாது எங்களுக்கு - ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்ற இடைவெளி இல்லை.

வயதானவர் - இளைஞர் என்ற இடைவெளி இல்லை.

அதேபோல, கொள்கையில் இடைவெளி இல்லை. எல்லாவற்றிற்கும் நாங்கள் சமரசமாக இருப்போம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அவருடைய இல்லத்திற்கு முதலமைச்சர் அவர்கள் சென்றார்கள். இதுதான் பண்பாடு.

அவர் விட்ட பணி முடிப்போம்!

அவர் எந்தக் கொள்கைக்காக வாழ்ந்தாரோ, அந்தக் கொள்கையைப் பின்பற்றுவோம் - அவர் விட்ட பணி முடிப்போம்!

அவர் காண விரும்பிய ஜாதியற்ற, பேதமற்ற, வர்க்கமற்ற ஒரு புரட்சிகரமான புதியதோர் சமுதாயம் அமைப்போம்! கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!

உண்மையான வீர வணக்கம்!

உலகெலாம் பொதுவுடைமை திக்கெட்டும் பரப்புவோம் என்ற எண்ணத்தைப் பரப்புவதற்காக வாழ்ந்தாரே, அதனைத் தொடருவோம்! தொடருவதுதான் சங்கரய்யாவிற்கு நாம் காட்டுகின்ற மரியாதை!

உண்மையான வீர வணக்கம்!

வீர வணக்கம்! வீர வணக்கம்!! வீர வணக்கம்!!!

நன்றி!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இரங்கலுரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக