எந்தப் போராட்டமாக இருந்தாலும் கடைசியில் எங்களுக்குத்தான் வெற்றி என்பது திராவிட இயக்கத்தின் வரலாறு - தந்தை பெரியாருடைய வரலாறாகும்!
சென்னை ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களிடையே கழக துணைத் தலைவர்
சென்னை, நவ.4 எங்களுடைய போராட்டங்கள், அது எந்தப் போராட்டமாக இருந்தாலும், கடைசியில் எங்களுக்குத்தான் வெற்றி என்பதுதான் திராவிட இயக்கத்தின் வரலாறு - தந்தை பெரியாருடைய வரலாறாகும் என்றார் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்.
இந்திய அரசா - ஹிந்தி சமஸ்கிருத அரசா? என்ற முழக்கத்துடன் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங் களில் இன்று (4.11.2022) காலை மாபெரும் கண்டன அற வழி ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு குடியரசுத் தலைவரிடம் கொடுத்த அறிக்கை - ஹிந்தித் திணிப்பில் பி.ஜே.பி. தலைமையிலான ஒன்றிய அரசு எவ்வளவு மூர்க்கத்தனமாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
‘‘மத்திய பல்கலைக் கழகங்களிலும், அய்.அய்.டி., அய்.அய்.எம். முதலியவற்றிலும் ஹிந்தியே பயிற்று மொழியாக வேண்டுமாம். இந்திய அரசின் நிர்வாகப் பணிகள் அனைத்திலும் ஹிந்தியை மட்டும் பயன் படுத்தவேண்டுமாம்!
ஹிந்தியைப் பொது மொழியாக்கும் வகையில் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களிலும் ஹிந்தி மொழியே பயிற்று மொழியாக ஆக்கப்படவேண்டுமாம்!
ஹிந்தியை மட்டுமே முதன்மைப்படுத்தவேண்டுமாம்!
இளைஞர்களின் வேலை வாய்ப்பில் கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு, ஹிந்தியை மட்டுமே முதன்மைப்படுத்தவேண்டும்'' என்று சொல்லப் பட்டுள்ளது. (ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத மாணவர்களின் கதி என்ன?)
தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசு அலுவலகங்களில், ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாதவர்கள் எப்படி பணியாற்ற முடியும்?
ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாத பல மாநிலங்களிலும், ஹிந்தி எதிர்ப்பு எரிமலை நெருப்பைக் கக்க ஆரம்பித்துவிட்டது.
பா.ஜ.க. ஒன்றிய அரசின் இந்த ஹிந்தி திணிப்பைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவிப்பின்படி இன்று (4.11.2022) தமிழ்நாடு முழுவதும் கழக மாவட்ட தலைநகரங்களில் திராவிட மாணவர் கழகத் தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்ற மாபெரும் கண்டன அறப்போர் ஆர்ப்பாட்டம் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்,
எச்சரிக்கை! எச்சரிக்கை!
ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை!
ஹிந்தி-சமஸ்கிருதத்தைத் திணிக்காதே!
இந்திய ஒற்றுமையைக் குலைக்காதே!
பா.ஜ.க.வே! ஆர்.எஸ்.எஸ்.சே!
மொழித் திணிப்பின் பேராலே
பண்பாட்டைச் சிதைக்காதே!
சமஸ்கிருதத்தைத் திணிக்காதே!
சமத்துவத்தைச் சிதைக்காதே!
மத்தியப் பல்கலைக்கழகங்களில்
ஹிந்தி மட்டும் பயிற்றுமொழியா?
ஒன்றிய அரசின் வேலைகளுக்கு
ஆங்கிலத்துக்குப் பதில் ஹிந்தி மொழியா?
ஹிந்தி அல்லாத மொழி பேசுவோருக்கு
உரிமைப் பறிப்பா? உரிமைப் பறிப்பா?
குடியரசுத் தலைவரே!
நிராகரியுங்கள்! நிராகரியுங்கள்!
அமித்ஷா குழுவின் அறிக்கையை
நிராகரியுங்கள்! நிராகரியுங்கள்!
ஏற்க மாட்டோம்! ஏற்க மாட்டோம்!
ஹிந்தித் திணிப்பை ஏற்க மாட்டோம்!
ஏற்க மாட்டோம்! ஏற்க மாட்டோம்!
சமஸ்கிருதத் திணிப்பை ஏற்க மாட்டோம்!
என ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சென்னையில்...
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து இன்று (4.11.2022) காலை 10.30 மணியளவில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் கண்டன அறவழி ஆர்ப்பாட்டம் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் நடைபெற்றது.
திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் (பொறியியல் கல்லூரி) வி.தங்கமணி வரவேற்புரையாற்ற, சி.அறிவுமதி, ரா.அன்புமதி, ம.பூவரசன், பா.நதியா, ஆகாஷ், வே.வேலவன், நர்மதா, வி.யாழ்ஒளி,
லோ.அறிவுமணி, சு.அறிவுச்செல்வன், பெ.அன்பரசன், பா.அறிவழகன், பா.கவிமலர், ஏ.ஜெகன் ஆகிய திராவிட மாணவர் கழகத் தோழர்கள் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் தொடக்க வுரையாற்ற, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, மாநில மகளிரணி அமைப்பாளர் குடியாத்தம் தேன்மொழி, மகளிரணி சி.வெற்றிச்செல்வி மாநில அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.ஜெயராமன், டாக்டர் கருணாகரன், முனைவர் இராசசேகரன், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், மாநில இளைஞரணி துணை செயலாளர் சோ.சுரேஷ் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள், தோழர்கள் பங்கேற்றனர்.
கழகத் துணைத்தலைவர்
கலி.பூங்குன்றன் உரை
கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
அனைவருக்கும் வணக்கம். திராவிட மாணவர் கழகத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்றைய நாள் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒரு நூற்றாண்டு காலமாக ஹிந்தித் திணிப்பை எதிர்த்து திராவிடர் கழகம் போராட்டம்!
ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது இன்று நேற்று ஏற்பட்ட எதிர்ப்பல்ல. தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக ஹிந்தியை எதிர்த்து திராவிடர் கழகம், தந்தை பெரியார் தலைமையில் தமிழறிஞர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறார்கள்.
1926 ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் அவர்கள், ‘குடிஅரசு' ஏட்டிலே ‘‘ஹிந்தியின் ரகசியமும், தமிழுக்குத் துரோகமும்'' என்ற தலைப்பிலே கட்டுரை எழுதினார்.
பிறகு 1937 ஆம் ஆண்டு இராஜாஜி அவர்கள் சென்னை மாநில பிரதமராக (அப்பொழுது பிரதமர் என்று பெயர்) இருந்தபொழுது, முதன்முதலாக ஹிந்தியைக் கல்வி நிறுவனங்களில் திணித்தார்.
2500 பள்ளிக்கூடங்களை இழுத்து மூடினார். லயோலா கல்லூரியில் உரையாற்றும்பொழுது அவர் ஒரு கருத்தைப் பதிவு செய்தார். ‘‘படிப்படியாக சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்குத்தான் ஹிந்தியை முதற்கட்டமாகக் கொண்டு வந்திருக்கின்றேன்'' என்று சொன்னார்.
கோணிப் பையிலிருந்த பூனைக்குட்டி வெளியில் வந்தது போல, அவருடைய உள்ளார்ந்த எண்ணத்தை வெளிப்படுத்தினார்.
அப்பொழுது தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே பொங்கி எழுந்தது. எங்கே பார்த்தாலும் பெருங்கிளர்ச்சிகள் நடைபெற்றன.
அதற்கிடையிலேயே இராஜாஜி அவர்கள் பதவியை விட்டு வெளியேறிய சூழ்நிலையில், ஹிந்தித் திணிப்பு கைவிடப்பட்டது. தொடர்ந்து ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
தேசியக் கொடியை எரிப்பேன் என்றார்
தந்தை பெரியார்!
ஒரு கட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள், ‘‘பள்ளிக்கூடங்களில் ஹிந்தியைத் திணித்தால், தேசியக் கொடியை எரிப்பேன்'' என்கிற ஒரு போராட்டத்தை அறிவித்தார். 1955 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி.
அப்பொழுது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் பச்சைத் தமிழர் காமராசர் அவர்கள். இந்தியாவின் பிரதமராக இருந்தவர் பண்டித ஜவகர்லால் நேரு இருந்தார்.
பிரதமர் நேரு அவர்கள், முதலமைச்சர் காமராசர் அவர்களிடம், ‘‘உங்களுடைய நண்பர்தானே ஈ.வெ.இராமசாமி, அந்தப் போராட்டத்தை நீங்கள் தடுக்கக்கூடாதா?'' என்று கேட்டார்.
பிரதமர் நேருவின் உறுதிமொழி!
முதலமைச்சர் காமராசர் அவர்கள், ‘‘ஈ.வெ.ரா. அவர்கள் எனக்கு நண்பர்தான். ஆனால், ஹிந்தி அவருக்கு நண்பரல்ல'' என்று சொன்னார்.
கடைசியாக, பிரதமர் சார்பாக முதலமைச்சர் காமராசர் அவர்கள், ‘‘ஹிந்தித் திணிக்கப்படாது'' என்ற உறுதிமொழியைக் கொடுத்ததின் அடிப்படையில், தந்தை பெரியார் அவர்கள் அப்பொழுதுகூட, போராட்டத்தை நிறுத்திவிட்டோம் என்று சொல்லவில்லை; போராட்டத்தினை ஒத்தி வைக்கின்றோம் என்று சொன்னார்.
அதற்குப் பிறகு, 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்கள்பற்றி உங்களுக்குத் தெரியும்.
வெறும் மொழிப் போராட்டம் அல்ல;
இது ஒரு இனப் போராட்டமாகும்
இப்படி தொடர்ந்து ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் என்பது வெறும் மொழிப் போராட்டம் அல்ல. இது ஒரு இனப் போராட்டமாகும்.
இனப் போராட்டம் என்கிறபொழுது, சமஸ்கிருதம், ஹிந்தி என்பது ஆரியர்களுடைய தாய்மொழி. அவர்களுடைய மொழியைத் திணிப்பதன்மூலமாக, அவர்களுடைய பண்பாட்டை திராவிடர்கள்மீது திணிக்கிறார்கள் என்பதுதான் அடிப்படையான செய்தி.
அந்த வகையில்தான் தொடர்ந்து இந்தப் போராட்டத்தினை நாமும் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.
கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி
தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற
ஹிந்தி எழுத்து அழிப்புப் போராட்டம்!
கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதிகூட, சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிக்கின்ற போராட்டம், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு வீரமணி தலைமையில் நடைபெற்றது என்பதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள்.
இப்பொழுது என்ன திடீரென்று போராட்டம் - பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன என்று சொன்னால், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமையில் உள்ள நிலைக்குழு, சில பரிந்துரைகளைத் தயாரித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளது.
அதில், ஹிந்திக்கு மிகமிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.
மத்திய பல்கலைக் கழகங்களில் இனி ஹிந்திதான் பயிற்று மொழி என்று சொல்லியிருக்கிறார்கள். மத்திய பல்கலைக் கழகங்கள் இந்தியா முழுவதும் இருக்கின்றன. அங்கே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து படிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஹிந்திதான் பயிற்று மொழி என்றால், ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத மற்ற மாணவர்களுடைய நிலைமை என்னாகும்? என்பது ஒரு கேள்விக் குறி.
தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரிந்த
மாணவர்களின் நிலைமை என்னாகும்?
இன்றைக்கு மருத்துவக் கல்லூரிகளில், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அகில இந்திய அளவிலே அளிக்கப்பட்டு இருக்கிறது.
இங்கே இருக்கிற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கலாம். ஆனால், ஹிந்தியில்தான் படிக்கவேண்டும் என்று சொன்னால், தமிழ், ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மாணவரின் நிலைமை என்னாகும்?
இப்படியாக, அவர்கள் ஹிந்தியைத் திணிப்பதில் மிகத் தீவிரமாக இருக்கிறார்கள்.
ஆர்.எஸ்.எஸினுடைய கொள்கை என்பது, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்ற அடிப்படையில்தான், இந்த ஒரே மொழி கலாச்சாரத்தைப் புகுத்துவதற்காகத்தான் இந்த ஏற்பாட்டினை செய்கிறது ஒன்றிய அரசு.
திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் இந்தப் போராட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கிறது
ஒரே தேசம், ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்ற எண்ணத்தின் அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையைத் திணிப்பதற்காக காய்கள் நகர்த்தப்படுகின்றன. அதனை முறியடிப்பதற்குத்தான், அந்தப் பண்பாட்டுப் படையெடுப்பினை முறியடிப்பதற்குத்தான் திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் இந்தப் போராட்டத்தினை நடத்திக் கொண்டிருக்கிறது.
இது முடிவல்ல; அவர்கள் மேலும் மேலும் ஹிந்தித் திணிப்பிலே ஆர்வம் காட்டினால், இதைவிட கடுமையான போராட்டங்களை நடத்துவதற்குத் திராவிடர் கழகமும், ஒத்தக் கருத்துள்ள மற்றவர்களும் இணைந்து பெரும் போராட்டத்தினை நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருப்போம்!
அண்ணா முதலமைச்சரான நிலையில், தமிழ்நாட்டில் தமிழும், ஆங்கிலமும்தான் என்று சட்டம் இயற்றிய பிறகு, தமிழ்நாட்டில் ஹிந்தியைத் திணிப்பது சட்ட விரோதமாகும்.
கடைசியில் எங்களுக்குத்தான் வெற்றி!
ஹிந்தியைத் திணித்து, இந்தியாவின் ஒற்றுமையைப்பற்றி பேசுகிறார்கள்; ஹிந்தியைத் திணிப்பதன்மூலமாக இந்தியாவின் ஒற்றுமையை அவர்கள் சிதைக்கிறார்கள்; பிரிவினையை விதைக்கிறார்கள் என்பதை ஒன்றிய அரசிற்கு இந்த நேரத்தில் தெரிவித்து, எங்களுடைய போராட்டங்கள், அது எந்தப் போராட்டமாக இருந்தாலும், கடைசியில் எங்களுக்குத்தான் வெற்றி என்பதுதான் திராவிட இயக்கத்தின் வரலாறு - தந்தை பெரியாருடைய வரலாறாகும்.
அந்த வகையில், இந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் நாங்கள் வெற்றி பெறுவோம், பெறுவோம் என்று கூறி, விடைபெறுகின்றேன் என்று திராவிடர் கழகத் துணைத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.
ஹிந்தி எதிர்ப்புக் குறித்து தமிழினியன் கவிதை வாசித்தார்.
நிறைவாக திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம் நன்றி கூறினார்.
சென்னை, நவ. 5- ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்து நேற்று (4.11.2022) காலை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அரு கில் திராவிட மாணவர் கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்:
பொதுக்குழு உறுப்பினர் காரைக்குடி சாமி திராவிடமணி, கோபி மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சென்னியப் பன், பெரியார் களம் இறைவி, சி.சித்தார்த்தன், சி.காமராஜ், சென்னை மண்டல செயலாளர் கொடுங்கையூர் தே.செ.கோபால்,
தென்சென்னை
தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைச் செயலாளர் அரும்பாக்கம் தாமோதரன், துணைத் தலைவர் மயிலை டி.ஆர்.சேதுராமன், அமைப்பாளர் சைதை மு.ந.மதியழகன்,
வடசென்னை
வடசென்னை மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணேசன், மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், கண்ணதாசன் நகர் கு.ஜீவா, இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செய லாளர்கள் இரா.சதீசு, சு.அரவிந்த்குமார், க.கலைமணி, நா.பார்த்திபன், பா.பார்த் திபன், பி.பாலு, திராவிடன், துரைராஜ்,
கும்மிடிப்பூண்டி மாவட்டம்
மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன், பொன்னேரி அருள், வடகரை உதயக் குமார், வடகரை ஜெகத்விசயகுமார், சோழவரம் பா.சக்கரவர்த்தி, சோழவரம் கஜேந்திரன், பொன்னேரி சுதாகர்,
ஆவடி மாவட்டம்
க.தமிழ்ச்செல்வன், சு.வேல்சாமி, வேல் முருகன், வை.கலையரசன், தமிழ்மணி, பெரியார் மாணாக்கன், இளவரசு, முகப் பேர் முரளி, உடுமலை வடிவேல், வஜ்ர வேலு, கே.சுந்தர் ராஜன், முருகேசன், அம்பத்தூர் ராமலிங்கம், பா.முத்தழகு, பூவை.செல்வி,
தாம்பரம் மாவட்டம்
மண்ணிவாக்கம் ப.அருணா, சுமதி, தாம்பரம் சு.மோகன்ராஜ், ராமாபுரம் ஜெனார்த்தனம், மாடம்பாக்கம் கருப் பையா, கரைமாநகர் தே.சுரேஷ்,
சோழிங்கநல்லூர் மாவட்டம்
வேலூர் பாண்டு, தமிழினியன், ஆதம் பாக்கம் தே.சவரியப்பன், எஸ்.டி.செல்வ ராஜ்,
மாணவர் கழகம்
பர்தீன், வேலவன், நித்திய குமார், வி.தங்கமணி, தமிழ்ச்செல்வன், பூவரசன், பா.பார்த்திபன்,
செ.பெ.தொண்டறம், ரா.அன்புமதி, சி.அன்புமணி, சி.அறிவுமதி, எம்.சுவாதி, தமிழினி தாணு, மோனிஷ், பெ.அன்பர சன், பூவரசன்,
அனல் பட்டது
புழுவானால் பொசுங்கும்
மெழுகானால் உருகும்
உணர்வெனும் அனல்பட்டது
தேமதுரத்தமிழானால் தீய்க்கும்
அன்று பதுங்கிய இந்தி
இன்று பாய்ந்து வருகிறது சிந்தி
மூலநிதியிலா இந்தி
நம் முன்னேற்றம் முடக்கும் நந்தி
முட்டுக்கொடுக்கும் பார்ப்பனத்தொந்தி
நெட்டிமுறிக்கும் ஆர்எஸ்எஸ் மந்தி
எட்டி உதைப்போம் பார் எந்தி
வெட்டிமுறிப்போம் அதை முந்தி!
மருத்துவத்திலும் இந்தி
ஒருமொழிப்பாடம் என்கிறான்
போட்டித் தேர்வுகள் அனைத்தும்
இந்தி ஆங்கிலம் என்கிறான்
ஒன்றிய அரசு வேலைக்கு
இந்தி வேண்டும் என்கிறான்
பள்ளிப் பிள்ளைக்கும்
இந்தி கட்டாயம் என்கிறான்
இந்தி பேசாதவன்
தேச துரோகி என்கிறான்
இந்தி தெரியாத மீனவனை
பூட்சு காலால் மிதிக்கிறான்
விட்டால் மனைவியைக் கொஞ்சுதற்கும்
இந்தியைக் கொண்டுவருவான்
மழலை தாய்ப்பால் குடிப்பதற்கும்
இந்திவேண்டுமென்பான்
விடாதீர்.....
நம்மொழியை நம்மை
வெட்டிச்சாய்ப்பதன்றி வேறில்லை கண்டீர்
அடிமை வாழ்வு வாழ இங்கு
தமிழனில்லை என்பீர்!
என்மொழி நாளை சாகுமானால்
நான் இன்று சாவேன்
நடராசன் தாளமுத்துகள் என்றாவேன்...!
பொறுத்ததுபோதுமென பொங்கி எழுவேன்
பொல்லாத இந்தி சமற்கிருத
நூலர்களின் தோலுரிப்பேன்
எல்லாம் சொல்லிப் பார்த்தாச்சி...
வேண்டாம் உந்தன் பேயாட்சி....
ஈவிரக்கமிலா கொடுங்கோலாட்சி...
அன்று கேட்டது மாநிலசுயாட்சி....
இனி கேட்கப்போவது தனியாட்சி...!
உணர்வெனும் அனல்
குறையாதெங்கள் குருதி
கட்டுக்குலையாதெங்கள் உறுதி
இதுவே உனக்கு இறுதி
மூண்டிடும்பார் பெருந் தீ..!
- தமிழினியன் வாசித்த கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக