உள்நாட்டிலே மதத்தின் பெயரால் அமைதியைக் குலைக்கிறார்கள்!
நாங்கள் ஒன்றிய அரசுக்கு வைக்கின்ற அறிவிப்பு - கோரிக்கை - எச்சரிக்கை என்னவென்றால்
எல்லைகளைக் காப்பாற்றுங்கள்- உள்நாட்டை அமைதியாக வைத்திருக்க இடம் கொடுங்கள் - அதற்கு எதிரான சக்திகளை அடக்கி வையுங்கள்!
கோட்சே - ஆப்தே பெயரில் பாரத ரத்னா விருதா? திராவிடர் கழக ஆர்ப்பாட்டத்தில்
பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி உரை
சென்னை, பிப்.10 உள்நாட்டிலே, மதத்தின் பெய ராலே, அமைதியைக் குலைக்கிறார்கள். ஆகவே, நாங்கள் ஒன்றிய அரசுக்கு வைக்கின்ற அறிவிப்பு - கோரிக்கை - எச்சரிக்கை என்னவென்றால், எல்லை களைக் காப்பாற்றுங்கள் - உள்நாட்டை அமைதியாக வைத்திருக்க இடம் கொடுங்கள். அதற்கு எதிரான சக்திகளை அடக்கி வையுங்கள் என்பதுதான் என்றார் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள்.
கோட்சே - நாராயண ஆப்தே பெயரில் பாரத ரத்னா விருதாம்? ஆர்ப்பாட்டம்
கடந்த 5.2.2022 அன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை பெரியார் திடல் வாயிலில், கோட்சே - நாராயண ஆப்தே பெயரில் பாரத ரத்னா விருதாம்? அகண்ட பாரதம் உருவாக்க வேண்டுமாம்! இதைக் கண்டித்து நடைபெற்ற திராவிடர் கழக ஆர்ப் பாட்டத்தில் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
தமிழ்நாட்டில், இந்தியாவில் அமைதியைப் பாது காக்கவேண்டும், இந்த நாட்டைப் பாதுகாக்கவேண்டும் - மக்களுடைய உரிமையைப் பாதுகாக்கவேண்டும் - இந்த மூன்றுக்கும் ஆபத்தை விளைவிக்கின்ற மதவாத, தீவிரவாத ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதத்தைக் கண்டிக்கவேண்டும், கட்டுப்படுத்தவேண்டும் - முற்றாக இந்த மண்ணிலிருந்து அகற்றவேண்டும்.
இந்தக் கோரிக்கையை, ஒன்றிய அரசுக்கு உரத்து சொல்வதற்குத்தான் இந்த ஆர்ப்பாட்டத்தை திரா விடர் கழகம் நடத்துகிறது.
மிகப்பெரிய பிரச்சினை நாட்டில் தூண்டப்படுகிறது
இந்த ஆர்ப்பாட்டத்திற்குக் காரணம் என்னவென் றால், இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பெரும்பான்மை மதவாத, பயங்கரவாதத்தை, தீவிர வாதத்தை, மத அடிப்படை வாதத்தை இன்றைக்கு வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ்.சும், அதன் அமைப்புகளும் நடத்திக் கொண்டிருக்கின்றன.
அவர்களுடைய கிளைகள்மூலமாக மிகப்பெரிய பிரச்சினை நாட்டில் தூண்டப்படுகிறது.
நாம் எல்லோரும் அதிர்ச்சியடையும்படியாக, சாமியார்கள் மாநாடு உத்தரகாண்டிலே நடந்தது. அவர்களை சாமியார்கள் என்று சொல்லக்கூடாது; ஹிந்துத்வ அடிப்படைவாதிகள் - அவர்களுடைய மாநாட்டில், அந்த காவி உடையை அணிந்துகொண்டு, அவர்கள் பேசிய பேச்சுகளைக் கேட்டு, இந்திய மக்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.
குறிப்பிட்ட சமூகத்தினரை அழிப்போம், கொல்லுவோம், நாட்டை விட்டு விரட்டுவோம் என்கிறார்கள்!
அதில் குறிப்பாக ஒரு சமூகத்தை குறி வைத்து, அவர்களை அழிப்போம், கொல்லுவோம், நாட்டை விட்டு விரட்டுவோம் என்கின்ற அறிவிப்புகளை ஓர் அமைப்பு மாநாட்டை நடத்தி சொல்லுகிறது என்று சொன்னால், அதற்கு இந்த அரசு அனுமதிக்கிறது என்றால், அது உத்தரகாண்ட்டாக இருந்தாலும், அதற்குக் காரணமும், துணிச்சலும் கொடுப்பது, நம்முடைய இந்தியாவை ஆளுகின்ற பி.ஜே.பி.யும், அதனுடைய தலைமையான ஆர்.எஸ்.எஸ்.சும்.
இரண்டாவது, இது மக்கள் பிரச்சினை, மக்கள் எதிர்ப்பும் எழுந்த பிறகு, அவர்களின்மீது வழக்குத் தொடரப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
காந்தியார் கொல்லப்பட்டது இந்தியாவின் முதல் தீவிரவாத, மத பயங்கரவாத படுகொலையாகும். காந்தியார் படுகொலையை நியாயப்படுத்துவதையும், அந்தக் கொலையாளி நாதுராம் கோட்சே பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவது, அவருக்கு புகழ் மாலை சூட்டப்படுவது - அவரோடு இணைந்த அடுத்த குற்றவாளியான நாராயண ஆப்தே - இருவர் பெயரிலும் பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என்கின்ற கோரிக்கைகளை எழுப்புகிற துணிவையும், அனுமதியையும் கொடுப்பது - இது அந்த இடத்திற்குப் போயிருக்கிறது.
கொலையை சரியென்று சட்டம் ஏற்றுக்கொள்ளாது!
எந்த ஒரு கொலை செய்கிறவருக்கும், தனக்கென்று ஒரு நியாயம் உண்டு. ஆனால், அப்படி ஒருவருக்கு நியாயம் இருக்கிறது என்கின்ற காரணத்தினால், சட்டம் அதனை சரியென்று ஏற்றுக்கொள்ளாது.
மக்களுக்கு அது எதிரான கருத்து - அந்தக் கருத்து இன்றைக்கு பாரத ரத்னா விருது கொடுக்கவேண்டும் என்று சொல்லுகிற அளவுக்கு அவர்களுக்கு இடம் கொடுப்பார்களேயானால், நாட்டில், அவரவரும் தன் னுடைய நியாயத்திற்காக வன்முறையைத் தேடினால், அது எந்த இடத்திலே இந்த நாட்டைக் கொண்டு போய்விடும்?
மூன்றாவது, இதனுடைய விரிவாக்கம் அகண்ட பாரதத்தை அமைப்போம் என்று பேசுகிறார்கள்.
அகண்ட பாரதம் என்பது என்ன?
அவர்களுடைய கணக்கில், அது ஆப்கானிஸ்தான் வரையில் போகலாம் - பர்மா வரைக்கும் போகலாம் - இல்லை - ஒரு நாடு, படையெடுத்து இன்னொரு நாட்டை இணைப்பது என்பது - இன்றைய உலக சூழலில், நடைமுறை சாத்தியமா? என்கின்ற அறி வார்ந்த கேள்வி ஒருபுறம் இருக்கட்டும்.
இப்படிப்பட்ட கோரிக்கைகளையும், நடவடிக் கைகளையும் வரவேற்கின்றவர்கள், ஆதரிக்கின்ற வர்கள் எவ்வளவு பெரிய ஆபத்தானவர்கள் என் பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
அகண்ட பாரதத்தை அமைக்கிறவர்களை அனு மதிப்பார்களேயானால், ஒரு உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்.
சட்டப்படி சரியா? தவறா?
இந்திய அரசு, இலங்கையின்மீது படையெடுத்து, இலங்கையையும் இணைத்துக்கொள்ளவேண்டும் இந்தியாவுடன் - ஏனென்றால், இத்தனை லட்சம் தமிழர்கள் வாழுகிறார்கள் என்று ஒருவர் பேசினால், அது சட்டப்படி சரியா? தவறா?
இலங்கையின்மீது படையெடுத்து, இலங்கையை இந்தியாவோடு இணைக்கவேண்டும் என்று சொல்லுவது எந்த அளவிற்குச் சட்டப்படி குற்றமோ - அதைவிட பலபடி அதிகமானது, இன்னும் பல நாடுகளின்மீது படையெடுத்து, அந்த நாடுகளை இந்தியாவோடு இணைக்கவேண்டும் என்று சொல்லுவது.
இப்படிப்பட்ட எண்ணங்களை மக்கள் மனதிலே விதைப்பதற்கு, இந்தியாவைத் தாண்டி வெளிநாடு களில் இருக்கின்ற, பத்திரமாக, பாதுகாப்பாக இருக் கின்ற போர் ஆபத்துகளை அறியாத, ரத்தம் சிந்தாத தங்கள் உறவுகளை இழந்தால், எப்படியாகும் என்று தெரிந்தே - அனுபவம் இல்லாதவர்கள், மனதிலே வஞ்சகங்களை வளர்ப்பவர்கள் இந்தக் கருத்தாக் கங்களை உருவாக்குகிறார்கள்.
இந்தியா அமைதியற்ற நாடாகிவிடும்;
உள்நாட்டில் கலவரங்கள் நடைபெறுகின்ற நாடாகிவிடும்!
அதை இந்தியாவிலே செயல்படுத்துவதற்கு அவர்களுடைய அமைப்புகளைப் பயன்படுத்து கிறார்கள். இந்தக் காலகட்டத்தில், இதைத் தடுக்காவிட்டால், இந்தியா அமைதியற்ற நாடாகிவிடும்; உள்நாட்டில் கலவரங்கள் நடை பெறுகின்ற நாடாகிவிடும்.
நீங்கள், அந்த நாட்டைப் பார், அந்த நாட்டைப் பார் என்கின்றீர்களே, அந்த நாடாக, இந்த நாட்டை ஆக்குகின்ற இந்த மதவாத முயற்சியை, இப்பொழுதே தடுத்தாகவேண்டும் என்பதற்காக, மக்கள் இதனை உணரவேண்டும் என்பதற்காக திராவிடர் கழகம் இந்த ஆர்ப் பாட்டத்தை நடத்துகிறது.
1980 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஆர்.எஸ்.எஸ். என்பது தமிழ்நாட்டிலே அங்கும் இங்கும் தங்களுடைய முகாமை அமைத்தது. பயிற்சிகளை ஆரம்பித்தது. மக்களுக்கு அப் போது அதிகம் தெரியாது.
1980 -களிலேயே எச்சரித்தவர் நம்முடைய திராவிடர் கழகத் தலைவர்!
ஆனால், ஆர்.எஸ்.எஸ். எனும் பாம்பு, தமிழ்நாட் டிலே நுழைகிறது - அதனை உள்ளே அனுமதிக் காதீர்கள்.
ஆரியப் பாம்பின் நடமாட்டம்
ஆர்.எஸ்.எஸ்.சின் போர்வையிலே
ஆபத்து வந்தது நாட்டோரே,
அணிதிரண்டு வாருங்கள்!
என்கின்ற முழக்கத்தை 1980 ஆம் ஆண்டு தொடக்கத்தில், தமிழ்நாட்டின் வீதிகளில் நாங்கள் ஊர்வலமாக முழங்கிச் சென்றோம்.
அப்போது பல பேர் கேட்டார்கள், அவர்கள் யாரென்றே தெரியாது; நீங்கள் ஏன் இந்தப் பிரச் சாரத்தை செய்கிறீர்கள்? என்று.
அவர்கள் தமிழ்நாட்டில் நுழைகிறார்கள், எச்சரிக்கையாக இருங்கள் என்று திராவிடர் கழகம் தொடங்கிய பிரச்சாரம், அன்றைக்கு இந்த முழக்கத்தை உரக்க முழங்கி, வடிவமைத்தவர் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் வீரமணி அவர்கள்.
அந்த முழக்கம், 1980 ஆம் ஆண்டு தொடங்கியதினால்தான், 2022 ஆம் ஆண்டுவரை அவர்கள் அடுத்தவர்கள் தோளில் பயணம் செய்தே நான்கு சீட்டுகளை வாங்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
திராவிடர் கழகத் தலைவரின் முன்னறிவிப்பே இந்த ஆர்ப்பாட்டம்!
அன்றைக்கு நாங்கள் அந்த முழக்கத்தை எழுப்பாதிருந்தால், இன்றைக்குத் தமிழ்நாடு உத்தரகாண்டாக மாறியிருக்கும். அந்த நிலை எப்பொழுதும் வரக்கூடாது என்பதற்காக, திராவிடர் கழகத் தலைவர் கொடுக்கிற முன்னறிவிப்பே இந்த ஆர்ப்பாட்டம்!
ஆர்.எஸ்.எஸ்.வாதிகள் கொடுக்கின்ற அறைகூவல் என்பது, மக்களைப் போருக்கு அழைப்பது- மக்களை கொலை செய்கின்ற தத்துவங்களை நியாயப்படுத்துவது.
திராவிடர் கழகத் தலைவர் கொடுக்கின்ற அறிவிப்பு - மக்களை அமைதிப்படுத்துவது, ஒற்றுமைப்படுத்துவது, வன்முறைக்கு இலக்காகாதீர்கள் என்று எச்சரிக்கை கொடுப்பது.
அந்த எச்சரிக்கையின் அடையாளமாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எதிரொலிக்கும்
இங்கே எழுப்பப்படும் முழக்கங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் எதிரொலிக்கும். அதுதான் நம் நாட்டை காப்பாற்றும்.
சுதந்திர இந்தியாவின் எல்லைக்கு - சீனா - இந்தியா எல்லை தகராறு; இந்தப் பக்கம் பாகிஸ்தான் - இந்தியா எல்லை தகராறு - இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தவேண்டிய இடத்தில், வெறும் வீர வசனங்களைப் பேசிக்கொண்டு, தாங்கள் சாதித்து விட்டதாகப் பொய்க் கதைகளைக் கூறிக்கொண்டு, இந்த நாட்டை ஆபத்தில் வைத்திருக்கிறார்கள்.
உள்நாட்டிலே, மதத்தின் பெயராலே, அமைதி யைக் குலைக்கிறார்கள். ஆகவே, நாங்கள் ஒன்றிய அரசுக்கு வைக்கின்ற அறிவிப்பு - கோரிக்கை - எச்சரிக்கை என்னவென்றால், எல்லைகளைக் காப் பாற்றுங்கள் - உள்நாட்டை அமைதியாக வைத்திருக்க இடம் கொடுங்கள். அதற்கு எதிரான சக்திகளை அடக்கி வையுங்கள் என்பதுதான்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு கழகப் பிரச்சார செயலாளர் வழக் குரைஞர் அருள்மொழி உரையாற்றினார்.
நரேந்திர மோடியும் கண்டிக்கவில்லை - பி.ஜே.பி.யைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் கண்டிக்கவில்லை
திராவிடர் கழக ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் வீ.குமரேசன் உரை
சென்னை, பிப்.11 கோட்சே - நாராயண ஆப்தே பெயரில் பாரத ரத்னா விருதாம்? இதனை பிரதமர் நரேந்திர மோடியும் கண்டிக்கவில்லை - பி.ஜே.பி.யைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் கண்டிக்கவில்லை என்றார் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்கள்.
கோட்சே - நாராயண ஆப்தே பெயரில் பாரத ரத்னா விருதாம்? ஆர்ப்பாட்டம்
கடந்த 5.2.2022 அன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை பெரியார் திடல் வாயிலில், கோட்சே - நாராயண ஆப்தே பெயரில் பாரத ரத்னாவாம்? அகண்ட பாரதம் உருவாக்க வேண்டுமாம்! இதைக் கண்டித்து நடைபெற்ற திராவிடர் கழக ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
திராவிடர் கழகத்தின் சார்பாக நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் வணக்கம்.
இந்திய நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மகிழ்ச்சிகரமான செய்தி - இருந்தாலும், கூடுதலான துக்ககரமான செய்தி என்னவென்றால், தேசப் பிதா என்று பலராலும், மனிதாபிமானமிக்கவர்களாலும் போற்றப்படுகின்ற காந்தியார் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட 75 ஆம் ஆண்டும் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக் கிறது.
இந்த 75 ஆவது ஆண்டைப் பொறுத்தவரையில், கூடுதலான ஒரு கொடுமை - தண்டனை நிகழ்ச்சி என்னவென்றால், காந்தியாரை சுட்டுக்கொன்ற கோட்சேவை - கூட்டாளி நாராயண ஆப்தேவை போற்றுகின்ற வகையிலே, மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான குவாலியரில், ‘கோட்சே - ஆப்தே ஸ்பிரிதி நிவாஸ்‘ என்று சொல்லி, ஒரு 'புனித நாளாக' ஹிந்து மகாசபையினர் இந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் நாளில் - காந்தியார் கொல்லப் பட்ட அதே நாளில் கொண்டாடி இருக்கிறார்கள்.
காந்தியார் கொலை செய்யப்பட்டதற்குப் பின்பு, காந்தியாரை சுட்ட கோட்சே, அதனை ஒப்புக்கொண்டு, அதனை நியாயப்படுத்திய வரலாறுகள் எல்லாம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
விசாரணைக்குப் பின்பு, கோட்சேவுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது; நாராயண ஆப்தேவுக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது; சாட்சிகள் சரியாக இல்லாத காரணத்தினால், சாவர்க்கர் உள்பட சிலர் விடுதலை செய்யப்படக் கூடிய நிலையும் உருவானது.
'புனித நாளாக' ஹிந்து மகாசபை கொண்டாடியுள்ளது
இந்த ஆண்டைப் பொறுத்தவரையில், அந்தக் கொலையாளிகளின் நினைவைப் போற்றுகின்ற வகையிலே, புனித நாளாக ஹிந்து மகாசபை கொண்டாடி யுள்ளது.
அதுமட்டுமல்ல, இந்த நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை அவமதிக்கின்ற வகையில், இந்த கோட்சே - ஆப்தே பெயரில் பாரத ரத்னா விருதையும் ஜனவரி 30 ஆம் தேதி வழங்கியுள்ளது ஹிந்து மகாசபை.
அந்த விருதை யாருக்கு வழங்கியுள்ளார்கள் என்றால், அண்மையில் சட்டீஸ்கர் மாநிலத்தில், மதவெறியை ஊக்குவிக்கின்ற வகையில், மதவாதிகள் எல்லாம், சாமியார்கள் எல்லாம் பங்கேற்ற மாநாட்டிலே, மதவெறிப் பேச்சை பேசி, காந்தியாரை விமர்சனம் செய்த சாமியார் காளிசரண் மகராஜ் என்று சொல்லக்கூடிய அந்த சாமியாருக்கு பாரத ரத்னா விருதை அளித்துள்ளார்கள்.
காந்தியாரைக் கொலை செய்தவர்கள் என நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை பெற்ற, கோட்சே - ஆப்தே ஆகியோரின் புகழைப் போற்றுகின்ற வகையில், புனித நாளாகக் கொண்டாடுவது என்பதே தவறு.
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா பெயரிலும், அந்தக் கொலையாளிகளின் பெயரைச் சேர்த்து வழங்குவது மிகமிக ஒரு கொடுமையான செயலாகும்.
அகண்ட பாரதத்தை உருவாக்குவார்களாம்!
அதில் கோட்சே சொன்ன கூற்றுக்கு இணங்க, அதே ஹிந்து மகாசபை அந்த நாளிலே சூளுரைக்கிறது - பாகிஸ்தான் - பங்களாதேசை இணைத்து, அகண்ட பாரதத்தை உருவாக்கு வோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இது இந்திய இறை யாண்மையையே கேள் விக்குறியாக்கக் கூடிய ஒரு செய்தி.
பொதுவாக, விடுதலை பெற்ற பின்பு, பாகிஸ்தான் பிரிந்ததற்குப் பின்பு, பங்களாதேஷ் என்கின்ற ஒரு நாடு ஏற்பட்டதற்குப் பின்பு, அண்டை நாடு களுடன் உறவு ஏற்படுத்தி, நல்லெண்ணத்தை பிரதி பலிக்கின்ற ஒரு சூழலிலே - அரசு - அது எந்தக் கட்சி அரசாக இருந்தாலும், அரவணைத்து நிற்கவேண்டிய ஒரு சூழலிலே - அதற்கு விரோதமாக ஒரு சூழலை உருவாக்குகின்ற வகையிலே, அந்த ஹிந்து மகாசபையினர் அகண்ட பாரதத்தை உருவாக்குவோம் என்று உறுதிமொழி எடுத்துள்ளார்கள்.
நரேந்திர மோடியும் கண்டிக்கவில்லை - பி.ஜே.பி.யைச் சேர்ந்த எந்தத் தலைவர்களும் கண்டிக்கவில்லை
சட்டத்திற்குப் புறம்பாக, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, தூக்கிலிடப்பட்ட கோட்சே, நாராயண ஆப்தே ஆகியோரின் செயல்களைப் போற்றுகின்ற வகையிலே, 'புனித நாளாக'க் கொண்டாடியதை, அகண்ட பாரதத்தை உருவாக்குவோம் என்று சொன்னதை - மத்தியில் ஆளுகின்ற பி.ஜே.பி. பிரதமர் நரேந்திர மோடியும் கண்டிக்கவில்லை - பி.ஜே.பி.யைச் சேர்ந்த எந்தத் தலைவர்களும் கண்டிக்கவில்லை என்பதுதான் உண்மை.
சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய ஒரு செயலுக்கு - குறைந்தபட்சம் ஒரு கண்டனத்தைக்கூட அவர்கள் தெரிவிக்கவில்லை.
மதவெறி கண்டன நாள்: ஒவ்வொரு ஆண்டும் கூட்டங்கள்
ஒவ்வொரு ஆண்டும், காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியன்று - நாடு முழுவதும் நினைவைப் போற்றினாலும், திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையிலே, மதவெறி கண்டன நாளாக ஒவ்வொரு ஆண்டும் கூட்டங்கள் நடை பெறுவது வழக்கம்.
இந்த ஆண்டைப் பொறுத்தவரையில், ஜனவரி 30 ஆம் தேதி, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் கண்டன அறிக்கையை வெளியிட்டார்.
அதே நாளில், ஹிந்து மகாசபை நடத்திய நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டு, அந்த நிகழ்ச்சியை நடத்தியவர்களைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.
அதன் தொடர்ச்சியாக, கரோனா தொற்று - கட்டுப்பாடுகள் இருக்கின்ற சூழலில், அமைதியான முறையில், இந்தக் கண்டனத்தை, இந்த ஆர்ப் பாட்டத்தின் வாயிலாக வெளிப்படுத்துகின்றோம்.
ஹிந்து மகாசபையினர்மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்
மத்தியப் பிரதேசம் குவாலியர் நகரில், காந்தியார் கொலையாளிகளைப் போற்றுகின்ற நிகழ்ச்சியை நடத்திய ஹிந்து மகாசபையினர்மீது ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டம் என்பது, ஒரு தொடக்கம்தான் - நடவடிக்கை எடுக்கும்வரை - இந்த ஆர்ப்பாட்டம் தொடரத்தான் செய்யும் பல்வேறு வழிகளிலே என்று கூறிக்கொண்டு,
மதவெறி எந்த வகையில் வந்தாலும், அது முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும். எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், அதற்குரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாகக் கூறி, விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்கள் உரையாற்றினார்.
கழக வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி
கண்டன ஆர்ப்பாட்டத்தின் முடிவில், திராவிடர் கழக வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி ஆற்றிய உரை வருமாறு:
அன்பிற்குரிய தோழர்களே, இன்றைய தினம் இன்று நடைபெறக்கூடிய இந்த ஆர்ப்பாட்டம், இந்த நாட்டிலே மதவெறி தலை தூக்கக்கூடாது என்பதற்காக, மக்களிடத்திலே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்கின்ற எண்ணத்திலே, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அவர்களுடைய ஆணைக்கிணங்க, இங்கு மட்டுமல்லாமல், தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில், பல்வேறு அமைப்புகளின் ஒத்துழைப்போடு, சிறப்பான முறையில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருக்கிறது.
இன்றைய தினம் வெளிவந்திருக்கக் கூடிய ஒரு செய்தி - ‘தி டெலிகிராப்' என்ற பத்திரிகையில் வந் திருக்கக்கூடிய ஒரு செய்தி
அதில் ஜெனோசைட் வாட்ச் அமைப்பின் தலைவர் கிரிகிரி ஸ்டாண்டன், அமெரிக்க நாட்டில் உள்ள அந்த அமைப்பினுடைய தலைவர் எச்சரித் திருக்கின்றார்.
இந்தியாவில் விரைவில் மிகப்பெரிய இனப்படு கொலை ஏற்படுவதற்கான வாய்ப்பு ஏற்படப் போகின் றது என்கின்ற எச்சரிக்கையைக் கொடுத்திருக்கிறார்.
நேற்றைய தினம், மக்களவையில் உரையாற்றிய, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் அதிர்ரஞ்சன் சவுத்ரி அவர்கள், இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. இவர்கள் ஹிந்து ராஜ்ஜியம் என்கின்ற பெயராலே, மக்களைப் பிளவுபடுத்தி, பல்வேறு நேச நாடுகளிடையே பல்வேறு பிரச் சினைகளை உருவாக்குகிறார்கள் என்று எச்சரித் திருக்கிறார்.
ஆகவேதான், அந்த எச்சரிக்கைகளின் அடிப்படையில்தான், மக்களிடத்திலே, இவர்கள் காட்டுகின்ற இந்த மதத் துவேஷத்தை, மனித துவே ஷத்தை மக்களிடத்திலே எடுத்துச் சொல்வதற்காக நடைபெறுகின்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அத்துணை தோழர்களுக்கும், திராவிடர் கழகத்தின் சார்பிலே எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு கழக வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி உரையாற்றினார்.