வியாழன், 28 நவம்பர், 2019

மாநில இளைஞரணி- மாணவர் கழகக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம்

தமிழர் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு

5,000 ‘விடுதலை' சந்தாக்களை அளிக்க முடிவு

சென்னை, நவ. 24- திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 87ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 5,000 ‘விடுதலை' சந்தாக்களை சேர்ப்பது என்று திராவிடர் கழக மாநில இளைஞரணி, மாணவர் கழகக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திராவிடர் கழகத்தின் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டை

திராவிடர் கழகத்தின் புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டையின் முதல் பிரதியை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி  மற்றும் பன்னீர்செல்வம், வழக்குரைஞர் சு.குமாரதேவன், பிரின்சு என்னாரெசு பெரியார், இளந்திரையன், செந்தூரபாண்டியன் ஆகியோர் வழங்கினர் (சென்னை பெரியார் திடல், 24.11.2019).

இன்று (24.11.2019) காலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில இளைஞரணி, மாணவர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1:

அய்.அய்.டி. மாணவியின் சந்தேக மரணமும் -

அரசு செய்ய வேண்டிய நடவடிக்கையும்

சென்னை அய்.அய்.டி.யில் மதவாத - ஜாதிய நெருக்கடியின் காரணமாக மரணிக்க நேர்ந்த ஃபாத்திமா லத்தீப்புக்கு இக்கூட்டம் தனது இரங்கலைத் தெரிவிப் பதுடன், இதன் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை காலந்தாழ்த்தாமல் கைது செய்து உரிய தண்டனையைப் பெற்றுத் தருமாறு தமிழ்நாடு அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது. அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற நிறுவனங்கள் பார்ப்பன ஆதிக்கக் கூடாரமாக இருப்ப தால், இந்நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மாணவர்கள் சேர்க்கையிலும், பேராசிரியர்கள் நியமனத்திலும் இடஒதுக்கீடு முழுமையான அளவில்   பின்பற்றப்பட உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

அய்.அய்.டி. போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் இருப்பதே மேற்கண்ட மரணங்கள் தூண்டப்படுவதற்கு முக்கிய காரணம் என்ப தால், இது மிகமிக முக்கியம் என்பதையும் இக்கூட்டம் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்  2:

விருது பெற்ற

தமிழர் தலைவருக்கு பாராட்டு

செப்டம்பர் 22 ஆம் தேதி அமெரிக்காவில் நடை பெற்ற மாநாட்டில் அமெரிக்க மனிதநேய சங்கத்தின்; (American Humanist Association)  சார்பில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு “மனிதநேய வாழ்நாள் சாதனையாளர்”(Humanist Life Time Achievement Award) விருது வழங்கி சிறப்பித்தமைக்கு திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் தனது மகிழ்ச்சியைத் தெரி வித்துக் கொள்வதுடன், விருது பெற்ற தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகளையும், பெருமகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 3:

தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானங்களை செயல்படுத்துதல்

நவம்பர் 11 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

மாநில இளைஞரணி - மாணவர் கழகக் கூட்டத்தில் திரண்டிருந்த தோழர்கள் (சென்னை பெரியார் திடல், 24.11.2019)

தீர்மானம் 4:

‘விடுதலை' சந்தா

இன உரிமை மீட்பு ஏடான ‘விடுதலை'க்கு பெரு மளவில் புதிய சந்தாக்களை சேர்த்தும், பழைய சந்தாக் களைப் புதுப்பித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் 87 ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக 5,000 ‘விடுதலை' சந்தாக்களை வழங் குவது எனவும், மாவட்டக் கழகப் பொறுப்பாளர் களோடு கழக இளைஞரணி, மாணவர் கழக பொறுப்பாளர்கள் இணைந்து பணியாற்றுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 5:

“சுயமரியாதை நாள்”

தந்தை பெரியார் அவர்களின் தத்துவங்களை உலக மயமாக்கும் பணியில் தன்னை முழுமையாக அர்ப் பணித்தும், சமூகநீதிக்கு அவ்வப்போது ஏற்படும் ஆபத் துக்களை தடுத்திட இந்திய அளவிலும், தமிழகத்திலும் ஓயாது களத்தில் நின்று போராடி வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 87 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை டிசம்பர்-2 ‘‘சுயமரி யாதை நாளாக'' கொண்டாடும் வகையில் மரக்கன்றுகள் நடுவது, குருதிக்கொடை வழங்குவது, மருத்துவ முகாம் நடத்துவது, பள்ளி மாணவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது, உள்ளிட்ட மனித நேய பணிகளை மேற்கொள்வதுடன் நாடெங்கும் கழகக் கொடிகளை ஏற்றி, கொள்கை பிரச்சாரக் கூட்டங் களை நடத்தி எழுச்சியுடன் கொண்டாடுவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 6:

‘நீட்' புதிய கல்விக் கொள்கையை

ரத்து செய்க!

கிராமப்புற மாணவர்களை பாதிக்கும், சமூக நீதிக்கு விரோதமான ‘நீட்' மற்றும் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்யுமாறு மத்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தமிழர் தலைவர் 87 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு (சுயமரியாதை நாள்) டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் ‘நீட்', புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் நடைபெறும் பரப்புரை தெருமுனைக் கூட்டங் களை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 7:

பெரியார் சமூக காப்பு அணி பயிற்சி

திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக தோழர்களை  உடல்வலிவு, உள்ள உறுதி, சகிப்புத் தன்மை உள்ளவர்களாக உருவாக்கிடவும், பேரிடர் காலங்களில் அவதியுறும் மக்களுக்கு உத விடும் நோக்கோடும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் பல ஆண்டுகளுக்கு முன் தொடங் கப்பட்ட பெரியார் சமூக காப்பு அணி மீண்டும் புதுப்பிக்கப்பட்டு புது மிடுக்குடன் செயல்பட்டு வருகின்றது.  2020 ஆண்டில் நாடு முழுவதும் பரவலாக பெரியார் சமூக காப்பு அணி பயிற்சி முகாம்களை நடத்திடுவது, மாவட்டத்திற்கு குறைந்தது 50 இளைஞர்களை பெரியார் சமூக காப்பு அணி பயிற்சி பெற்ற இளைஞர்களாக உருவாக்குவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 8:

திராவிட மாணவர் கழக தென் மண்டல மாநாடு

திராவிட மாணவர் கழக தென்மண்டல மாநாட் டினை தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் மிக எழுச்சியுடன் நடத்துவது எனவும் ஏராளமான மாண வர்களை பங்கேற்கச் செய்வது எனவும் முடிவு செய் யப்படுகிறது.

தீர்மானம் 9:

திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு

திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாட் டினை 2020 மே மாதம் 16 ஆம் தேதி அரியலூரில் மாபெரும் பேரணியுடன் மிக எழுச்சியுடன் நடத்து வது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 10:

மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மறுப்புக்கு கண்டனம்

நாடு முழுவதும் உள்ள சுமார் 30,774 மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான இடங்களுக்கு அகில இந்திய ‘நீட்' பீ.ஜி. தேர்வு ஜனவரி மாதம் நடத்திட மத்திய அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான குறிப்பாணையை நவம்பர் ஒன்றாம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 30,774 இடங்களில் 50 சதவிகிதம் மத்திய அரசே கவுன்சிலிங் மூலம் இடத்தை நிரப்பும். இப்போது உள்ள இட ஒதுக்கீடு நடைமுறையின்படி 50 சதவிகிதம் பொதுப் பிரிவிலும், 22.5 சதவிகிதம்  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங் குடியினருக்கும், 27 சதவிகிதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வழங்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசோ - அதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படும் என்றும், மாநில அரசின் கட்டுப்பாட் டில் உள்ள கல்லூரிகளில் இருந்து பெறப்படும் இடங் களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கத் தேவை இல்லை என்றும் குறிப் பிட்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் மாநில அரசின் நிதியில் நடத்தப்படும் மருத்துவக்கல்லூரி இடங்களை எடுத்துச்சென்று தமிழ்நாட்டின் பெரும் எண்ணிக்கையில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு பட்டை நாமம் சாத்துவதா? மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு திராவிடர் கழக இளைஞரணி, திரா விட மாணவர் கழகம் வன்மையானக் கண்டனத்தை தெரிவிக்கிறது. உடனடியாக இந்த அறிவிப்பை திரும்பப் பெற்று பிற்படுத்தப்பட்டவருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய மத்திய அரசை இக்கூட் டம்  வலியுறுத்து கிறது. தவறினால் ஒத்தக்கருத் துள்ளவர்களை ஒன்று திரட்டி, தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவிக் கும் எந்தவித போராட்டத்தையும் சந்திக்க திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் தயார் என தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் 11:

2020 பிப்ரவரியில் திருச்சியில் மதவெறி-ஜாதி வெறி முறியடிப்பு மனிதநேய மாநாட்டை நடத்திட திராவிடர் கழக தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (11.11.2019) எடுக்கப்பட்ட முடிவை வர வேற்று, தேவை யான ஒத்து ழைப்பு அனைத்தையும் அளிப்பது என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

- விடுதலை நாளேடு, 24.11.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக