வெள்ளி, 8 நவம்பர், 2019

உலக அரசியலைப் பேசியவர் தந்தை பெரியார் - அ.அருள்மொழி

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரைக் கொண்டாடுவோம், தந்தை பெரியாரை நம் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்போம்

கழக பிரச்சார செயலாளர்  வழக்குரைஞர்  அருள்மொழி உரை

சென்னை, நவ.1  நேதாஜி சிறந்த வீரர்; ஆனால், ஹிட்லர் கொடியவன் என்பது நேதாஜிக்கு எப்படிப் புரியாமல் போனது. வெள்ளைக்காரன் செய்கிற கொடுமைகளை விட, ஹிட்லர் செய்கிற கொலைகள் எவ்வளவு மோசம் என்று உலக அரசியலைப் பேசியவர் தந்தை பெரியார் என்றார் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக் குரைஞர் அருள்மொழி அவர்கள்.

தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு

பிறந்த நாள் பொதுக்கூட்டம்

17.9.2019 அன்று சென்னை தியாகராயர் நகரில் தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 141 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில்  திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

‘‘மயிலாப்பூர் வக்கீல் ஆத்து மாட்டுப்பொண்ணாவேன்''

வழக்காடு மன்றத்திற்குள் நுழைவதற்கே, வெறும் கட்சிக்காரர்களாக சென்று கொண்டிருந்த அந்த நீதிமன்றத்தில், ஒரு அய்யர் வீட்டுப் பெண் பாடுவதாக, பழைய திரைப்படப் பாடல் ஒன்று வரும்; அதில் நான் மகிழ்ச்சியாக ஆடுவேன், பாடுவேன் என்று ஒரு இளம் பெண் சொல்வாள். நாளைக்கு நான் என்ன ஆவேன் என்றால், ‘‘மயிலாப்பூர் வக்கீல் ஆத்து மாட்டுப் பொண்ணாவேன்'' என்று.

ஏனென்றால், வக்கீல் என்றாலே, மயிலாப்பூர் வக்கீல்தான். ஒரு பெண் பாடுகிறாள் என்றால், அவள் மயிலாப்பூர் வக்கீல் ஆத்து மாட்டுப் பொண்ணாவேன் என்கிற அளவிற்கு வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் அவர்களே நிறைந்திருந்த அந்த நீதிமன்றத்தில், வழக்குரைஞராக நுழைந்து, தன்னுடைய வழக்கை தானே வாதாடி, இந்தியாவின் மிகப்பெரிய ஒரு அரசியல் சதித் திட்ட வழக்கை முறியடித்து 2ஜி என்பதை தன்னு டைய பெருமையாக மாற்றிய, மக்களவை உறுப்பினர் எந்நாளும் சிறந்த பகுத்தறிவாளர், நமது மரியாதைக்குரிய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கைப் பரப்பு செயலாளர் மானமிகு ஆ.இராசா அவர்களே,

தந்தை பெரியாரின் தேவையை

இந்த உலகம் உணரச் செய்தவர்

தந்தை பெரியார் அவர்கள் 1973 ஆம் ஆண்டு மறைந்தபொழுது, திராவிடர் கழகத்திற்கு ஒரு நெருக் கடியான காலம், அதைத் தொடர்ந்து இந்த நாட்டிற்கே ஒரு நெருக்கடி காலம் வந்தது. இந்த இயக்கத்தின் நெருக்கடியையும், நாட்டிற்கே வந்த நெருக்கடி நிலையையும் எதிர்கொண்டு, அன்னை மணியம்மையார் அவர்கள் இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றினார். அவர்களுடைய குறுகிய கால அந்தப் போராட்டத்தில், அவர்களோடு துணை நின்று, அன்னை மணியம்மையார் அவர்களும் மறைந்த பிறகு, தந்தை பெரியாரின் நூற்றாண்டு விழா தொடங்கி, இந்த மாநிலம் முழுவதும் மீண்டும் பெரியார் அலை எழுவதற்குக் காரணமாகவும், இன்று உலகம் முழுக்க தந்தை பெரியாருடைய பெயர் ஒலிப்பதற்கும், இந்தியாவில், எந்த மாநிலத்தில் பிரச்சினை, சுயமரியாதை இல்லை, சமூகநீதி இல்லை என்றாலும், அதற்கு என்ன காரணம் என்றால், அந்த மாநில தலைவர்கள், எங்கள் மாநிலத்தில் ஒரு பெரியார் பிறக்கவில்லை என்று வருத்தப்படுகின்ற அளவிற்கு, தந்தை பெரியாரின் தேவையை இந்த உலகம் உணரச் செய்தவருமான திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களே,

கூடியிருக்கின்ற இன உணர்வுமிக்க பெருமக்களே, அனைவருக்கும் வணக்கம்!

தந்தை பெரியாரின் பிறந்த நாளை

ஏன் கொண்டாடுகிறோம்?

அய்யா அவர்களுடைய பிறந்த நாளை ஏன் நாம் கொண்டாடுகிறோம்? அய்யாவே சொன்னார், இது புகழ் பாடுவதற்கு அல்ல; பஜனை பாடுவதற்கு அல்ல. எங்கள் கொள்கையை எடுத்துச் சொல்வதற்காக. அந்தக் காரணத்திற்காகத்தான் நான் இந்தக் கொண்டாட்டத்தை அனுமதிக்கிறேன் என்று.

அய்யாவைப்பற்றி பேசுவது என்றால், பிரபஞ்சம், அண்டம், பேரண்டம் என்றெல்லாம் சொல்கிறார்கள். வானத்தைப் போல, அதற்குப் பின்னால் என்ன? அதற்குப் பின்னால் என்றால், அது திரையா? இல்லை, அது ஒரு புகை என்கிறார்கள். அது என்னவாக இருக்கிறது என்று தெரியாது.

உலகம் ஒரு கோள். பூமி ஒரு கோள். அதுபோன்று, நிலா ஒரு கோள். 9 கோள்களைத்தான் முன்பு கண்டு பிடித்தார்கள். இன்றைக்கு அதற்கு மேல் கண்டுபிடித்தி ருக்கிறார்கள். ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக இருக் கிறது; அதற்கு உடுமியின் கூட்டம் என்று சொன்னார்கள்.

பேரண்டத்தை தன் மூளையில் சுமந்தவர்

தந்தை பெரியார்

அதனால்தான், விண்ணோடும், உடுக்களோடும் பிறந்த தமிழ் என்று புரட்சிக்கவிஞர் பாடினார்.

நாம் தேடத் தேட, புதிது புதிதாகக் கிடைத்து கொண் டிருக்கின்றன, இந்தப் பேரண்டத்தில். அப்படி ஒரு பேரண்டத்தை தன் மூளையில் சுமந்தவர் தந்தை பெரியார்.

நாம் தேடத் தேட, படிக்க படிக்க, நாம் கற்றுக்கொள்வது புதிதாகவும், இப்படி ஒரு சிந்தனையாளர் உலகத்தில் இருந்திருக்கிறார்களா? என்று ஆராய்ச்சி செய்கின்ற அளவிற்கு, ஒரு பேரறிஞர் இந்த நாட்டில் பிறந்தார், அவ ரைப் படிப்பதன்மூலம், அடுத்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்துவதன்மூலம், இந்த இனத்தை, அறிவில் மேன்மையுறச் செய்யும் பயன் நமக்கு இருக்கிறது. அதனால் தந்தை பெரியாரை நாம் கொண்டாடுகிறோம்.

ஒரு கேள்வி,

அய்யாவினுடைய அறிவு எப்படிப்பட்டது என்றால், நெருப்பில் எதைப் போட்டாலும், அந்த அழுக்கெல்லாம் பொசுங்கி, உறுதியான பொருள் வெளிப்படும். அதுபோல, நம்முடைய அறிவு உறுதியடையவேண்டும் என்றால், அதில் ஏற்படுகின்ற சந்தேகங்கள் எல்லாம் பொசுக்குகிற நெருப்புப் போன்று, அய்யாவினுடைய ஒரு பக்கத்தைப் படித்தால் போதும், சாதாரணமாக உலகத்தில் அறிவியல் மாறுது; மனிதர்கள் நிறைய வளரு கிறார்கள்; உடல் உறுப்புகளை மாற்றிக் கொள்ளலாம்; மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழக்கூடிய காலம் வரும் என்று சொல்லி, கடைசியாக அந்தக் கட்டுரையில் அய்யா சொல்லுகிறார்,

கடவுள் நம்பிக்கை

ஓரளவிற்கு இருந்துதான் தீரும்!

இப்படியெல்லாம் மனிதனுக்கு எல்லா சவுகரியங்கள் கிடைத்த பிறகு, கடவுள் என்கிற நம்பிக்கை இருக்குமா? என்று கேட்டால்,

யாராக இருந்தாலும் என்ன சொல்வார்கள்? தன்னு டைய கொள்கைக்கு சாதகமாகத்தான் சொல்கிறார்கள். ஆனால், அய்யா சொல்கிறார், ‘‘ஓரளவிற்கு இருந்துதான் தீரும்'' என்கிறார்.

அப்படி என்றால், எல்லாமே நிறைவாகி விட்டது என்றால்,  அய்யாதான் இன்னொரு இடத்தில் சொன்னார், ‘‘தேவைகள் அற்றுப்போன இடம், கடவுள் செத்துப் போன இடமாக இருக்கும்'' என்று.

அப்படி, தேவைகள் அற்றுப்போய், மனிதனுக்கு எல்லாம் கிடைத்து மகிழ்ச்சியாக இருந்தால், எதற்கு அவனுக்குக் கடவுள் நம்பிக்கை வேண்டும் என்று கேட்டால், ‘‘அது ஓரளவிற்கு இருந்துதான் தீரும்'' என்று சொல்கிறார்.

தந்தை பெரியாரின் விளக்கம்!

ஏன் இருக்கவேண்டும் என்பதைப்பற்றி சொல்கிறார்,

‘‘மனிதனுக்கு தனக்கு எல்லாம் தெரியும் என்கிற ஒரு அகந்தை உண்டு. எனக்குத் தெரியாது என்று அவனால் சொல்ல முடியாது. ஆகவே, இந்த உலகம் தோன்றியதற் கான காரணத்தையும், சில இயற்கை செயல்களுக்கான காரிய காரணத்தையும், இதற்கு எது  காரணம் என்று கேட்டால், எனக்குத் தெரியாது என்று சொல்ல, மனித னுடைய அகம்பாவம் இடம் கொடுக்காது. ஆகவே, தனக்குத் தெரியாது என்பதற்குப் பதில், ஒரு விடையைக் கண்டுபிடித்து அதற்கெல்லாம் கடவுள்தான் காரணம் என்று சொல்வதற்கு அவனுக்கு ஒரு பதில் கிடைக்கிறது.

ஆகையினால், மனிதனுடைய இந்த அறியாமையை மறைக்கிற அகந்தை இருக்கிறதே, அந்த அகந்தைக் காகவாவது கடவுள் நம்பிக்கை இருந்துதான் தீரும்'' என்றார்.

நண்பர்களே, இப்படி ஒரு சிந்தனையாளரை, புரிந்து கொள்வதற்கே இந்த இனத்திற்கு இன்னமும் பக்குவம் இல்லை. நாம் இன்னமும் அதனை மக்களிடையே எப்படி எடுத்துச்சொல்வது என்று திகைத்து நிற்கிறோம்.

ஆனால், இளைய தலைமுறையினர், புதுமையை விரும்புகின்றவர்கள் தந்தை பெரியாரை எப்படிப் பற்றிக்கொள்கிறார்கள்?

பெரியாரை வியந்து பாடிய பெரியவர்கள்!

அன்றைக்குத் தந்தை பெரியாரை வியந்து பாடிய பெரியவர்கள் இருக்கிறார்கள்.

தீண்டாமைப் பிணி இங்கு வேண்டாமே என்று

அன்று சிறையினில் இளைத்தார் வைக்கத்தில்

செந்தமிழ் காக்கவே அண்ணாவைப்போல்

பல தீரரை அழைத்தார் பக்கத்தில்

ஜாதி வேரைச் சுட்டுத்

தாழ்ந்தவர் உயர்ந்திட

ஓயாது ஊர்தோறும் நடை நடந்தார்

சாகும்போதும் அந்த தந்தை

உழைத்ததுபோல், தமிழரை உயர்த்திட

யார் வருவார்?

இது அன்றைக்குப் பெரியவர்கள் தந்தை பெரியாரைப் பற்றி பாடியது.

பெண்ணே, பெண்ணே

திரும்பிப் பார்

பெரியார் தொண்டை

நினைத்துப் பார்

மண்ணுக்கும் கீழாய்

உனை மதித்தோரின்

மண்டையில் அடித்தார்

பெரியார் பார்

என்று கவிஞர் கலி.பூங்குன்றன் பாடினார்.

பெரியார் அவனுக்குத் தோழன் ஆகிவிட்டார்!

ஆனால், இன்றைக்கு ராப் சீசன். இன்றைய இளைஞர் களுக்கு கவிதை, பாட்டு பாடிக் கொண்டிருக்க நேரம் இல்லை.

ஒரு சின்ன வயது இளைஞர் பாடுகிறார்,

கிழவண்டா,

இவன் கிழவண்டா

தமிழ் இனத்தைத்

திருத்த வந்த

உழவண்டா!

என்று.

என்னடா, அவன், இவன் என்று பாடுகிறாரே என்றால், அவ்வளவு உரிமையாக பெரியார் அவனுக்குத் தோழன் ஆகிவிட்டார்.

இளைஞர்கள் எழுதுகிறார்கள்,

‘‘யோவ் கிழவா! நாங்கள் படிக்கவேண்டும் என்பதற் காகத்தானே இவ்வளவு தூரம் போராடினாய்! நாங்கள் படித்துவிட்டோம், வந்து பாருய்யா!'' என்று.

அப்படி உரிமையோடு இன்றைய இளைஞர்கள் அந்தக் கிழவரை சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

இராவணன் கேட்ட கேள்வியிலே

நீதி தேவனே மயங்கி விழுந்துவிட்டார்

பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘‘நீதிதேவன் மயக் கம்'' எழுதினார். பேராசிரியர் அவர்கள் ‘‘நீதி கெட்டது யாரால்?'' என்று அய்யாவினுடைய நீதிமன்ற உரையை சொன்னார்கள்.

பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘‘நீதிதேவன் மயக் கம்'' எழுதினார். அந்த நீதி தேவனுடைய கோர்ட்டில், இராவணனுடைய வழக்கு மறு விசாரணைக்கு வருகிறது.

இராவணன் கேட்கிறார், ‘‘என்னை அரக்கன் என்றீர்கள்; என்னை இரக்கமில்லாதவன் என்றீர்கள்; இவர்கள் எல்லாம் யார் என்று, தாயைக் கொன்றவனை, பிள்ளைக் கறி கேட்டவனை என்று ஒவ்வொருவராகக் காண்பித்து, இவர்களுக்கெல்லாம் இரக்கம் இல்லையே, இவர்களை ஏன் நீங்கள் அரக்கன் என்று சொல்லவில்லை'' என்று, இராவணன் கேட்ட கேள்வியிலேதான், நீதி தேவனே மயங்கி விழுந்துவிட்டார்.

எங்கள் பேரரக்கர் தலைவர்!

அப்படி மறு விசாரணை செய்யச் சொல்லி, இராவ ணனை, அசுரன் என்று சொன்னவர்களை, இராட்ச சர்களை, இன்றைக்கு நம்முடைய இளைஞர்கள் எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா? தந்தை பெரியாரை சொல்லுகிறார்கள்,

‘‘எங்கள் பேரரக்கர் தலைவர்'' என்று.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இறந்த பொழுது, சில பேர் வடை, பாயாசம் வைத்து சாப் பிட்டார்கள்.

அப்பொழுது சொன்னார்கள், எங்கள் அரக்கர் தலை வர், யாருக்காவது அப்படி சொல்ல தைரியம் வருமா? அவர்கள் பெயர் வைத்துக் கொள்கிறார்கள், நாங்கள் அரக்கர் கூட்டமடா என்று.

இப்படி சொல்லுகிற துணிவை அடுத்த தலை முறைக்குக் கொடுத்தவர் யார் என்றால், அன்பாக கிழவர் என்று அழைக்கப்படும் இளைஞர்.

அதை இன்றைக்கு மக்களிடத்திலே நாம் கொண்டு சென்றால், அப்படி ஒரு வரவேற்பை நம்முடைய சிறுவர் களும், இளைஞர்களும் பெறுகிறார்கள், நமக்குக் கொடுக்கிறார்கள்.

ஏன்?

இன்றைக்கு நமக்கு ஏற்படுகிற நெருக்கடி. தந்தை பெரியார் பாராட்டில் வளர்ந்தவர் அல்ல; எதிர்ப்பில் வளர்ந்தவர்.

நாங்கள் பாஷாணத்தில் புழுத்த புழுக்கள் என்று அவர் சொன்னதும், நீங்கள் என்னை நல்லவன் என்று சொல்லி, கடவுள் என்று சொல்லி, தேரிலே தூக்கி வைக் காதீர்கள். என்னை கெட்டவன் என்று சொல்லுங்கள்; அயோக்கியன் என்று சொல்லுங்கள். அப்பொழுதுதான், இவர் என்னதான் சொன்னார் என்று தேடி படிப்பார்கள்; தெரிந்துகொள்வார்கள். நீ நல்லவன் என்று சொல்லி விட்டால், பாராட்டி விட்டுப் போய்விடுவார்கள் என்ப தால், என்னை அயோக்கியன் என்று சொல்லுங்கள் என்று சொல்லுகிற துணிச்சல் கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார்.

இன்றைக்குப் பெரியாரைக் கண்டால்,

எதிரிகள் நடுங்குகிறார்கள்

அதனால்தான், இன்றைக்கு அவரைக் கண்டால், எதிரிகள் நடுங்குகிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத் திலும் நடக்காத எதிர்ப்புப் புரட்சியை, இன்றைக்கு மோடி அரசாங்கம், ஆர்.எஸ்.எஸினுடைய திட்டம் எங்கே சந்திக்கிறது - தமிழ்நாட்டில்தான் சந்திக்கிறது.

இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் எதிர்க் கட்சிகள் இருக்கின்றன; தலைவர்கள் இருக்கின்றனர். ஆனால், ‘‘பாசிஸ்ட் மோடி'', ‘‘ரேசிஸ்ட் மோடி'', ‘‘சாடிஸ்ட் மோடி'' என்று அறிவிக்கின்ற துணிச்சல் தமிழ்நாட்டில், திராவிட இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகத் தினுடைய தலைவருக்குத்தான் இருந்தது.

தந்தை பெரியார் நமக்குக் கொடுத்துச் சென்ற பெருங்கொடை

இந்தியாவில் நடந்த தேர்தலில் அவர்கள் அதிர்ச் சியடைந்த இடம் அதுதான். அவர்களுடைய தேசியக் கல்வி கொள்கையை ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன் னால், இங்கே ஆளுகிற அவர்களுடைய உதவியாளர் கள், அல்லது நம்முடைய ஆட்சியாளர்கள் அவர்களுக்கு  என்ன பெயர் வைப்பது என்று தெரியவில்லை. ஆனால், தேசிய கல்விக் கொள்கைத் திட்டமே இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால், அந்தத் திட்டத்தில் கூறப்பட்ட 5 ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு, 8 ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு என்ற மனக்கோளாறு படைத்த கொடுமையாளர்களுடைய திட்டத்தை, இங்கே உள்ள அரசு நடைமுறைப்படுத்துவோம் என்று சொன்னவுடன், உடனடியாக வந்த எதிர்ப்பு, விமர் சனங்களைக் கண்டு இன்றைக்கு அவர்களை யோசிக்க வைக்கிறது; பின்வாங்க வைக்கிறது. மூன்றாண்டுகளுக்கு இல்லை என்று இன்றைக்கு அவர்கள் அறிவிக்கத் துணிந்திருக்கிறார்கள் என்றால், அந்த எதிர்ப்பு எங்கே இருந்து கிளம்புகிறது? தந்தை பெரியார் போட்ட அடித்தளத்திலிருந்து கிளம்புகிறது.

எதையும் அறிவு கண்கொண்டு பார்ப்பதும், எதிர்ப் பதும்தான் தந்தை பெரியார் நமக்குக் கொடுத்துச் சென்ற பெருங்கொடையாகும்.

நண்பர்களே, 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய இரண்டாம் உலகப் போர் 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முடிந்தது.

உலகம் போர் பற்றி பேசுகிறது; இந்தியாவும் போரால் பாதிக்கப்பட்டது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் வெல்வார்களா? வீழ்வார்களா? அவர்கள் வென்றால், நமக்கு விடுதலை. தோற்றால் கிடையாது - என்பது ஒரு பக்கம்.

அதேநேரத்தில், இந்தியாவில் பெரிய வீரரான நேதாஜி அவர்கள், பிரிட்டிஷ் அரசை தோற்கடிக்கிறேன் என்று ஹிட்லரோடு கூட்டு வைக்கிறார். இப்படிப்பட்ட நிலையில், இன்றைக்கும் நேதாஜி அவர்களை எல் லோரும் புகழ்கிறார்கள். தந்தை பெரியாரும் புகழ்ந்தார்.

தந்தை பெரியார் நேதாஜியை குறை சொல்லவேயில்லை. அவர் காங்கிரசில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என்று வருத்தப்பட்டார்.

உலக அரசியலைப் பேசியவர் தந்தை பெரியார்

ஆனால், அந்த நேதாஜியைப் பார்த்து, அவருக்கு வெள்ளைக்காரனைவிட ஹிட்லர் கொடியவன் என்று புரியாமல் போய்விட்டதே என்று எழுதிய தலைவர் தந்தை பெரியார்.

இன்றைக்கும் அய்யோ, நேதாஜி என்று பேசக்கூடாது; இந்தப் பக்கம் விவேகானந்தர்; அந்தப் பக்கம் நேதாஜி. தெய்வ பக்தி - தேசப் பக்தி. இந்த நாடகத்திற்கு நடுவில், நேதாஜி சிறந்த வீரர்; ஆனால், ஹிட்லர் கொடியவன் என்பது அவருக்கு எப்படிப் புரியாமல் போனது. வெள்ளைக்காரன் செய்கிற கொடுமைகளைவிட, ஹிட்லர் செய்கிற கொலைகள் எவ்வளவு மோசம் என்று உலக அரசியலைப் பேசியவர் தந்தை பெரியார்.

அவர் ஏதோ, படிக்காதவர், பள்ளிக்கூடம் போகாதவர் என்பதெல்லாம் கிடையாது. உலக அரசியலைப் படித்துப் பேசினார்; மற்றவர்கள் பேச முடியாத செய்தி களைத் துணிந்து பேசினார். அந்த அறிவும், துணிவும் நம் அடுத்த தலைமுறையினருக்கு வரவேண்டும் என்றால், பெரியாரைக் கொண்டாடுவோம், தந்தை பெரியாரை நம் குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்போம்.

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு, 1.11.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக