சென்னையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்
சென்னை, நவ.11 ‘நீட்' மற்றும் புதிய கல்விக் கொள்கை நீக்கம் - நடைபாதைக் கோவில்களை அகற்றக் கோரியும் - தலைவர்களின் சிலைகளை அவமானப்படுத்துவோர்மீது நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும் - பாபர் மசூதி தொடர்பான வழக்கில்- மசூதியை இடித்தது சட்ட விரோதம் - நீதிமன்ற தீர்ப்புபடி விரோதம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதால், சம்பந்தப்பட்டவர்கள்மீதான வழக்கைத் துரிதப்படுத்தி, குற்றவாளிகளைத் தண்டிக்கவேண்டும் என்ற தீர்மானம் உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் தலைமையில் சென்னை பெரியார் திடலில் இன்று (11.11.2019) காலை நடைபெற்ற திராவிடர் கழக தலைமை செயற் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
தீர்மானம் எண் 1:
இரங்கல் தீர்மானம்
திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினரும், சட்ட எரிப்புப் போராட்ட வீரருமான முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மயிலாடுதுறை கோ.அரங்கசாமி (வயது 93, மறைவு 25.10.2019 - உடற்கொடை அளிக்கப்பட்டது).
பெரியார் பெருந்தொண்டர் மயிலாடுதுறை மா.க.கிருட்டிண மூர்த்தி (வயது 84, மறைவு 19.9.2019 - உடற்கொடை வழங்கப்பட்டது).
பகுத்தறிவு எழுத்தாளர், நூல்கள் பலவற்றின் ஆசிரியர் காரைக்குடி புலவர் பழம்நீ (வயது 88, மறைவு 31.10.2019 - உடற்கொடை வழங்கப்பட்டது).
கபித்தலம் பெரியார் பெருந்தொண்டர் தி.கணேசன் (வயது 73, மறைவு 3.10.2019),
திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் மணப்பாறை திருமால் (வயது 93, மறைவு 28.10.2019),
வடசென்னை கழக மூத்த மகளிரணி வீராங்கனை பொன்.இரத்தினாவதி (வயது 83, மறைவு 6.11.2019 - உடற்கொடை வழங்கப்பட்டது) ஆகியோரின் மறைவிற்கு இச்செயற்குழு தனது இரங் கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், இவர்களின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும் இச்செயற் குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண் 2 (அ):
‘‘நீட்'' தேர்வு நீக்கப்படவேண்டும்
மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு ‘நீட்' என்னும் நுழைவுத் தேர்வு திணிக்கப்படுவதால், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி வருவது கண்கூடு. ‘நீட்' தேர்வுக்கு முன் - பின் இவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் பெற்ற இடங்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது இந்த உண்மை மிகவும் திடுக்கிட வைக்கிறது.
மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கப் பெற்றவர்கள் ஓராண்டு, ஈராண்டு ‘நீட்' கோச்சிங் வகுப்புகளில் சேர்ந்து படித்ததும், அதற்காக பல லட்சம் ரூபாய் செலவிட்டிருப்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவக் கல்வி என்பது எட்டாக் கனியாக இருப்பது இதன்மூலம் உறுதியாகிறது.
சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் இந்த யதார்த்த உண்மைகளை சுட்டிக்காட்டி ‘நீட்'டை நீக்குவது அவசியம் என்ற பொருள்படும்படி நீதி மன்றத்தில் அறிவித்ததையும் கவனத்தில் கொண்டு, ‘நீட்' தேர்வை ரத்து செய்யுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
தமிழ்நாடு அரசும் இந்த உண்மைகளை உள்வாங்கிக் கொண்டு, வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இந்த வகையில், ‘நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளித்திடும் வகையில் மத்திய அரசை வலியுறுத்திப் புதிய மசோதா ஒன்றை நிறைவேற்றவேண்டும் என்று இச்செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரும் கட்சி வேறுபாடின்றி அரசுக்கு இந்த வகையில் துணை நிற்பர் என்றும் இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
‘நீட்' தேர்வு ரத்து செய்யப்படவில்லை என்ற பட்சத்தில், தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் சமூக நீதியில் அக்கறை கொண்ட அனைத்துக் கட்சிகளையும், சமூக அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, தீவிரமான பிரச்சாரம், பெரிய அளவிலான போராட்டம் என்ற இருமுனை அணுகுமுறைகளைக் கடைப் பிடிப்பது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் எண் 2 (ஆ):
27 சதவிகித இட ஒதுக்கீடு!
மாநிலங்களிலிருந்து மத்திய தொகுப்புக்கு எடுத்துச் செல்லப்படும் மருத்துவக் கல்விக்கான 50 விழுக்காடு இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதும், அதேநேரத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்ற பெயரால் உயர்ஜாதியினருக்கு (EWS) 10 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதும் - அப்பட்டமான சமூக அநீதியும், உயர்ஜாதி ஆதிக்க மனப்பான்மையும் கொண்ட மனுதர்ம சிந்தனைப் போக்கே என்று இச்செயற்குழு திட்டவட்டமாக சுட்டிக்காட்டுவதுடன், சட்டப்படியான ஒதுக்கீடு பிரிவினருக்கு - குறிப்பாக பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்கள் கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 3:
தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு
மத்தியில் உள்ள பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தேசியக் கல்விக் கொள்கை ஒன்றை செயல்படுத்திட முனைந்துள்ளது.
பல்வேறு இனங்கள், கலாச்சாரங்கள், பருவ நிலைகள் சூழ்ந்த பல மாநிலங்களைக் கொண்ட இந்தியா என்பது ஒரு துணைக் கண்டமேயாகும். இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே கலாச்சாரம் என்ற அடிப்படையில் தவறான புரிதலோடும், கண்ணோட்டத்துடனும் இந்தியா முழுமைக்கும் ஒரே வகையான தேசிய கல்வி என்ற முறையில் பாடத் திட்டத்தைத் திணிப்பது, இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மூன்று மொழிகளை மூன்றாம் வகுப்பு அளவிலேயே திணிப்பது - அய்ந்து, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசுப் பொதுத் தேர்வு நடத்துவது என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படவே முடியாத அநீதிகளாகும்.
மத்திய அரசின் தேசிய கல்வித் திட்டம் என்பது தமிழ்நாடு அரசின்இருமொழிக் கொள்கைக்கு விரோதமானதுஎன்பது ஒருபுறம்; அய்ந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர் களுக்கு அரசுப் பொதுத் தேர்வு என்பது பிஞ்சு உள்ளங் களில்கல்வியின்மீதுஅச்சத்தையும், எதிர்ப்பையும்ஏற்படுத் தும் ஆபத்தான ஒன்றாகும். உள ரீதியான பாதிப்பை இளம் பிள்ளைகள் மத்தியில் ஏற்படுத்தும் என்று கல்வியாளர்களும் கூறி வருவது கருத்தூன்றி கவனிக்கத்தக்க தாகும்.
அரசு தேர்வில் வெற்றி பெறவில்லையெனில் குலத் தொழிலை நோக்கி மாணவர்களை விரட்டும் மறைமுகமான ஏற்பாடாகவே மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையைக் கருதிட வேண்டியுள்ளது.
கலைக் கல்லூரிகளில் சேருவதற்குக்கூட இனி நுழைவுத் தேர்வு என்பது ஆபத்தான ஏற்பாடாகும்; கல்வியில் இடையில் நிற்கும் (டிராப் அவுட்ஸ்) எண்ணிக்கையைத்தான் அதிகரிக்கும் என்பதையும் தொலைநோக்கோடு இச்செயற்குழு எச்சரிக்கிறது.
நூற்றுக்கு நூறு அனைவரும் கல்வி வளர்ச்சி பெறவேண்டும் என்பதுதான் அரசின் கொள்கையாகவும், செயல்பாடாகவும் இருக்கவேண்டுமே தவிர, கல்வி வளர்ச்சியைத் தடுப்பதாகவோ, முட்டுக்கட்டை போடுவதாக இருக்கக்கூடாது என்பதையும் இச்செயற்குழு மத்திய - மாநில அரசுகளுக்கு அறிவுறுத்துகிறது.
அரசனை விஞ்சிய விசுவாசியாக வரும் கல்வி ஆண்டி லேயே 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்ற தமிழ்நாடு அரசின் அவசர அலங்கோல நடவடிக்கைக்கு இச்செயற்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, அந்த முடிவை உடனடியாக கைவிடுமாறும் இச்செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
தேசிய கல்விக் கொள்கையை உருவாக்கிட ஏற்பாடு செய் யப்பட்டுள்ள குழுவானது கல்வியாளர்களைக் கொண்டதுமல்ல என்பதால், இந்தத் திட்டத்தை அடியோடு கைவிட்டு, மாநில அரசுகளின் பொறுப்பில் கல்வித் திட்டத்தை ஒப்படைக்குமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசும் இந்த வகையில் மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் என்றும் இச்செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 4:
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையின் வீழ்ச்சியும் - மதவாத திசை திருப்பலும்!
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கையும், நடவடிக்கை களும் பெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திட்டு, அதன் காரணமாக சிறு, நடுத்தர தொழில்கள் நசிந்தும், பெரிய எண்ணிக்கையில் வேலையிழப்பும் ஏற்பட்டு நாடே நிலை குலையும் ஒரு சூழ்நிலையில், மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் வகையில், மதவாதத்தை முன்னிறுத்துவது, ஆளும் கட்சியே வன்முறைகளைத் தூண்டுவது என்பதல்லாமல் நாட்டின் ஒற்றுமைக்கும், மதச்சார்பின்மைக்கும், சமூகநீதிக்கும், அமைதிக்கும், ஜனநாயக உணர்வுக்கும் பெரும் அச்சுறுத்தலாக முடியும் என்று இச்செயற்குழு எச்சரிக்கிறது.
அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் ஜனநாயகப் பாதையில், மதச்சார்பின்மை, சமூகநீதி, அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புச் சிதையாமல், சோசலிசப் பாதையில் பயணிக்க உரிய மாற்றங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 5:
பள்ளியில் மதம், ஜாதி அடையாளங்கள் கூடாது
பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் ஜாதி, மத மாச்சரி யங்களைத் தூண்டும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைக்கும் தமிழ்நாடு அரசு துணை போகக்கூடாது என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
குறிப்பாக ஜாதியைக் குறிக்கும் வண்ண வண்ண கயிறுகள் கட்டி பள்ளிக்கு வருவதற்குத் தடை விதிக்கப்படவேண்டும் என்று இச்செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. சங் பரிவார்கள், கல்விக் கூடங்களில் தலையிடுவது - நுழைவது கட்டாயம் தடுக்கப்படவேண்டும் என்றும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 6:
பாபர் மசூதியும் - உச்சநீதிமன்றத் தீர்ப்பும்!
450 ஆண்டுகால வரலாறு படைத்த பாபர் மசூதி இடிப்புத் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 9.11.2019 அன்று அளித்த தீர்ப்பு - இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை, விஞ்ஞான மனப்பான்மை என்பனவற்றை சோதனைக்கு உட்படுத்திய தீர்ப்பாகவே இச்செயற்குழு கருதுகிறது.
இந்தத் தீர்ப்பு என்பது யாருக்கும் வெற்றி - தோல்வி இல்லை என்று கூறுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்றே!
மதக் கலவரங்கள் வெடித்துவிடக் கூடாது என்ற கண் ணோட்டத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது என்றாலும், பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பது சட்ட விரோதம் என்றும், நீதிமன்றத் தீர்ப்புக்கு விரோதம் என்றும் உச்சநீதிமன்றம் இத்தீர்ப்பில் திட்டவட்டமாக கூறியிருப்பதால், 27 ஆண்டுகளாக இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள்மீதான விசாரணை நடந்து வருவதால், மேலும் காலதாமதம் செய்யாமல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவர்கள்மீதான வழக்கு விசா ரணையை - இப்பொழுது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள வழக்கினை 40 நாள்கள் தொடர்ந்து விசாரித்தது போலவே, பாபர் மசூதி இடிப்புத் தொடர்பான வழக்கையும் விரைவாக நடத்தி, குற்றமிழைத்தவர்கள்மீதான தண்டனை உறுதி செய்யப்பட ஆவன செய்யுமாறு மத்திய அரசையும், உச்சநீதிமன்றத்தையும் இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
தாமதிக்கப்பட்ட தீர்ப்பு என்பது மறுக்கப்பட்ட ஒன்றே என்பதையும் இச்செயற்குழு நினைவூட்டுகிறது.
தீர்மானம் எண் 7:
சிலைகளை அவமதிக்கும், கலவரத்தைத் தூண்டும் சங் பரிவார்கள்மீது நடவடிக்கை தேவை!
மக்களால் போற்றத்தக்க மதிப்பு வாய்ந்த தலைவர்களின் சிலைகளுக்கு காவி சாயம் பூசுவது, அவமதிக்கும் வகையில் சாணியை வீசுவது, செருப்பு மாலை சூட்டுவது போன்ற அநாகரிக செயல்பாட்டில் ஈடுபடுவது என்பது - பி.ஜே.பி. மற்றும் சங் பரிவார்களின் தொடர் நடவடிக்கையாக இருந்து வருகிறது. இந்த வரிசையில் திருவள்ளுவரையும் அவமதிக்கும் போக்கு கலவரத்தை உண்டாக்கவேண்டும் என்ற கெட்ட நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது - சங் பரிவார்களின் கடந்தகால நடவடிக்கைகளை அறிந்தவர்களுக்கு மிக நன்றாகவே தெரிந்த ஒன்றாகும்.
இவ்வாறு சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் குற்றவாளிகளைக் காலம் தாழ்த்தாமல் சட்டப்படி தண்டிக்க வகை செய்யவேண்டும் என்று தமிழ்நாடு அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 8:
நடைபாதைக் கோவில்கள் - அரசுக்குச் சொந்தமான இடங்களில் உள்ள கோவில்களை அகற்றுக!
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் அடிப்படை யிலும், ஏற்கெனவே மத்திய - மாநில அரசுகள் பிறப்பித்த ஆணையின் அடிப்படையிலும் அனைத்து நடைபாதைக் கோவில்களையும், அரசுக்குச் சொந்தமான இடங்களில் எழுப் பப்பட்டுள்ள அனைத்து மதக் கோவில்களையும் உடனடியாக அகற்றுமாறு மத்திய - மாநில அரசுகளை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண் 9:
சட்டம் - ஒழுங்கு நிலை
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்பது பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது என்பதற்கு - அன்றாடம் வெளிவரும் தகவல் களே சாட்சியங்களாக அமைந்துள்ளதால், சட்ட - ஒழுங்கை நிலை நிறுத்துவதில் முழு கவனம் செலுத்துமாறு தமிழ்நாடு அரசை இச்செயற்குழுக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் எண் 10:
மதவெறி - ஜாதி வெறி முறியடிப்பு மனிதநேய மாநாடு
திருச்சியில் 2020 பிப்ரவரி முதல் வாரத்தில் மதவெறி - ஜாதி வெறி முறியடிப்பு மனித நேய மாநாட்டை சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
- விடுதலை நாளேடு 11 11 19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக