வியாழன், 15 பிப்ரவரி, 2018

அண்ணா நினைவு நாள்

திராவிட அரசியலை அசைக்க எண்ணும் தீயர் கூட்டத்தைத் துரத்துவோம்!

அண்ணா நினைவு நாளில் தமிழர் தலைவர் அறிக்கை



அறிஞர் அண்ணாவின் 49 ஆம் ஆண்டு நினைவு நாளில் நாம் எடுக்கவேண்டிய சூளுரை என்ன என்பது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

தந்தை பெரியாரின் தலைமாணாக்கராகத் தன்னை வரித்துக்கொண்ட தானைத் தளபதி அறிஞர் அண்ணா தனி அரசியல் இயக்கம் கண்ட பிறகும் - ஏன் இறுதி வரைக்கும் என்றும் சொல்லவேண்டும் - ‘தான் கண்ட, கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார்தான்' என்றே பிரகடனப்படுத்தினார்!

தாம் முதலமைச்சர் பதவியில் அமர்ந்து வரலாறு படைத்த காலகட்டத்திலும்கூட, தனது ‘வாழ்வின் வசந்தம்‘ தந்தை பெரியாருடன் இருந்து தொண்டூழியம் செய்ததேதானே தவிர, பதவி வாழ்வல்ல என்று கூறி அடக்கத்துடன் இலக்கணமாய் உயர்ந்தார்.

அமைச்சரவையே பெரியாருக்குக் காணிக்கை

தன் அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிர கடனப்படுத்திப் பெருமையடைந்தார் அண்ணா!

அதற்குமுன்னர் - தேர்தல் வெற்றிக் கனியை 1967 இல் பறித்து, தமிழ்நாட்டு வரலாற்றில் திராவிடர் அரசியல் கொடியேற்றத்தை நிகழ்த்துமுன்னர், 200 மைல்களுக்கு அப்பால் இருந்த தனது ஆசானை, தலைவனைக் கண்டு, அவ்வெற்றிக் கனியை அவருடைய கையில் தந்து ‘‘ஆசி பெற்று’’ தனிச்சிறப்பைப் பெற்றார்!

முப்பெரும் சாதனையே!

ஓராண்டு கால ஆட்சியில் செய்த முப்பெரும் சாதனைகளாக,

1. சுயமரியாதைத் திருமண செல்லுபடி சட்டம்

2. தாய்த் திருநாட்டுக்கு ‘‘தமிழ்நாடு’’ பெயர் மாற்றம்

3. இருமொழிகளே தமிழ்நாட்டு ஆட்சி மொழிகள்

என்ற பிரகடனம்!

இப்படி ஒப்பரிய வரலாற்றுச் சாதனைகளைச் செய்த தோடு, அரசு அலுவலகங்களில் கடவுள், கடவுளச்சிகள் படங்களை மாட்டுவதைத் தவிர்த்தும், அகற்றுமாறும் சுற்றறிக்கை அனுப்பி மதச்சார்பின்மை என்ற அரசியல் சட்டக் கட்டளையைச் செயல்படுத்தி அகிலத்திற்கே ஒரு மகத்தான பாடம் எடுத்தார்!

அவர் இட்ட அடித்தளம் 50 ஆண்டுகால, அரை நூற்றாண்டு வரலாற்று அரசியலின் திருப்பமாகி, தமிழ்நாடு பெரியார் மண்ணாகவே தொடருகிறது!

அண்ணாவின் பெயரும், உருவமும் போதுமா?

இதனை மாற்ற இன்று ஆன்மிக ஒப்பனைகளோடு அரசியல், யாக, யோக, யக்ஞம் நடத்திடும் வேடிக்கையான விலாநோகச் சிரிக்கும் கேலிக்கூத்துகள், ஊடகங்களை குத்தகைக்கு எடுத்தும், உண்மைகளைப் பலியாக்கும் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்தும், ‘சுக்ரீவ - அனுமர் - விபீ டண - பிரகலாத’ வகையறாக்களைத் தோளில் தூக்கியும், இதோ மாற்றுகள் தயாராகி விட்டன என்ற கானல் நீர் வேட்டை, மயிரைச் சுட்டு கரியாக்கி, மலையைக் கெல்லும் வெட்டி வேலைகள் எல்லாம் நடக்கின்றன!

நாம் எடுக்கும் சூளுரை!

அண்ணா பெயரில் கட்சி, அண்ணா படத்துடன் கொடி, ஆனால், அண்ணாவுக்கோ, அவரது கொள்கைக்கோ ஒரு பெரிய ‘‘நாமம்'' - ‘அண்ணா நாமம்' போடும் வேதனையான வெட்கப்படும் வினையாற்றம் - இவைகளை எதிர்நோக்கிட உண்மை திராவிடர் இன உணர்வு, பண்பாட்டுக் காப்புகள் உள்ள பாசறைப் பட்டாளங்கள்  ஆயத்தமாகி அணிவகுத்து, ஆரியத்தின் அறைகூவலை ஏற்க புதியதோர் சூளுரை ஏற்போம் - அண்ணா நினைவு நாளில்!

திராவிடம் என்பது எல்லைக் கோடு அல்ல; ரத்தப் பரிசோதனை அல்ல. பண்பாட்டுப் பெட்டகம்!

அண்ணாவின் அரசியல் பதவி இலக்கு அல்ல; பதவியின்மூலம் இலட்சிய வெற்றியை அடைதலே என்பதை இளையர்களுக்குப் புரிய வைத்து, திராவிட அரசியலை அசைக்க எண்ணும் தீயர் கூட்டத்தை திசைதெறிக்கத் தோற்றோட போர்ச் சங்கு ஊதுவோம், வாரீர்!

வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!

வளரட்டும் திராவிடம்!

 

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்.

சென்னை 
3.2.2018

இரும்புக்கோட்டை உறுதியாக நிற்கும்;

ஈக்கள் மடிந்து போகும்: தமிழர் தலைவர் பேட்டி



இரும்புக்கோட்டையை ஈக்களால் தகர்த்துவிட முடியாது; திராவிட அரசியல் ஆயிரங்காலத்துப் பயிராக என்றைக்கும் பாதுகாக்கப்படும்  என்று தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அண்ணா அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2018) சென்னை கடற்கரை காமராசர் சாலையிலுள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்த  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

‘‘திராவிடன் நான் - தெற்கிலிருந்து வருகிறேன்!’’ என்று பிரகடனப்படுத்தியவர்

தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் குடும்பத்தின் தலை மாணாக்கராகத் தன்னை இறுதிவரை வரித்துக்கொண்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்து 49 ஆம் ஆண்டு நினைவு நாள் என்றாலும், அவர்கள் தத்துவமாக, கொள்கையாக, திராவிடர் அரசியலாக, ஆரிய மாயை அகற்றக்கூடிய மிகப்பெரிய போர்த் தளகர்த்தராக, இன்றைக்கும் உலகெங்கும் வாழ்ந்துகொண்டிருக்கின்ற தமிழ் திராவிட மக்களுடைய எண்ணத்தில் குடியேறி இருக்கிறார்கள்.

மாநிலங்களவையில் ‘திராவிடன் நான் - தெற்கிலி ருந்து வருகிறேன்’ என்று பிரகடனப்படுத்திய அண்ணா அவர்கள், ஆட்சிக்கு வந்தவுடன் சாதித்தவை முப்பெரும் சாதனைகள்!

சுயமரியாதைத் திருமணம்

தாய்த்திருநாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம்

இந்தி இல்லை. தமிழ் - ஆங்கிலம் இருமொழிக் கொள்கை என்ற இந்தக் கொள்கைகள் திராவிட அரசிய லின் அடித்தளங்கள்.

‘‘இரும்புக்கோட்டை உறுதியாக நிற்கும்; ஈக்கள் மடிந்து போகும்!’’

இதை மாற்றுவதற்கு எந்தக் கொம்பனாலும் முடியாது. அண்ணாவின் நினைவு நாளில், திராவிட அரசியலை வீழ்த்திவிடலாம் என்று சிலர் கனவு காணுகிறார்கள். இரும்புக் கோட்டையை ஈக்களால் தகர்த்துவிட முடி யாது என்பதுதான் மிக முக்கியம். எனவே, ஈக்கள் எத்த னைதான் சேர்ந்தாலும், இரும்புக்கோட்டை உறுதியாக நிற்கும்; ஈக்கள் மடிந்து போகும். இதுதான் இன்றைய அரசியல் நிலவரம்.

இந்தப் புதிய சூளுரையை அண்ணாவின் நினைவு நாளில் ஏற்போம்! அண்ணா அடித்தளமிட்ட திராவிட அரசியல், ஆயிரங்காலத்துப் பயிராக என்றைக்கும் பாதுகாக்கப்படும். அதுதான் பண்பாட்டு சிகரம்; அதுதான் பண்பாட்டினுடைய உச்சம். அதனைப் பாதுகாப்பதற்குக் கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்களை ஆயத்தப் படுத்திக் கொண்டிருக்கின்ற காலகட்டம் இது.

எனவேதான், தந்தை பெரியாரின் தலைமகனான அண்ணா அவர்கள், அவருடைய கொள்கையை அரசி யலில் வகுத்தார்; அது தொடர்ந்து வீறுநடை போட்டு, வெற்றி நடை போட்டுக்கொண்டே இருக்கிறது.

தி.மு.க. -  அ.தி.மு.க.வும்

அண்ணா வழியில்தான் பயணிக்கிறதா?

செய்தியாளர்:  இப்பொழுது இருக்கக்கூடிய இரண்டு பெரும் திராவிடக் கட்சிகள் தி.மு.க. -  அ.தி.மு.க.வும் அண்ணா வழியில்தான் திராவிட அரசியலில் ஈடுபட்டுக் கொண்டு வருகிறார்களா?

தமிழர் தலைவர்: முழுக்க முழுக்க என்று சொல்ல முடியாது. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில், அண்ணா அவர்களுக்குப் படம் - பாடமல்ல. கொடியிலே ஒரு சின்னம் - கொள்கையில் அவருடைய கோட்பாட்டைப் பின்பற்றுவதில் இல்லை.

திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா பாதை யில் பயணித்தாலும்கூட, இன்னும் வேகமாக அண் ணாவினுடைய கொள்கைகளான மாநில சுயாட்சி மற்றும் சமூகநீதி, பகுத்தறிவுக் கொள்கைகளை முன் னெடுத்துச் செல்லவேண்டும்; அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது வரவேற்கத்தக்கது. அந்தப் பயணம் இன்னும் வேகமாக நடக்கவேண்டும். திராவிட அரசியலைப் புறந்தள்ள யாராலும் முடியாது.

- இவ்வாறு செய்தியாளர்களுக்கு இன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.
- விடுதலை நாளேடு,3.2.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக