திங்கள், 24 ஜூலை, 2017

பச்சைத் தமிழர் காமராசர் பிறந்த நாள்

சமூக நீதியாளர்கள் ஒன்றிணைந்து போராட உறுதி ஏற்போம்! கழகத் தலைவர் அறிக்கை

பச்சைத் தமிழர், கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாளில் சமூகநீதி, மதச் சார்பின்மைக்கு எதிரான சக்திகளை முறியடிக்க ஒன்றிணைவோம் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

'பச்சைத் தமிழர் - கல்வி வள்ளல் - தமிழ்நாட்டின் ரட்சகர்' என்றெல்லாம் நம் தந்தை பெரியார் அவர்களால் பாராட்டப் பெற்ற, மேனாள் தமிழ்நாடு முதல் அமைச்சரும், மேனாள் அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்த - எளிமையும், இனிமையும் இணைந்து பதவிக்குப் பெருமை சேர்த்த பெம்மான் காமராசரின் 115ஆம் பிறந்த நாள் இன்று!

குலக் கல்வியைக் குழி தோண்டிப் புதைத்து, 'தகுதி, திறமை' என்ற பொய்த் திரையைக் கிழித்து ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் கல்வி நீரோடை நாடெல்லாம் பாயும் வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தினார் காமராசர்!

பார்ப்பனர்கள் 'அய்யோ கதர்ச் சட்டைக்குள் ஓர் கறுப்புச் சட்டையா?'  என்று ஓலமிட்டு, ஓங்காரமாக ஒப்பாரி வைத்தழுதனர்!
காமராசர் ஆட்சியின் சிறப்பு சமூகநீதி, மதச் சார்பின்மை, சோஷியலிசம், சுயமரியாதை - இவைகளின் காவல் அரணாக அவர் ஆட்சியும், தலைமையும் இருந்தது!

இன்று ஒரு விசித்திரம் என்ன தெரியுமா? எப்படி காலங்காலமாக டாக்டர் அம்பேத்கரை வெறுத்து ஒதுக்கி, பிறகு இப்போது அம்பேத்கரை தங்கள் முகமூடியாக்கிக் கொள்கிறார்களோ, அதே போல் காமராசரை புதுடில்லியில் பட்டப் பகலில் அவரது  வீட்டிற்குத் தீவைத்துக் கொல்ல முயன்ற அதே ஆர்.எஸ்.எஸ். பாரதீய ஜனதா என்ற பார்ப்பனியப் பாதுகாப்பு அமைப்பு - காமராசர் முகமூடியையும் அணிந்து வரத் துவங்கி விட்டது. (ஸிஷிஷி). ஏடுகளில் காமராசரை சிலாகித்து எழுதி, தங்கள் வயப்படுத்திட 'அணைத்து அழிக்கும்' அபார வேலையில் ஈடுபட்டுள்ளனர்!

டாக்டர் அம்பேத்கரைப் பின்பற்றுவோர் இந்தக் கண்ணி வெடியை அடையாளம் காணுவதும், அதைத் தோண்டி எடுத்துத் தூக்கி எறிவதும் மிகவும் முக்கியமான கட்சிப் பாதுகாப்பு பணியாகும்!

காமராசரையும் வயப்படுத்த முயற்சி!

காமராசரையும் ஏதோ தங்கள் அமைப்பைச் சார்ந்தவர்போல இளைய தலைமுறையை ஏமாற்றிட, வாக்கு வங்கி சூழ்ச்சிப் பொறியினைப் பயன்படுத்துகின்றனர்!

திருவள்ளுவர் முகமூடி, ராஜேந்திர சோழன் முகமூடி - இப்படியெல்லாம் கூட அடுக்கடுக்காக வைத்து, மோடி வித்தைகளைக் காட்டுகின்றனர்.

ராஜாஜி ஆட்சியை அமைப்போம் என்று ஏன் சொல்ல முடியவில்லை?

திடீரென பிரதமர் மோடி 'தமிழ் சிறந்த மொழி' என்று புகழ்வார். அடுத்து தமிழ் செம்மொழி என்று கலைஞரால் அரும் பாடுபட்டு உருவான அய்க்கிய முற்போக்கு கூட்டணி (ஹிறிகி) அரசின் சாதனையை அறவே ஒழித்து, பத்தோடு பதினொன்றாக்கி, அதன் தனித் தன்மையை, வளர்ச்சியை அழிக்க ஆழமாகக் குழிபறிக்கப் பார்க்கின்றனர். இவை எல்லாம் வித்தைகள்! இதே வரிசையில் காமராசரையும் 'கபளீகரம் செய்ய'த் திட்டமிட்டு புகழ்ந்து எழுதுவது ஆழ்ந்த உள்நோக்கத்துடன் கூடியது என்பதை பெரியார் மண் புரிந்தே இருக்கும். அவ்வளவு எளிதில் தமிழன் ஏமாற மாட்டான் - காமராசரின் தொண்டர்களும்கூட!

நியாயமாக இவர்கள் ராஜாஜியின் ஆட்சி அமைப்போம் என்று தானே சொல்ல வேண்டும்? ஏன் அவர்களால் அப்படி சொல்ல முடியவில்லை? காரணம் இது தந்தை பெரியார் மண் - காமராசர் ஆண்ட மண் - அண்ணா ஆண்ட மண் - கலைஞர் ஆண்ட மண்! புரிகிறதா?

'தகுதி', 'திறமை' மோசடியை விளக்கிய காமராசர் எங்கே, நீட் தேர்வு, சமஸ்கிருதம் திணிப்பு செய்யும் இவர்கள் எங்கே?
சமூக நீதியாளர்கள் ஒன்றிணைய வேண்டும்

பலிக்காது -  இவர்கள் சூழ்ச்சிகள்! இந்நாளில் சூளுரையை ஏற்று,  அத்துணை சமூக நீதியாளர்களும், மதச் சார்பின்மையில் மகத்தான நம்பிக்கை வைத்திருக்கும் மக்களாட்சி மாண்பினர்  அனைவரும் அணி திரள வேண்டிய அரிய தருணம் இது என்று கூறி  உறுதி ஏற்போம்! 

சென்னை      தலைவர்
15-7-2017       திராவிடர் கழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக