தனது 65 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சென்னை பெரியார் திடலுக்கு வருகை புரிந்தபொழுது, அவருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பொன்னாடை அணிவித்து, தமது வாழ்த்துகளைத் தெரிவித்து இயக்க நூல்களை வழங்கினார். உடன் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் உள்ளனர் (சென்னை, 1.3.2017)
சென்னை, மார்ச் 1 சென்னை பெரியார் திடலில் இன்று (1.3.2017) காலை திமுக செயல் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் 65 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி, தந்தை பெரியார் நினைவிடத்தில் மரி யாதை செலுத்தினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அவரை வரவேற்று பயனாடை அணிவித்து, இயக்க வெளி யீடுகளை வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
அதன்பின்னர், பெரியார் திடலில் செய்தியாளர்களை தமிழர் தலைவர் சந்தித்தார்.
செய்தியாளர்: இன்று திமுக செயல் தலைவர் வந்து தங்களை சந்தித்து வாழ்த்து பெற்றிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: திராவிட முன் னேற்றக் கழகத்தினுடைய செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான அன்பிற்குரிய சகோதரர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுடைய 65 ஆம் ஆண்டு ஆண்டு பிறந்தநாள் விழாவாகிய இன்று அவர் தந்தை பெரியார் அவர் களுடைய நினைவிடத்துக்கு வந்து, அவர்களுடைய வழமைபோல், மரி யாதை செலுத்தினார்கள்.
தந்தை பெரியார் அவர்கள், பேரறிஞர் அண்ணா, அவர்களையொட்டி கலைஞர் அவர்களுடைய பணி இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக இன்றைக்கு திராவிடர் இயக்கத்திலே சுமந்துகொண்டு அரிய பொறுப்பை ஏற்றிருக்கக்கூடியவர், கடும் உழைப்பாளியான, எதிர்நீச்சல் அடித்துக்கொண்டிருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.
அவர்களுடைய அரசியல் பயணம் பல்வேறு அறைகூவல்களை இப்போது சந்தித்துக்கொண்டிருக்கிற காலகட்டம். இதிலே அவர்களோடு தோளோடு தோள் நின்று தாய்க்கழகம் என்றென்றைக்கும் சிறப்பாக அவர் வெற்றிவாகை சூட வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
செய்தியாளர்: தொடர்ந்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்த சூழ்நிலையில் தங்களிடம் வந்து வாழ்த்து பெற்றுள்ளார். தாங்கள் அதிமுக பொதுச்செயலாளரை ஆதரித்து வந்துள்ள இந்த சூழ்நிலையிலே, அதே மாதிரி, சட்டமன்ற நிகழ்வுகள்பற்றி ஒரு விமர்சனத்தை வைத்திருக்கிற இந்த சூழ்நிலையிலே அவருடைய இந்த சந்திப்பு முரண்பாடாக இருக்குமா? அதை எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: முதலில் உங்கள் கேள்வியில்சிறுதவறு.அதைசரிசெய்து கொள்ள வேண்டும். அதிமுக பொதுச் செயலாளரை ஆதரிக்கவில்லை. பாஜக வுக்கும், அதற்கும் இருந்த பிரச்சினையிலே, அந்த இயக்கம் உடைபடக்கூடாது, உடைப் பதற்காக ஆர்.எஸ்.எஸ். பிஜேபி முயற்சி செய்கிறார்கள். எச்சரிக்கையாக இருங்கள் என்று தாய்க்கழகம் அவர்களுக்கு உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுத்தது. எங்கள் எச்சரிக்கை உண்மை என்றும் நாட்டுக்குப் புரிந்துவிட்டது. அந்த காலக்கட்டத்தைத் தவிர, வேறொன்றுமில்லை.
இரண்டாவது, திராவிடர் கழகம் என்பது திராவிடர் இயக்கங்களுக்கு தாய்க்கழகம். அந்த வகையிலே திராவிடர் இயக்கத்தைக் காப்பாற்றுவதும், கழகங்களே இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று உறுப்பினர்களே இல்லாத கட்சிகள் சொல் லிக் கொண்டிருப்பதும் மிக வேடிக்கையான ஒன்று.
கொள்கை மாறுபாடுகள் இல்லை
சில நேரங்களில் கருத்து மாறுபாடுகள் ஏற்படுவது தவிர்க்கப்பட முடியாததே! அது கொள்கை மாறுபாடுகள் அல்ல. கருத்து மாறுபாடுகள். ஒரு குடும்பத்திலே எப்படிப்பட்டவர்கள், எப்போது, எந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என் பதிலே மாறுபட்ட கருத்துகள் வருவதும், மற்றவர்கள் இன்னொரு அணுகுமுறையைக் கையாள்வதும், கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதும் இயல்பு. ஆகவே, எங்களைப் பொறுத்தவரையிலே, என்றென்றைக்கும் திராவிடர் கழகத்துக்கும், திராவிட முன் னேற்ற கழகத்துக்கும் இடையே இருப்பது தோழமை அல்ல, கூட்டணி அல்ல, உறவு! உறவை யாராலும் பிரிக்க முடியாது.
இவ்வாறு தமிழர் தலைவர்
ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.
சென்னை, மார்ச் 1 திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் 65ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி இன்று காலை பெரியார் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்தபோது, அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கி வாழ்த்து தெரிவித்து சிறப்பித்தார்.
திமுக செயல் தலைவரும், தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் 65ஆம் ஆண்டு பிறந்தநாளான இன்று (1.3.2017) தி.மு.கழகத்தின் சார்பில் இளைஞர் எழுச்சிநாளாக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி கொண்டா டப்படுகிறது.
பெரியார் திடலுக்கு வருகை
தமது பிறந்தநாளையொட்டி மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 7.45 மணியளவில் பெரியார் திடலுக்கு வருகை தந்தார். அவரை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வரவேற்று பிறந்தநாள் வாழ்த்து
தெரிவித்தார்.
அய்யா - அம்மா நினைவிடங்களில் மரியாதை
இதையடுத்து தமிழர் தலைவருடன் தளபதி மு.க.ஸ்டாலின் இணைந்து சென்று தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இயக்க நூல்கள் வழங்கி வாழ்த்து
பின்னர் பெரியார் நினைவிடம் நுழைவாயில் இருக்கும் வரலாற்று கல்வெட்டு இடத்தில் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர்தலைவர் பொன்னாடை அணிவித்து திராவிட இயக்க நூல்களை வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞர் அணித் தலைவர் த.வீரசேகரன், கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக் குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், அரும்பாக்கம் தாமோதரன், வழக்குரைஞர் சென்னியப்பன், மற்றும் கழகத் தோழர்கள், தோழியர்கள் பங்கேற்றனர்.
பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள்
சென்னை பெரியார் திடலில் நடிக வேள் எம்.ஆர்.இராதா மன்றம் முன்பு பிறந்த நாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்தநாள் கேக்கை மு.க.ஸ்டாலின் அவர்கள் வெட்டி தோழர்களுக்கு வழங்கினார். பின்னர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள், மற்றும் சலவை இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கினார். இந்நல திட்ட உதவிகள் மற்றும் சிற்றுண்டி ஏற்பாடுகளை சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.சேகர்பாபு மற்றும் 50ஆவது வட்ட பகுதி நிர்வாகிகள் எழும்பூர் ஏகப்பன், பெரியமேடு ஜெ.கிருஷ்ணமூர்த்தி, தேவநிதி ஆகியோர் செய்திருந்தனர்.
பங்கேற்றோர்
திமுக செயல் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் பெரியார் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்திய போது அவருடன் சட்ட மன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி, க.பொன்முடி, எ.வ.வேலு, அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியம், சுதர்சனம், ராணிப்பேட்டை காந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் ப.ரங்க நாதன், கே.எஸ்.ரவிச்சந்திரன், டி.ஆர்.பி.ராஜா, திமுக தீர்மானக்குழு உறுப்பினர் குழந்தை தமிழரசன், சின்ன கிருஷ்ணன் மற்றும் திரளான தி.மு.கழக தோழர்கள், தோழியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.
-விடுதலை,1.3.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக