திங்கள், 13 மார்ச், 2017

மனுதர்ம எரிப்புப்போராட்டத்தில் கலந்துகொண்ட மகளிரணி, மகளிர் பாசறைத் தோழர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டுசென்னை, மார்ச் 12- அன்னை மணியம்மையார் 98 ஆம் பிறந்த நாளான நேற்று (10.3.2017) சென்னை எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலை அருகில் திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறையின் சார்பில் மனுதர்மம் எரிப்புப் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

திருவாரூரில் 17.12.2016 அன்று நடைபெற்ற திராவிடர் மகளிர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, அன்னை மணியம்மையார் பிறந்த நாளான நேற்று (10.3.2017) மனுதர்மம் எரிப்புப்போராட்டம் நடைபெற்றது.

சென்னை மண்டல மகளிரணி, மகளிர் பாசறையின் சார்பில் மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், ஆவடி மற்றும் கும்மிடிப்பூண்டி கழக மாவட்டங்களிலிருந்து ஏராளமானவர்கள் மனுதர்ம எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்று கைதானார்கள்.

சென்னை எழும்பூர் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டு காவல்துறை வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட கழக மகளிர் தோழர்கள் புதுப்பேட்டை சமூக நலக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனை வரும் மாலை 5.30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டார்கள்.

போராட்ட வீராங்கனைகளுக்கு

தமிழர் தலைவர் பாராட்டு, பரிசளிப்பு

விடுதலையான கழக மகளிரணி, மகளிர் தோழர்கள் அனைவரையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் திடலில் நேரில் சந்தித்து பாராட்டினைத் தெரிவித்துக் கொண்டார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் உடனிருந்தார்கள். தமிழர் தலைவருடன் கைதான கழக மகளிரணி, மகளிர் பாசறையினர் குழுப் படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர். மேலும், அனைவருக்கும் திருவாரூர் மாநாட்டுத் தீர்மானங் களைக் கொண்ட “திருவாரூர் தீ பரவட்டும்“ புத்தகத்தைப் பரிசாக அளித்தார்.

அன்னை மணியம்மையார் பிறந்த நாளில்

மனுதர்ம எரிப்புப் போராட்டம்

தமிழர் தலைவர் பாராட்டுரையில் குறிப்பிடும்போது,

அம்மா தலைமை வகித்த இந்த இயக்கத்தில் அவர் பிறந்த நாளில் நடைபெற்ற மனுதர்ம எரிப்புப்போராட்டத்தில் கழகக் குடும்பங்களிலிருந்து ஏராளமான அளவில் பெண்கள் கலந்து கொண்டுள்ளீர்கள். மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இதேபோன்று இனி அறிவிக்கப்படுகின்ற  போராட்டங்களிலும் அதிக அளவில் பெண்கள் பங்கேற்றிட வேண்டும். மகளிரணி, மகளிர் பாசறையின் கலந்துரையாடல் கூட்டம் கூட்டப்பட வேண்டும். (16.3.2017 என தேதியும் அறிவிக்கப்பட்டது)

அதன்பின்னர் மாநில அளவிலான மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் (ஏப்ரல் முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில்) நடைபெற வேண்டும்.

மகளிரணி, மகளிர் பாசறை தோழர்களின் பங்களிப்பு எல்லா நிகழ்ச்சிகளிலும் அதிக அளவில் இருக்க வேண்டும். மற்ற அமைப்புகளுக்கு வழிகாட்டக்கூடிய அளவில் கழக மகளிரணி, மகளிர் பாசறையிலிருந்து ஏராளமானவர்கள் தொடர்ச்சியாக கலந்துகொள்ள வேண்டும்.

அன்னை மணியம்மையார்

நினைவு நாளில் கலந்துரையாடல்

எனவே, அடிக்கடி இந்த அமைப்பு பலப்படுத்தப்பட வேண்டும். இதுமாதிரி பல மடங்கு மகளிர் தோழர்கள் 16ஆம் தேதி அன்று வரவேண்டும். மதவாதிகளைப் பார்த்தீர்களா னால், சர்ச்சுகளுக்கு, கோயிலுக்கு போவது, அதேமாதிரி கேளிக்கைகளுக்கு சினிமாவுக்குப்போவது என இதெல்லாம் பார்த்தீர்களானால், குடும்பம் குடும்பமாக போகிறார்கள். அதுமாதிரி, நம்முடைய தோழர்களும் பெண்களை வீட்டில் விட்டுவிட்டு வரக்கூடாது. அன்னை மணியம்மையார் நினைவு நாளன்று (16.3.2017) மகளிர் கலந்துரையாடலுக்கு எல்லோரும் வரவேண்டும். அன்றைக்கு தேவைப்படும் வசதிகளுக்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். மனம் திறந்து நீங்கள்தான் அதிகமாக பேச வேண்டும். கருத்துகளைச் சொல்ல வேண்டும்.

இதை பலப்படுத்துவது எப்படி என்று சொல்லி, ஒவ்வொரு பகுதிகளிலும் மகளிரணி அமைப்பு இருக்க வேண்டும். சென்னை மண்டலம் என்றால், சென்னை மண்டலத்தில் எத்துணை கழக அமைப்புகள் இருக்கின்றன? அதில் மகளிரணி அமைப்பு பலமான அமைப்பாக இருக்கவேண்டும். அதற்குப்பிறகுதான் மற்ற அமைப்புகள் என்று இருக்க வேண்டும். ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல, நாங்கள் ஆண்களைவிட அதிகமாக இருக்கிறோம், அதிக மாக செயல்படுகிறோம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வாய்ப்புகளை உண்டாக்க வேண்டும்.

பெண்களே அனைத்திலும் முன்வரவேண்டும்

அதுமட்டுமல்ல, அடிக்கடி மகளிரணியே முன்வரவேண் டும். நாம் தனியே மகளிர் பொறியியல் கல்லூரி நடத்துகிறோம். அதில் கிடைத்த அனுபவம் என்னவென்றால், பேராசிரியர்கள் உள்பட எந்த ஆண்கள் குறுக்கிட மாட்டோம். கூட்டம் ஏற் பாடு செய்வதிலிருந்து எல்லாமே பெண்களேதான் செய்வார் கள். புதுமை தென்றல் என்றால், வீரமர்த்தினி அவருடைய பொறுப்பிலேயே எல்லாவற்றையும் செய்கிறார். அதுபோல், மகளிர் பொறுப்புகளை எடுத்துக்கொண்டு, அவரவர்களுக்கும் வாய்ப்புகளைக் கொடுத்துவிட்டு பின்னால்தான் ஆண்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு அந்த வாய்ப்புகள் வரும்.

ஆகவே, நல்ல அளவுக்கு பார்த்துக்கொள்ளுங்கள். இளைஞரணியிலே பேசிய கருத்துகள் பத்திரிகையில் வந் திருக்கிறது. நீங்கள் எல்லோருமே பார்த்திருக்கலாம்.  மகளிர் தோழர்களுக்கு ஒரு தனி வேண்டுகோள், 16ஆம் தேதி அன்றைக்கு விரிவாகப் பேசிக்கொள்ளலாம்.

உங்கள் உடல் நலனைக் கட்டாயமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும். உடல் நலத்தில் அலட்சியப்படுத்தாமல், பேணிக் காக்க வேண்டும். அதுதான் மிக முக்கியம். எந்த வயதினராக இருந்தாலும், உடல் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

உடல் பரிசோதனையைப் பொருத்தவரையிலே செல வாகும் என்று பார்க்க வேண்டாம். பெரியார் மருத்துவமனை, பெரியார் மருத்துவ அணியை ஒருங்கிணைத்து, சிறப்பாக எல்லாமே செய்யலாம். மகளிர் உள்ள உறுதியோடு, நல்ல உடல் வளத்தோடு, உடல் நலத்தோடு இருக்க வேண்டும்.

இளம்மகளிரைக் கொண்ட

சமூகக் காப்பு அணிப் பயிற்சி

சமூகக்காப்பு அணி பயிற்சி நடத்தவேண்டும் எனும்போது, இளம் மகளிரைக்கொண்ட சமூக காப்பு அணியை ஓர் இராணுவ அணிவகுப்புமாதிரி நடத்துவதற்கு முன்வந்து, அதற்கு வேண்டிய பயிற்சிகளைக்கொடுக்கக் கூடிய அள வுக்கு வரவேண்டும்.

ஆகவே, ஆணைச்சார்ந்துதான் ஒரு பெண் இருக்க வேண்டும் என்கிற நிலை இருக்கிறது பாருங்கள், அந்த நிலையை அறவே மாற்றவேண்டும் என்பதுதான் தந்தை பெரியாருடைய அடிப்படைத் தத்துவம். அந்தத் தத்துவத்தை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்குத் துணிச்சல் வரவேண்டும். தெளிவு வரவேண்டும். முதலில் வரும்போது சாதாரணமாக நினைக்கலாம். நிறைய படியுங்கள். விடுத லையை படியுங்கள்.

பாராட்டுக்குரிய தோழர்கள்

உமாவும், இன்பக்கனியும்

மகளிரணித் தோழர்கள் உமாவும், இன்பக்கனியும் மாநிலம் தழுவிய அளவில் சுற்றுப்பயணம் செய்தார்கள். அதில் அவர்களுக்கு கிடைத்த அனுபவங்களை விடுதலை யில் எழுதினார்கள். நிரம்ப சிறப்பாக இருந்தது. எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அந்த சுற்றுப்பயண அனுபவம் என்பது தோழர் இன்பக்கனியின் அனுபவங்களில் முற்றிலும் மாறுபட்டிருந்தது. தோழர் உமாவைப் பொருத்தவரையில் திருவொற்றியூர் உள்ளிட்ட சென்னையில் மட்டும்தான் குறுகிய வட்டத்தில் பணிசெய்த அனுபவம் அவர்களுக்கு இருந்தது. இன்றைக்கு எல்லா இடங்களுக்கும் சென்று வந்துள்ளார்கள். நம்முடைய தலைமை செயற்குழு உறுப்பினர் பார்வதி போன்றவர்கள்தான் இதுபோல் செல்வார்கள். இப்போது அவர்களுடைய உடல் நலனைக்கருதி, அவர்கள் இப்போது போக முடியாத நிலை யில், வயதானவர்கள் மதியுரைஞர்களாக, வழிகாட்டக்கூடிய வர்களாக மூத்தவர்கள் அனுபவம் உள்ளவர்கள் நமக்குத் தேவை. அவர்களை எந்த அளவுக்குப் பயன்படுத்திக்கொள்ள லாமோ அந்த அளவுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆனால், செயல்படுத்துவதற்கு நல்ல துடிப்புள்ள தோழர்கள் முன்வரும்போது அதை ரொம்ப அழகாக எல்லா வற்றுக்கும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மகளிர் அமைப்பு என்றும் பலமான அமைப்பாக வேண்டும்

16ஆம் தேதி மறுபடியும் சந்திப்போம். இந்த அமைப்பு பலமாக இருக்கவேண்டும். திராவிடர் கழகத்தின் மகளிரணி என்றால், மற்ற அமைப்புகளும், அரசும் நம்மைக்கண்டு பயப்படக்கூடிய அளவுக்கு கட்டுப்பாடு மிகுந்த அமைப்பாக திகழ்ந்திட வேண்டும்.

இன்றைய போராட்டத்தில் ஒரு சிறு அசம்பாவிதம்கூட நடக்காத வகையில் மிகப்பெரிய அளவுக்கு எல்லோரும் ஒத் துழைத்தீர்கள். ஆகவே, வாய்ப்புக்குறைவு (மிஸீநீஷீஸீஸ்வீஸீவீமீஸீநீமீ) ஏதேனும் இருந்திருந்தால் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

எதிர்பார்த்த அளவைவிட குறைவாக வந்திருந்ததாக கவிஞர் கூறினார். என்னைப்பொறுத்தவரையில் நான் அப் படி நினைக்கவில்லை. சென்னையிலே சென்னை மண்ட லத்தில் இவ்வளவு பேர் வந்தார்கள் என்பது பெரிய விஷயம். அதற்கு முன்பாக தந்தைபெரியார் காலத்தில் ரொம்ப காலத்துக்கு முன்பாக, நான் பொறுப்பேற்று விடுதலை அலு வலகத்துக்கு வந்தபோது,  உங்களுக்கெல்லாம் ஆச்சர்யமாக இருக்கும். விடுதலை அலுவலக வராண்டாவிலேயே சென்னை மாவட்டக் கமிட்டிக் கூட்டத்தை முடித்துவிடுவோம். அந்த அளவில் தந்தைபெரியாரும் உட்கார்ந்திருப்பார்கள்.

மகளிரணி ஆரம்பிக்கும்போதுகூட, கொஞ்சம் பேர் எங்களை ஊக்கப்படுத்தவில்லை. அன்னை மணியம்மை யாரும்கூட மகளிரணி என்று ஆரம்பிக்கிறோமே, அதில் சின்ன கோளாறு வந்தால்கூட கட்சிக்கே கெட்ட பெயர் வந்து விடுமே என்றார். தொடக்கத்தில் சில இடங்களில் பிரச்சினை கள் ஏற்பட்டன. அதுகுறித்து கவலைப்பட வேண்டாம். போகப்போக சரியாகிவிடும் என்றோம்.

தந்தைபெரியார் கருத்துகளை

தொடர்ந்து படியுங்கள்

இப்போது பார்த்தீர்களானால் எந்தப்பிரச்சினையும் இல்லை. நல்ல துணிச்சலுடன், நல்ல கட்டுப்பாடுடன் இங்கு வந்துள்ள நீங்கள் எல்லாதுறைகளிலும் வழிகாட்டுபவர்களாக இருக்க வேண்டும். வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். தந்தை பெரியாருடைய புத்தகங்களைப் படியுங்கள். பெண்ணுரிமை, தந்தைபெரியாருடைய கருத்துகளைப் படியுங்கள். இயக்க வெளியீடுகளை, விடுதலையை, உண்மையைப் படியுங்கள்.

எந்தெந்த துறைகளில் உங்களுக்கு ஆற்றல் இருக்கிறதோ, அந்த ஆற்றலை வெளியே கொண்டு வரவேண்டும் என்று சொல்லி, இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட உங்கள் எல்லோருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரி வித்துக்கொள்கிறேன்.

உங்களின் உடல் நலனைப்பார்த்துக்கொள்ளுங்கள். உள்ள உறுதியில் உங்களிடம் தடுமாற்றமே கிடையாது.  இரண் டாவது வயது இடைவெளியும் இங்கே கிடையாது. வயது என்பது ஆண்டுதோறும் கூட்டிக்கொண்டு போகும். ஆனா லும், நாம் எல்லோரும் ஒரு குடும்பம். இந்தக் குடும்பத்திலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. அளவுகடந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் நான்.

மகளிர் மட்டுமே பங்கேற்ற தனிப் போராட்டம்

இது ஒரு தனிப்போராட்டம். அதனால்தான் ஆண்கள் யாரும் பங்கேற்கவேண்டாம். மகளிரே செய்யட்டும் என் றோம். காவல்துறை மேலிடம் வரைக்கும் தகவல் போகும். பெண்களே வந்தார்கள். பெண்களே நடத்தினார்கள் என்று. ஏனென்றால், அன்னை மணியம்மையார் தலைமை தாங்கிய இயக்கம்.  அவருடைய பிறந்த நாளிலே இன்றைக்கு இப்படி நடந்ததுதான் ரொம்ப பொருத்தமானது என்று சொல்லி, இனி நாம் நடத்தும் போராட்டங்களில் மகளிர் முன்நின்று வழிகாட்டுவார்கள், ஒரு குழுவாக வழிகாட்டியிருக்கிறீர்கள். அந்த வழிமுறை இன்னும் மேலும் மேலும் அகலமாகும். மேலும் மேலும் அது விரிவடையும். மேலும் மேலும் அது பெருகும். மேலும் மேலும் அது பலமடையும் என்று கூறி வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேசினார்.

கலந்துகொண்டவர்கள்

சென்னை மண்டல மகளிரணி செயலாளர் செ.உமா, வடசென்னை மாவட்ட மகளிரணி செயலாளர் பொறியாளர் ச.இ.இன்பக்கனி, கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞான சேகரன், சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், கும் மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் த.ஆனந்தன் உள்ளிட்ட கழகப்பொறுப்பாளர்கள் பலரும் உடனிருந்தார்கள்.

முடிவில் தமிழர் தலைவர் ஆசிரியருடன் பெருவிருப்பத் துடன் போராட்ட வீராங்கனைகள் குழுவாக ஒளிப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

-விடுதலை,12.3.17
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக