வியாழன், 23 பிப்ரவரி, 2017

சிங்காரவேலர் பெயரில் அறிவியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட வேண்டும்

தந்தை பெரியார், சிங்காரவேலர் சிந்தனைகள் கல்லூரிகளில் பாடமாக்கப்படவேண்டும்
சிங்காரவேலர் பெயரில் அறிவியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட வேண்டும்
சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் கருத்துகளை விளக்கி
சென்னை பல்கலைக்கழக மாணவர்களிடையே தமிழர் தலைவர் சிறப்புப் பொழிவு
சென்னை, பிப்.23 சென்னைப் பல்லைக்கழகத்தின் மாணவர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் தந்தைபெரியாருடன் இணைந்து ஆற்றிய பல்வேறு பணிகள் குறித்து ஆதார பூர்வமாக எடுத்துரைத்தார்.
சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மெரினா அரங்கில் சென்னை பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறையும், சிங்காரவேலர் சிந்தனைக் கழக அறக்கட்டளை யும் இணைந்து நடத்திய சிங்காரவேலர் அறக்கட்டளை பொழிவு---9 கூட்டம் நடைபெற்றது.
சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் தலைமை யில் புலவர் பா.வீரமணி வரவேற்றார்.
புலவர் பா.வீரமணி வரவேற்புரையில், தந்தை பெரியார் தொடங்கிய இந்தி எதிர்ப்புப்போரில் 1938ஆம் ஆண்டில், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் உடல்நலன் குன்றி  பங்கேற்க முடியாத நிலையில் குடி அரசு இதழில் அவர் எழுதிய கட்டுரையை எடுத்துக் காட்டிப் பேசினார். கவிஞர்கள் தமிழமுதன், நாவை.அருள், கவியழகன், ராசை.முத்து கவியரங்கக் கவிதை அளித்தார்கள். கவிரங்கத்தில் கவிதைகள் வாசித்தளித்த கவிஞர் களைப் பாராட்டி புத்தகங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழங்கினார்கள்.
சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை யின் சார்பிலும், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அறக் கட்டளை நிர்வாகத்தின் சார்பிலும்  பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன், புலவர் பா.வீரமணி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடையை அணி வித்து சிறப்பு செய்தார்கள்.
நூல் வெளியீடு
புலவர் பா.வீரமணி தொகுத்து, சாகித்ய அகாடமி பதிப்பித்துள்ள  Ôசிங்காரவேலர் சிந்தனைக் கட்டுரைகள்Õ நூலை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட்டார். பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் நூலைப் பெற்றுக் கொண்டார்.
ஒப்பிலா மதிவாணன் தலைமையுரை
பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் பேசுகையில், தம்முடைய ஏழாம் வகுப்பிலிருந்தே தந்தை பெரியார் கருத்துகளால் தாம் கவரப்பட்டதையும், தம்முடைய சொந்த ஊரான இரும்புலிக்குறிச்சியில் உள்ள அத்துணை பேரையும் பெயர் சொல்லி குறிப்பிடும் அளவுக்கு தந்தை பெரியாருக்கு அவ்வளவு நெருக்கமான கிராமம் என்றும், கிராமத்தில் நடைபெறும் இன்ப துன்ப நிகழ்வுகள் அனைத்திலும் தந்தை பெரியார் பங்கேற்றார் என்றும், அதிக அளவில் தந்தை பெரியார் பலமுறை வந்த ஊர் இரும்புலிக்குறிச்சி. சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த முத்து.குணசேகரன் ஆற்றிய பணிகளை தொடர்வதாகவும், தாம் ஒரு பேரா சிரியராக, தமிழ்த்துறைக்குத் தலைவராக உயர்ந்ததற்கு தந்தை பெரியார்தான் காரணம் என்றும் நன்றி பெரு மிதத்துடன் குறிப்பிட்டார். இரும்புலிக்குறிச்சியில் தந்தைபெரியாருக்கு எடைக்கு எடை முந்திரி பருப்பு அளிக்கப்பட்டது. தலைவர்களுக்கு இருக்கவேண்டிய நற்பண்புகள், நம்பிக்கை, நாணயம், ஒழுக்கம் என அனைத்தும் தந்தை பெரியார், சிங்காரவேலரிடம் இருந்தன. சமுதாயத் துறையில் தம்முடைய உடைமை களையெல்லாம் இழந்த சமுதாயத் துறவிகள் தந்தை பெரியாரும், சிங்காரவேலரும் ஆவார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மலேசியாவில் நடைபெற்ற 10ஆவது உலகத்தமிழ¢ மாநாட்டில் பங்கேற்று தமிழ் மொழி எங்கே செல்கிறது? எனும் தலைப்பில் அரியதோர் உரையாற்றினார் என்றும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறந்த பேச்சாளராக, சிறந்த எழுத்தாளராக, தலைவராக மட்டுமல்லாமல், சிறந்த நிர்வாகியாகவும் திகழ்கிறார் என்பதற்கான சான்றாக பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் விளங்குகிறது என்றும், மற்ற பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் பின்பற்றும் அளவுக்கு  முன்னுதாரணமாகத் திகழும் அளவிற்கு பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தை சிறப்பாக நிர்வகித்து வருகிறார் என்றும் குறிப்பிட்டார்.
தமிழர் தலைவர் சிறப்பு பொழிவு
‘தந்தை பெரியாரும், சிங்காரவேலரும்‘ எனும் தலைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்   உரை யாற்றினார். ஒப்பிலா மதிவாணன் குறிப்பிட்டதைப்போல இரும்புலிக்குறிச்சி சுயமரியாதை பாசறையாகத் திகழ்ந்தது.
பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் போன்றவர்கள்  உருவானதற்கு காரணம் தந்தை பெரியார். காரியம் பச்சைத்தமிழர் காமராசர்.
ஞான சூரியன் எழுதிய சிவானந்த சரஸ்வதி, சிங்காரவேலர் என பலரின் கட்டுரைகளையும்  குடிஅரசு இதழில் வெளியிட்ட தந்தைபெரியார், பச்சை அட்டை குடிஅரசு இதழில் பக்கம் பக்கமாக சிங்காரவேலரின் கட்டுரைகளை வெளியிட்டார்.   தந்தை பெரியார், சிங்கார வேலர் கருத்துகளும், சிந்தனைகளும் கல்லூரிகளில் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். சிங்காரவேலர் பெயரில் அறிவியல் பல்கலைக் கழகத்தைத் தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று ஆசிரியர் பேசுகையில் குறிப்பிட்டார்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் பேராசிரியர் மணிகண்டன், திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன், காங்கிரசு கட்சி பலராமன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் பேராசிரியர் மங்களமுருகேசன், தென்சென்னை மாவட்டத்தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, திருவொற்றியூர் கணேசன், அரும்பாக்கம் சா.தாமோதரன், மதுரவாயல் பாலமுரளி, செஞ்சி ந.கதிரவன், சக்திவேல், மகேஸ்வரன், கணேஷ், சிவக்குமார் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள், தமிழறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இலக்கிய ஒளி, சங்கப்பலகை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் பேராசிரியர் ஏகாம்பரம் நன்றி கூறினார்.
-விடுதலை,23.2.17
-விடுதலை,22.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக