திங்கள், 18 ஏப்ரல், 2016

அர்ச்சகர் உரிமைகோரி மறியல்! கைது!!-18.4.16




ஆயிரக்கணக்கில்கருஞ்சட்டைக் குடும்பத்தார்கைது!கைது!!
இன இழிவு ஒழிப்புப் போரில் ஒரு மைல் கல்!
சென்னை, ஏப்.18_  ஜாதி _ தீண்டாமை ஒழிப்புப் போராட்டமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைகோரி நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்காக திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி 50ஆம் முறையாகக் கைது செய்யப் பட்டார்.

திருச்சி சிறுகனூர் பெரியார் உலகம் திடலில் நடைபெற்ற திராவிடர் கழகத்தின் மாநில மாநாடு, ஜாதி, தீண்டாமை  ஒழிப்பு மாநாட்டின் முக்கியத் தீர்மான மாக அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கோரும் மறியல் போராட்ட அறிவிப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி,  இன்று (18.4.2016) தமிழகமெங்கும் மாநில அரசின்கீழ் இயங்கும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக கழகத்தின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. சென்னை உத்தமர் காந்தி சாலையில் உள்ள இந்து அறநிலையத் துறை அலுவலகம் முன்பாக மறியல் போராட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடை பெற்ற மறியல் போராட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் இரா.அதியமான், பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் தலைவர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், திராவிட வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் மங்கள முருகேசன், மேனாள் மேயர் சா.கணேசன், கயல் தினகரன், கவிஞர் கண்மதியன் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் கி.சரவணன், மாவட்டச் செயலாளர் செ.மா.ரமேஷ், மாநிலப் பொருளாளர் அரி, ஒன்றிய செயலாளர் பொன்.முருகன், செல்வம், பேரூர் நிர்வாகிகள் பாபு, திருமலை, விஜய் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், வட மாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் வெ.ஞான சேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, மாநில மாணவரணிச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சென்னை மண்டலத் தலைவர்  தி.இரா.இரத்தினசாமி, மண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் பெ.செல்வராஜ், மாவட்டத் தலைவர்கள் தென்சென்னை  இரா.வில்வ நாதன், தாம்பரம் ப.முத்தையன், ஆவடி  பா.தென்னரசு, கும்மிடிபூண்டி செ.உதயக்குமார், மாவட்டச் செயலாளர்கள் வடசென்னை தே.ஒளிவண்ணன்,      தென்சென்னை செ.ர.பார்த்தசாரதி, தாம்பரம் கு.ஆறுமுகம், ஆவடி இல.குப்புராசு, கும்மிடிபூண்டி த.ஆனந்தன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பொழிசை கண்ணன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் நா.பார்த்திபன், சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் ஆ.இர.சிவசாமி, மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணியம்மை, மண்டல மகளிரணிச் செயலாளர் உமா செல்வராஜ், வடசென்னை மகளிரணி தலைவர் கு.தங்கமணி, வடசென்னை மகளிரணி செயலாளர் இ.ச.இன்பக்கனி, தென்சென்னை மகளிரணி அமைப்பாளர் செ.கனகா, ஆவடி மகளிரணி அமைப்பாளர் இராணி ரகுபதி, கும்மிடிபூண்டி மகளிரணி செயலாளர் செல்வி ஆகியோர் பங்கேற்றனர்.

திராவிடர் கழகத்தின் சார்பில் தென்சென்னை, வடசென்னை, தாம்பரம், ஆவடி, கும்மிடிப்பூண்டி ஆகிய கழக மாவட்டங்களின் சார்பில் இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, தொழிலாளரணி உள்ளிட்ட ஏராளமானவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானார்கள்.
பெங்களூரு தோழர்கள்

பெங்களூர் தோழர்கள் ஜானகிராமன், முல்லைக்கோ, திராவிடர் கழக வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன்,  வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி,  திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், தலைமைச்செயற்குழு உறுப்பினர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், பெரியார் வீர விளையாட்டுக்குழுத் தலைவர் ப.சுப்பிரமணியன்,  திராவிடர் கழக  பொதுக் குழு உறுப்பினர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், வழக்குரைஞர்கள் ந.விவேகானந்தன், ம.வீ. அருள்மொழி,   திராவிட தொழிலாளர் கழகத்தைச்சேர்ந்த க.வெற்றிவீரன், நா.மதிவாணன், கோ.தங்கமணி, இராமலிங்கம், நாகரத்தினம், தமிழினியன், பகுத்தறிவாளர் கழகம் திவாகர்,  திராவிட இயக்க தமிழர் பேரவை பொறுப்பாளர் மாறன் உள்பட ஏராளமானவர்கள் கைதானார்கள்.

ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் தோழர்கள், தோழியர்களும், திராவிட இயக்க தமிழர் பேரவையின் சார்பிலும், பன்னாட்டு தமிழுறவு மன்றத்தின் சார்பிலும் பலரும் பங்கேற்றுக் கைதானார்கள்.

சென்னை உத்தமர் காந்தி சாலையில் உள்ள இந்து அறநிலையத் துறை அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் பங்கேற்க சென்ற தோழர்கள் முன்னதாகவே குறிப்பிட்ட இடத்தில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். கழகத் தோழர்கள், தோழியர்கள் எழுப்பிய போராட்ட முழக்கங்கள் வானைப்பிளந்தன. தமிழர் தலைவர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெயிலின் கொடுமையால் தொப்பி அணிந்தார்.

சென்னை இதுவரை கண்டிராத மனித உரிமைப் போராட்டமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதை வலியுறுத்தும் போராட்டம் நடைபெற்றுள்ளது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும்  காவல்துறையினர் கைது செய்து வாகனங் களில் அணி அணியாக ஏற்றிச் சென்றனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள சமூக நலக்கூடத்தில் கைது செய்யப்பட்டவர்கள் வைக்கப்பட்டனர். தமிழர் தலைவர் ஆசிரியர் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில் கழகத்தின் பயிற்சி பாசறைக்கான கூட்டமாக சமுதாயக்கூடம் மாறியது. கழகத் தோழர்கள் மத்தியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மிகுந்த மகிழ்வுடன் கலந்துறவாடினார்.





-விடுதலை,18.4.16

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - மறியல்
உச்சநீதிமன்ற தீர்ப்பு சாதகமாக இருந்தும் - முதலமைச்சர் செயல்படுத்த முன்வரவில்லை
இந்தப் போராட்டம் முடிவல்ல - வெற்றியின் முடிவு கிடைக்கும்வரை நம் போராட்டம் தொடரும்! தொடரும்!!
மறியல் போராட்டத்தில் தமிழர் தலைவர் சங்கநாதம்!
சென்னை, ஏப். 18- அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது நிலைநாட்டப்படும்வரை நமது போராட்டம் தொடரும்! தொடரும்!! என்று எக்காளமிட்டார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
18.4.2016 அன்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து அறநிலையத் துறை முன் மறியல் போராட்டம் நடைபெற்றது. இம்மறியல் போராட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  அவர்கள்  உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
அன்பார்ந்த தோழர்களே, தோழியர்களே, போராட்ட வீரர்களே!
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும். அதன்மூலமாக ஜாதி, தீண்டாமை அழிக்கப்பட்டாகவேண்டும் என்பதை வலியுறுத்தி, அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய அந்த அறப்போராட்டத்தில் - இன்றைக்குக் கடைசி கட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம் என்பது மிகவும் உற்சாகத்திற்குரிய ஒன்றாகும்.
இந்தப் போராட்டத்தினை திருச்சி சிறுகனூர் பெரி யார் உலகம் திடலில் நடைபெற்ற மாநாட்டில் எடுத்த முடிவிற் கேற்ப, திராவிடர் கழகம் மட்டுமல்ல, நம்முடைய கருத்தினை ஏற்று இருக்கக்கூடிய ஒத்த லட்சியத்தில் ஒருங்கிணைந்து போராடவிருக்கக்கூடிய பல தோழர்கள் இங்கே வந்திருக் கிறார்கள். அவர்களுக்கு நன்றி கூறி, வரவேற்று, அவர்களை சுருக்கமாக சில கருத்துகளைக் கூறுமாறு அன்போடு இங்கு அழைக்கின்றோம் என்று சொல்லி, அவர்கள் உரையாற்றிய பின் தம்முடைய உரையைத் தொடர்ந்தார் தமிழர் தலைவர் அவர்கள்.
அருமை போராட்டத் தோழர்களே, தோழமைக் கட்சி நண்பர்களே, ஊடகவியலாளர்களே, காவல்துறை அதி காரிகளே உங்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும். அதன்மூலமாக ஜாதி - தீண்டாமையினுடைய அடிவேர் அழிக்கப்படவேண்டும். அறிவாசான் தந்தை பெரியார் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் போராட்டத்திற்கு வயது இப்பொழுது ஏறத்தாழ 44 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.
அரை நூற்றாண்டுகளுக்கு
மேலாகப் போராட்டம்!
அரை நூற்றாண்டுகளாக தொடர்ந்து ஒரு இயக்கம் இதை செய்து, அதை அரசாங்கமும் கேட்டது. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கலைஞர் அவர்களுடைய தலை மையில் நடைபெற்றபொழுது, தந்தை பெரியார் அவர்கள் போராடவேண்டாம் - இது உங்கள் அரசு என்று கூறி, சட்டத் தைக் கொண்டு வந்தார்.
உச்சநீதிமன்றத்திற்குச் சென்று அந்த சட்டத்தில் சில சந்தேகங்களைக் கிளப்பினார்கள். சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாகவும் தீர்ப்பு இப்பொழுது கொடுத்தார்கள். இதற்கு எதிரானவர்கள் மிகப்பெரிய வழக்குரைஞர்களையெல்லாம், பல்கிவாலா போன்றவர்களையெல்லாம், ராஜகோபாலாச்சாரியாரும், சங்கராச்சாரியார்களும் ஏற்பாடு செய்தபோதுகூட, அவர்கள் தோற்றார்கள். இறுதியில் நியாயம் வென்றது.
என்றாலும் கடைசியாக அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள். இவர்கள் நாத்திகர்கள், யாரை வேண்டுமானாலும் நிய மித்து விடுவார்கள் என்று சந்தேகம் இருக்கிறது என்று சொன்னார்கள்.
கலைஞர் ஆட்சிக்கு வந்து செயல்படுத்துவார்
அதற்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே வழிகாணவேண்டும் - அவர்களுடைய அய்யத்தைப் போக்க வேண்டும் - அதன் பிறகு அவர்கள் அர்ச்சகர் ஆவதில் எந்தவிதமான தடையும் இல்லை. ஆகவே, அர்ச்சகர் ஆகும் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு கொடுத்தார்கள். அதுதான் முதலில் தீர்ப்பு கொடுத்தார்கள். அதுதான் சேசம்மாள் வழக்காகும்.
அதற்கு அடுத்து நண்பர்களே, திராவிட முன்னேற்ற கழகம் சென்ற தேர்தலுக்கு முன்பாக 2006 ஆம் ஆண்டிற்கு முன்பாக - தேர்தலில் இதையே பிரச்சினையாக திராவிடர் கழகம் வைத்தது. அப்பொழுது நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மீண்டும் அதனை செய்வோம் என்று கலைஞர் மீண்டும் சொன்னார். சொன்னதை செய்வதையே பழக்கமாகக் கொண்ட கலைஞர் அவர்களும், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியும் அதனை செய்தது.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்தக் குழுக்கள் பாடத் திட்டத்தை வரையறுத்து, அதன்மூலமாக ஆகம விதிகளைச் சொல்லிக் கொடுக்கின்ற பள்ளிகள் தனித்தனியாக அமைக்கப்பட்டன.
அதன்படி, வைஷ்ணவ கோவில்களுக்கு உரிய ஆகமங் கள்; சிவாலயங்களுக்கு அர்ச்சகர் ஆகக்கூடிய பயிற்சிக்குரிய ஆகமங்கள் இவைகளையெல்லாம் செய்து, 69 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில், பார்ப்பனர்முதல் ஆதிதிராவிடர் வரை - அனைத்து ஜாதியினரையும் அதில் தேர்வு செய்து - சிவாலயங்களில் தீட்சை கொடுத்து - அதேபோல், வைஷ்ணவ கோவில்களில் சம்ரக்க்ஷணைப் பெற்று - தீட்சைப் பெற்றவர்கள் சிவாச்சாரியார்களாக சிவாலயங்களில் நியமிக்கவும்,
சம்ரக்க்ஷணம் என்ற வைஷ்ணவ சம்பிரதாயத்திற்குரிய அந்த சம்ரக்க்ஷணத்தைப் பெற்றவர்களை வைஷ்ணவ கோவில்களில் நியமிக்கக் கோரியும், பிற கோவில்களில் காலியாக இருக்கக்கூடிய இடங்களில் அதற்குரியவர்களை அர்ச்சகர்களாக நியமிக்கவும் - 206 பேர் பயிற்சி பெற்று தயாராக இருக்கிறார்கள்.
முதலமைச்சர் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை
எனவே, இதைப் பொறுத்தவரையில், இதற்கு துறை ரீதியாக இன்றைய முதலமைச்சர் அவர்கள்  செயல்படுத்த முன்வரவில்லை - அவர்கள் இதனை மதிக்கவில்லை. தமிழக முதல்வர் - தமிழகத்தில் இன்றைக்கு ஆட்சி நடக்கிறதே - அதனுடைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் - ஏற்கெனவே தமிழக சட்டமன்றத்தில்  செயல்படுத்துவதாக உறுதிமொழி கூறிய நாள் 9.4.1992.
ஆகவே, அந்த உறுதிமொழி அப்படியே இருக்கிறது. தீர்ப்பு இப்பொழுது கொடுத்த பிறகு, சிவாச்சாரியார்கள் வழக்கு தொடர்ந்த பிறகும்,  வந்த தீர்ப்பு சாதகமான தீர்ப்பாகும். அதில் இந்தச் சட்டம் செல்லும் என்று கொடுத்த தீர்ப்பு. அந்தத் தீர்ப்பினுடைய அடிப்படையில், நிச்சயமாக மறைந்தவர் போக, எஞ்சிய 206 பேர்களையும் அர்ச்சகர்களாக அவர்களை நியமனம் செய்ய முடியும். செய்யவேண்டும்.
கலைஞர் அரசு நியமித்த நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அறிக்கையில், ஏராளமான கோவில்களில் ஆகமம் தெரியாதவர்கள் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள். சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் ஒரு உதாரணம். 41 அர்ச்சகர்களில் 4 பேர்களுக்கு மட்டுமே ஆகமம் தெரியும். அர்ச்சனை மந்திரம் தெரியும். அதேபோல், சென்னை வடபழனி முருகன் கோவிலில் உள்ள அர்ச்சகர் உதாரணம் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.
எனவே, அங்கே நடைபெறுவது ஆகம விதிப்படியான பஜனையும் அல்ல; பிரார்த்தனையும் அல்ல. எனவேதான், பயிற்சி பெற்று தயாராக இருப்பவர்களை சட்டப்பூர்வமாக நியமனம் செய்யவேண்டும். அதன்மூலமாக எப்படி அனைத்து ஜாதியினரும் அய்.ஏ.எஸ். ஆகிறார்களோ, எப்படி அனைத்து ஜாதியினரும் அய்.பி.எஸ். ஆகிறார்களோ, அதுபோல, ஜாதி தீண்டாமையினுடைய வேர் வெட்டப்பட்டு,  அனைத்து ஜாதியினரும் பயிற்சி பெற்றவர்கள். அந்த ஆகமத்திற்குரியவர்கள், அந்தந்த கோவில்களில் நியமிக்க எந்தத் தடையும் இல்லை என்பதை இன்றைக்கு உறுதி செய்கின்ற போராட்டம் - இந்தப் போராட்டம்.
அழகாக நண்பர்கள் இங்கே சுட்டிக்காட்டியதைப்போல, சுப.வீ. அவர்களும், நம்முடைய அதியமான் அவர்களும், நம்முடைய சேதுராமன் அவர்களும் சொன்னதைப்போல, இந்தப் போராட்டம் யாருக்கும் விரோதமானதல்ல. ஜாதிக்கு விரோதமானது. தீண்டாமைக்கு விரோதமானது. மனித உரிமை பறிப்புக்கு விரோதமானது.
முடிவான போராட்டமல்ல!
எனவே, இந்தப் போராட்டத்தை நாம் நடத்துவது என்பது, முடிவானதல்ல. முடிவு வரும்வரை நாங்கள் போராடிக் கொண்டே இருப்போம்.
ஆனால், நல்ல வாய்ப்பாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மலருமேயானால், அவர்கள் நிச்சயமாக இதனை உடனடியாக செய்யக்கூடிய அந்த வாய்ப்பைப் பெறுவார்கள். காரணம், அவர்கள் ஏற்கெனவே அவர்கள் சொன்னதை செய்தவர்கள். எனவே, எப்படிப்பட்ட ஆட்சி வந்தாலும், இந்தப் போராட்டம் தொடரும் - தொடரவேண்டும்.
இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் தஞ்சை மாவட்டத்தைத் தவிர இந்த மறியல் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அங்கே அரசு விடுமுறை என்பதால், இந்தப் போராட்டம் 20 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
இங்கே ஏராளமான தோழர்கள் வந்திருக்கிறீர்கள், தோழி யர்கள் வந்திருக்கிறீர்கள். அனைவருக்கும் நன்றி. திராவிடர் கழகம் முன்னின்று நடத்தக்கூடிய போராட்டம் என்று சொன் னால், கட்டுப்பாடு மிகுந்த ஒரு போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் நாம் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் சிறையில் இருக்கலாம் என்பதற்குத் தயாராகி வந்திருக்கின்ற கூட்டம் இந்தக் கூட்டம்.
உரிய விலையை கொடுப்போம்!
நாம் லட்சியத்திற்கேற்ப விலை கொடுக்கவேண்டும் என்று நினைக்கின்றவர்கள். நாம் யாருக்கும் எதிரிகள் அல்ல. பொது ஒழுக்கத்திற்கோ, பொதுச்சொத்திற்கோ, பொது ஒழுங்கிற்கோ கேடு செய்யக்கூடியவர்கள் அல்ல நாம்.
ஆகவேதான், நண்பர்களே! இன்னும் சற்று நேரத்தில் நம்மைக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்வார்கள். சற்று நேர முழக்கத்திற்குப் பிறகு, நாம் எல்லோரும் ஆரவாரமின்றி அவர்கள் அழைத்தவுடன் கைதாகவேண்டும். ஒரு சிறு பிரச்சினைகூட இருக்கக்கூடாது. தேர்தல் நடைபெறுகின்ற இந்த நேரத்தில், அவர்களுக்கும் பல பணிகள் உண்டு. நமக்கும் சில கடமைகள் உண்டு.
ஆகவேதான், சிறப்பாக இந்தப் பணிகளைச் செய்ய வேண்டும். ஊடக நண்பர்கள் ஏராளமாக வந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் நம்முடைய நன்றியைத் தெரிவித்து, தொடர்ந்து இந்தப் போராட்டம் நடைபெறும் என்பதைக் கூறி, முடிக்கிறோம்.
நன்றி! நன்றி!! நன்றி!!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
வீழ்த்துவோம் ஜாதியை - வீழ்த்துவோம் தீண்டாமையை - வலியுறுத்துவோம் நம்முடைய மனித உரிமையை!
அனைத்து ஜாதியினரையும்
அர்ச்சகராக்கு, அதன்மூலம் மனித உரிமையை
நிலைநாட்டு! நிலைநாட்டு!
மத்திய அரசே, மத்திய அரசே
மாநில அரசே, மாநில அரசே
மத்திய அரசே, மத்திய அரசே
அரசியல் சட்டத்தை திருத்து
தீண்டாமைக்குப் பதில்
ஜாதியை ஒழிப்போம் என்று சொல்
மத்திய அரசே, மத்திய அரசே
மாநில அரசே, மாநில அரசே
என்ற முழக்கங்களை கழகத் தலைவர் கூற, தொடர்ந்து தோழர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக