திங்கள், 27 ஏப்ரல், 2026

வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரின் பிறந்த நாளான இன்று – திராவிடர் உரிமைக்கு உறுதியேற்போம்! செய்தி விவரம்


ஆசிரியர் அறிக்கை

வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரின் பிறந்த நாளான இன்று – திராவிடர் உரிமைக்கு உறுதியேற்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

ஆசிரியர் அறிக்கை

தென்னிந்தியாவில் முதன்முதலாக 110 ஆண்டு களுக்கு முன்பாக, ‘பார்ப்பனரல்லாதார் இயக்கம்’ (The Non- Brahmin Movement) என்ற அமைப்பினை உருவாக்கியதற்கு மூல முக்கிய தலைவர்கள் மூவர்.

  1. சர். பிட்டி. தியாகராயர்
  2. டாக்டர் டி.எம்.நாயர்
  3. டாக்டர் சி.நடேசனார்

சமூக மாற்றத்திற்கான
சாதனை சரித்திரம் படைத்த இயக்கம்

1916 இல் அதற்கு அரசியல் வடிவம் தந்து, ‘தென்னிந்திய மக்கள் நல உரிமைச் சங்கம்’ என்று பெயர் தந்து, பதிவு செய்து, பணி தொடங்கி, வர்ண தர்ம ஜாதியால், அடிமைத்தளையினால் கட்டுண்டு கிடந்த பல கோடி உழைக்கும் ஒடுக்கப்பட்ட திராவிட மக்கள் உரிமை பெற்றிட, கல்வி, வேலை வாய்ப்பு, சமூக, பொருளாதார அரசியல் விடுதலை அடைந்திட, விடியல் எழுச்சிக்கு வித்திட்டு, 1920 ஆம் ஆண்டு சென்னை ராஜதானியின் (மாநில) ஆட்சியையே தேர்தல்மூலம் கைப்பற்றி, கல்விக் கண் திறந்து, வேலை வாய்ப்பு, சமூகநீதிக்குத் தொடக்க விழா செய்து, சுமார் 17 ஆண்டுகள் ஆட்சி செய்து – பெண்ணுரிமைக் காக்கும் வகையில், 1921 ஆம் ஆண்டிலேயே மகளிருக்கு வாக்கு அளிக்கும் உரிமையைத் தந்து, அவர்களது அதிகாரப் பங்களிப்பை உறுதி செய்த ஒரு சமூக மாற்றத்திற்கான சாதனை சரித்திரம் படைத்த இயக்கம்.

சர். பிட்டி. தியாகராயர் ஒரு பெருவணிகர். தனது வருவாயில் பெரும் பகுதியை பொதுத் தொண்டிற்குச் செலவழித்து, ‘ஈதல் இசைபட’ வாழ்ந்த பெருந்தகையாளர்.

இன்றைய இளைய சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்!

முதலாவது தேர்தலில் (1920 ஆம் ஆண்டு) அவர் கண்ட அந்த திராவிடர் இயக்கமாம் ‘ஜஸ்டிஸ் கட்சி’யென வெகுமக்களால் பெரிதும் அழைக்கப்பட்ட இயக்கம் வெற்றி பெற்ற நிலையில், (1920 இல்) அவரை ஆட்சிப் பொறுப்பேற்க வெள்ளைக்கார கவர்னர்கள் விரும்பி அழைத்தபோது, அப்பதவியை தான் ஏற்க மறுத்து, அப்பதவியை, கடலூர் சுப்பராயலு (ரெட்டியார்) அவர்களை ஏற்கச் செய்த தியாகச் சீலர் நமது தியாகராயர்! பதவி வெறிப் படமெடுத்தாடும் இன்றைய காலகட்டத்தில் இளைய சமூகம் இதனை அறிந்து, புரிந்துகொள்ளவேண்டும்!

வெள்ளுடை வேந்தர், சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் (மேயர்) ஆனபோது, அதனையொட்டி, அதிகார அரசியல் நிமித்தமாக வெள்ளைக்கார கவர்னர் மாளிகைக்குச் சென்று, அவரைச் சந்திக்க அழைக்கப்பட்டார். சந்திப்பின்போது உடை மாற்றி வருவது மரபு; எனவே, வேட்டி, சட்டை உடையை மாற்றி, ‘சூட்’டில் வரும்படி அழைத்தவுடன், அதனை மறுத்து, ‘‘இதே உடையில் சந்திக்க விருப்பமாயின் வருவேன்; இன்றேல், வேறு யாரையாவது அனுப்புவேன்’’ என்று கூறி, வென்றவர் அந்தப் பண்பாளர்!

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வெற்றி பெற்ற வித்தகப் பெருமான்!

‘பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை’ (Non Brahmin Manifesto)யை வெளியிட்டு, தக்கப் புள்ளி விவரத்தினை, பார்ப்பன மேலாண்மைப் பகற்கொள்ளை யைப் பாரறியப் பறைசாற்றி, தமது மக்களுக்குச் சமூகநீதி இன்றியமையாமைபற்றிய, விழிப்புணர்வை ஏற்படுத்தி வெற்றி பெற்ற வித்தகப் பெருமான் அவர்!

ஆரிய – திராவிட உரிமைப் போரில், முதல் முழக்கத்தைப் படைத்தவர். அவருடைய தலைமையில் டாக்டர் டி.எம்.நாயர் என்ற ‘திராவிட லெனின்’ (தந்தை பெரியார் தந்த பெயர்) அதேபோல், 1912 முதலே பார்ப்பனரல்லாத மக்களுக்குக் கல்விக் கண் கிடைக்க திருவல்லிக்கேணியில் தனி விடுதி (Hostel) நடத்தி, புதிய கல்விப் புரட்சியைத் தொடங்கிய கல்வி வள்ளல் டாக்டர் சி.நடேசனார் ஆகியோர் கட்டிய அடிக்கட்டுமானம்தான் – அறிஞர் அண்ணா, கலைஞர், இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் படைத்த, படைக்கும், படைக்கப் போகும் சாதனைச் சரித்திரத்தின் தொடக்கமும் அதுதான்!

வலிவோடும், பொலிவோடும் காத்து,
கடமையாற்ற சூளுரைப்போம்!

நன்றி மறக்காது, நமது மூத்தோர், முன்னோடிகள் அமைத்த உரிமை மாளிகையைப் பாதுகாப்பதும், புதுப்பிப்பதும் மட்டுமல்ல, அதனை மேலும் வலி வோடும், பொலிவோடும் காத்து, கடமையாற்றச் சூளுரைப்போம்!

தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன், நீதிக்கட்சியை – சுயமரியாதை இயக்கத்தினை இணைத்து, திராவிடர் கழகமாக 1944 இல் உருவாக்கினார்.

அதன் அரசியல் அணி – அங்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். தி.மு.க. – தி.க. என்ற இரட்டைக்குழல். இன எதிரிகள் உயர்த்திப் பிடிக்கும் மதவெறி, ஜாதி வெறி அரசியல் ஆதிக்க வெறியை விரட்டி அடிக்க உறுதியேற்போம்!

வென்று காட்ட வீறுகொண்டு உழைப்போம்!

கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

 

சென்னை    

27.4.2026   


வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி. தியாகராயர் பிறந்த நாள்-தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஏப். 27- ‘வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி தியாகராயர் அவர் களின் பிறந்த நாளான இன்று (27.4.2026) அவரது சிலைக்குத் தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நீதிக்கட்சியின் முக்கிய தோற்றுநர், முதன் முதலில் சென்னையில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய வள்ளல், சென்னை மாநகர முதல் மேயர், ‘வெள்ளுடை வேந்தர்’ சர்.பிட்டி தியாகராயர் அவர்களின் 175ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (27.4.2026) காலை 10.30 மணியவில் சென்னை மாநகராட்சி மன்றம் (ரிப்பன் பில்டிங்) முகப்பில் உள்ள அவரின் சிலைக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகப் பொருளாளர் வீ.குமரேசன், திராவிடர் கழக சட்டத்துறைத் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, திராவிட மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், இராமு, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, கோவீ.ராகவன், மேற்கு சென்னை  மாவட்ட தலைவர் கரு. அண்ணாமலை, வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், சி.வெற்றிச்செல்வி, உமா செல்வாஜ், பசும்பொன் செந்தில்குமாரி, தங்க.தனலட்சுமி, த.மரகதமணி, அரும்பாக்கம் சா.தாமோதரன், திருவொற்றியூர் செல்வராஜ், செல்லப்பன், பி.சி.ஜெயராமன், தாம்பரம் மோகன்ராஜ், க.தமிழ்ச்செல்வன், சீர்காழி இராமண்ணா, தி.செ.கணேசன், பெரியார் இனியன், பெரியார் ஆதவன், மகேந்திரன், சோளிங்கநல்லூர் ராஜேந்திரன், சூளைமேடு ராஜேந்திரன், மு.சேகர், கலைச்செல்வன், கோ.தங்கமணி, அய்ஸ்அவுஸ் அன்பு, ஜனார்த்தனன், பா.கோபாலகிருஷ்ணன், பொன்.மாடசாமி, மகேஷ், வை.கலையரசன், மு.இரா.மாணிக்கம், இராவணன், இளவரசன், சுப்பிரமணியன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

சென்னை கோட்டை – தி.மு.க. கூட்டணிக்கு; மனக்கோட்டை – மற்ற அணிகளுக்கு!


சர். பிட்டி. தியாகராயருக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மாலையிடும்!
அந்த மாலைதான், ‘‘மீண்டும் ஸ்டாலின் கோட்டையில்’’ என்பதற்கான அடையாளம்!

சென்னை, ஏப்.27  சர். பிட்டி. தியாகராயருக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மாலையிடும். அந்த மாலைதான், ‘‘மீண்டும் ஸ்டாலின் கோட்டையில்’’ என்பதற்கான அடையாளம். சென்னை கோட்டை – தி.மு.க. கூட்டணிக்கு; மனக் கோட்டை  – மற்ற அணிகளுக்கு! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்

இன்று (27.4.2026) வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரின் பிறந்த நாள். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமறு:


சென்னை கோட்டை – தி.மு.க. கூட்டணிக்கு; மனக்கோட்டை – மற்ற அணிகளுக்கு!

4 Min Read

சர். பிட்டி. தியாகராயருக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மாலையிடும்!
அந்த மாலைதான், ‘‘மீண்டும் ஸ்டாலின் கோட்டையில்’’ என்பதற்கான அடையாளம்!

சென்னை, ஏப்.27  சர். பிட்டி. தியாகராயருக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மாலையிடும். அந்த மாலைதான், ‘‘மீண்டும் ஸ்டாலின் கோட்டையில்’’ என்பதற்கான அடையாளம். சென்னை கோட்டை – தி.மு.க. கூட்டணிக்கு; மனக் கோட்டை  – மற்ற அணிகளுக்கு! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்

இன்று (27.4.2026) வெள்ளுடை வேந்தர் சர். பிட்டி. தியாகராயரின் பிறந்த நாள். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமறு:

‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்!’

‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்ற திராவிடர் இயக்கம் முதன்முதலாக உருவாவதற்குத் தலைமை யேற்ற, வெள்ளுடை வேந்தர் என்று உலகத்தாரால் அறிமுகப்படுத்தப்பட்ட, வரலாற்றுப் பெருமை மிகுந்த ஒரு வாழ்வை அமைத்த  சர். பிட்டி. தியாகராயர் அவர்களுடைய பிறந்த நாள் இன்று!

‘திராவிட மாடல்’ ஆட்சி இன்றைக்கு உலகம் போற்றக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறது.   ‘பார்ப்பனரல்லாதார் இயக்கம்’ என்று தொடங்கப் பெற்று, அது ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்று பதிவு செய்யப்பட்டு, ‘ஜஸ்டிஸ்’ கட்சி என்று மக்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் இயக்கத்தினுடைய முப்பெரும் தலைவர்களில், சர்.பிட்டி தியாகராயர் அவர்கள்தான் தலைமையேற்றவர். திராவிடர் ஆட்சியை அமைப்பதற்கு வழிகாட்டியவர்கள். அதனுடைய அடித்தளம் ஆனவர்கள்.

‘பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை!’

1916 ஆம் ஆண்டு ‘பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை’ (Non Brahmin Manifesto) என்று உருவாக்கி, அதன்மூலம் கல்வி, உத்தியோகத் துறைகளில், எப்படியெல்லாம் நம்முடைய உரிமைகள், வாய்ப்புகள் மறுக்கப்பட்டன என்பதை புள்ளி விவர ரீதியாக எடுத்துச் சொல்லி, தெளிவுபடுத்தி, ஒரு பெரிய இயக்கத்தை உருவாக்கிய பெருமை, அவருக்கும், அவரைச் சார்ந்த தளபதிகளாக இருந்த டி.எம்.நாயர் அவர்களுக்கும், சி.நடேசனார் அவர்களுக்கும் உரியது.

அந்த அடித்தளத்தின்படி – அதற்குப் பிறகு 17 ஆண்டுகள் நீதிக்கட்சி ஆட்சி நடந்தது. பல ஆண்டுகள் கழிந்தும் கூட, மற்றவர்கள் சொன்னார்கள், ‘நீதிக்கட்சியைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டோம்’’ என்று.

அதற்குப் பிறகு பேரறிஞர் அண்ணா அவர்கள், 1967 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மிகத் தெளிவாக   ‘‘நீதிக்கட்சியின் பேரனான நான் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறேன்’’ என்றார்.

அதைத் தொடர்ந்து கலைஞர் அவர்கள், அந்த ஆட்சி யினுடைய பெருமைகளை, சாதனைகளை உயர்த்தினார்.

இந்தியாவே திரும்பிப் பார்க்கக்கூடிய ஓர் அற்புதமான ஆட்சி – ‘திராவிட மாடல்’ ஆட்சி!

அவருக்குப் பிறகு, அதனை மேலும் ‘திராவிட மாடல்’ ஆட்சியாக்கி, இன்றைக்கு இந்தியாவே திரும்பிப் பார்க்கக்கூடிய ஓர் அற்புதமான ஆட்சியை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்து வருகிறார்.

சிலையாக மட்டுமல்ல, நமக்கெல்லாம் வழிகாட்டக்கூடிய சீலமாகவும் விளங்குகிறார்!

எனவே, ஒரு நீண்ட பாரம்பரியத்திற்கு அடித்தளமாக, காரணமாக இருந்து அடிக்கட்டுமானத்தை உருவாக்கிய அந்த மாபெரும் தலைவருடைய பிறந்த நாள்.  தந்தை பெரியார் அவர்கள் அதனை ஒருங்கிணைந்து, நீதிக்கட்சியையும் – சுயமரியாதை இயக்கத்தையும் இணைத்து ‘திராவிடர் கழகமாகி’ – திராவிடர் கழகம் பிறகு இரட்டைக் குழல் துப்பாக்கியாக – திராவிடர் கழகம் – திராவிட முன்னேற்றக் கழகமாக வளர்ந்த ஓர் அரசியல் சரித்திரத்தின் தொடக்கத்திற்கு உரியவர்தான் இன்றைக்குச் சிலையாக மட்டுமல்ல, நமக்கெல்லாம் வழிகாட்டக்கூடிய சீலமாகவும் இருக்கக்கூடிய சர். பிட்டி தியாகராயர் அவர்கள்.

அவருடைய பிறந்த நாளை, நாம் ஒவ்வொரு ஆண்டும் சடங்காக, சம்பிரதாயமாகவோ கடைப்பிடிப்பதில்லை – சரித்திர அடையாள நாளாகக் கடைப்பிடித்து, அதன்மூலமாகத் தமிழ்நாடு யாருக்கும் அடிமையாக்கப்படக் கூடாத ஒன்று – உரிமை முழக்கம் செய்யவேண்டிய ஒன்று என்பதை நாம் தொடர்ந்து அனைவருக்கும் விளக்கவேண்டும்.

கல்வி, வேலை வாய்ப்புகள், சமூகநீதி என்ற அந்தத் தொடக்கவுரையை அவர்தான் உருவாக்கி வைத்தார். அந்த எழுச்சியை இன்றைக்குப் பார்க்கிறோம்.

வீறுநடை – வேக நடை போட்டு எழுச்சியை உருவாக்குவோம்!

தேர்தல்கள் ஒரு களம், அவ்வளவுதான்.பண் பாட்டுப் புரட்சியை அந்தத் தலைவர்கள் தெளிவாக உருவாக்கினார்கள். அதைத் தொடர்வோம், சூளுரைப்போம், சுயமரியாதை உணர்வைப் பெறுவோம்!  அவர் வழியில் என்றென்றைக்கும் வீறுநடை – வேக நடை போட்டு எழுச்சியை உருவாக்குவோம்.

செய்தியாளர்: மே 4 ஆம் தேதி வெளிவரக்கூடிய தேர்தல் முடிவை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? 2006 ஆம் ஆண்டு விஜயகாந்த் வாக்குகளைப் பிரித்தது போன்று, 2026 ஆம் ஆண்டு விஜய் வாக்குகளைப் பிரிப்பார். தனிப்பெரும்பான்மை என்பது எந்தக் கட்சிக்கும் கிடைக்காது. கூட்டணி ஆட்சிக்குத்தான் வாய்ப்பு என்று சொல்கிறார்களே?

1971 ஆம் ஆண்டு நிலை –
மே 4 ஆம் தேதிக்குப் பிறகு வரும்
!

தமிழர் தலைவர்: 2006 ஆம் ஆண்டோடு நிறுத்தி யிருக்கிறார்கள். அதற்கு முன்பு அவர்கள் போகவேண்டும். 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 184 இடங்களைப் பெற்று தி.மு.க. வரலாறு படைத்தது.

‘‘இதோடு முடிந்தது. இனி தி.மு.க. ஆட்சிக்கு வராது’’ என்று ஆருடம் கணித்தவர்கள் எல்லாம், அடையாளம் தெரியாமல் ஓடிவிட்டார்கள் –  துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று!  1971 ஆம் ஆண்டு நடைபெற்ற அதே நிலை, மே 4 ஆம் தேதிக்குப் பிறகும் வரும்.

இதே இடத்திற்கு வந்து, சர். பிட்டி. தியாகராயருக்கு ‘திராவிட மாடல்’ ஆட்சி மாலையிடும். அந்த மாலைதான், ‘‘மீண்டும் ஸ்டாலின் கோட்டையில்’’ என்பதற்கான அடையாளம்.

அதை நீங்கள் விரைவில் காணுவீர்கள்.

சென்னை கோட்டை – தி.மு.க. கூட்டணிக்கு;

மனக்கோட்டை  – மற்ற அணிகளுக்கு!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

- விடுதலையின் நாளேடு, 27.04.2026

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக