திராவிடர் கழகப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி - தமிழுக்கு முதலிடம்!
சென்னை, மார்ச் 13 சென்னை கோடம்பாக்கம் இரயில் நிலைய முகப்பில் அமைக்கப்பட்டு இருந்த இரயில்வே வளைவில் (ஆர்ச்) இங்கிலீஷ், ஹிந்தி, தமிழ் என்று பொறிக்கப்பட்டு இருந்தது.
தமிழுக்குக் கடைசி இடம் என்ற நிலை இருந்தது.
தென்சென்னை மாவட்டத் திராவிடர் கழக செய லாளர் தோழர் செ.ர.பார்த்தசாரதி இந்தத் தகவலை திராவிடர் கழகத் தலைமை நிலையத்திற்குத் தெரிவித்த நிலையில், கழகத் தலைவர் அறிவுறுத்தலின்படி, தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் சென்று கோடம் பாக்கம் இரயில் நிலைய அதிகாரிகளிடம் கடிதம்மூலம் புகார் கொடுத்தனர்.
இரயில் நிலைய அதிகாரிகள், தென்னக இரயில்வே நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதச் சொன்னதன் அடிப் படையில், 7.3.2022 அன்று அவ்வாறே கடிதம் கொடுக்கப்பட்டது.
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்த சாரதி, தென்சென்னை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் மு.ந.மதியழகன் ஆகியோர் தென்னக இரயில்வே பொது மேலாளரிடம் எழுத்துமூலம் புகார் கொடுத்தனர்.
அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததாவது:
''தமிழ்நாட்டின் இரயில் நிலையங்களில் ஊர்ப் பெயர்ப் பலகைகளில் ஹிந்தி, இங்கிலீஷ், தமிழ் என்று ஒன்றன் பின் ஒன்றாக எழுதப்பட்டு இருந்தது. ஹிந்திக்கு முதலிடமும், தமிழுக்குக் கடைசி இடமும் அளிக்கப்பட்டு இருந்தது.
தந்தை பெரியாரின் கட்டளையை ஏற்று, தார் சட்டியுடன் சென்ற திராவிடர் கழகத் தோழர்களால் இரயில் நிலையங்களில் இடம்பெற்று இருந்த ஹிந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டன. 1952, 1953, 1954 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் ஆகஸ்டு முதல் தேதியன்று தொடர்ந்து அழிக்கப்பட்டதன் விளைவாக இரயில் நிலையங்களில் தமிழுக்கு முதலிடம் அளிக்கப்பட்ட தையும்'' சுட்டிக்காட்டி அந்தப் புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அந்தக் கடிதம் 7.3.2022 அன்று தென்னக இரயில்வே பொது மேலாளரிடம் அளிக்கப்பட்டது. உடனடியாக தமிழுக்கு முதலிடம் அளித்து, கோடம்பாக்கம் இரயில் நிலைய முகப்பில் உள்ள வளைவில் தமிழ் முதலிடத்தில் இடம்பெறச் செய்யாவிட்டால், 14.3.2022 அன்று திராவி டர் கழகத்தின் சார்பில் ஹிந்தி எழுத்துகள் தார் கொண்டு அழிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
திராவிடர் கழகத்தின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, இரயில்வே நிர்வாகம் தமிழுக்கு முதலிடம் அளித்து, எழுத்துகளைப் பொறித்துவிட்டது. இது திராவிடர் கழகப் போராட்ட அறிவிப்புக்குக் கிடைக்கப் பெற்ற மகத்தான வெற்றியாகும்!
திராவிடர் கழகத்தின் கோரிக்கையை உடனடியாக ஏற்று செயல்பட்ட தென்னக இரயில்வே நிர்வாகம் பாராட்டுக்குரியது.
இப்பிரச்சினையில் முன்னின்று செயல்பட்ட தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்திற்கும் பாராட்டுகள்!
இதுபோல் ஆங்காங்கே கொள்கை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்போது, கழகப் பொறுப்பாளர் கள் தலைமைக் கழகத்துக்குத் தெரிவித்து, தலைமைக் கழகத்தின் வழிகாட்டுதலின் பெயரில் உரிய நடவடிக் கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக