வியாழன், 14 மார்ச், 2019

7 தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி மாபெரும் மனித சங்கிலி போராட்டம்

தமிழர் தலைவர் உள்பட பல்வேறு கட்சியினர் பங்கேற்பு
சென்னை, மார்ச் 10- பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள சென்னை, சேலம், திருச்சி, நெல்லை, மதுரை, கோவை, புதுச்சேரி உள்ளிட்ட 7 பெருநகரங்களில் நேற்று (9.3.2019) மாலை  மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. சென்னை வாலாஜா சாலையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பெருந்திரளான கழகத் தோழர் களுடன் தமிழர் தலைவர் பங்கேற்றார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தலைமையில் சென்னை சேப்பாக்கத்தில் மனித சங்கிலிப் போராட்டம் நேற்று மாலை நடந்தது.சென்னை அண்ணா சாலை அருகே உள்ள அண்ணா சிலையிலிருந்து வாலாஜா சாலை தொடக்கம் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை வரை நடைபெற்ற இம்மனித சங்கிலி போராட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்னை மண்டல கழகத் தோழர் - தோழியர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.


இப்போராட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக் கனி, திராவிடர் கழக வழக்குரைஞரணி தலைவர் த.வீரசேகரன், திராவிட மாணவர்கள் கழக மாநில செயலாளர் ச.பிரின்சுஎன்னாரெசு பெரியார் மற்றும் மண்டல கழக, வடசென்னை, தென்சென்னை, தாம்பரம் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் திராளான கழகத் தோழியர்கள் பங்கேற்றனர்.இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், துணைப் பொதுச் செயலாளர் வன்னிஅரசு, பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, எஸ்.டி.பி.அய். கட்சி தலைவர் நெல்லை முபாரக், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் வெற்றிவேல், தமிழ் பேரரசு கட்சி தலைவர் கவுதமன், தோழர் தியாகு, திரைக்கலைஞர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், மனோபாலா, இயக்குனர்கள், அமீர், வெற்றிமாறன், ராம், களஞ்சியம் உள்பட ஏராளமானோர் பங்கேற்று தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தினர்.

மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெற்ற இப்போராட்ட முடிவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து போராட் டத்தில் பங்கேற்றவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

- விடுதலை நாளேடு, 10.3.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக