வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

இந்திய மாணவர் சங்கம் நடத்திய பெரும்திரள் பட்டினிப் போராட்டம்

நீட்” தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளித்திடக்கோரி இந்திய மாணவர் சங்கம் நடத்திய பெரும்திரள் பட்டினிப் போராட்டம் சமூக நீதியை குழிதோண்டி புதைக்கவே “நீட்” தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் கண்டன உரை

சென்னை, ஆக.3 “நீட்” தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளித்திடக் கோரி இந்திய மாணவர் சங்கம் நடத்திய பெரும் திரள் பட்டினிப் போராட்டத்தின் நிறைவில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பங்கேற்று போராட்டத்தில் பங்கேற்றவர்களை பாராட்டி, சமூக நீதியை குழிதோண்டி புதைக்கவே “நீட்” தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது என்று “நீட்”டை கண்டித்து கண்டன உரையாற்றினார்.

தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை பாழாக்கிடும் மத்திய அரசுக்கு எதிராக “நீட்” தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளித்திடக்கோரி இந்திய மாணவர் சங்கம் (எஸ்எஃப்அய்) தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் அதன் மாநிலத் தலைவர் தோழர் வீ.மாரியப்பன் தலைமையில் நேற்று (2.8.2017) சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெரும் திரள் பட்டினிப் போராட்டம் நடைபெற்றது. இப்பட்டினிப் போராட்டத்தின் நிறைவில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் பங்கேற்று போராட்ட கண்டன உரையாற்றினார்.

அவரின் கண்டன உரையில்:-

இந்த மாபெரும் பட்டினிப் போராட்டத்தை ஒருங் கிணைத்துள்ள இந்திய மாணவர் சங்கத் தின் மாநிலச் செயலாளர் தோழர் பி.உச்சிமாகாளி மற்றும் இந்த அமைப்பின் பொறுப்பாளர்களே, பல்வேறு கட்சி தலைவர்கள் காலை முதல் இங்கு வந்து உரையாற்றி சென்றுள்ளனர், தற்போது பட்டினிப் போராட்டத்தை நிறைவு செய்ய வந்துள்ள இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அய்யா ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மாலை வணக்கம்!

2016 ஜூலை இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தனது வலைதளத்தில் ஓர் ஆவணத்தை ஆங்கில மொழியில் வெளியிட்டு 30 நாளுக்குள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவித்தது.

தேசிய கல்விக் கொள்கை

எதற்கு என்றால் தேசிய கல்விக் கொள்கை (New Education Policy 2016) என்று தொடங்கி இன்று நீட் (NEET) வரை மத்தியில் ஆளும் அரசு தொடர்ச்சியாக கல்வியில் கை வைக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகின்றது.

2007ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், ஒடுக்கப்பட்டோரும், கிராமப்புற மாணவர்களும் மருத்துவக்கல்லூரியில் அதிக இடங்களை பெற்று வருகின்றனர். இதனை குழித்தோண்டிப் புதைக்க மத்திய அரசு தேசிய நுழைவுத் தேர்வைக் கொண்டு வந்துள்ளது.

இந்த ‘நீட்’ தேர்வு என்பது எவ்வளவு பெரிய சூழ்ச்சி வலை, நம்மு¬டை மாணவர்களுக்கு எதிராக பின்னப்பட்டிருக்கிறது. சமூக நீதியை குழித் தோண்டி புதைக்க வேண்டும் என்ற ஏற்பாட்டினை செய்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் உங்களுக்கு நிறைய விளக்கி சொல்லியிருக்கிறார்கள்.

எழுச்சி ஊட்டக்கூடியவர்கள்

அதுமட்டுமல்ல, உங்களைப் பொறுத்த வரையிலே நீங்கள் ஒவ்வொருவருமே இங்கே குழுமியிருக்கக் கூடிய ஆசிரியர்களானாலும், சமூக நீதிப் போராளிகளாலும், மாணவர் தோழர்களானாலும், அத்தனைப் பேருமே மற்ற வர்களுக்கு எழுச்சி ஊட்டக்கூடிய அளவிற்கு தெளிவு உள்ளவர்கள்.

என்றாலும், செய்தியாளர்கள் இங்கே இருக்கிற காரணத்தால், அரசின் காதுகள், இது வரையிலே சுலபமாக கேட்கப்படாத காதுகள். நாம் இடையறாது ஒலித்துக் கொண்டிருந்த காரணத்தால், நீட் தேர்வுக்காக இதுவரையிலே, 6 மாதங்களுக்கு முன்னாலே நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களை நாங்கள் ஆராய்வோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

லேசாக அசைந்திருக்கிறார்கள்

இப்போதுதான் அவர்கள் லேசாக அசைந்தி ருக்கிறார்கள். எனவே அசைந்தவர்களை இந்தப்பக்கம் ஆட வைக்க வேண்டியது நம் முடைய பொறுப்பு என்பதற்காகத்தான் இந்த பட்டினிப் போராட்டத்தை கையிலே எடுத்துக் கொண்டு மற்றவர்களுக்காக தங்களை வருத்திக் கொள்ளக்கூடிய இந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள்.

பொதுவாக தந்தை பெரியாருடைய தொண் டர்களாகிய நாங்கள் பட்டினிப் போராட்ட முறையை ஏற்பவர்கள் அல்ல. என்றாலும், வேறு வழியில்லாமல் செய்கிறார்கள் என்று சொல்லும் போது, அந்தத் தோழர்களிடம் முடித்து வைப்பதற்காகவாவது வருகின்றோம் என்று அவர்களிடத்தில் நாங்கள் ஒப்புக் கொண்டு, இதுமட்டுமல்ல, இந்தப் பிரச்சினையையே முடித்து வைக்க வேண்டும். அதற்கு அடையாள மாகத்தான், நாம் இடையறாது நம்முடைய போரிலே கொஞ்சம் கூட தொய்வில்லாமல் இந்த அறப்போராட்டத்தை நடத்த வேண்டும்.

மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி

எளிமையான ஒரு செய்தி, தெளிவாக ஊடகங்கள் மூலமாகவே இதுவரை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 9.6.2017 வெள்ளியன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடத்த விசாரணையில் சிபிஎஸ்இ நிர்வாகத்துக்கு நீதிபதிகள் ஆறு முக்கிய கேள்விகளை எழுப்பி, அதற்கான விடையை கூறுமாறு, சிபிஎஸ்இ நிறுவனத்துக்கு வலியுறுத்தி னார்கள்.

அந்த ஆறு வினாக்களுக்கு விடை கண்டால் போதும். ‘நீட்’ தேர்வைப் பற்றி குழப்பத்தில் இருப்பவர்கள் “நீட்” தேர்வுதான் தேவை என்று சொல்லக்கூடிய மத்திய ஆட்சியாளர்கள் அல்லது அதிலே பிடிவாத மாக இருக்கக்கூடியவர்கள் இதிலே உயர்நீதி மன்றத்தினால் தேர்வு பெற்ற நீதியரசர்கள், மதுரை கிளை நீட் தேர்வு தொடர்பான வழக்கில் சிபிஎஸ்சிஇ நிர்வாகத்திற்கு எழுப்பியுள்ள ஆறு முக்கிய வினாக்கள்:

1. இந்தியா முழுவதும், ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி?

2. 12ஆம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் “நீட்” தேர்வு நடத்தாததற்கான காரணம் என்ன?

3. சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டதன் காரணம் என்ன?

4. கல்வித்தரம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாட்டுடன் இருக்கும் நிலையில் “நீட்” தேர்வை மாணவர்கள் எப்படி எதிர் கொள்வார்கள்?

5. கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையில் கல்வித்தரம் வேறுபடும் போது அனைவரும் சிபிஎஸ்இ தேர்வை எப்படி எதிர்கொள்ள முடியும்?

6. மாநில மொழிகளில் உள்ள வினாத் தாளுக்கும், இந்தி, ஆங்கில மொழியில் உள்ள வினாத்தாளுக்கும் வேறுபாடு எப்படி வந்தது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த கேள்விகளுக்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை.  அதைத்தான் நாம் எல்லா இடங்களிலும் வலியுறுத்திக் கொண் டிருக்கிறோம். 
அவர்கள் கேட்டார்கள் கேள்வி ஒன்று, இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி? இந்த கேள்விக்கு விடை கொடுக்க வேண்டும் அல்லவா? இல்லை நீட் தேர்வுதான் தேவை அதுதான். அறிவுக்கு, தகுதிக்கு, திறமைக்கு எடுத்துக்காட்டு என்று வாதாடக்கூடியவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

அறிவாளிகள் என்ன ஆனார்கள்?

சிபிஎஸ்இயில் படித்தவர்கள் ரொம்பக் கெட்டிக்காரர்கள் என்கிறார்களே. அதிலும் உள்ள விளக்கம் என்னவென்றால், சிபிஎஸ்இ யில் தமிழ்நாட்டிலிருந்து முதல் 25 பேரில் ஒருத்தர் கூட வரவில்லை. அப்ப, அந்த அறி வாளிகள் எல்லாம் என்ன ஆனார்கள்?

அதுதான் அறிவுக்கே ஊற்று என்று சொன்னார்களே, அதில் என்னவாயிற்று? அதுமட்டுமல்ல, எழுதியவர்கள் அத்தனை பேரும் (சிபிஎஸ்இயில் பயின்றவர்கள்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லவா? அங்கேயும் 35 விழுக்காடு தேர்ச்சி பெறவில்லை. முதன்மையாகவும் வரவில்லை, 35 விழுக்காடு தோல்வியும் அடைந்திருந்தார்கள். ஆகவே, அந்த பாடத்திட்டத்திலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பட்டை நாமம்தான்.

மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும்

இந்த ஆண்டுக்கான மருத்துவ படிப்பிற்கான தர வரிசை பட்டியல் 14.7.2017 அன்று வெளியிடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இன்று தேதி 2.8.2017 இன்று வரை 18 நாட்கள் ஆகியும் ஏன் வெளியிடவில்லை என்பதை நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால், 1200/1197 மதிப்பெண் பெற்ற 6 மாணவர்கள் கூட “நீட்” தேர்வில் 10 சதவிகித மதிப்பெண் கூட பெறமுடியவில்லை. தர வரிசை பட்டியலை வெளியிட்டால் மிகப்பெரிய கிளர்ச்சி வெடிக்கும் என்பதை தெரிந்து கொண்டே வெளியிடாமல் உள்ளனர்.

அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம்

6 மாத காலம் காதில் வாங்கிக் கொள்ளாத தமிழ்நாடு அரசு தற்போது, ஏன் 10 நாள்களுக்குள் இரண்டு முறை டில்லி பயணம் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழத் தலைவர் ஆசிரியர் அவர்கள், நீட் தேர்வு பிரச்சினைக்கு மட்டும் இதுவரை 13 அறிக்கைகள் விடுத்துள்ளார். நான்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியுள்ளார். அய்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளார். அரக்கோணம் மற்றும் திருச்சியில் இரண்டு மாநாடுகளை நடத்தியுள்ளார்.

1 லட்சம் துண்டறிக்கைகள்

மருத்துவ நுழைவுத் தேர்வான “நீட்” டை எதிர்த்து திராவிடர் கழக இளைஞரணி - மாணவரணி நடத்தும் இருசக்கர வாகன பரப்புரை பயணம் அய்ந்து குழுக்களாக 18.3.2017 அன்று புறப்பட்டு 21.3.2017 அன்று வரை 4 நாள்கள் தொடர் பிரச்சாரம் செய்து அதன் நிறைவு விழா விருத்தாசலத்தில் சிறப்பாக முடிவுற்றது. இப்பயணத்தில் “நீட்”டை விளக்கி 1 இலட்சம் துண்டறிக்கைகள் மக்களிடம் கொண்டு சேர்ந்துள்ளோம்.

கல்வி உரிமை பறிபோகும்

“நீட்” தேர்வால் ஏற்படும் விளைவுகள் என்னவென்றால் இதன் விளைவாய் அரசுப் பள்ளிகளிலும், மெட்ரிக். பள்ளிகளிலும், தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்த 95 சதவீத பெற்றோர், தங்கள் பிள்ளைகளையும் சிபிஎஸ்இ பள்ளியில் படிக்க வைக்க முற்படும் போது, மெட்ரிக். பள்ளிகளும் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாறும்; அரசுப் பள்ளிகள் மூடப்படும். இறுதியில் எல்லாம் சிபிஎஸ்இ பள்ளிளாக மாற, மாநிலத்தின் கல்வி உரிமை அறவே பறிபோகும்; மத்திய அரசின் ஏகபோகத்தில் கல்வி வந்து விடும்.

இரண்டாவதாக, சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தியும், சமஸ்கிருதமும், கட்டாயமாக இருப்பதால், தமிழ் அறவே புறக்கணிக்கப்பட, இந்தியும், சமஸ்கிருதமும், மாணவர்கள் கற்கும் மொழியாகி, இறுதியில் தமிழே அறியும்.

மூன்றாவதாக, நீட் தேர்வு பொறியியல் படிப்புக்கும் கொண்டு வரப்பட இருப்பதால், ஒடுக்கப்பட்ட கிராமப்புற மாணவர்கள் இனி, பொறியியலும் படிக்க முடியாமல் போக, பட்டப்படிப்புகள் படித்து வேலை பெற முடியாது என்பதால் அவர்கள் படிப்பு பள்ளி படிப்போடு நிற்கும்.
நான்காவதாக, பள்ளிப் படிப்போடு நின்றால், கூலியாட்களாகத்தான் போக வேண்டிய கட்டாயம் வந்து தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற மாணவர்கள் பழைய நிலைக்குத் தள்ளப்படுவர்.

ஆக, 100 ஆண்டுகளில் முயன்று பெற்ற கல்வி, இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு, தமிழ் வளர்ச்சி, ஜாதி ஒழிப்பு என்று எல்லாவற்றையும் தகர்த்து, அவாளுக்கு மட்டும் கல்வி, வேலை தந்து, அவாள் மொழியை வளர்க்கும் ஒரே ஆயுதம், “நீட்” தேர்வு ஆகும்.

எனவே, “நீட்” தேர்வு வெறும் மருத்துவப் படிப்பை தடைசெய்வது மட்டுமல்ல; மாறாக, ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட, கிராமப்புற சமுதாயத்தையே அடி ஆழத்தில் தள்ளி நசுக்கி, அவர்களை அன்றாடக் கூலிகளாய் ஆக்கும் சூழ்ச்சிப் பொறியுமாகும்.

தொடர்ந்து போராடுவோம்

ஆகவே, நண்பர்களே நீங்கள் வருத்திக் கொண்டிருப்பது வீணாகாது, நாம் தொடர்ந்து போராடுவோம். அனைத்து தோழமைக் கட்சிகளும் தொடர்ந்து பல்வேறு தளங்களில் போராடி கொண்டிருக்கிறார்கள். இங்கே நீங்கள் வருத்திக் கொண்டு, தியாகம் செய்ததற்காக உங்களை நாங்கள் வெகுவாகப் பாராட்டுவதோடு, வருங்கால சந்ததியினருக்கு நாம் கொடுக்கின்ற விலை, அவர்கள் நல்வாழ்வுக்கு பாதுகாப்புக்கு நாம் எடுத்திருக்கின்ற முயற்சி என்று சொல்லி முடிக்கிறேன் என்று கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் “நீட்” நுழைவுத் தேர்வை எதிர்த்து நடைபெற்ற இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு நடத்திய பட்டினிப் போராட்டத்தில் கண்டன உரையாற்றினார். 

முன்னதாக இந்த பட்டினிப் போராட்டத்தை கல்வியாளர் எஸ்.எஸ்.இராஜகோபாலன் அவர் கள் துவக்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி தோழர் வீரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, மனித நேய மக்கள் கட்சி மாநிலத்தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மதிமுக மாநில துணைச் செயலாளர் மல்லை சத்யா, மனித நேய ஜனநாயக கட்சியின் மாநிலப் பொருளாளர் ஆரூன்ரசீக், இந்திய தொழிற்சங்க மய்யத்தின் பொதுச் செயலாளர் சிங்காரவேலு, தமிழ்நாடு அரசு  ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகி கலைச்செல்வி, மாதர் சங்க பொதுச் செயலாளர் பி.சுகந்தி, மின் ஊழியர் மத்திய அமைப்பு பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி உரையாற்றினர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் சுவாமிநாதன், பொதுப் பள்ளி களுக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் கல்வியாளர் பு.பா.பிரின்சு கஜேந்திரபாபு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில செய்தி தொடர்பாளர் இதயத்துல்லா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் ம.தாமோதரன், மக்கள் நல்வாழ்விற்கான மருத் துவர் அரங்கத்தின் செயல் தலைவர் மருத்துவர் ரெக்ஸ் சற்குணம், மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கத்தின் பொருளாளர் பாலாஜி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் தி.தினேஷ் ஆகியோர் பட்டினிப் போராட்ட கண்டன உரை நிகழ்த்தினர்.

முன்னதாக போராட்டத்திற்கு வந்தவர்களை இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் தீ.சந்துரு வரவேற்று பேசினார். போராட்டத்தை நிறைவு செய்து பங் கேற்றவர்களுக்கு பழச்சாறு கொடுத்து முடித்து வைத்து நிறைவுரையை இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்லீசயின் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் உரை நிகழ்த்தினார். வடசென்னை மாவட்டத் தலைவர் தோழர் விஜயகுமார் நன்றி கூறினார்.

இப்போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.உச்சிமாகாளி, துணைத் தலைவர் எம்.கண்ணன், துணைச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் எம்.பாரதி, வடசென்னை மாவட்ட செயலாளர் இ.சக்தி நாகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஜான்சிராணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

போராட்டத்தின் நிறைவு நிகழ்வில் திராவிடர் கழக தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணியம்மை, தென்சென்னை மாவட்டச் செயலாளர் பார்த்தசாரதி, துணைச் செயலாளர் கோவி.ராகவன், தொழிலாளரணி ராமலிங்கம், தரமணி மஞ்சுநாதன், செஞ்சி கதிரவன், பெரியார் திடல் சுரேஷ், கலைமணி, திருவொற்றியூர் கணேசன், யுவராஜ், உடுமலை வடிவேல், பசும்பொன் செந்தில்குமாரி, சீர்த்தி, வெண்ணிலா மற்றும் கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
-விடுதலை,3.8.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக