சனி, 24 அக்டோபர், 2015

பிஜேபி ஆட்சியில் ஓராண்டில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக 43 ஆயிரம் கொடுமைகள்! கொடுமைகள்!!


  • கொலையில் என்ன கவுரவக் கொலை?
  • உண்ணுவதற்கும், எண்ணுவதற்கும்கூட உரிமை இல்லையா?
பிஜேபி ஆட்சியில் ஓராண்டில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக
43 ஆயிரம் கொடுமைகள்! கொடுமைகள்!!
கண்டனங்கள் பெரியார் மண்ணிலிருந்து வெடித்துக் கிளம்புகின்றன
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் கண்டன உரை

சென்னை, அக்.22-   பிஜேபி ஆட்சியில் உண்ணும் உரிமை, எண்ணும் உரிமைக்குக்கூட ஆபத்து சூழ்ந்து விட்டது. கவுரவக் கொலைகள், நரபலிகள் தலை குனியத்தக்கவை! இவற்றை எதிர்த்து தந்தை பெரியார் பிறந்த பூமியிலிருந்து கண்டனக் கணைகள் வெடித்துக் கிளம்புகின்றன - இந்த ஆர்ப்பாட்டம் அதற்காகத்தான் என்று உரைத்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். 22.10.2015 அன்று சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது:
மத்திய அரசுக்கு  மாநில அரசு துணை போகிறது!
சிறுபான்மை மக்களுக்கும், மிகப்பெரும்பான்மையான  மக்களுக்கும்  விரோதமாக ஒரு இந்துத்துவப் போக்கு, ஜாதி வெறி, மதவெறி இவைகளையெல்லாம் தூக்கிப் பிடிக்கக்கூடிய ஒரு ஆட்சியாக மத்திய அரசு திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்கு மாநில அரசு துணை போகக்கூடிய அவல நிலைக்கு ஆளாகி இருக்கிறது.
இந்த நாட்டில் இதற்கு முன்பு கேள்விப்படாத ஒரு புதிய சொல்லாக்கம் வந்திருக்கிறது. அதுதான் கவுரவக் கொலை என்பதாகும். கொலை என்பதே அசிங்கப்படவேண்டிய, அருவருக்கத்தகுந்த, கண்டிக்கத்தகுந்த, ஒழிக்கத் தகுந்த ஒன்றாகும். அப்படி இருக்கக்கூடிய நிலையில், கொலைக்கு கவுரவக் கொலை என்று பெயர் கொடுத்திருப்பது நாகரிக மனிதர்கள் அனைவரும் தலைகுனியவேண்டிய ஒரு செய்தியாகும்.
கவுரவக் கொலைகள் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன
ஒருவரை ஒருவர் விரும்பி, அவர்கள் திருமணம் செய்துகொண்டால், யாரோ சிலர் அவர்களைக் கொல்வது என்று சொன்னால், நாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழுகிறோமா? அல்லது காட்டுமிராண்டி காலத்திற்குத் திரும்பிச் செல்கிறோமா என்பதுதான் மிக முக்கியமானது. அந்த வகையில், கவுரவக் கொலைகள் ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இன்னொருபக்கம் உச்சநீதிமன்றம் தெளிவாகத் தீர்ப்பு கொடுத்து, நாம் சுமார் ஒரு கால்நூற்றாண்டு காலம் போராடி, நுழைவுத் தேர்வை தமிழகத்தில் ஒழித்தோம். அதன் மூலம்தான் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் உள்ள அனைவரும், மருத்துவக் கல்லூரிகளில், பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. மீண்டும் நுழைவுத் தேர்வு என்று கொண்டுவரக்கூடிய அந்த அவலத்தை மத்திய அரசு நீட்டி முழங்கி, பதம் பார்க்கிறது - முன்னோட்டம் பார்க்கிறது.
கண்டிக்கத்தகுந்த நிலையில் நாம் இருக்கிறோம்
எனவேதான், அதனைக் கடுமையாகக் கண்டிக்கிறோம் என்பதை வலியுறுத்தக்கூடிய வகையிலும், கவுரவக் கொலை என்ற பெயராலே ஜாதி மறுப்புத் திருமணங்களை கொச்சைப்படுத்தக்கூடிய ஒரு அவலம் ஏற்பட்டிருப்ப தாலும், அத்தகையவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு சட்டமும், அரசும் இருப்பதால், அதனைக் கண்டிக்கத் தகுந்த நிலையில் நாம் இருக்கிறோம்.
அதுபோலவே, உண்ணுவது அவரவர்களுக்குரிய  உரிமை. எண்ணுவதும் அவரவர்களுடைய உரிமை. உண்ணுவதற்கும் உரிமையில்லை, எண்ணுவதற்கும் உரிமையில்லை என்று சொல்வதைப்போல, நான் என்ன சாப்பிடவேண்டும் என்பதை, அரசு அல்லது இந்துத்துவா வாதிகள் அல்லது மதவெறியர்கள், ஜாதி வெறியர்கள் அவர்கள் நிர்ணயித்தால், இந்த நாடு ஜனநாயக நாடா? என்கிற கேள்வி நிச்சயமாக எழத்தான் செய்யும்.
அந்த வகையில், நிச்சயமாக இன்றைக்கு மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்பது மட்டுமல்ல, யாரோ சிலர் சாப்பிட்டார்கள் என்கிற வதந்தியைக் கிளப்பினால்கூட, அவரைக் கொல்லக்கூடிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான், கோழி திருடியவனும் கூடவே குலவுகிறான் என்ற கிராமத்துப் பழ மொழியைப்போல, இப்பொழுது அவர்களும்கூட ஜாதி, மதவெறியை விட்டு எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் இப்பொழுது இதோபதேசம் செய்கிறார். இதைவிட வேடிக்கையான ஒரு விபரீதமான நிலை வேறு எதுவும் கிடையாது. குழந்தை யையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக்கூடிய ஓர் அவலம்தான் இது. ஆகவே, இதுபோன்ற நிலைமைகளை எடுத்துச் சொல்கிறோம் நாங்கள்.
மனித எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்படக்கூடிய அவலம் இருக்கிறது
இதுவரையில் இல்லாத பெரியார் பூமியில், பகுத்தறிவுப் பூமி என்று கருதப்பட்ட தமிழ்நாட்டில், மற்ற இடங்களில்  இருப்பதையெல்லாம்விட மூடநம்பிக்கைகள் குறைந்திருக் கக்கூடிய இந்தக் காலகட்டத்தில், மதுரையில், சகாயம் குழுவினர் குவாரிகளை ஆய்வு செய்யும் நேரத்தில், தோண்டித் தோண்டி எடுக்கும்பொழுது எலும்புக் கூடு களாக வருகின்றன. தங்கம் தோண்டி எடுத்த நாட்டில், நிலக்கரி தோண்டி எடுத்த நாட்டில், வெறும் மனித எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்படக்கூடிய அவலம் இருக்கிறது. நரபலிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்றால், நாமெல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்.
எனவே, நரபலியானாலும், கவுரக் கொலை என்கிற பெயரால் கொலை வெறியானாலும், பாலியல் வன் முறைக்கு ஆளாக்கப்பட்டாலும் - அண்மையில் வெளி வந்த செய்தி - அரியானாவில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளை எரித்துக் கொன்றிருக் கிறார்கள்  இதயமற்றவர்கள். யாருடைய ஆட்சியில்? பா.ஜ.க. ஆட்சியில்!
சமூகநீதி அடிப்படையில் நீதிபதிகளை நியமிக்கவேண்டும்
அதுமட்டுமல்ல, எல்லாவற்றையும்விட, இவைகளைப் பற்றியெல்லாம் தீர்ப்பு எழுதக்கூடிய இடம் நீதிமன்றங்கள். அந்த நீதிமன்றங்களில்கூட சமூகநீதி கடைபிடிக்கப்பட முடியாத ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. இப்பொழுது விரைவில் 400 நீதிபதிகள் நியமிக்கப்படக்கூடிய இந்தக் காலகட்டத்தில், சென்னை உயர்நீதிமன்றத்திலும் சரி, உச்சநீதிமன்றத்திலும் சரி, சமூகநீதி அடிப்படையில் நீதிபதிகளை நியமிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
எனவே, இந்த ஆர்ப்பாட்டம் என்பது சமுதாயத்தி னுடைய மிக முக்கிய பிரச்சினைகள் - நாடித் துடிப்பாக இருக்கக்கூடிய பிரச்சினைகளைப்பற்றி நாங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட - ஒரு சமுதாய இயக்கத்தினர் என்கிற முறையில் இதில் கவலை கொள்கிறோம் என்பதற்காகத்தான் தோழர்களே, இந்த ஆர்ப்பாட்டம்.
ஒன்றாக சேர்ந்து ஒரே மேடையில் முழங்காவிட்டாலும்கூட...
இந்த ஆர்ப்பாட்டம் சென்னையில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட தலைநகரங்களில் எல்லாம் நடைபெறுகிறது. இந்த நிலைமைகள் மிக மோசமாகப் போகக்கூடாது; தடுத்து நிறுத்தப்படவேண்டும். ஒத்த கருத்துள்ள அனைவரும், முற்போக்குச் சிந்தனையாளர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரே மேடையில் முழங்காவிட்டாலும் கூட, அனைவரும் அவரவர் எல்லையில் இருந்து கொண்டு கூட, அவரவர் மேடையில், அவரவர் தளத்தில் இருந்து கொண்டு கூட, இவற்றைக் கண்டித்து குரல் எழுப்ப வேண்டும்.
தமிழ்நாடு ஒரு முற்போக்கான  மாநிலம் என்பதை எடுத்துக்காட்டி, இந்தியாவிற்கு வழிகாட்டவேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். ஆகவேதான், இந்த ஆர்ப்பாட்ட முழக்கங்கள். பெரியார் மண்ணிலிருந்து இந்தக்கண்டனங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உரையாற்றினார்.
-------------------
தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக 43 ஆயிரம் கொடுமையோ கொடுமைகள்!
இன்றைக்குக் காலையில் வந்திருக்கின்ற ஒரு புள்ளி விவரம் - தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கு எதிராக 2014 ஆம் ஆண்டில் மட்டும் 43 ஆயிரம் கொடுமையான நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. அந்தச் சமுதாயத்து சகோதரிகளுக்கு எதிராக 2,233 பாலியல் வன்முறைகள் நடை பெற்று இருக்கின்றன என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை கொடுத்திருக்கிறது.
ஆகவே, இப்படிப்பட்ட கொடுமைகளை எதிர்த்து, ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்த வேண்டிய அளவிற்கு நிலைமைகள் மோசமாகிக் கொண்டிருக்கின்றன.
மாற்றம் வரும், மாற்றம் வரும் என்று சொன்னவர்கள், பெரிய ஏமாற்றத்தைத் தந்து கொண்டி ருக்கிறார்கள்.
-விடுதலை,22.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக