அ.மா.சாமி எழுதிய ஆதித்தனார் போராட்ட
வாழ்க்கை நூல் வெளியீட்டு விழா
தந்தை பெரியாரால் புரட்சி செய்தவர் என்று
பாராட்டப்பட்டவர் ஆதித்தனார்
திராவிடர் கழகத் தலைவர் தமிழர்
தலைவர் ஆசிரியர் உரை
சென்னை, ஜன. 6_- எழுத்தாளர், மூத்த பத்திரிகையா ளர் அ.மா.சாமி எழுதிய ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை நூல் வெளியீட்டு விழா உலகத் தமிழ்ப் பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் சென்னை மயிலாப்பூர் சி.அய்.டி. காலனியில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் நேற்று (5.1.2015) நடைபெற்றது. உலகத் தமிழ்ப் பண் பாட்டுக் கழகத் தலைவர் அ.இரபியுதீன் வரவேற்றார். மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.மோகன் தலை மையேற்று உரையாற்றினார்.
எழுத்தாளர், மூத்த பத்திரிகையாளர் அ.மா.சாமி எழுதிய ஆதித்தனார் போராட்ட வாழ்க்கை என்ற நூலை திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட தொழில திபர் வி.ஜி.சந்தோஷம் முதல் நூலைப் பெற்றுக்கொண்டார்.
விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு விழாக்குழுவின் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. நூலாசிரியர் அ.மா.சாமியைப் பாராட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து, பெரியார் களஞ்சியம் நூலை அன்பளிப்பாக வழங்கினார்கள்.
நீதியரசர் எஸ்.மோகன்
நீதியரசர் எஸ்.மோகன் தலைமையுரையில் குறிப்பிட்டதாவது: நீதிபதி ஒருவர் பதவியில் இருந்து விலகிவிட்டால் ஒரு காசும் கிடைக்காது. ஆனால், என்னைத் தேடி இந்த நூலை வெளியிட வேண்டும் என்று அழைத்தமைக்கு மிகவும் நன்றி.
ஆதித்தனார் என் கட்சிக்காரர். வாழ்க்கையில் போராட்டம் இருப்பதுண்டு. போராட்டமே வாழ்க்கை என்று ஆதித்தனார் இருந்தவர். நெருங்கிப் பழகியவன் நான். இந்தியாவிலேயே தினத்தந்தி முதல் இடத்தைப் பெற்றுள்ளது என்றால், அந்த அளவுக்கு முன்னேற்றி இருக்கிறார்கள். ஆதித்தனார் போராட் டத்தால் அது ஏற்பட்டது. முதலில் தமிழன். எத்தனை இன்னல் சொல்லி முடியாது. கையாலேயே கூழைக் கரைத்து, காகிதம் செய்தார். பாரிஸ்டர் வேலையா இது? இந்தியாவின் முதல் இடத்தைப் பெற்றுள்ள தமிழ் நாளிதழ் தினத்தந்தி உறுதி, நெஞ்சுறுதி மட்டு மன்றி உண்மைகளைத் துணிச்சலோடு செய்த மனிதர்.
ஆதித்தனாருக்கு பன்முகங்கள் உண்டு. ஏழைகளைப்பார்த்து இரங்குபவர். காலை முதல் இரவுவரை பாடுபடுபவர். 30 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களுக்கு என்று பத்திரிகைகள் கிடையாது. ஆதித்தனாரை, பெரியார் ஆதரித்து வந்தார். வழக்கு ரைஞர் தொழிலில் நிறைய சம்பாதித்திருக்க வேண்டி யவர் மக்களோடு மக்களாக உழைத்து, பெயரை சம் பாதித்தவர் ஆதித்தனார்.-இவ்வாறு தலைமை யுரையில் நீதியரசர் எஸ்.மோகன் குறிப்பிட்டார்.
தமிழர் தலைவர்
நூலை வெளியிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டதாவது:
தந்தை பெரியார் அறியாமையைக் களைவதில் புரட்சி செய்தார். சமூக மறுமலர்ச்சி, சமூகப் புரட்சி யின்மூலம் ரத்தம் சிந்தாத புரட்சியை ஆதித்தனார் செய்தார். Pen is mightier than sword. என்பதற்கேற்ப மொழிக்காக சிறந்த ஆயுதமாக பயன்படுத்தியவர். 1967ஆம் ஆண்டிலே பெரிய மாற்றம் தமிழகத்தில் வந்தது. மொழியை அடித்தளமாகக் கொண்டு ஆதித் தனார் செய்த தொண்டு சாதாரணமானதல்ல. எல் லோருக்கும், எளிய மக்களுக்கும் தொண்டாற்றியவர்.
நூலாசிரியர் அ.மா.சாமி அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பெரியார் களஞ்சியம் நூலினை வழங்கிப் பாராட்டினார்
அந்தக்காலத்தில் பத்திரிகைகள் மேல் ஜாதி, மேல் வர்க்கம் என்பவர்களிடம் இருந்தது. பாரத தேவி, சுதேசமித்திரன், ஹிந்து, பின்னாளில் தினமணி, சொக்க லிங்கத்தின் தினசரி என்று இருந்தது. தேனீர்க்கடையில் சென்று சேரும் வகையில் ஆதித்தனார் சேவை இருந்தது.
நான் மாணவப்பருவத்தில் இருந்தபோது இரண்டாம் உலக யுத்தம் நடந்த காலகட்டம். என்னு டைய 10, 11 வயதிலேயே தந்தை பெரியார் கொள்கை யில் ஒப்படைத்துக் கொண்ட போது தமிழன் வார ஏடு படித்திருக்கிறேன். என் மூத்த சகோதரர் செய்தித் தாள் விற்பனை செய்துகொண்டிருந்தார். அப்போது பல பத்திரிகைகளையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆதித்தனார் சிங்கப்பூரிலிருந்து இங்கு வந்து நடத்திய ஏடுதான் தமிழன். வார ஏடு உலகப்போரின் போது காகிதங்களுக்கு நெருக்கடியான கட்டத்தில் காகிதத்தைத் தானே தயாரித்தார். ஆதித்தனார் தந்தை பெரியாருக்கு பக்கத்து வீடு மட்டுமல்ல, பக்கத்து உறவாகவே இருந்தவர்.
சிங்கப்பூர் ஓ.இராமசாமி நாடார் காரைக்குடி மணச்சை பகுதியிலிருந்து 1929 ஆண்டில் சிங்கப்பூர் சென்றவர். இரண்டாம் முறையாக 1953ஆம் ஆண்டில் பர்மா சென்றவர்.
தந்தை பெரியார் சிங்கப்பூர் சென்றபோது முதல் முதலாக ரோல்ஸ்ராய்ஸ் கார்மூலம் பெரிய அளவில் வரவேற்றார். வரலாற்று உணர்வு இருக்க வேண்டும். நம் குடும்பத்தைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். நம்மில் பலருக்கும் தாத்தா, தாத்தாவுக்கு அப்பா பெயர் தெரிந்திருக்கும். தாத்தாவுக்கு தாத்தா பெயர் தெரியாது. அதை எழுதிவைக்கும் பழக்கம்கூட கிடையாது.
தமிழர் சீர்திருத்த சங்கம் அமைத்து தந்தை பெரியார் கொள்கைகளைச் சொல்வதற்கு, தமிழவேள் சாரங்கபாணி அந்த உணர்வை, அந்த வரலாற்றை உருவாக்கினார்கள். கடல்கடந்த உணர்வு அது. கே.டிகே.தங்கமணி, செல்லமணி ஆதித்தனார் எல்லோருமே பார் அட்லா பட்டம் பெற்றவர்கள். சமுதாயத்துக்குத்தான் பாடுபட்டார்கள்.
நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டோர்...
இந்த உணர்வுகளை உருவாக் கினார்கள். பத்திரிகை நடத்தினார்கள். தமிழர்கள் தங்கள் அடையாளத்தை இழந்துவிட்டார்களே, ஓர் இனம் தங்கள் மொழி, இன அடையாளங்களை இழக் கக்கூடாது என்று ஆதித்தனார் பத்திரிகை நடத் தினார். தினத்தந்தி அலுவலகம் பெரியார் திடலில் இருப்பதுபோன்று, கொள்கையிலும் தந்தை பெரியாரின் பக்கத்தில் இருந்தார்.
1960ஆம் ஆண்டில் என் திருமணம். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நடத்தி வைத்தார்கள். அப்போது சுதந்திர தமிழ்நாடு போராட்டம், தமிழ்நாடு நீங்கலாக படத்தை எரிப்பு போராட்டம் அறிவிக்கப் பட்ட நிலை. 25 வயதிலே திருச்சி பெரியார் மாளிகையிலே என்னுடைய திருமணம் நடைபெற்ற போது, தினத்தந்தி அ.மாரிச்சாமி செய்தியாளராக இருந்தவர்.
செய்தியாளர்களை எப்போதுமே தந்தை பெரியார் எதிர்பார்ப்பதில்லை. நான் என்ன பேசினாலும் அதைப் போட மாட்டீர்கள். நான் மக்களை சந்திப்பவன். பத்திரிகை தயவு எனக்கு வேண்டியதில்லை என்று கூறுபவர். ஆனாலும், விதிவிலக்கு அ.மாரிச்சாமிக்கு உண்டு. தந்தை பெரியார் வேனிலேயே பயணம் செய்ய அ.மா.சாமிக்கு மட்டும் இடம் உண்டு. நான், புலவர் இமயவரம்பன் உடன் இருப்போம்.
காலச்சுவடு என்று வரும்போது, பிடிக்கவில்லை என்றாலும், செய்திகளை செய்திகளாகவே கொடுக்க வேண்டும். சிந்தாதிரிப்பேட்டையில் தந்தை பெரியார் கைது செய்யப்பட்டபோது, கழகச் செயலாளர் நான், தந்தை பெரியாரின் செயலாளர் புலவர் இமயவரம்பன், விடுதலை ஆசிரியர் குருசாமி கைது செய்யப்பட்டோம்.
நாங்கள் அடைக்கப்பட்ட சிறையில் அடுத்த அறையில் ஆதித்தனார் இருந்தார். ஆதித்தனார் இலக்கியத்தை சத்தமாகப் படிப்பார். தந்தை பெரியார், ஆதித்தனார் இருவரும் தந்தை மகன் உறவுபோல் பேசுவார்கள். பல வரலாற்றுத் தகவல்களைப் பேசிக்கொள்வார்கள். பெரியாரும், ஆதித்தனாரும் பேசும்போது நாங்கள் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்போம்.
ஆதித்தனார் விவசாயிகளுக்காகப் போராட்டத்தில் பங்கேற்றபோது கை விலங்கு போட்டு கைது செய்யப் பட்டார். பார் அட்லா படித்தவர் என்கிற அந்தஸ்து, செல்வாக்குகளைப் பார்க்காமல் சாதாரணமானவராகவே சென்றார். லேனா தமிழ்வாணன் கூறியதுபோல் ஆதித்தனார் சாதித்தனார் என்பதில் சாதியைமட்டும் அடையாளமாக்க முற்படுகிறார்கள்.
உயர்ஜாதி, உயர் வர்க்கம் கைகளிலிருந்த பத்திரிகைத் துறையில் எளிய மக்களுக்காக புரட்சி செய்தவர். என்று தந்தை பெரியார் அவர்கள் கூறினார். ஜாதி தீண்டாமை பாகம் 9 இல் தந்தை பெரியார் ஆதித்தனார்குறித்து கூறியதை அப்படியே போட்டுள்ளோம். இதுவரையிலும் 35, 40க்கும் மேல் களஞ்சியம் வந்துள்ளது.
பார்ப்பனர்கள் கைகளில் வலிமையான ஆயுதமாக பத்திரிகைகள் இருந்தன. அமைச்சராக இருந்தபோது பொப்பிலி அரசர் கஸ்தூரி அய்யங்காருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் பொப்பிலியரசர் சென்று பார்ப்பார். ஏனென்றால், பத்திரிகை தயவு அவர்களுக்கு வேண்டி யிருந்தது. நான் மக்களிடம் தினமும் 10ஆயிரம்பேரிடம் பேசி வருபவன் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவார்கள்.
இந்த பத்திரிகைத்துறை அனைத்தும் பார்ப்பனர் களிடம் உள்ளது. ஜஸ்டிஸ் கட்சி நஷ்டம் அடைந்து, பத்திரிகை ஆபீஸ் ஏலத்துக்கு வந்தது. அதை நான்தான் எடுத்தேன் என்றார். ஏலத்துக்கு எடுக்கப்பட்டதுதான் இன்றைக்கும் விடுதலை நாளிதழாக உள்ளது.
ஆதித்தனார் Innovation புத்தாக்கம் செய்தவர். பெரியார் ஓவியக்காரர், போட்டோ கலைஞர் அல்ல. எக்ஸ்ரே நிபுணர்போல்தான் பேசுவார். உள்ளதை உள்ளவாறே பேசுவார். நண்பர் ஆதித்தனார் கஷ்ட, நஷ்டம் பட்டார். அவர் பத்திரிகை பார்ப்பனப் பத்திரிகைகளின் பல்லைப் பிடுங்கிவிட்டது. அதற்காக அதில் உள்ள செய்திகளை எல்லாம் ஆதரிக்கிறேன் என்பதல்ல. (இது கொள்கை) புரட்சியைச் செய்தார் என்று பெரியார் பேசியுள்ளார்.
அதற்கு முன் தேசிய இயக்கங்களின் தலைவர்கள் பெயரில் பத்திரிகை ஆசிரியர்களே அறிக்கை வெளியிடுவார்கள். தினத்தந்தி வந்தபின் மாற்றினார்கள்.
ஏட்டின் கருத்தை ஏற்கலாம் ஏற்காமல் போகலாம். சமூக அநீதியாக இருந்ததை, நான்காவது தூணாக மாற்றி யவர் ஆதித்தனார். ஏழை, எளிய அடித்தள மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது. ஆதித்தனார் உயிர் தமிழுக்கு என்றார்.
அண்ணா தமிழருக்கு அளவு கோல் என்று கூறும்போது, மொழியால், விழியால், வழியால் தமிழர் என்று கூறுவார். ஆதித்தனார் சபாநாயகராக இருந்தபோது திருக்குறள் சட்டசபை நிகழ்ச்சியில் இடம்பெற்றது. தினத்தந்தியில் கேலிச்சித்திரம் அருமையாக வரும். குறுந்தாடியுடன் ஆதித்தனார் காந்தி நகரில் இருப்பார். நான் கஸ்தூரிபாய் நகரிலிருந்தேன்.
அப்போது அவரது இல்லம் செல்வேன். இரவு 1 மணிவரை பேசிக்கொண்டிருப்போம். பேசிக்கோண்டிருக்கும்போதே எட்டு காலச் செய்திகுறித்து பேசுவார். தமிழ்நாட்டில் பொதுவாழ்க்கை சாதாரணமானதல்ல. அவருடைய தாடிகுறித்தெல்லாம் எழுதினார்கள். அப்போது வழக்கு போடவேண்டும் என்றபோது வேண்டாம் என்று ஆதித்தனார் மறுத்துவிட்டார். இன்றைக்கு கொள்கை வழியில் எழுதும்போதுகூட வழக்கு என்கிறார்கள். சகிப்புத்தன்மையே இல்லை.
பல்கலைக்கழகங்களில் இதழியல் துறையில் இந்த நூல் பாடமாக வைக்கப்பட் வேண்டும். அரசியல், மொழி, பண்பாடு துறைகளில் மாற்றம் ஏற்பட்டது. தனியாருக்கு உரிமை உள்ளது என்றாலும், பொது உரிமையை உடையது. ஆதித்தனார் மாணவர் அ.மா.சாமி எழுதிய நூலை வெளியிட பெரியாரின் மாணவனாகிய எனக்கு அற்புதமான வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.
-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உரையில் குறிப்பிட்டார்.
விழாவில் உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகப் பொதுச்செயலாளர் அ.அய்யூப், எழுத்தாளர், ஊடக வியலாளர் கோமல் ஆர்.கே. அன்பரசன் பேசினார்கள்.
விழாவில் காங்கிரசு கட்சியின் மூத்தத் தலைவர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், தஞ்சை கூத்தரசன், ஊடகவி யலாளர்கள் லேனா தமிழ்வாணன், வசீகரன், மாநில பகுத்தறிவாளர் கழகப்பொதுச்செயலாளர் வீ.குமரேசன், பகுத்தறிவாளர் கழக வட சென்னை மாவட்டத் துணைத்தலைவர் வெங்கடேசன், திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் மயிலை சேதுராமன், எம்.கே.காளத்தி, சண்முகப்பிரியன், பொறியாளர் குமார், பெரியார் மாணாக்கன் உள்பட பலரும் கலந்துகொண்டார்கள்.
உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் அப்துல் வகாப் நன்றி கூறினார்.
-விடுதலை,6.1.15,பக்-8
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக