வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

பிப். 21இல் தஞ்சையில் நடைபெறும் இருபெரும் மாநாட்டிற்குத் தனிப் பேருந்து, வேன், தொடர் வண்டிகளில் பயணித்துப் பெருந்திரளாகப் பங்கேற்போம் ஏழு மாவட்ட கழக அமைப்புகளின் கலந்துரையாடலில் முடிவு(சென்னை சார்ந்த மாவட்டங்கள்)



திராவிடர் கழகம்

சென்னை, பிப். 13– கும்மிடிப்பூண்டி, வடசென்னை, தென்சென்னை, ஆவடி, திருவொற்றியூர், தாம்பரம், சோழிங்கநல்லூர் மாவட்ட கழக அமைப்புகளின் கலந்துரையாடல் கூட்டம் 9.2.2026 அன்று மாலை 5.45 மணிக்கு சென்னை பெரியார் திடல் – அன்னை நாகம்மையார் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்தார். கழகப் பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் பங்கேற்று கருத்துரையாற்றினார்.

திராவிடர் கழகம்

கழக துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, மாநில கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால், மாநில மகளிரணி துணைச் செயலாளர் வீ.கா.ரா.பெரியார் செல்வி, மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் ஆகியோர் தஞ்சை இருபெரும் மாநாட்டில் தோழர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென்பது பற்றியும், மாநாட்டுப் பணிகள் குறித்தும் பேசினர்.

ஏழு மாவட்டங்கள்

தாம்பரம், தென்சென்னை, வடசென்னை, கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், திருவொற்றியூர் கழக மாவட்டங்களின் தலைவர்கள் ப.முத்தையன், இரா.வில்வநாதன், வழக்குரைஞர் தளபதி பாண்டியன், புழல் த.ஆனந்தன், வே.பாண்டு, வெ.மு.மோகன், ஆவடி மாவட்ட கழக செயலாளர் க.இளவரசன், நீலாங்கரை மாவட்ட கழக காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன் ஆகியோர் பேசினர்.

மாவட்டத் தலைவர்கள் உரையாற்றும்போது, மேற்கண்ட மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து அணிகளின் கழகத் தோழர்கள் பெருமளவில் மாநாட்டில் கலந்து கொள்ள இருப்பதை – எண்ணிக்கையைக் குறிப்பிட்டனர். மாநாட்டை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள சுவரெழுத்துப் பணிகள் பற்றியும், பேருந்து, வேன் ஆகியன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்தும் இக்கலந்துரையாடல் கூட்டத்தில் எடுத்துக் கூறினர்.

இக்கூட்டத்தில் பங்கேற்று கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் கருத்துரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழர் தலைவரின் அறிவிப்பு

குறுகிய காலமே உள்ள நிலை என்றாலும், கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பிப். 21 அன்று தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் என்று அறிவித்தார். அறிவித்தவுடன் தஞ்சை மற்றும் சுற்றியுள்ள 11 மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் மாநாட்டுப் பணிகளை உடடினயாகத் தொடங்கி விட்டனர். மும்முரமாக மாநாட்டுப் பணிகள் நடந்தவாறு உள்ளன.

எழுச்சிக்குக் குறைவில்லை

செங்கற்பட்டு – மறைமலைநகரில் நடந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டையும், மகத்தான பேரணியையும் கண்டவர் அனைவரும் திகைத்து நின்றனர். சற்றும் எழுச்சிக்குக் குறைவில்லை.

தஞ்சை மாநாட்டிற்கு சென்னை மாநகரைச் சார்ந்துள்ள இந்த ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் பெருமளவில் வரவேண்டும். தோழர்கள் – ஆதரவாளர்கள், நண்பர்களோடு மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். மாநாட்டுப் பேரணி சிறப்பாக நடைபெறும். பேரணியில் ஒவ்வொரு கழக அணியினர் மட்டுமே உள்ளவாறு – அணி அணியாக வரவேண்டும். அதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.

இளைஞர்கள் ஆர்வத்தோடு இந்த இயக்கத்தில் இணை கின்றனர். புதிது புதிதாகத் தோழர்கள் வந்து இணைகின்றனர். இயக்கத்திற்கு ஆதரவு பெருகி வருகின்றது.

மாநாட்டுப் பிரச்சாரம் செய்வீர்

கழகத் தோழர்கள் சுவரெழுத்து, பதாகைகள், டிஜிட்டல், சோசியல் மீடியா, கைப்பேசிப் பதிவுகள் மூலமாக இந்த மாநாடு குறித்தும், மாநாட்டில் பங்கேற்க வேண்டிய அவசியம் பற்றியும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அண்மையில் தஞ்சைக்குச் சென்றேன். மாநாடு நடைபெறுகின்ற தஞ்சை திலகர் திடல் – அண்ணா அரங்கம் ஆகியவற்றுக்கு கழகப் பொறுப்பாளர்களோடு சென்று – பார்வையிட்டு மாநாட்டுப் பணிகள் குறித்து கலந்துரையாடினோம். மாநாட்டில் பங்கேற்க இருக்கின்ற கழகத் தோழர்களுக்கு உரிய வசதிகள் செய்யப்படுவது பற்றியும் ஆலோசனை நடைபெற்றது.

அந்த மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் உற்சாகமாகப் பணி செய்து வருகின்றனர். அந்தத் தோழர்களோடு நானும் இணைந்து தஞ்சைக்கு வருகின்ற உங்களை – கழகத் தோழர்களை வரவேற்பதற்கென்று ஆவலாக காத்திருக்கின்றேன். அனைவரும் திரண்டு வாருங்கள் என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து நிறைவாக கழகத் துணைத் தலைவர் உரையாற்றினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது,

கழகத் துணைத் தலைவர் உரை

முக்கியமானதொரு காலத்தில் நம்முடைய கழகத் தலைவர் அறிவித்துள்ள மாநாடுதான் – தஞ்சையில் நடைபெறப்போகின்ற மாநாடு.

இந்த மாநாட்டில் இளைஞர்கள் பெருவாரியாகக் கலந்து கொள்ள வேண்டும். புதிய தோழர்கள் – பொது மக்களை மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும். அதற்கேற்றாற் போன்று மாநாட்டினை நல்ல முறையில் விளம்பரம் செய்ய வேண்டும்.

வாழ்க்கை முறை

திராவிடர் கழகம் என்பதே கூட வாழ்க்கை முறைதான். ஒழுக்கம் – நெறி – கொள்கைப் பற்று – மனிதநேயம் இவை பின்னிப் பிணைந்ததுதான் திராவிடர் கழகம். புதிய தோழர்கள் பங்கேற்கும்போது இவற்றின்பால் நிச்சயம் ஈர்க்கப்படுவார்கள். நம்முடைய பயனுக்காக அல்ல. மக்களிடம் இந்தக் கொள்கை ஆழமாக வேரூன்றுகின்ற போதுதான் அவர்களின் வாழ்க்கை முறையில் நல்ல மாற்றத்தைப் பெற முடியும்.

ஆரிய ராஜ்ஜியம் வர விடக்கூடாது

தமிழ்நாடு இந்த இயக்கத்தை நம்பித்தான் இருக்கின்றது. “பெரியார் பிம்பத்தை உடைத்துக் காட்டுவோம்” என்று துடியாய்த் துடித்து வருகின்றார்கள். பாசிச பா.ஜ.க. வீழ்த்தப்பட வேண்டும். இந்த மண்ணில் கோலோச்ச நினைக்கின்ற ஆரிய ராஜ்ஜியம் வரவிடக் கூடாது.

செங்கற்பட்டு – மறைமலைநகர் மாநாட்டில் இளைஞர்கள் திரண்டு வந்து கலந்து கொண்டார்கள். சுயமரியாதைப் பிரச்சாரத்திற்கு சமுதாயத்தில் மிகப்பெரிய தாக்கத்தையும், அழுத்தத்தையும் ஏற்படுத்திய மாநாடு அது.

தஞ்சை மாநாடு தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் இரண்டு மாதமே உள்ள நிலையில் நடக்க இருக்கின்ற மாநாடு. கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் என்ன முடிவெடுத்து, அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக எழுந்துள்ளது.

பிரதமர் மோடி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. இருந்தும் தமிழ்நாட்டில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கடுமையாக முயற்சி செய்வார்கள்.

மாற்றம் வரும்

மீண்டும் தி.மு.க. ஆட்சி என்பதற்கு கழகத் தோழர்கள் இளைஞர்கள் கடுமையாகப் பாடுபட வேண்டும். 2026இல் தி.மு.க. வெற்றி என்பது அகில இந்திய அளவில் நிச்சயம் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும்.

தஞ்சை மாநாடு நமது கொள்கை – இலட்சியத்திற்கு வலிமை ஏற்படுத்துகின்ற மாநாடு. மாநாட்டுப் பணிகளைச் சிறப்பாகச் செய்யுங்கள். மாநாட்டிற்குத் திரண்டு வாருங்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

வீ.அன்புராஜ் அவர்களுக்குப் பாராட்டு

அண்மையில், சென்னை பல்கலைக்கழகத்தில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தில் இதனைக் குறிப்பிட்டு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பாராட்டிப் பேசியபோது, கூட்டத்தில் பங்கேற்ற கழகத் தோழர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அவருக்கு வாழ்த்து கூறினர். இதற்காக அம்பத்தூர் கழகத் தோழர் ஆ.வெ.நடராஜன் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் ரூ.500 நன்கொடை வழங்கினார்.

பெரியார் பிஞ்சு யாழ் தமிழ் கணீரென்ற குரலில் கடவுள் மறுப்புக் கூறியதை வெகுவாகப் பாராட்டிய கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் முன்னிலையில், நீலாங்கரை
ஆர்.டி.வீரபத்திரன் யாழ் தமிழுக்கு ரூ.500 பரிசு அளித்தார்.

தஞ்சை மாநாட்டில் ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள் தனிப் பேருந்து, தனி வேன், தொடர் வண்டிகள், அரசு-தனியார் பேருந்துகளில் என அனைத்து வகை வாகனங்களிலும் பயணித்துப் பெருந்திரளாகக் கலந்து கொள்வது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

பங்கேற்றோர்

திராவிட தொழிலாளர் பேரவைத் தலைவர் கருப்பட்டி சிவா, புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் செல்வ.மீனாட்சிசுந்தரம், மாநில கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி, வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், சோழிங்கநல்லூர் மாவட்ட செயலாளர் க.தமிழினியன், நெய்வேலி வெ.ஞானசேகரன், கி.இராமலிங்கம், நா.பார்த்திபன், ப.கோபாலகிருஷ்ணன், கோ.தங்கமணி, ந.கார்த்திக், க.துரை, வீ.கே.ஆர். பெர்னாட்ஷா, தங்க.தனலட்சுமி, த.மரகதமணி, மு.செல்வி, த.இளவரசி, எஸ்.நூர்ஜஹான், வழக்குரைஞர் துரை.அருண், கரு.அண்ணாமலை, கோ.வீ.ராகவன், மு.சண்முகப்பிரியன், க.சுப்ரமணியன், சா.தாமோதரன், ச.மாரியப்பன், இரா.இரவி, புழல் மு.உதயகுமார், ஆ.இர.சிவசாமி, தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், கூடுவாஞ்சேரி மா.இராசு, தனசேகரன், பூவை. க.தமிழ்ச்செல்வன், க.ச.பெரியார் மாணாக்கன், வை.கலையரசன், ம.சக்திவேல், இரா.கலைச்செல்வன், இ.தமிழ்மணி, மு.நித்தியானந்தன், சு.வெங்கடேசன், பி.சி.ஜெயராமன், மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.

நிறைவாக, தென்சென்னை மாவட்ட கழக செயலாளர் செ.ர.பார்த்தசாதி நன்றி கூறினார்.

- விடுதலையின் நாளேடு, 13.02.2026

செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

நான்கு தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான முழு நாள் கருத்தரங்கம் ஒரு பார்வை

சமூக ஊடக செயற்பாட்டாளர் குழு(SMAG), வழக்குரைஞர் பு. பாலகோபால் அறக்கட்டளை  இணைந்து நடத்திய
நான்கு தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான முழு நாள் கருத்தரங்கம் சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கத்தில் 07.02.2026ஆம் நாள் நடைபெற்றது.

வழக்குரைஞர் தளபதி பாண்டியன்  (செயலாளர், சமூக ஊடக செயல்பாட்டாளர் குழு ) வரவேற்புரை ஆற்றினார். கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) அவர்கள் தொடக்க உரையாற்றினார். வழக்குரைஞர் பு.பா.சுரேஷ்பாபு (வழக்குரைஞர் பி.பாலகோபால் அறக்கட்டளை)  தொடக்க உரையாற்றினார். திருச்சி மு.சேகர் (மாநில செயலாளர், திராவிடர் கழகத் தொழிலாளரணி) தலைமையில் இந் நகழ்ச்சி நடைபெற்றது. : தொ.மு.ச, ஏ.அய்.டி.யு.சி, சி.அய்.டி.யு, அய்.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ், டி.அய்.எல்.எப், ஏ.ஏ.எல்.எப், எம்.எல்.எப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கருத்துரை வழங்கினர். கருப்பட்டி சிவா (தலைவர், திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை) நன்றி உரையாற்றினார்.

கருத்தரங்கில் முழுமையாக பங்கேற்ற சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொழிலாளர் நல சட்டங்களிலிருந்து 29 சட்டங்களை திருத்தி நான்கு தொகுப்பு சட்டங்களாக ஒன்றிய அரசு 21.11.2025 ஆம் நாள் முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது. 

1. ஊதிய சட்டம் - 2019 
2. தொழில் உறவு சட்டங்கள் -2020
3. சமூக பாதுகாப்பு சட்டம் - 2020
4. பணியிட பாதுகாப்பு சட்டம் மற்றும் பணிச் சூழல் சட்டம் - 2020

இட் சட்டங்கள் குறித்த நன்மை தீமைகள் குறித்து அலசி ஆராயப்பட்டது. 

புதிய நான்கு சட்டங்களில் உள்ள சில பகுதிகளை பற்றி பார்ப்போம்: 

1. ஊதியம் 
'அனைத்து தொழிலாளர்களுக்கும் 'குறைந்தபட்ச ஊதியம்'  உறுதிப்படுத்தப்பட வேண்டும்' என்று கூறுகிறது. 
1(அ) அடிப்படை ஊதியம் 
'மொத்த சம்பளத் தொகையில் அடிப்படை ஊதியம் 50 விழுக்காடு இருக்க வேண்டும்'. 
இது தீர்ப்புகளில் சொல்லப்பட்டது தான். அதை சட்டமாக மாற்றி உள்ளனர்.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஏற்கனவே குறைந்தபட்ச ஊதியம் நடைமுறையில் உள்ளது. 
தொழிற்சாலை பணியாளர்களுக்கு மட்டும்தான் குறைந்தபட்ச ஊதியம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2. சேர்க்கை ஆணை மடல் 
தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்துக் கொள்ளும்போது 'பணி நியமன ஆணை'வழங்கப்பட வேண்டும்' என்று சொல்கிறது. 
பொதுவாக தொழிற்சாலைகளில் முதலில் தற்காலிக தொழிலாளர்களாக சேர்ந்து கொள்கின்றனர். பிறகு தனக்கு ஏற்புடையவராக இருந்தால் தொழில் பழகுநர் கடிதம் கொடுத்து; பிறகு நிரந்தரப்படுத்தி கொள்கிறார்கள். 
ஆனால் இந்த சட்டத்தில் தொழிற்சாலைக்குள் வேலைக்காக சேர்க்கப்பட்டவர்கள்; தற்காலிக தொழிலாளர்களோ, பதிலியோ, தொழில் பழகுநரோ, ஒப்பந்த தொழிலாளரோ யாராகயிருந்தாலும் அவர்களுக்கு 'சேர்க்கை ஆணை மடல்' வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

3. சம வேலைக்கு சம ஊதியம் 
'ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க வேண்டும்' என்று கூறுகிறது. 
இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான். 

4. இரவுப் பணியில் பெண்கள்
இரவு நேரத்திலும் பெண்களை வேலை செய்ய அனுமதிக்கிறது இந்த சட்டம். 
இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான். 
முதலில் சில துறைகளுக்கு மட்டும் இரவு பணியில் பெண்கள் பணி செய்ய அனுமதிக்கப்பட்டனர். பிறகு 10 பேர் சேர்ந்து ஒப்புக் கொண்டு கடிதம் கொடுத்தால் பாதுகாப்புடன்; அதாவது வீடு வரை பாதுகாப்புடன் கூடிய போக்குவரத்து வண்டி ஏற்பாடு செய்து தர வேண்டுமென இருந்து வருகிறது. 
இது தீர்ப்பின் மூலம் நடைமுறையில் இருந்து வந்தது. 
அதை சட்டமாகவே மாற்றியிருக்கிறார்கள். 

5. பணிக்கொடை 
அய்ந்து ஆண்டுகள் பணி முடித்தால்தான் பணிக்கொடை கிடைக்கும் என சட்டம் இருந்தது. அதை ஓராண்டாக மாற்றி உள்ளனர்.

6. பொது மருத்துவ பரிசோதனை
40 தொழிலாளர்களுக்கு மேல் பணி செய்யும் இடங்களில் ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

7.PF, ESI, காப்பீடு மற்றும் சமூக பாதுகாப்பு சலுகை 
இவை அனைத்து தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. 
இதுவும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்கள் தான்.
முதல் நாளிலிருந்தே வழங்கப்பட  வேண்டும் என்று தற்போது கூறுகிறது.

சட்டவிரோதமாக பல தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இச் சலுகைகளை வழங்காமல் இருக்கின்றன என்பதுதான் உண்மை.

8. இரட்டிப்பு ஊதியம் 
அனுமதி நேரத்திற்கு மேல் வேலை செய்யும் மணி நேரங்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வழிவகை செய்கிறது. 
இதுவும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் சட்டம் தான். 

9. அபாயகரமான துறைகளில் நூறு விழுக்காடு பாதுகாப்பு. இதுவும் ஏற்கனவே உள்ளது தான்.

10. 500 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளில் பாதுகாப்புக்குழு அமைக்கப்பட வேண்டும். 

11. பணியிடத்தில் பெண்கள் பாதுகாப்பு 
பணியிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்குழு ஒன்றும் அமைக்கப்பட வேண்டும்; அதில் பெண் ஒருவர் கட்டாயம் இருக்க வேண்டும். 

இது ஏற்கனவே தீர்ப்பின் மூலம் 2013ஆம் ஆண்டுசட்டம் நடைமுறையில் உள்ளது. அதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

12. தொழிற் சங்கங்கள் தொடங்க வேண்டுமானால் தொழில் 
நிறுவனத்தின் அனுமதி வேண்டும். 

இது தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதாகும்.

13. தொழிற்சாலைகளை மூடுவதற்கு அல்லது ஆட்குறைப்பு செய்வதற்கு 
100 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளை மூடுவதற்கு அல்லது ஆட்குறைப்பு செய்வதற்கு அரசு அனுமதி பெற வேண்டும் என்ற முறை மாற்றப்பட்டு 300 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள தொழிற்சாலைகளை மூடுவதற்கு அல்லது ஆட்குறைப்பு செய்வதற்கு அரசு அனுமதி பெற வேண்டும் என மாற்றப்பட்டுள்ளது.

14. குறைதீர் குழு (Grievance Redressal Committee): 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் கட்டாயமாகப் பணியாளர் குறைதீர் குழு அமைக்கப்பட வேண்டும். 

100 தொழிலாளர்களுக்கு மேல் இருக்கும் தொழிற்சாலைகளில் வேலைக் குழு (Works Committee) சட்டப்படி அமைக்கப்பட வேண்டும் என்று இருந்தது. 
இதைத்தான் 'குறைதீர் குழு' என்ற பெயரில் மாற்றி அமைத்துள்ளது.

தொழிற் சங்கங்கள் தொடர்பான சட்டங்களை(தொழிற்சங்கங்கள் சட்டம் மற்றும் தொழிற் தகராறு சட்டம்), தொழிலாளர்களை மிகுதியாக பாதிக்கும் வகையில் திருத்தியுள்ளனர் என்பது தான் அனைவருடைய கவலையும் ஆகும்.
ஆகையினால் தான் தொழிலாளர்கள் இச் சட்டங்களை எதிர்த்து போராடி வருகிறார்கள். 

முக்கிய தொழிலாளர் சட்டங்கள் குறித்த நூல்கள் வருமாறு
தமிழில் தொழிலாளர் சட்டங்கள் அடங்கிய நூல்
தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் தமிழ்நாடு அரசு தொழிற்சாலைகள் சட்டம் (அரசு உரிமம் பெற்ற நூல்)
தொழிற்சாலைகள் சட்டம் (ஒன்றிய அரசே 1954 இல் வெளியிட்ட தமிழ் நூல்)
மாதிரி நிலையானைகள் சட்டம்


.

 

 

திங்கள், 9 பிப்ரவரி, 2026

பெரியார் பெருந்தொண்டர் தி.இரா. இரத்தினசாமி - இர. ஆதிலட்சுமி படத்திறப்பு நிகழ்ச்சி



சென்னை பெரியார் மய்யம், நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 08.02.2026 முற்பகல் 10:30 மணி அளவில் பெரியார் பெருந்தொண்டர் தி.இரா. இரத்தினசாமி - இர.ஆதிலட்சுமி ஆகியோரின் படத்திறப்பு நிகழ்ச்சியும், ஆவண காணொலி மற்றும் நினைவுமலர் வெளியீட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் படத்தை திறந்து வைத்து புகழ் உரை ஆற்றினார்.

கழகத் தோழர்கள், வணிகப் பெருமக்கள், ஆதிமாறன், வந்திய தேவன், திருமுருகன் காந்தி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் மற்றும் பலர் உரையாற்றினர். 

நிகழ்வுக்கு வந்திருந்த அனைவருக்கும் 'நினைவு மலர்' வழங்கப்பட்டது.

நினைவு மலர் அடங்கிய கைப்பை 
நினைவு மலர் 
நினைவு மலர் வெளியீடு 
தி.இரா.இரத்னசாமி - இர.ஆதிலட்சுமி
படத்திறப்பு 
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி புகழ் உரை 

-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் 1996 ஜனவரி 4 5 6 ஆகிய மூன்று நாட்களில் நான்காவது உலக நாத்திகர் மாநாடு நடைபெற்றது. 

அந்த மாநாட்டிற்கு தமிழ்நாட்டில் இருந்து 120 பேர் ' பினாகினி விரைவு தொடர்வண்டி' மூலம் சென்றனர்.

அதில் சென்னையில் இருந்து புறப்பட்ட தாம்பரம் மற்றும் சென்னை தோழர்கள் ஒரு குழுவாக இருந்தனர். 

அதில் தி.இரா.இரத்தினசாமி, ஆர்.டி. வீரபத்திரன், தாம்பரம் ப.முத்தையன், தென் சென்னை செ.ர.பார்த்தசாரதி மற்றும் பலர் அடங்குவர். 
விஜயவாடா உலக நாத்திகர் மாநாட்டின் நுழைவு வாயிலில்
ஆஸ்திரேலியா பகுத்தறிவாளருடன்
இங்கிலாந்து பகுத்தறிவாளருடன்
வெளிநாட்டு (நாட்டின் பெயர் தெரியவில்லை)பகுத்தறிவாளருடன்
விஜயவாடா தெருக்களில் 'கடவுள் மறுப்பு' தத்துவத்தை தெலுங்கில் அச்சிட்டு துண்டறிக்கையாக வழங்குதல்.
விஜயவாடா கிருஷ்ணா ஆற்றின் 'கிருஷ்ணா சாகர்' அணையின் மேற்புறம்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி . வீரமணி அவர்களுடன் தி.இரா. இரத்தினசாமி
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களுடன் தி.இரா. இரத்தினசாமி.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுடன் தி.இரா. இரத்தினசாமி.
தி.இரா. இரத்தினசாமி அவர்களும் அவரின் இணையர் இர. ஆதிலட்சுமி அவர்களும்.

தி.இரா. இரத்தினசாமி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு தி.இரா.இரத்தினசாமி (வயது 82) அவர்கள்  14.10.2025 மறைவுற்றார்.

  உழைப்பால் உயர்ந்த கொள்கை வீரராவார்! தூத்துக்குடி மாவட்டம் பண்டாரபுரத்திலிருந்து 70 ஆண்டுகளுக்குமுன் சைக்கிளிலேயே சென்னை வந்து சேர்ந்து சிறு சிறு தொழில்களைச் செய்து, உழைப்பால் உயர்ந்த நிலையை எய்தியவர்.

தொடக்கத்தில் மிட்டாய் வியாபாரம், புலி மார்க் சீயக்காய், ஜம்போ தீப்பெட்டி என்று கடைகளுக்கு விநியோகித்து, அன்னை இந்திரா நகர் (சேலையூர் பகுதி) வியாபாரிகள் சங்கத் தலைவர் என்கிற அளவுக்கு உயர்ந்தவர். அந்த நகரின் உருவாக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்ததோடு மட்டுமல்லாமல், அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து தொண்டறப் பணி ஆற்றியவர்.

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவராகவும், சென்னை மண்டல கழகத் தலைவராகவும், மாவட்டக் கழகக் காப்பாளராகவும் பல்வேறு பொறுப்புகளில் இருந்து அரிய இயக்கப் பணிகளை ஆற்றிய அரும்பெரும்  பெரியார் பெருந்தொண்டர் ஆவார். மாதந்தோறும் ஒரு கூட்டம் என்ற ஒருமுறையை தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்தி வந்தவர். கழகம் நடத்திய போராட்டங்களில் பங்கேற்றவர்.

- 14.10.2025 விடுதலை நாளேட்டில் வந்த இரங்கல் அறிக்கையின் சுருக்கம்

-விடுதலை நாளேடு 19.01.1996

செ.ர.பார்த்தசாரதி அவர்களின் விஜயவாடா உலக நாத்திகர் மாநாடு குறித்த பயணக் கட்டுரை

-----------------------------------------------------------------------------------

சுயமரியாதைச் சுடரொளிகள் தி.இரா. இரத்தினசாமி – ஆதிலட்சுமி ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

சுயமரியாதைச் சுடரொளிகள் தி.இரா. இரத்தினசாமி – ஆதிலட்சுமி ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார். உடன்: கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், வி.பன்னீர்செல்வம், ஆர்.டி. வீரபத்திரன், தாம்பரம் முத்தையன், நெய்வேலி ஞானசேகரன், ஆ.இர. இராமசாமி, ஆ.இர. சிவசாமி, முத்துமணி, தங்கமணி, திருமணம் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (சென்னை, 8.2.2026)

- விடுதலை நாளேடு, 9.2.2026

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

 



திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு

திருவள்ளுவர் பிறந்த நாளை முன்னிட்டு 16.01.26 முற்பகல் 11 மணி அளவில், தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மயிலாப்பூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன், துணைத் தலைவர் டி .ஆர். சேதுராமன் மற்றும் மு. சண்முகப்பிரியன், மாவட்ட இளைஞரணி தலைவர் ந.மணிதுரை, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அ.அன்பு, இளைஞர் அணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, ஈ.குமார்,  மா. இனியவள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அறிஞர் அண்ணாவின் 57 ஆவது நினைவு நாள்: அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் மலர்வளையம் வைத்து மரியாதை (சென்னை, 3.2.2026)

 


அறிஞர் அண்ணாவின் 57ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து தமிழர் தலைவர் மரியாதை!

சென்னை, பிப்.3- தந்தை பெரியார் அவர்களின் தலைமை மாணாக்கன், தி.மு.க.வின் நிறுவனர், தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் 57ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (3.2.2026) சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார், பொறியாளர் ச.இன்பக்கனி, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர் செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், கிராமப்புற பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில இளைஞரணி இணைச் செயலாளர் சோ.சுரேஷ், போளூர் பன்னீர்செல்வம், சிதம்பரம் செல்வரத்தினம், மேனாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் சிறப்பு உதவியாளர் எழுத்தாளர் முத்துவாவாசி, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், துணைச் செயலாளர் கோவீ.ராகவன், சூளைமேடு இராஜேந்திரன், தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், இராமச்சந்திரன், சோழிங்கநல்லூர் மாவட்டக் கழக செயலாளர் தமிழினியன், காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், கொடுங்கையூர் கோ.தங்கமணி, தங்க தனலட்சுமி, பழனிபாலு, முரளி, க.கலைமணி, விஜய், மகேஷ், கணேசன், அசோக்குமார், பெரியார் மாணாக்கன் மற்றும் கழகத் தோழர்கள் திரளாகப் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.


வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் அதுவே அண்ணாவுக்கு நாம் செய்யும் பெருமை

அண்ணா நினைவு நாளில், தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி

சென்னை, பிப்.3 –  வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்து திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம். அதுவே அண்ணாவுக்கு நாம் செய்யும் பெருமை என்று தமிழர் தலைவர் ஆசிரியர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

அறிஞர் அண்ணாவின்57ஆம் ஆண்டு  நினைவு நாளான இன்று (3.2.2026) சென்னை கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்திய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அவரது பேட்டியின் விவரம் வருமாறு:

‘‘பெரியாரோடு இருந்த காலமே
எனக்கு வசந்த காலம்!’’

‘நான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் தந்தை பெரியார்’ என்று  பேரறிஞர் அண்ணா அவர்கள், முதலமைச்சரானவுடன் தாம் எழுதிய தந்தை பெரியார் பிறந்த நாள் ‘விடுதலை’ மலர்க் கட்டுரையில் குறிப்பிட்டார்.  ‘‘நான் இன்றைக்கு முதலமைச்சர்  நாற்காலியில் அமர்ந்தது பெருமையாகப் பலருக்குத் தோன்றலாம். ஆனால், நான் பெரியாருடன் பிரச்சாரத்தைத் தொடங்கி, காடு மேடெல்லாம் அவரோடு சென்ற காலம் இருக்கிறதே, அதுதான் என்னுடைய வசந்த காலம்’’ என்று பூரிப்போடு குறிப்பிட்டார்.

முதலமைச்சர் பொறுப்பை ஏற்றவர், நேரிடையாகத் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்து, வாழ்த்துகளைப் பெற்று, அவர் நடத்தி வந்த அந்த ஆட்சி, இன்றைக்கும் பாதை மாறாமல், கலைஞர் அவர்கள் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த நேரத்திலும் சரி, அதுபோல், இன்றைய ஒப்பற்ற முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் பொறுப்பேற்று, ஒரு முழுக் கட்டம் முடிந்து, அடுத்தக்கட்டத்தை நோக்கி விரைந்து போகக் கூடிய இந்தக் காலகட்டத்திலும் சரி, சிறப்பாக அந்த உணர்வைப் பெருக்கிக் கொண்டு போகிறார்.

அண்ணா வகுத்த அந்தத் திட்டங்கள்,

அண்ணா கொடுத்த முழக்கங்கள்!

சில நேரங்களில்,  சில ஆட்சிகள்  அருகிக்கொண்டு போகும். ஆனால், அண்ணா வகுத்த அந்தத் திட்டங்கள், அண்ணா கொடுத்த முழக்கங்கள், இன்றைக்குப் பெருக்கல் இருக்கிறதே தவிர,  மற்றபடி சுருக்கலிலோ, வழுக்கலிலோ இல்லை. அதைச் செய்கின்ற ஒரு  நல்ல ‘திராவிட மாடல்’ ஆட்சி இன்றைக்குத் தொடர்கிறது.

எனவேதான், அண்ணாவை நாம் போற்றுகிறோம், அண்ணாவைப் பின்பற்று கிறோம். அண்ணா வகுத்தப் பாதையில் அயராது உழைக் கிறோம். அண்ணாவினுடைய முப்பெரும் சாதனைகள் என்றைக்கும் நிரந்தரமானவை. அதற்கு எடுத்துக் காட்டாக, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில்கூட, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இருக் கின்ற அணியை வெற்றி பெறச் செய்வதன் மூலமாகத் தான், அண்ணாவுக்குச் சிறப்பான ஒரு பெருமையை நாம் உண்டாக்குகின்றோம் என்று அர்த்தம்.

அண்ணா வகுத்த பாதையினுடைய தனிச் சிறப்பு!

அண்ணா உருவாக்கிய கட்டடம் மணல் மேடு அல்ல. அது கற்பாறை, தொடரும். அதுதான் அண்ணா வகுத்த பாதையினுடைய தனிச் சிறப்பு. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அதை நிரூபிக்கும். அதை உலகத்திற்கு அறிவிக்கும்.

செய்தியாளர்: ஒரு பக்கம் நட்சத்திரங்கள் தொடங்கி இருக்கக்கூடிய புதிய கட்சி; இன்னொரு பக்கம் வலிமையான வலதுசாரி கூட்டமைப்பு – இன்றைய காலகட்டத்திற்கு தமிழ்நாட்டில் என்ன மாதிரியான ஓர் அரசியல் தேவைப்படுகிறது? என்ன மாதிரியான நிலைப்பாடு மக்களிடம் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: தேர்தல் முடிந்தவுடன், வலது – ‘‘சாரி’’ என்று சொல்வார்கள்.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

-விடுதலை நாளேடு, 3.2.26

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

பாரா மெடிக்கல் படிப்பிலும் சமூகநீதியை ஒழிக்கும் ‘நீட் தேர்வு திணிப்பா?’ கண்டன ஆர்ப்பாட்டம்


ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியை கண்டித்து
தமிழ்நாடு முழுவதும் திராவிட மாணவர் கழகம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னையில் கழக துணைத் தலைவர் கண்டன உரையாற்றினார்

திராவிடர் கழகம்திராவிடர் கழகம்

சென்னை, பிப்.1 மருத்துவக் கல்லூரியில் ‘நீட்’டைத் திணித்து சமூகநீதிக்குக் குழி தோண்டியது போதாதென்று, பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வு என்பது முற்றிலும் சமூகநீதியை ஒழிப்பதே! இதனைக் கண்டித்தும், ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க., அரசின் சூழ்ச்சியை முறியடிக்கும் வகையிலும் திராவிட மாணவர் கழகம் சார்பில் நேற்று (31.1.2026) தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கண்டன உரையாற்றினார்.

வரும் கல்வியாண்டு முதல் இளங்கலை பிசியோ தெரபி (B.P.T.) மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி (B.OT) ஆகிய இரண்டு பட்டப் படிப்புகளில் சேர்வதற்குத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (Neet) பங்கேற்பதைக் கட்டாயமாக்கி தேசியத் துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (NCAHP) அறிவித்துள்ளது.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சி காலத்தில்தான் தமிழ்நாட்டில் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளும், அதன் காரணமாக உருவாகும் ஆயிரக்கணக்கான மருத்துவர்களும்,  தமிழ்நாட்டின் அரசு மற்றும் தனியார் துணை மருத்துவப்படிப்புகளில் பயிலும் மாணவர்களும்தான் தமிழ்நாட்டின் மருத்துவக் கட்ட மைப்புப் பலமாக இருப்பதற்கான அடிப்படைக் காரணம்.

கிராமப்புற மாணவர்களின்…

கிராமப்புறங்களிலிருந்தும், ஏழை – எளிய குடும்பங்களிலிருந்தும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்தும் ஏராளமானோர் துணை மருத்துவப் படிப்புகளில் இணைந்து படித்து, பயிற்சி பெற்று உரிய தகுதியுடன் மருத்துவப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இலவசமாகவும், குறைந்த செலவிலும் கிடைக்கும் பள்ளிக் கல்வியை முக்கியமற்றதாக்கி, லட்சக்கணக்கில் பணம் கொடுத்துப் பயில வேண்டிய –தனியார் பயிற்சி மய்யங்களுக்கு ஆள் பிடித்துவிடும் வேலையைத் தான் ‘நீட்’ தேர்வு செய்துகொண்டிருக்கிறது.

இன்றும் ‘நீட்’ என்னும் மருத்துவக் கல்வித் தடையைத் தகர்க்கத் தமிழ்நாடு போராடிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இத்தகைய நுழைவுத் தேர்வை வேளாண் கல்லூரிகளுக்கு கொண்டு வருவதற்கும் இந்திய ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது.

மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு காரணமாக இணைய முடியாத சூழலில் இருந்தவர்கள், பாரா மெடிக்கல் சர்வீசஸ் எனப்படும் துணை மருத்துவப் படிப்புகளில் இணைந்து மருத்துவத் துறைக்கு சேவையாற்றி வந்தனர்; தற்போது அதனையும் இல்லாதொழிக்க ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அரசு சூழ்ச்சி செய்கிறது.

‘நீட்’ தேர்வுக்கான காரணங்கள் பொய்

‘நீட்’ தேர்வைக் கொண்டு வரும் போது அதற்கான காரணங்கள் என்றும், நியாயங்கள் என்றும் ஒன்றிய பா.ஜ.க. அரசு எவற்றையெல்லாம் சொன்னதோ, அவையெல்லாம் பொய் என்பது அப்பட்டமாக அவர்களாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்தான் பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வை ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். –  பா.ஜ.க. அரசு கொண்டு வருவதைக் கண்டித்தும், துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 25.1.2026 அன்று கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

ஏற்கெனவே இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை தமிழ்நாடு அரசு எதிர்த்து வரும் நிலையில் BPT, BOT படிப்புகளுக்கும் ‘நீட்’ கட்டாயமாக்கப்பட்டதை ஏற்க முடியாது எனவும், இது ஏழைக் குடும்பங்களை ‘நீட்’ பயிற்சிக்கு செலவழிக்க கட்டாயப்படுத்தும் செயல் என்றும் அக்கடிதத்தில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்குகளைக் கண்டித்து திராவிடமாணவர் கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக நேற்று (31.1.2026) தமிழ்நாட்டில் அனைத்துக் கழக மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மருத்துவம், துணை மருத்துவப் படிப்பு மாணவர்கள், ஒத்த கருத்துள்ள கல்வியாளர்கள், அரசியல், சமுதாய அமைப்பினர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வைத் திணித்து சமூகநீதியை ஒழிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து நேற்று (31.1.2026) மாலை 4 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திராவிடர் மாணவர் கழக மாநிலத் துணைச் செயலாளர் செ.பெ. தொண்டறம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணா பல்கலைக் கழக திராவிட மாணவர் கழகத் தலைவர் ப. வெங்கடேஷ் வரவேற்புரையாற்றினார். அண்ணா பல்கலைக் கழகச்செயலாளர் ரொசாண்டோ, மெட்ராஸ் பல்கலைக் கழக அமைப்பாளர் ஆதித்யலினார்டோ, வடசென்னை மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் டாவின்சி செ.க. புகழேந்தி, அன்புமதி, கண்ணம்மா, திராவிட இலக்கியா, நித்தியகுமார், நித்தியபூரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடசென்னை மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ச.சஞ்சய் தொடக்கவுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் முழக்கம்…

போராட்டம்! போராட்டம்!! சமூகநீதிப் போராட்டம்!  திணிக்காதே திணிக்காதே!  ‘நீட்’ தேர்வைத் திணிக்காதே! பாரா மெடிக்கல் படிப்புகளிலும் ‘நீட்’ தேர்வைத் திணிக்காதே!

பிசியோதரபி படிப்புக்கு  நீட் எதற்கு? நீட் எதற்கு? ஆக்குபேசனல் தெரபிக்கு நீட் எதற்கு? நீட் எதற்கு? பறிக்காதே பறிக்காதே! மருத்துவக் கனவைப் பறிக்காதே! எத்தனைப் பலிகள்? எத்தனைப் பலிகள்?

எட்டுக்கோடி தமிழர்களின் ஒற்றைத் தீர்ப்பு ‘நீட்’ ஒழிப்பு! சட்டமன்றத் தேர்தலிலும்  நாடாளுமன்றத் தேர்தலிலும் பாஜகவுக்கு மூக்கறுப்பு! நீட்டுக்கு எதிரான மக்கள் தீர்ப்பை மிதிப்பதா?  சட்டமன்றம் நிறைவேற்றிய  சட்டத்தை ஏற்க மறுப்பதா?

மருத்துவக் கனவைப் பறித்தது போல் துணை மருத்துவப் படிப்புகளுக்கும் கல்லூரி வாயிலை அடைக்காதே! தூண்டாதே தூண்டாதே!  ஒன்றிய அரசே தூண்டாதே!  மாணவர் போராட்டத்தைத் தூண்டாதே!

பள்ளிக்கல்வியை ஒழிக்க நினைக்கும்  கார்ப்பரேட்களின் கைக் கூலியே! கல்வித் துறையில் தனியார் மயத்தைத்  திணிக்கும் கள்ளக் கூட்டாளியே! பா.ஜ.க.வே! ஆர்.எஸ்.எஸ்.சே!மக்கள் விரோத ஒன்றிய அரசே!

ஓயாது ஓயாது! பாரா மெடிக்கல் படிப்புகளுக்கும் மருத்துவக் கல்லூரி இடங்களுக்கும் நீட் தேர்வை ஒழிக்கும் வரை  எங்கள் போராட்டம் ஓயாது! என கழகத் தோழர்கள் ஒலி முழக்கம் எழுப்பினர்.

கண்டன உரை

இதைத் தொடர்ந்து திராவிடர் கழக மாநில கிராமப்புற பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடிக.அன்பழகன், தோழர் மணியரசன் (புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி), தேனி அரசு செவிலியர் கல்லூரியின் ஓய்வு பெற்ற முதல்வர் வி.கே.ஆர். பெரியார் செல்வி, திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினர்.

நிறைவாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் ஆர்ப்பாட்டக் கண்டன உரையாற்றினார். ஆவடி மாவட்ட மாணவர் கழகத் தலைவர் சி. அறிவுமதி இணைப்புரை வழங்க, மாநில திராவிட மாணவர் கழக விளையாட்டு அணி அமைப்பாளர் ம. பூவரசன் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக வழக்குரைஞரணித்  தலைவர் த. வீரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு. குமாரதேவன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ. சுரேஷ், மேனாள் துணைப்பொதுச் செயலாளர் ச. இன்பக்கனி, சி.வெற்றிச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் மயிலாடுதுறை கி. தளபதிராஜ், பெரியார் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், வடசென்னை மாவட்டத்தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், தென் சென்னை மாவட்டத்தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி,  தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன்,  திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு. மோகன், மா வட்ட செயலாளர் ந. ராசேந்திரன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர்  வே. பாண்டு, மாவட்டச் செயலாளர் தமிழினியன், காப்பாளர் ஆர்.டி. வீரபத்திரன், ஆவடி மாவட்ட தலைவர் வெ. கார்வேந்தன், செயலாளர் க. இளவரசன்.

மகளிரணி:  சுதா மதியழகன், ஆனந்தி, தங்க. தனலட்சுமி, த.மரகதமணி, இளவரசி, உத்திரகுமாரி,  ஆனந்தி, குயில்மொழி,காவியா, கவிநிஷா, மகிழினி, அமலசுந்தரி, அஞ்சலா, இரா.சு.உத்ரா, பெ. அனுசுயா, புஷ்பா, நன்மொழி.

இளைஞரணி – மாணவர் கழகம்: மு.சண்முகப்ரியன், பழனிசாமி, ராஜா, யாழ்.திலீபன், முரளி கிருஷ்ணன், சின்னத்துரை ச. சாஜய், க.கலைமணி, ஜெ.ஆனந்த்,நாகராஜ், அன்புமதி, அன்புச்செல்வி, வெங்கடேசன்.

தாம்பரம் மாவட்டம்:  தாம்பரம் சு.மோகன்ராஜ், மா.குணசேகரன், பழனிசாமி, கன்னடபாளையம் இராமச்சந்திரன், கு.ஆறுமுகம், சீர்காழி இராமண்ணா, அனகை சண். சரவணன், அ.கருப்பையா,வழக்குரைஞர் இரா. உத்திரகுமாரன், சந்திரசேகர், தனசேகர், மதியழகன்.

ஆவடி மாவட்டம்:  பூவை. க.தமிழ்ச்செல்வன், பெரியார் மாணாக்கன்,    தங்கதுரை, துரை. ராவணன், அய். சரவணன், சி. வச்சிரவேல், வி. வெங்கடேஷ், சுந்தர்ராஜன், பாசறை கோபால், கோ.முருகன், தமிழ்மணி,பன்னீர்செல்வம், அ.வெ. நடராசன், சந்திரபாபு, இரணியன், ஜெயராமன், சமத்துவமணி, சே.இளம்சேகுவரா, தேவேந்திரபாபு.

வடசென்னை: நா.பார்த்திபன்,பா.கோபாலகிருஷ்ணன், ச.இராசேந்திரன், அயன்புரம் சு. துரைராசு, கோ.தங்கமணி,  சி.பாசுகர், சி. காமராசு, க. இளவன், பாலமுருகன், பா.பார்த்திபன்.

தென் சென்னை :   டி.ஆர்.சேதுராமன்,  மு.சண்முகப்பிரியன்,  கரு.அண்ணாமலை, கோ.வீ.ராகவன்,  சா.தாமோதரன், ந.இராமச்சந்திரன், பா.இராசேந்திரன், எம்.டி.சி இரா.இரவி, டைலர் கண்ணன், த.ராஜா, மயிலை பாலு.

தோழர்கள்:  தமிழமுதன், (வேளச்சேரி),   செந்துறை மதியழகன், திருப்பூர் வழக்குரைஞர் க. பாண்டியன்,   மதுரை ராமச்சந்திரன்,  அருண், மாறன், இளவல்.

- விடுதலை நாளேடு, 01.02.26


யூ டியூப் காணொலி



வெள்ளி, 23 ஜனவரி, 2026

முனைவர் பட்டம் பெற்ற கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜுக்கு டி.கே.நடராஜன் குடும்பத்தினர் ரூ.1 லட்சம் நன்கொடை

முனைவர் பட்டம் பெற்ற கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜுக்கு டி.கே.நடராஜன் குடும்பத்தினர் ரூ.1 லட்சம் நன்கொடை
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ் முனைவர் பட்டம் பெற்றதை யொட்டி டி.கே. நடராஜன் குடும்பத்தினர் சார்பில் கண்ணுசாமி – சுசிலா ஆகியோர் பாராட்டுத் தெரிவித்து ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினர். அவர்களுக்கு நன்றி தெரிவித்த கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தனக்கு அளிக்கப்பட்ட நன்கொடை தொகை
ரூ.1 லட்சத்தை திராவிடர் கழக அறக் கட்டளைக்கு அப்படியே நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்றி.
- விடுதலை நாளேடு, 23.01.26

சனி, 17 ஜனவரி, 2026

தந்தை பெரியார் விருதினை வழக்குரைஞர் அ.அருள்மொழிக்கு முதலமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், 2025 ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது மற்றும் விருதுத் தொகையாக 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களுக்கு வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார். உடன், நீர்வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் மரு.நா.எழிலன், தலைமைச் செயலாளர் .நா.முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர்
ந. அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர் (சென்னை, 16.1.2026).
- விடுதலை நாளேடு, 17.01.26 

தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாடினர்


திராவிடர் கழகம்

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 15.01.2026 அன்று காலை 10:30 மணி அளவில், தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாடினர்.

தென்சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி .ஆர். சேதுராமன் மற்றும் மு. சண்முகப்பிரியன், சா.தாமோதரன், மாவட்ட இளைஞரணி தலைவர் ந.மணிதுரை, இளைஞரணி செயலாளர் பெரியார் யுவராஜ், துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, ச.மாரியப்பன், ஈ.குமார், சைதை ரா.ரவி, மா. இனியவள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

- விடுதலை நாளேடு, 17.01.26

அமைந்தகரை மோகன் அவர்களும் கலந்து கொண்டார்.

யூ டியூப் காணொலி





வியாழன், 8 ஜனவரி, 2026

பெரியார் களம் நடத்திய சட்ட விழிப்புணர்வு பயிலரங்கத்தில் கழகத் தலைவர் ‘‘ஜனநாயகம்” எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்!

 

ஜனநாயக முறையில் சர்வாதிகாரி ஆனவர்தான் ஹிட்லர்
இந்தியாவும் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது

ஆசிரியர் உரை

சென்னை.டிச.28. ‘‘சட்டப் பயிலரங்கம் என்பது அகல உழுவதை விட ஆழமாக உழுவதாக அமைய வேண்டும்” என பயிலரங்கு ஒருங்கிணைப்பாளர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

சட்ட விளக்க வகுப்புகள்

சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் குளுமை அரங்கில், 27.12.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும், பெரியார் களம் சார்பில் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஒரு நாள் சட்ட விழிப்புணர்வு பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை ஏற்று உரையாற்றினார். பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்க உரை நிகழ்த்தினார். முதல் வகுப்பாக, “சமூக மாற்றமும் – பெண்ணுரிமைக்கான சட்டங்களும்” எனும் தலைப்பில், கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, இரண்டாம் வகுப்பாக, ”சமூகநீதி – சட்டமும், போராட்டமும்” எனும் தலைப்பில், கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, மூன்றாம் வகுப்பாக, “மதச்சார்பின்மை – ஜனநாயகம் – மாநில உரிமை – அரசியல் அமைப்புச் சட்டம்” எனும் தலைப்பில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, நான்காம் வகுப்பாக, “இந்துசமய அறநிலையத்துறை சட்டமும் – கோயில் உரிமைகளும்” எனும் தலைப்பில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, அய்ந்தாம் வகுப்பாக, “தீண்டாமை ஒழிப்பும் முக்கிய வழக்குகளும்” எனும் தலைப்பில் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆகியோர் காலை 10:30 மணி முதல் மாலை 5 மணி வரை பாடம் நடத்தினர். ஊடகவியலாளர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை மேடை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

டாக்டர் அம்பேத்கரின் கணிப்பு!

‘‘மதச்சார்பின்மை – ஜனநாயகம் – மாநில உரிமை – அரசியல் அமைப்புச் சட்டம்” எனும் தலைப்பில் வகுப்பெடுத்த திராவிடர் கழகத் தலைவர், சட்டம் தொடர்பான ஆழமான கருத்துகளை முன் வைத்துப் பேசினார். முதலில் இது போன்ற பயிலரங்குகள் நடத்துவதை வரவேற்ற அவர், “அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்” என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி, ” அதிகமான தலைப்புகளில் வகுப்புகளை ஏற்பாடு செய்வதைத் தவிர்த்து, ஆழமான கருத்துகளை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பற்றி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் அதிகம் பகிரப்படாத கருத்தை மாணவர்கள் முன்வைத்தார். அதாவது, “Even though i bounded by the supreme court judgment. But, i’m not respect to the same” என்று ஆழமாக சொன்னதை நினைவுபடுத்தினார். மேலும் அவர், Secularism, Socialism ஆகிய சொற்கள் பற்றி அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழு விவாதங்களில் வரைவுக் குழுவின் தலைவர் அம்பேத்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசிய முக்கியமான, ஆழமான கருத்துகளை, புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டு கற்பித்தார்.

சட்டப்படி நடக்க வேண்டியவர்கள் அதனை மீறலாமா?

மதச்சார்பற்ற சட்டத்தின் அடிப்படையில் நடக்க வேண்டியவர்கள், ”என் மதம் தான் – இந்து மதம் தான் ஆளவேண்டும்” என்று வெளிப்படையாகப் பேசுவதைக் சுட்டிக்காட்டினார். Secularism, Socialism ஆகிய இரண்டும் இடைச்செருகல் என்று, ஒன்றிய அரசின் விளம்பரத்தில் அந்த இரண்டும் சொற்கள் இல்லாமல் வெளியிட்டதை நினைவுபடுத்தி, ”இடைச்செருகலாக இருந்தாலும், அந்த சட்டத்தின் மீதுதானே பிரமாணம் எடுத்துக் கொண்டு பதவி ஏற்றனர். அதை எப்படி மீற முடியும்?” என்ற ஆழமான கேள்வியை  மாணவர்களின் உள்ளத்தில் பதிய வைத்தார். தொடர்ந்து, அதைவிட மோசமான ஒரு தகவலை சுட்டிக்காட்டிப் பேசினார். அதாவது, “இந்தியா என்றாலே இந்து நாடுதான். இதை அரசியலமைப்புச் சட்டம் ஒப்புக்கொண்டால் என்ன? ஒப்புக் கொள்ளாவிட்டால் தான் என்ன?” என்று இதுவரை மறைமுகமாக பேசிக்கொண்டிருந்தவர்கள் வெளிப்படையாக பேசுவதை நினைவூட்டி, இதே சிந்தனைப் போக்கில், “ஜனநாயக முறையில் தேர்வாகித்தான் ஹிட்லர் சர்வாதிகாரி ஆனார். அந்த திசையில்தான் இந்தியாவும் சென்றுகொண்டிருக்கிறது” என்று சட்டக் கல்வி மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நிலைமையை புரியவைத்து தமது வகுப்பை நிறைவு செய்தார்.

சான்றிதழ் வழங்கல்!

நிகழ்வில் சட்டம் பயிலும் மாணவர்கள் உள்பட 50 மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் கேள்வி பதில் பகுதி நடைபெற்றது. சட்டக் கல்வி பயிலும் மாணவர்களும் மற்றவர்களும் இதை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். இறுதியாக அனைத்து மாணவர்களும் நடைபெற்ற பயிலரங்கம் பற்றி தங்களது கருத்துகளை மேடையில் பகிர்ந்துகொண்டனர். கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் ”பெரியார் களம்” அமைப்பு சார்பில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பங்கேற்றோர்

கழகத்தின் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, திராவிடர் கழகத்தின் வழக்குரைஞர் அணியின் மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் துரை.அருண், கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர்; வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆகியோர் சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கி சிறப்பித்தனர்.  பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன்  வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணி, வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் நா.பார்த்திபன், க, கலைமணி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் குறிப்பேடு, எழுதுகோல் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் குழு ஒளிப்படம் எடுத்து கொண்டனர். இறுதியில் உடுமலை வடிவேல் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

-விடுதலை நாளேடு,28.12.25