
ந. அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர் (சென்னை, 16.1.2026).
நடவடிக்கை மற்றும் செயல்பாடு இடம் பெறும்


தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 15.01.2026 அன்று காலை 10:30 மணி அளவில், தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாடினர்.
தென்சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி .ஆர். சேதுராமன் மற்றும் மு. சண்முகப்பிரியன், சா.தாமோதரன், மாவட்ட இளைஞரணி தலைவர் ந.மணிதுரை, இளைஞரணி செயலாளர் பெரியார் யுவராஜ், துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, ச.மாரியப்பன், ஈ.குமார், சைதை ரா.ரவி, மா. இனியவள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- விடுதலை நாளேடு, 17.01.26


சென்னை.டிச.28. ‘‘சட்டப் பயிலரங்கம் என்பது அகல உழுவதை விட ஆழமாக உழுவதாக அமைய வேண்டும்” என பயிலரங்கு ஒருங்கிணைப்பாளர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.
சட்ட விளக்க வகுப்புகள்
சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் குளுமை அரங்கில், 27.12.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும், பெரியார் களம் சார்பில் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஒரு நாள் சட்ட விழிப்புணர்வு பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை ஏற்று உரையாற்றினார். பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்க உரை நிகழ்த்தினார். முதல் வகுப்பாக, “சமூக மாற்றமும் – பெண்ணுரிமைக்கான சட்டங்களும்” எனும் தலைப்பில், கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, இரண்டாம் வகுப்பாக, ”சமூகநீதி – சட்டமும், போராட்டமும்” எனும் தலைப்பில், கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, மூன்றாம் வகுப்பாக, “மதச்சார்பின்மை – ஜனநாயகம் – மாநில உரிமை – அரசியல் அமைப்புச் சட்டம்” எனும் தலைப்பில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, நான்காம் வகுப்பாக, “இந்துசமய அறநிலையத்துறை சட்டமும் – கோயில் உரிமைகளும்” எனும் தலைப்பில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, அய்ந்தாம் வகுப்பாக, “தீண்டாமை ஒழிப்பும் முக்கிய வழக்குகளும்” எனும் தலைப்பில் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆகியோர் காலை 10:30 மணி முதல் மாலை 5 மணி வரை பாடம் நடத்தினர். ஊடகவியலாளர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை மேடை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
டாக்டர் அம்பேத்கரின் கணிப்பு!
‘‘மதச்சார்பின்மை – ஜனநாயகம் – மாநில உரிமை – அரசியல் அமைப்புச் சட்டம்” எனும் தலைப்பில் வகுப்பெடுத்த திராவிடர் கழகத் தலைவர், சட்டம் தொடர்பான ஆழமான கருத்துகளை முன் வைத்துப் பேசினார். முதலில் இது போன்ற பயிலரங்குகள் நடத்துவதை வரவேற்ற அவர், “அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்” என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி, ” அதிகமான தலைப்புகளில் வகுப்புகளை ஏற்பாடு செய்வதைத் தவிர்த்து, ஆழமான கருத்துகளை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பற்றி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் அதிகம் பகிரப்படாத கருத்தை மாணவர்கள் முன்வைத்தார். அதாவது, “Even though i bounded by the supreme court judgment. But, i’m not respect to the same” என்று ஆழமாக சொன்னதை நினைவுபடுத்தினார். மேலும் அவர், Secularism, Socialism ஆகிய சொற்கள் பற்றி அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழு விவாதங்களில் வரைவுக் குழுவின் தலைவர் அம்பேத்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசிய முக்கியமான, ஆழமான கருத்துகளை, புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டு கற்பித்தார்.
சட்டப்படி நடக்க வேண்டியவர்கள் அதனை மீறலாமா?
மதச்சார்பற்ற சட்டத்தின் அடிப்படையில் நடக்க வேண்டியவர்கள், ”என் மதம் தான் – இந்து மதம் தான் ஆளவேண்டும்” என்று வெளிப்படையாகப் பேசுவதைக் சுட்டிக்காட்டினார். Secularism, Socialism ஆகிய இரண்டும் இடைச்செருகல் என்று, ஒன்றிய அரசின் விளம்பரத்தில் அந்த இரண்டும் சொற்கள் இல்லாமல் வெளியிட்டதை நினைவுபடுத்தி, ”இடைச்செருகலாக இருந்தாலும், அந்த சட்டத்தின் மீதுதானே பிரமாணம் எடுத்துக் கொண்டு பதவி ஏற்றனர். அதை எப்படி மீற முடியும்?” என்ற ஆழமான கேள்வியை மாணவர்களின் உள்ளத்தில் பதிய வைத்தார். தொடர்ந்து, அதைவிட மோசமான ஒரு தகவலை சுட்டிக்காட்டிப் பேசினார். அதாவது, “இந்தியா என்றாலே இந்து நாடுதான். இதை அரசியலமைப்புச் சட்டம் ஒப்புக்கொண்டால் என்ன? ஒப்புக் கொள்ளாவிட்டால் தான் என்ன?” என்று இதுவரை மறைமுகமாக பேசிக்கொண்டிருந்தவர்கள் வெளிப்படையாக பேசுவதை நினைவூட்டி, இதே சிந்தனைப் போக்கில், “ஜனநாயக முறையில் தேர்வாகித்தான் ஹிட்லர் சர்வாதிகாரி ஆனார். அந்த திசையில்தான் இந்தியாவும் சென்றுகொண்டிருக்கிறது” என்று சட்டக் கல்வி மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நிலைமையை புரியவைத்து தமது வகுப்பை நிறைவு செய்தார்.
சான்றிதழ் வழங்கல்!
நிகழ்வில் சட்டம் பயிலும் மாணவர்கள் உள்பட 50 மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் கேள்வி பதில் பகுதி நடைபெற்றது. சட்டக் கல்வி பயிலும் மாணவர்களும் மற்றவர்களும் இதை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். இறுதியாக அனைத்து மாணவர்களும் நடைபெற்ற பயிலரங்கம் பற்றி தங்களது கருத்துகளை மேடையில் பகிர்ந்துகொண்டனர். கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் ”பெரியார் களம்” அமைப்பு சார்பில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பங்கேற்றோர்
கழகத்தின் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, திராவிடர் கழகத்தின் வழக்குரைஞர் அணியின் மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் துரை.அருண், கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர்; வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆகியோர் சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கி சிறப்பித்தனர். பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணி, வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் நா.பார்த்திபன், க, கலைமணி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் குறிப்பேடு, எழுதுகோல் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் குழு ஒளிப்படம் எடுத்து கொண்டனர். இறுதியில் உடுமலை வடிவேல் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
-விடுதலை நாளேடு,28.12.25

சென்னை, டிச.28 27-12-2025 அன்று பெரியார் திடலில் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கலந்துரையாடல் கூட்டம் காலை 11 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் தொடக்க உரையாற்றிய கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் கூட்டத்தின் நோக்கத்தினையும், கழகத்தின் உயிர்ப்புடன் திகழ்ந்து வரும் வழக்குரைஞரணியின் செயல்பாடுகள் அனைத்திலும் அதிகமாக இருக்க வேண்டும் என்றும், வருகின்ற தேர்தல் மிக முக்கியத்துவமான தேர்தலாகும். தமிழ்நாடு முழுவதும் நம்முடைய வழக்குரைஞர்கள் அந்தந்த மாவட்டத்தில் காவல்துறை கூட்டங்களுக்கு அனுமதி மறுப்போ, தோழர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அதற்கு தீர்வு காண வேண்டும் என்று கூறி வருகை தந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். சமூகநீதி களத்தில் இன்னும் தந்தை பெரியார் தேவைப்படுகிறார் என்றும் சமுதாய பிரச்சினைகளில் வழக்குரைஞரணி அதிகமாக ஈடுபட வேண்டும் என்றும் எடுத்துரைத்து உரையாற்றினார்.
திராவிடர் கழகத்தின் வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், வழக்குரைஞரணி செயலாளர் மு.சித்தார்த்தன் ஆகியோர் வழக்குரைஞரணியின் செயல்பாடுகளை எடுத்துக் கூறினார்.
வருகைதந்து சிறப்பித்த வழக்குரைஞர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
கழகத் தலைவர் தலைமை உரை
‘‘நமது கழகத்தின் வழக்குரைஞர்கள் நேர்மையாக பணியாற்றகூடியவர்கள் – நம்பகத்தன்மையோடு செயல்பட்டு வருபவர்கள். திருப்பரங்குன்றத்தில் ஜாதி, மத மோதல்களை நீதிமன்றத்தை வைத்து அரசியல் செய்து வரும் சங்பரிவார் கும்பல்களின் திட்டங்களை முறியடிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்த வேண்டும்.
நீதிமன்றத் தீர்ப்புகளை நமது வழக்குரை ஞர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டும். படித்து ஒவ்வொரு பிரச்சினையிலும் கழக வழக்குரை ஞர்கள் தெளிவாக கருத்தினை ஆழமாக பேச வேண்டும்.
வலதுசாரி அமைப்பினர் நீதிமன்றங்களை கையில் வைத்துக் கொண்டு கோேலாச்சி வருகிறார்கள். இடதுசாரி அமைப்புகளை போல தொடர்ந்து களத்தில் நின்று பணியாற்ற வேண்டும்’’ என்று கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையேற்று உரையாற்றினார்.
முக்கியமான – காலத்திற்கு தேவையான 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கலந்துக் கொண்ட வழக்குரைஞரணி பொறுப்பாளர்கள் – தோழர்கள் : வழக்குரைஞர்கள் அ.அருள்மொழி, ஆ.வீரமர்த்தினி, ஆ.பாண்டியன், சு.குமாரதேவன், மு.க.இராஜசேகரன், சி.அமர்சிங், கே.வீரமணி, ஜெ.துரைசாமி, மு.சென்னியப்பன், எஸ்.நாகநாதன், எஸ்.வாஞ்சிநாதன், துரை.அருண், மாரிமுத்து, வே.கனிமொழி, ரட்சனா, ஆர்.மணிகண்டன், மனோஜ்குமார், வெங்கடேசன், பிரியா, ஆர்.சக்திகுமரன், தம்பி.பிரபாகரன், மு.சண்முகப்ரியன், மு.ராசா, கே.பாலகிருஷ்ணன், ஆர்.அண்ணாமலை, எம்.நடராசன், சோ.சுரேஷ், சு.சிங்காரவேலன், பாஸ்கர், திலகவதி, சூரியா.
வழக்குரைஞரணி புதிய பொறுப்பாளர்கள்:
வழக்குரைஞர் துரை.அருண் (கழக வழக்குரைஞரணி மாநில துணைச் செயலாளர்)
வழக்குரைஞர் வே.கனிமொழி (மதுரை மாவட்ட கழக வழக்குரைஞரணி அமைப்பாளர்)
வழக்குரைஞர் டி.ரமேஷ் (குடந்தை மாவட்ட கழக வழக்குரைஞரணி அமைப்பாளர்)
பத்து தீர்மானங்கள்
பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்குவது, திருப்பெருங்குன்றம் பிரச்சினையை சாதுரியமாகக் கையாண்ட தி.மு.க. அரசுக்குப் பாராட்டு உள்ளிட்ட தீர்மானங்களோடு, கார்ப்பரேட் முதலாளிகள் கொழுக்கும் வண்ணம் தொழிலாளர் சட்டங்களை மாற்றியமைத்தஒன்றிய தொழிலாளர் விரோத சட்டத்திற்குக் கண்டனம் உட்பட 10 தீர்மானங்களை திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
தீர்மானம்: (1) மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மிக உறுதியாகவும் சரி யாகவும் செயல்பட்டு வருவதோடு இந்து காவி அமைப்புகள் உண்டாக்க நினைத்த மத கலவரத்தை ஒடுக்கி, சமூக நல்லிணக்கத்தை உருவாக்கிய தமிழ்நாடு அரசை இக்கூட்டம் பாராட்டுகிறது. இதற்குக் காரணமானவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: (2) தமிழ்நாடு முழுவதும் வழக் குரைஞர்களுக்கு இடையூறை ஏற்படுத்தி உள்ள E-Filing (இபைலிங்) மனுத்தாக்கல் முறையினை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்றும், வழக்குரைஞர்கள் சங்கங்கள் போராடி வருவதை அக்கறையுடன் பரிசீலித்து, உள்கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென்றும் மாண்பமை தலைமை நீதிபதி அவர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. மேலும், தமிழ்நாடு அரசும், உயர்நீதிமன்றமும், வழக்குரைஞர்களுடன் கலந்து பேசி நடை முறைக்கு சாத்தியமான வழிகளை கண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் படியும், அனைத்துக் கிழமை நீதிமன்றங்களிலும் பணி யாற்றும் வழக்குரைஞர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் தீர்வு காண இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம்: (3) நீண்ட காலமாக நடைபெற்று வரும் சிதம்பரம் நடராஜர் ஆலயப் பிரச் சனைக்கு தனிச்சட்டமியற்றி அதை இந்து அறநிலையத்துறையே மீண்டும் கையகப்படுத்த தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது.
பெரியார் உலகத்திற்கு நன்கொடை!
தீர்மானம்: (4) பெரியார் உலகத்திற்கு மாநில வழக்குரைஞரணி சார்பில் பத்து இலட்சத்திற்கு மேல் வழங்குவது என முடிவெடுக்கப்படுகிறது.
தீர்மானம்: (5) சாலையோர அரசு இடங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள அனைத்து மத சின்னங்களையும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளின்படி அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம்: (6) கழக வெளியீடுகளான விடுதலை, உண்மை, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆண்டு சந்தாக்களை வழங்குவதென முடிவு செய்யப்படுகிறது.
தீர்மானம்: (7) நமது அறக்கட்டளை சார்பில் தனியே சட்டக்கல்லூரி ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதற்குத் தமிழர் தலைவர் அவர்கள் ஆவன செய்ய வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
மாதம் ஒரு முறை காணொலி மூலம் கலந்துரையாடல்
தீர்மானம்: (8) மாதம் ஒருமுறை காணொலி (ZOOM Meeting) மூலம் மாநில அளவில் கலந் துரையாடல் கூட்டம் நடத்துவதென்றும் முடிவெடுக்கப்படுகிறது.
தீர்மானம்: (9) ஒவ்வொரு மாவட்டத்திலும் வழக்குரைஞரணி விரைவில் கட்டமைக்கப்படும் என்று தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம்: (10) தொழிலாளர்களுக்கு நன்மை அளித்து வந்த – ஏற்கெனவே நடைமுறைலிருந்த சட்டங்களை ரத்து செய்து தொழிலாளர்கள் உரிமைகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் முதலாளிகள் பயன்பெறும் வகையில் தொகுப்பு சட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ள, பி.ஜே.பி. அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டிப்பதுடன், பழைய சட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்திட கேட்டுக் கொள்ளப் படுகிறது.
- விடுதலை நாளேடு,28.12.25


சென்னை, டிச.18 2026 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ‘திராவிட மாடல்’ அரசாம் தி.மு.க. தலை மையிலான அரசை மீண்டும் மலரச் செய்ய வாக்காளர்கள் பேராதரவு தரவேண்டும்! அதற்காக திராவிடர் கழகம் கடுமையாக உழைக்கும் – பிரச்சாரம் செய்யும் என்பது உள்பட எட்டு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இன்று (18.12.2025) காலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக சிறப்புத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

ஆஸ்திரேலியாவில் மாநாடு சிறப்பாக நடைபெறப் பெரும் பங்காற்றிய தோழர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில், மெல்பேர்னிலிருந்து வருகை தந்த அரங்க.மூர்த்தி அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து சிறப்பித்தார் (சென்னை, 18.12.2025).
கீழ்க்கண்ட கழகத் தோழர்கள், தமிழின முன்னோடிகளின் மறைவிற்கு இச் செயற்குழு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இப் பெருமக்களின் பிரிவால் பெரும் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் உற்றார் உறவினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஆத்தூர் 104 வயதிலும் சீரிய முறையில் கழகப் பணியாற்றிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் ஏ.வி.தங்கவேல் (10.12.2025), பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் நீண்ட காலத் தலைவராக இருந்து, இயக்கத்திற்குப் பெருந்துணையாக இருந்த மயிலை நா.கிருஷ்ணன் (14.11.2025), பெரியாரியல் சிந்தனைக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் (வயது 92) (22.11.2025), பகுத்தறிவாளரும், ஆக்கப் பணியாளருமான தஞ்சை இரத்தினகிரி (வயது 85) (24.11.2025), மேனாள் மேட்டூர் மாவட்டக் கழகத் தலைவர் சாமிநாயக்கன்பட்டி க.கிருஷ்ணமூர்த்தி (வயது 72) (31.10.2025), திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் (4.12.2025), திருவிடைமருதூர் பெ.பெரு கோவிந்தராஜ் (23.10.2025), தாம்பரம் தி.இரா.ஆதிலட்சுமி (23.10.2025), எம்.சாந்தி (25.10.2025), திருப்பத்தூர் ஏ.டி.ஜி.கவுதமன் (25.10.2025), மதுரை எம்.ராஜகோபால் (26.10.2025), செல்வ.காளியம்மாள் (வயது 82) (28.10.2025), திருநெல்வேலி ஜி.சாமியடியான் செல்லத்துரை (28.1.2025), குடியாத்தம் இர.இலட்சுமி அம்மாள் (வயது 95) (29.10.2025), காட்டுமன்னார்கோயில் அன்னமேரி (30.10.2025), மறைமலைநகர் காண்டீபன் (02.11.2025), வள்ளியூர் மிசா கா.சிவனுபாண்டியன் (03.11.2025), தஞ்சை இரா.அம்மாபொண்ணு, விருதுநகர் மாவட்ட கழக முன்னாள் தலைவர் வானவில்மணி (09.11.2025), அமெரிக்கா டெக்சாஸ் பிரவீன்குமார் (09.11.2025), மேட்டூர் பெ.பெரு சிந்தாமணியூர் எல்லப்பன் (10.11.2025), சோழபுரம் ஆ.கவுரி (15.11.2025), சிதம்பரம் கோ.வி.சுந்தரமூர்த்தி (17.11.2025), கொக்கூர் அ.முத்தையன் (வயது 93) (21.11.2025), லால்குடி மலர்க்கொடி (வயது58) (19.11.2025), இராமசாமி சங்கிலி (20.11.2025), ஆவடி இரா.திருநாவுக்கரசு (வயது 83) (21.11.2025), விருதுநகர் கா.கோமதியம்மாள் (வயது 86) (27.11.2025), பருகூர் ஜெ.சி.முருகன் (25.11.2025), அருப்புக்கோட்டை இலக்குமி அம்மாள் (29.11.2025), ஜி.வெற்றிவீரன் (29.11.2025), தேனி ச.மனோகரன் (29.11.2025), சோழிங்கநல்லூர் பி.ஆரோக்கியசாமி (வயது 84) (28.11.2025), கடலூர் நகர கழகச் செயலாளர் ச.மனோகரன் (28.11.2025), மதுரை மேலக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் கு.பால்சாமி (29.11.2025), நெடுவாக்கோட்டை கு.கோசலை அம்மாள் (30.11.2025), வாழ்மானபாளையம் பெரியார் பெருந்தொண்டர் வெங்கடாச்சலம் (18.11.2025), வைத்தீசுவரன்கோயில் அக்ரி கலியபெருமமாள் (16.11.2025), பெரப்பூர் ஆர்.ஜனார்த்தனன் (13.11.2025), கோமதி சொக்கலிங்கம் (6.11.2025), நெல்லை மாவட்டம் சி.மணிமொழியன் (04.12.2025), கோவை ந.குருவாயூரப்பன் (06.12.2025), கும்பகோணம் தி.விஜயராணி (10.12.2025), சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் தாண்டவன் (13.12.2025), எஸ்.பி.ஆத்மநாதன் (வயது 80) (14.12.2025), சட்ட எரிப்புப் போராட்ட வீரர் குடந்தை திருநாகேசுவரம் மொட்டையன் ஆகியோர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
(1) மாவட்டக் கழகங்களில் எந்தெந்த ஒன்றி யங்களில் கழக அமைப்பு இல்லை என்பதை அறிந்து, அந்த ஒன்றியங்களில் கழக அமைப்பை ஏற்படுத்துதல்.
முதலில் அமைப்பாளர் என்ற ஒருவரை அறிவித்து, அவருடைய செயல்பாட்டின் அடிப்படையில் அவ்வொன்றியத்தில் இயக்க அமைப்பை மேம்படுத்துதல்.
(2) ஒன்றிய வாரியாகக் கணக்கெடுத்து, மாவட்ட அளவில் கழகத் தோழர்களின் எண்ணிக்கை, முகவரி, தொலைப்பேசி உள்பட சேகரித்தல்.
(3) மாவட்டக் கழகத் தலைவர் தங்கள் மாவட்டம் தொடர்பான விவரங்கள் அடங்கிய பதிவேடுகளைப் பராமரித்தல். தலைமைக் கழகத்தின் ஒப்புதலோடுதான் மாற்றங்கள் செய்யப்படவேண்டும்.
(4) அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்களின் முகவரி கள், தொலைப்பேசிகள், விவரங்களுக்கான கோப்புகள்.
(5) இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாவட்டக் கழகக் கூட்டம் கூட்டி – அந்தந்தப் பகுதிகளில் நடந்த கழக நடவடிக்கைகள் – அடுத்து பிரச்சாரம் உள்பட திட்டங்களை வகுத்தல்.
(6) ஒன்றிய வாரியாக ‘விடுதலை’ உள்ளிட்ட இயக்கச் சந்தாதாரர்களின் விவரம் அறிதல் – புதிய சந்தாக்கள் சேகரித்தல்.
(7) படிப்பகம் உள்ள இடங்களை அன்றாடம் சிறப்பாகச் செயல்படும் வகையில் பராமரித்தல், குறைந்த பட்சம் மாதம் ஒருமுறை ‘‘பெரியார் பேசுகிறார்’’ நிகழ்ச்சிகளை வாய்ப்புள்ள பகுதிகளில் நடத்துதல்.
(8) மாலை நேரங்களில் கழகத் தோழர்கள் படிப்ப கங்களில் அல்லது ஓரிடத்தில் சந்தித்தல்.
(9) கழகத்தில் உள்ள பல்வேறு அணியினரும், அந்தந்த அணியைப் பலப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
(10) பொதுச் செயலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் மேற்கொண்ட பணிகளுக்கான அறிக்கையை மாதந்தோறும் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்தல்.
(11) ஜாதி, தீண்டாமை உள்ளிட்ட பல்வேறு பொதுப் பிரச்சினைகளில் உள்ளூரில் கழகம் தலையிடவேண்டிய அவசியம் வரும்போது, உடனடியாகத் தலைமைக் கழகத்திற்குத் தெரிவித்து, உரிய நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.
(12) தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவினையொட்டி, மாவட்ட அளவில் பேச்சுப் போட்டிகளை – பகுத்தறிவாளர் கழகத்தடன் இணைந்து செயல்படுததுதல்.
(13) சனி, ஞாயிறுகளில் அல்லது விடுமுறை நாள்களில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு இரண்டு முறை பயிற்சிப் பட்டறை நடத்துதல்.
(14) தமிழர் பண்பாட்டு விழாவாம் பொங்கல் விழா வினைக் கழகத்தினர் – பல்வேறு போட்டிகளை நடத்தி, இளைஞர்களை ஈர்த்தல்.
(15) பேச்சாளரிடம் சேர்ந்தாற்போன்று சில நாள்க ளுக்குத் தேதி வாங்கி, தங்கள் மாவட்டங்களில் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துதல். நகரம், கிராமப் பகுதிகளில் அத்தகு கூட்டங்களை நடத்துதல். ‘மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகளை நடத்துதல்.
(16) சமூக வலைதளங்களுக்கான தொழில்நுட்பப் பயிற்சியை நடத்தி, இளைஞர்களைத் தயாரித்து, இயக்கக் கருத்துப் பிரச்சாரம், கழக செயல்பாடுகளை அதிக எண்ணிக்கையில் மக்களை அடையச் செய்தல்.
(17) கழக நிகழ்ச்சிகளைக் கழகத்தின் பல்வேறு அணியினரும் பகுத்தறிவாளர் கழக அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுத்துதல்.
(18) சுவர் எழுத்துப் பிரச்சாரம், துண்டறிக்கைகள் விநியோகம் என்ற நமது கழகத்திற்கே உரித்தான செயல்பாடுகளை மீண்டும் பெரிய அளவில் ஊக்குவித்து நடைமுறைக்குக் கொண்டு வருதல்.
இத்தகு பணிகளை கழகத் தோழர்கள் ஒற்றுமைப் பலத்துடன் மேற்கொண்டு, மக்கள் இயக்கமாகக் காரி யத்தில் காட்டுவது என்று இந்தச் சிறப்புச் செயற்குழு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.
2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி மகத்தான முறையில் வெற்றி பெறுவதற்குக் கடுமையாக உழைப்பது என்று இந்தச் சிறப்புத் தலைமைச் செயற்குழு தீர்மானிக்கிறது.
சமூகநீதி, மதச் சார்பின்மை, பெண்கள் நல வளர்ச்சி, கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, மருத்துவம் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் சமதர்மம், சமத்துவ நோக்கோடு இந்தியாவிலேயே முதன்மை இடம் வகிக்கும் ‘திராவிட மாடல்’ அரசு சாதனைச் சரித்திரம் படைத்து வருகிறது.
‘திராவிட மாடல்’ அரசின் நலத் திட்டங்களைப் பிற மாநிலங்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளும் கூட பின்பற்றும் அளவுக்குத் தமிழ்நாடு அரசின் செயல்பாடு கள் அமைந்திருப்பதை இச்செயற்குழு பெருமிதத்தோடு சுட்டிக்காட்டுகிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளைத் தகர்க்கும் வகையிலும், ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற
ஆர்.எஸ்.எஸ். பிற்போக்குச் சித்தாந்தத்தை மூர்க்கத்த னமாக செயல்படுத்தும் வகையில் பி.ஜே.பி. தலைமையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.
தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில், ஹிந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பதில் தீவிர முனைப்புக் காட்டியும் வருகிறது.
பொருளதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு (EWS) என்ற பெயரால், 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை –ஏற்கெனவே கல்வி, உத்தியோகங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் உயர்ஜாதியினருக்கு, குறிப்பாகப் பாரப்பனர்களுக்கு மேலும் வாய்ப்பினை அதிகரிக்கச் செய்யும் – சமூகநீதியின் ஆணிவேரை வெட்டி வீழ்த்தும் – சமூகநீதிக்கு எதிரான வகையில் ஒன்றிய பி.ஜே.பி. அரசு அதிவேகத்தில் செயலாற்றி வருகிறது.
சட்டப்படியும், முறைப்படியும் தமிழ்நாட்டிற்கு அளிக்கவேண்டிய நிதியைக்கூட ஒன்றிய பி.ஜே.பி. அரசு அளிப்பதில்லை. இயற்கைப் பேரிடருக்குக்கூட நிதி அளிக்க மறுப்பது – ஒன்றிய பி.ஜே.பி. அரசின் மனிதநேய விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. மாநில உரிமைகளைக் கபளீகரம் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது.
இத்தகைய ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துக்கு நேர் எதிரான விஷ முறிவு – தந்தை பெரியாரின் சுயமரியாதை – திராவிட சித்தாந்தமே என்பதை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி, அந்தத் திராவிட சித்தாந்தத்துடன் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான முற்போக்கு ‘திராவிட மாடல்’ மக்கள் நல அரசை தமிழ்நாட்டில் மீண்டும் மலரச் செய்யவேண்டியது, தமிழ்நாட்டு வாக்காளர்ப் பெருமக்களின் முழு முதற்கடமை என்பதை திராவிடர் கழகச் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
வாக்காளர் ஒவ்வொருவரும் தங்களுக்கும், எதிர்காலச் சந்ததியினரின் நலனுக்கும் விழிப்பாகச் செய்யக்கூடிய – செய்யவேண்டிய கடமை என்பதை மீண்டும் மீண்டும் இக்கூட்டம் வற்புறுத்துகிறது.
தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் கொடுக்கும் இந்த மகத்தான வெற்றி இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டக் கூடியதாக இருக்கவேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக மதவாத, ஜாதீய வாதத்தை முன்னிறுத்தி மக்களைப் பிளவுபடுத்தும், ஆட்சி நடத்தும் பி.ஜே. பி. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இத்தேர்தலில் பெருந்தோல்வியைக் கொடுத்துப் பாடம் கற்பிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
தந்தை பெரியாரை உலகமயமாக்கும் பணியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் நமது லட்சியத் திட்டமாக உருவாகி வரும் பெரியார் உலகத்திற்குத் தங்களது நன்றிக் கடனாக நன்கொடைகளை வழங்கி வரும்
தமிழ்ப் பெருமக்களுக்கு இச்செயற் குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இதற்காக அயராது பாடுபடும் நமது கழகத் தோழர்களையும் இச்செயற்குழு பாராட்டுகிறது.
சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உல கத்தில், தந்தை பெரியாரின் பேருருவச் சிலையும், அதையொட்டிய அறிவியல், வரலாற்று, சமூக நீதிக் கண்காட்சிகளும், கருத்தரங்கக் கூடங்களும் அமைக்கும் இத்திட்டம் ஒரு மாபெரும் திட்டம் ஆகும்; அதற்கு தேவையான நிதியும் பெருந்தொகையே ஆகும் என்பதால் தமிழ் பெருமக்களும், உலகத் தமிழர்களும், சமூக நீதிச் சிந்தனையாளர்களும், பகுத்தறிவாளரகளும், பொது வாழ்வில் அக்கறை உள்ளவர்களும், வசதி வாய்ப்பு உள்ளவர்களும், சிறுதுளி பெரு வெள்ளம் என்பதற்கு ஏற்ப இயன்ற நிதியைத் தர வாய்ப்புள்ளவர்களை இத்திட்டத்திற்கு தங்கள் நன்கொடைகளை வாரி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தன்மானம் பாராது இன மானத்திற்காக உழைக்கும் கருஞ்சட்டைத் தொண்டர்கள் எல்லா தரப்பினரையும் அன்புடன் அணுகி, நன்கொடைகளைத் திரட்டி, தந்தை பெரியாரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாளுக்குள் ‘பெரியார் உலகம்’ பணிகள் முடிவடையக் கடமை ஆற்ற வேண்டும் என்றும் இச்செயர் குழு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது.
சமூகநீதி அனைத்து மட்டங்களிலும் கொண்டு வரப்படுவது அவசியமாகும். இவ்வாறு சமூகநீதி தழைப்பதற்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டுமானால், நீதித் துறையில் சமூக நீதி இருக்க வேண்டும். அதிலும், மிக முக்கியமாக உயர்நீதித் துறையில் மிக அவசியமாகும்.
உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி இருக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றக் கொலீஜியமே கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், நீதிபதிகள் நியமனங்களில் சட்டபூர்வமாக சமூகநீதியை உறுதி செய்ய வேண்டும். இனியும் உயர்ஜாதியினரின், குறிப்பாகப் பார்ப்பனர்களின் கூடாரமாக உயர்நீதித் துறை (Higher Judiciary) இருப்பதை மாற்றி, அனைத்துத் தரப்பு மக்களுக்குமானதாக நீதித் துறை அமைய வேண்டும். பாலியல் நீதி (Gender Justice) என்பது சமூகநீதியும் (Social Justice) இணைந்ததாகவும் இருக்க வேண்டும்.
மண்டல் கமிஷன் அறிக்கை ஏற்கப்பட்டு ஏறத்தாழ 35 ஆண்டுகள் ஆனபின்னும் அதில் வழங்கப்பட்ட 13 பரிந்துரைகளில் பல நடைமுறைக்கு வரவில்லை. தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்துப் பரிந்துரைகளையும் நிறைவேற்றிட, இந்தியா முழுவதும் பிரச்சாரத்தையும், அறவழிப் போராட்டங்களையும், சட்ட முன்னெடுப்புகளையும் சமூக நீதியில் அக்கறையுள்ள சக்திகளையும் இணைத்து மேற்கொள்வது என்று இக் கூட்டம் தீர்மானிக்கிறது
‘‘தேசிய புதிய கல்விக் கொள்கை’’ என்ற பெயரால் கல்லூரிகளில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க அண்மையில் யூ.ஜி.சி. சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனை இக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. எந்த வகையிலும் மொழித் திணிப்பை ஏற்க முடியாது.
மேலும், இந்தியாவின் உயர்கல்வியை வழிநடத்தும் நிறுவனங்களான பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (UGC), அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (AICTE), ஆசிரியர் படிப்புக்கான தேசியக் கவுன்சில் (NCTE) ஆகியவற்றைக் கலைத்துவிட்டு, அனைத்தையும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வந்து, அதன் மூலம் தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதற்காக “விக்ஷித் பாரத் சிக்ஷா ஆதிக்ஷன்” என்ற பெயரில் ஒரு சட்டத்தைக் கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சிப்பது மாநில உரிமைகளைப் பறித்து, அனைத்தையும் காவி மயமாக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் சூழ்ச்சியாகும். ஒற்றை ஆட்சித் திணிப்பின் மறைமுக நடவடிக்கையே இத்திட்டம்!
தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு ஏற்கவில்லை என்று உறுதிபடத் தெரிவித்தபின்னும் ஆர்.எஸ்.எஸ்.சின் முயற்சிகள் நின்றபாடில்லை. கல்லூரிகளுக்குள் பல பெயர்களில் காவிகள் நுழைவதையும், மொழித் திணிப்பையும் விழிப்புடன் கண்காணித்துத் தடுக்கவேண்டியது – தற்போது நமது முக்கியக் கடமையாகும் என்பதைத் தமிழ்நாடு அரசுக்கும், கல்வியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் இக் கூட்டம் வலியுறுத்துகிறது.
இந்திய நாட்டின் வெகுமக்களான உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்களை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. ‘உழைப்புக்கேற்ற ஊதியம்’, தொடங்கி, ‘உழைப்பாளிக்கும் தொழிலில் பங்கு’ என்பதை நோக்கி முன்னேற வேண்டிய காலகட்டத்தில், உழைப்பு என்பது அவரவர் கடமை என்றும், பலனை எதிர் நோக்காது பணியாற்ற வேண்டும் என்றும் மனுதர்மப் பார்வையில் கட்டளையிடும் சட்டங்கள் தொழிலாளர் விரோதச் சட்டங்களே ஆகும். பணி நிரந்தரம், ஒரே பணிக்கு ஒரே சம்பளம் போன்றவற்றை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்ற வேண்டுமேயொழிய, தொழிலாளர் உரிமையைப் பறிக்கும் சட்டங்களை இயற்றக் கூடாது; அவற்றுக்கு எதிராகத் தொழிலாளர் அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும் போராட வேண்டும் என்று இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான திருச்சி திருவெறும்பூர் பாரத் ஹெவி எலக்ட்ரிகல் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற பெயரில் நெடுங்காலமாக வஞ்சிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காகப் போராடி, நீதிமன்றத்தில் வழக்காடி அவர்களுக்குரிய உரிமையைப் பெற்றுத் தந்து, நிரந்தரப் பணியாளர்கள் என்ற நிலையையும் எட்ட வைத்துள்ள திராவிடர் தொழிலாளர் கழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு இச்செயற்குழு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.
இதைப்போல பல்வேறு நிறுவனங்களில் நடைமுறையில் இருக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
ஒன்றிய பாஜக அரசு அனைத்து மக்களுக்குமான அரசு என்பதை மறந்து ஆர்.எஸ்.எஸ்-சின் செயல் திட்டங்களை நிறைவேற்றுவதையே பெரும்பணியாகச் செய்து கொண்டிருக்கிறது. கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்குப் பெரும் உதவியாக, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரிலிருந்து, காந்தியார் பெயரை நீக்கி, அதற்குப் பதிலாக ‘‘ராம்’’ என்று வரும் வகையில் மாற்றி அமைத்து, அந்த நிதிச் சுமையையும் மாநில அரசுகளின் தலையில் திணிக்கும் வகையில் கொண்டுவரப்படுகின்ற சட்ட முன் வரைவு – மதச்சார்பின்மையின் அடிப்படையிலும் மாநில உரிமைகளின் அடிப்படையிலும் ஏற்கத்தக்கது அல்ல. அச் சட்டத்திற்குத் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தன் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. அத்திட்டத்திற்கு மீண்டும் காந்தியார் பெயரையே சூட்ட வேண்டும் என்றும் இக்கூட்டம் ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறது.
-விடுதலை நாளேடு, 18.12.25