
26.12.14 மாலை தென் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் (அங்காடி அருகில்) முதலாவது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு நடைபெற்றது. திருத்தணி பன்னீர் செல்வம் & நாத்திகன் இசைக்குழு இசை நிகழ்ச்சியை பார்வையாளர் பகுதியில் இருந்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேட்டு மகிழ்ந்தார்.
------------+++++++++------++++------++++---
தென் சென்னையில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு முதல் வட்டார மாநாடு
மத்தியில் ஆளும் பிஜேபி ஆட்சி ஜாதியைக் காப்பாற்ற இந்து மதத்தை, மனுதர்ம சாஸ்திரத்தைத் தூக்கிப் பிடிக்கிறது என சென்னையில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் ஆதாரத் துடன் எடுத்துக்காட்டி பேசினார்.
சென்னை எம்ஜிஆர்நகர் அங்காடி(மார்கெட் )பகுதியில் பாவாணர் திடலில் தென் சென்னை திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாடு சட்டத்துறை செயலாளர் வழக்குரை ஞர் த.வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டைத் திறந்துவைத்து வழக்குரைஞர் சு.குமாரதேவன் பேசினார். மாநாட்டில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திருவிடைமருதூர் திமுக சட்டமன்ற உறுப் பினர் கோவி.செழியன், திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் உரையாற் றினார்கள். மாநாட்டில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி மாநாட்டு சிறப்புரையாற்றினர்.
பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வடமாவட்டங்களின் அமைப்புச்செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.ரத்தினசாமி, சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு, தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தய்யன், தலைமைச் செயற்குழு உறுப் பினர் க.பார்வதி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திரு மகள், மகளிர் பாசறை மண்டல செயலாளர் உமா செல்வராசு, வடசென்னை மாவட்டத் தலைவர் தி.வே.சு.திருவள்ளுவன், ஆவடி மாவட்ட செயலாளர் பா.தென்னரசு, உதயக்குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் வரவேற்றார்.
மாநாட்டுத் தொடக்க நிகழ்ச்சியாக திருத்தணி பன்னீர் செல்வம் மற்றும் நாத்திகன் வழங்கிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
கலந்துகொண்டவர்கள்
தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன் மற்றும் சி.செங்குட்டுவன், துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் மற்றும் சா.தாமோதரன், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தமிழ்சாக்ரட்டீஸ், தென்சென்னை இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன், செயலாளர் சண்முகப்பிரியன், அமைப்பாளர் ச.மகேந்திரன், தரமணி மஞ்சுநாதன், ந.இராமச்சந்திரன், கோடம்பாக்கம் மாரியப்பன், கோபால கிருஷ்ணன்,க.தமிழ்ச்செல்வன், க.பாலமுரளி, பொறியாளர் குமார், தளபதி பாண்டியன், ம.நடராசன்,அய்ஸ் அவுஸ் சேது, பொழிசை கண்ணன், கணேசன்,செந்துறை இராசேந்திரன், ஏழுமலை, பெரியார் மாணாக்கன், சிந்தாதிரிப்பேட்டை மாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் சைதை மு.ந.மதியழகன் நன்றி கூறினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றியபோது,
மத்திய ஆட்சி ஜாதியைக் காப்பாற்ற மனுதர்ம சாஸ்திரத்தை தூக்கிப்பிடிக்கிறது
சேலம் பொதுக்குழுவில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்துவது என்றும் முதல் மாநாடாக சென்னையில் நடைபெறுகிறது. மக்களை விழுங்கி விடலாம் என்று மதவெறி, ஜாதி வெறி, மூடநம்பிக்கை, போலித் தேசியம் பேசுவோரை அடையாளப்படுத்தி திராவிடர் விழிப் புணர்வு மாநாட்டை ஆங்காங்கே நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
திராவிடர் கழகம் - சுயமரியாதைக்கான இயக்கம்
திராவிடர் கழகம் என்றாலே சுயமரியாதைக்கான இயக்கம் என்றுதான்பொருள். கொள்கையைச் சொல்லுவதில் யார் முந்திக்கொண்டார்கள் என்று இருக்க வேண்டும். புத்தகங்கள் வியாபாரத்துக்காக அல்ல. உண்மைகள் போய்ச்சேர வேண்டும். நாங்கள் சொல்லுகின்ற கருத்துகள் எதுவும் சொந்தக்கருத்துகள் அல்ல. ஆதாரபூர்வமானவை.
நம் சமுதாயத்தில் சிந்திக்கக்கூடாது. கேள்வி கேட்கக் கூடாது என்று மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் இருந் தால், ஆறறிவு இருந்தும் நாம் 5 அறிவு மிருகமாக நடத்தும் நிலையில் தான் இருப்போம்.
திராவிட இயக்கம் தோன்றி 95 ஆண்டுகள் ஆகின்றன. ஆட்சிகள் இருந்துள்ளன. திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற பேதைகள் உள்ளனர். திராவிடர் இயக்கம் இல்லை யென்றால் அவர்களின் நிலை என்ன? கோவணத்துடன்தான் வயல் வெளிகளில் காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும். வெள்ளை சட்டை போடமுடியாது. நினைத்துப் பார்க்க வேண்டும். யார் வேண்டுமானாலும் எங்கும் செல்லலாம். திராவிடர் என்ற உணர்வு என்று வரும்போது திராவிடர் என்றால் என்ன? அரசியல், ஜாதி, மதங்கள் பிடித்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஒரு நூற்றாண்டுக்கு முன் 1900இலே இந்த இயக்கம் தோன்றுவதற்கு முன்னால் இதே சென்னையில் இருந்த நிலை என்ன? ஒற்றைவாடைத் தெருவில் (வால்டாக்ஸ் ரோடு) நாடகக்கொட்டகையில் அபிராமி சுந்தரி சரித்திர நாடகம் பெரிய துண்டறிக்கையில் பலவகைக் கட்டணங்கள் போடப்பட்டிருக்கும். கீழே குறிப்பு என்று இருக்கும். அதில் பஞ்சமருக்கு இடமில்லை என்று இருந்தது. ஆதாரத்துடன் கூறுகிறோம். அந்தத் துண்டறிக்கை நம்மிடம் இருக்கிறது. இப்படி சென்னை தலைநகரிலே போட்டிருந்தார்களே.
திராவிடர் இயக்கம் இல்லை என்றால் மாற்றம் ஏற்பட்டிருக்குமா?
ஒரு நூற்றாண்டுக்கு முன்னால், சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம் தோன்றுவதற்கு முன்னால் இலவசமாக அல்ல, கட்டணம் கொடுத்தாலும் பஞ்சமருக்கு இடமில்லை. திராவிடர் இயக்கம் இல்லை என்றால் மாற்றம் ஏற்பட்டிருக் குமா? இன்னமும் இரட்டைக் குவளைகள் இருக்கின்றன. கோயில்களில் நுழைய முடியாமல் இருக்கிறது. திராவிடர் இயக்கத்தின் பயணம், இலட்சியப் பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இன்று என்ன நிலை? பஞ்சமர்க்கு இடமில்லை என்று போட்டால் சட்டப்படி ஜெயிலில் இருக்கவேண்டும்.
மாமனிதர் பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் எல்லார்க்கும் எல்லாமும் என்ற சமூக நீதிக்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். இப்போது மதவெறியர்கள் மறைமுகமாகத் தாக்கத் தொடங்கி இருக்கிறார்கள். கொஞ்சம் அசந்தால் நம் உரிமைகளைப் பறித்துவிடுவார்கள். திராவிடர் இயக்கத்துக்கு உள்ள வரலாறு மற்றவர்களுக்கு உண்டா? எண்ணிப்பார்க்க வேண்டும். தந்தை பெரியார் மீது செருப்பு, மலம், அழுகிய முட்டை வீசியபோதும், பிறவி பேதம் இருக்கக் கூடாது என்கிற உணர்வு பெரியாரால், திராவிடர் இயக்கத்தால் ஏற்பட்டது. இதே சென்னையில் தியாகராயர் நகரில் 19.12.1973 அன்று அந்த தன்மானச்சிங்கம் கர்ஜித்ததே. உங்களையெல்லாம் சூத்திரராக விட்டுச் செல்கிறேனே என்றாரே. 95 ஆண்டுக்காலம் மக்களுக்காக உழைத்தது எப்படிப்பட்டது? பிரித்துவைத்து ஆள்வது ஆரியம். ஏமாறுவது திராவிடம். திராவிடர் என்று கூறும்போது ரத்தப்பரிசோதனை வைத்துப் பார்க்க முடியுமா? என்கிறார்கள். இதை அன்றைக்கே பெரியார், அண்ணா தெளிவு படுத்திவிட்டார்கள். சொன்னாரே நம்முடைய கழகத் துணைத்தலைவர் கவிஞர். இந்த இயக்கத்துக்கு சூத்திரக் கழகம் என்றால் சூத்திரன் என்பது கவுரவப்பட்டமா? இந்து சட்டம் இன்னமும் சிவில் துறையில் ஜாதி இருக்கிறது. தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்றுதான் சட்டத்தில் உள்ளது. அதற்கு மூல காரணமான ஜாதி இருக்கிறது.
பிஜேபி ஆட்சி ஜாதியைக் காப்பாற்ற மனுதர்மத்தை தூக்கிப் பிடிக்கிறது
தந்தை பெரியார்தான் கேட்டார். சுதந்திரம் உள்ள நாட்டில் சூத்திரன் இருக்கலாமா?
பஞ்சமன், பறையன், பார்ப்பான் இருக்கலாமா? பிறக்கும்போதே கீழ் ஜாதி இருக்கலாமா? என்று கேட்டார். எல்லா ஜாதிக்கும் கீழாக பெண்கள் என்று மனுதர்மம் அதைத்தான் சொல்கிறது. 1919இல் மனுதர்மம் புத்தகத்தை அப்படியே தமிழில் போட்டுள்ளோம். மத்திய ஆட்சி ஜாதியைக் காப்பாற்றத்தானே இந்து மதத்தை, மனுதர்ம சாஸ்திரத்தைத் தூக்கிப்பிடிக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதி 18 இடங்களில் உள்ளது.
கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்பதுபோல பகவத் கீதை வருணதர்மத்தை ஜாதியை ஆணி அடித்து. அதை நிலை நிறுத்தி மூளையில் போட்ட விலங்காக உள்ளது. அதை மாற்றவேண்டும் என்றால், மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது என்றால் அழிந்திருக்கும். அதைக் கடவுளே ஏற்படுத்திவிட்டதாகக் கூறிவிட்டார்கள்.
புத்தர், சித்தர்கள், இராமலிங்க அடிகள் என்று பலரும் கூறினார்கள். கடைவிரித்தோம் கொள்வாரில்லை என்றனர். தந்தைபெரியார்தான் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என் பதைப்பற்றிக் கவலை இல்லை, மானமும், அறிவும் பெற வேண்டும் என்றார்.
இன்றைக்கும் பேசுகிறார்கள். மனுதர்மம் முதல்வ அத்தியாயம் 87ஆவது சுலோகம் அந்த பிர்மாவானவர் என்று தொடங்குகிறது. ஏதோ ரொம்பப் பழக்கமானவர்போல, பிர்மாவின் தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந் தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், பாதத்தில் பிறந்தவன் சூத்திரன் என்று இம்மைக்கும், மறுமைக்கும் கருமங்களின்படி பகுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
தந்தைபெரியாரிடம் தலை, தோள், தொடை, காலில் பிறந்ததாக சொல்கிறார்களே, பஞ்சமர்கள் எங்கு பிறந்தார்கள் என்று கேட்டபோது, அவர்கள்தான் முறையாக அப்பா, அம்மாவுக்கு பிறக்க வேண்டிய இடத்தில் பிறந்தார்கள். என்றார். அடுக்குமுறையில் சமத்துவமின்மை (Graded Inequality) சூத்திரன் என்றால் காலில் பிறப்பதாக சொல்பவனைப்பார்த்து புரட்சிக்கவிஞர்தான் கேட்பார் முகத்தில் பிறப்பதுண்டோ முட்டாளே, தோளில் பிறப்பதுண்டோ தொழும்பனே, தொடையில் பிறப்பதுண்டோ கடையனே என்று கூறுவார். இத்தனை இடங்களிலும் பிறப்புறுப்பு இருந்தால் பிர்மா எப்படி இருப்பான்? (கைதட்டல்) கால், தொடை, கால்களில் பிறக்க முடியுமா?
தர்க்க ரீதியாக வாதிட்டவர்களில் பெரியார்போல் உலக சரித்திரித்தில் கிடையாது.
கடவுளை வணங்கும்போது பாதார விந்தங்களில் சேர்த்துக்கொள் என்கிறார்களே, அப்படியானால், பாதத்தில் பிறப்பவன் ஏன் சூத்திரன் என்று கேட்டார். புரியாமல் நம்புவது, ஏமாறுவது திராவிட இனமாக உள்ளது. சாஸ்திரம், கடவுள், பகவத் கீதை என்று ஏமாற்றிவருவது ஆரியம். நாங்கள் இவற்றைப் படித்துத்தொலைத்ததுமாதிரி வேறு எவரும் இருக்கமாட்டார்கள். இந்த கருமத்தை நாங்கள் படித்திருக்கிறோம். அவதாரம் என்றால் மேலிருந்து கீழே இறங்கி வருவதாம். நாவலர்தான்கேட்பார் 10 அவதாரம் எடுத்தான் என்கிறீர்களே, ஏன் இங்கேயே ஏன் அவதாரம் எடுத்தான்? ஏன் அபீசீனியாவில் ஓர் அவதாரத்தை எடுக்கவில்லை? என்று கேட்பார். நன்முறை சொல்லும் காலக்கட்டத்தில், மதவெறியால் வன்முறையை ஏற்படுத்துகிறார்கள்.
கடவுள் அன்பு, கருணை வடிவானவர் என்றால், கொலை காரர்களிடம் இருப்பதுபோன்று ஆயுதங்கள் எதற்கு? ஏன்று கேட்டார் பெரியார். நடராஜர் காலைத் தூக்கி ஆடுமபோது, மிதித்திருப்பது மனிதனைத்தானே?
கிருஷ்ணாவதாரம் எடுத்த மகாவிஷ்ணு சதுர்வர்ணம் மயாஸ்ருஷ்டம்; குணகர்ம விபாசக; தஸ்ய கர்த்தாரமபிமாம்; வித்திய கர்த்தார மவ்யம்....(பகவத் கீதை 4-13) என்று கீதையில் கூறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புராணங்களையெல்லாம் இப்போது விஞ்ஞானம் என்று கூறத் தொடங்கி விட்டார்கள்.
பாற்கடலில் பள்ளி கொண்ட மகாவிஷ்ணுவிடம் தேவர்கள் முறையிட்டார்களாம். மகாவிஷ்ணு தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கி போட்டானாம். ஒன்று கருப்பு, மற்றொன்று வெள்ளையாம். பலராமன், கிருஷ்ணன் அவதாரங்களாம். ரொம்ப பேர் கதைத் தெரியாமல் இருக்கிறார்கள். யாராவது மனம் புண்படுகிறது என்றால் வழக்கு போடட்டும். நீதிமன்றத்தில்தான் சரியாகப் பதிவு செய்யவேண்டும். கிருஷ்ணாவதாரம் என்றால் கருப்பு. பலராமன் அவதாரம் வெள்ளை மயிர், சத்திரியர்களை ஒழிக்க கோடாரியோடு பலராமன் அவதாரமாம். இப்படி அவதாரம் இருக்குமா? என்று பகுத்தறிவுள்ள யாரும் கேட்பார்கள். 10ஆவது சுலோகம் வேதம், ஸ்மிருதி, ஸ்ருதி என்ன கூறுகிறது என்றால், தர்க்கப்படி ஆட்சேபிக்கக் கூடாது என்கிறது.
சூத்திரன் என்றால் யார்? 8ஆவது அத்தியாயத்தில் சூத்திரன் என்றால், யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன்; பக்தியினால் வேலை செய்கிறவன். வேசி மகன். விலைக்கு வாங்கப்பட்டவன்; ஒருவனால் கொடுக்கப்பட்டவன்; குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன்; குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என ஏழு வகைப்படுவர்.
தாயை வேசி என்று சொல்கிறான். இதை அறிவாசான் தந்தை பெரியார்தான் கேட்டார். அமைச்சர் ஒருவரும் மேடையில் இருந்தபோது பெரியார் பேசினார். இங்கு எல்லாருமே சூத்திரர்தான். அமைச்சராக உள்ள இவர் மாண்புமிகு சூத்திரர் ஆக இருக்கிறார். நாம் வெறும் சூத்திரனாக இருக்கிறோம் என்றார்.
வாஜ்பேயி அவருக்கு உள்ள உடல்நிலையில் பாரத் ரத்னா வழங்கப்படும் செய்தியைக்கூட அறியாதவராக இருப்பார். மனித நேயத்துடன் அவர் நன்றாக இருக்கவேண்டும் என்போம். 152ஆவது பிறந்த நாளில் பண்டிட் மாளவியாவுக்கும் பாரத ரத்னாவாம்.
மிஸ்டு காலில் மெம்பர் ஆகும் கட்சியால் மானத்தை மிஸ் பண்ணாதீங்க. மாளவியா ஜாதியை இருக்க வேண்டும் என்றவர். குழந்தைத் திருமணம் இருக்க வேண்டும் என்றவர்.
மண் உருண்டை மாளவியா
1930ஆம் ஆண்டில் இங்கிலாந்து வட்ட மேசை மாநாட்டுக்கு சென்றார். இந்து கடல் கடக்கக்கூடாது. அப்படிக் கடல் கடந்தால் கீழ் ஜாதி ஆவான் என்று உள்ளது. அப்போது காசியிலிருந்து மண்ணை உருண்டையாக்கி எடுத்துச்சென்றார். கடல் கடந்தாலும் மண் உருண்டை இருப்பதால் மண்ணைவிட்டு சென்றதாகாது என்றார்.
அதிலிருந்து மண் உருண்டை மாளவியா என்றழைக்கப்பட்டார்.
அவர்தான் இந்து மகா சபையை உண்டாக்கியவர். படிப்பதற்கு பல்கலைக்கழகம் என்றால் எல்லோருக்கும் பொதுவாகத்தானே இருக்க வேண்டும். அவர் இந்து பல்கலைக்கழகத்தை உண்டாக்கினார். அவருக்கு பாரத் ரத்னாவாம். பெரியார் சொல்வார், பிரசவத்தின்போது வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த குழந்தைகள் பிறந்தவுடன், தொட்டிலில் உள்ள குழந்தைகள் மாறிவிட்டால், மதம் என்ன ஆகிறது என்று கேட்பார்.
காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு சிலை என்று கூறுகிறார்கள். கோயில் என்கிறார்கள். இன்னும் 11வது அவதாரம் என்பார்கள். காந்தியைக் கொன்ற கோட்சே ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் இல்லை என்றும் அவர் இந்து மகா சபையைச் சேர்ந்தவர் என்றும் கூறினார்கள். அந்த மகாசபையைத் தோற்றுவித்த மாளவியாவுக்கு பாரத் ரத்னா என்றால் காந்தியைக் கொன்றதற்கு பாரத் ரத்னாவா?
-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டார்.
- விடுதலை நாளேடு 31.12.2014







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக