புதன், 30 ஜூலை, 2025

பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி அளிப்பது செங்கல்பட்டு மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்க முடிவு தென்சென்னை கூட்டத்தில் தீர்மானம்


சென்னை, ஜூலை30– பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி அளிப்பது எனவும், செங்கல்பட்டு மாநாட்டிற்கு வாகனங் களில் சென்று பங்கேற்பது என்றும் தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல்  கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது,

27.07.2025, ஞாயிற்றுக் கிழமை, முற்பகல் 11.00 மணிக்கு திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதி கஜபதி தெருவில் உள்ள ஆர்.வீ.ஆட்டோ ஒர்க்ஸ் வாயிலில் தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல்  கூட்டம் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கோ.வீ.ராகவன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

‘பெரியார் உலகம்’  நிதி திரட்டல், செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க  நூற்றாண்டு நிறைவு மாநாடு மற்றும் ‘குடிஅரசு இதழ்’ நூற்றாண்டு நிறைவு விழா, ‘விடுதலை ஏடு’ சந்தா சேர்த்தல், இயக்க பணிகள் குறித்து துணைத் தலைவர் மு.சண்முகப்பிரியன், துணைச் செயலாளர் கரு.அண்ணாமலை, இளைஞரணி மாவட்ட செயலாளர் பெரியார் யுவராஜ், துணைத் தலைவர் அ.அன்பு, துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, பகுதி கழக பொறுப்பாளர்கள் சூளைமேடு நல்.இராமச் சந்திரன், இராயப்பேட்டை கோ.அரிகரன், எம்.ஜி.ஆர்.நகர் கண்ணன் ஆகியோர் கருத்துகளையும் செயல் திட்டங்களையும் கூறினர்.

மாநில  இளைஞரணி  துணைச் செயலாளர் சோ.சுரேஷ் செயல் திட்டங்கள் வகுப்பது குறித்தும், குழுக்கள் அமைத்து ஒருங்கிணைந்து செயலாற்றுவது  குறித்தும் விளக்கி உரையாற்றினார்.

அய்ஸ் அவுஸ் உதயா, மா.இனியவள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

‘பெரியார் உலகம்’  நிதியை பெருமளவில் திரட்டி தருவது என்றும்,  செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க  நூற்றாண்டு நிறைவு மாநாடு மற்றும் ‘குடிஅரசு இதழ்’ நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு பெருமளவில் வாகனங்களில் சென்று பங்கேற்பது என்றும், மாநாடு குறித்து சுவர் விளம்பரம் செய்தல், நெகிழி திரை வைத்தல்,  தெருமுனைக் கூட்டம் நடத்தி பரப்புரை செய்வது என்றும், ‘விடுதலை ஏட்டிற்கு’ சந்தாக்களை சேர்த்தல் என தீர்மானிக்கப்பட்டது.

இறுதியில் கோட்டூர் புரம் ச.தாஸ் நன்றி கூறினார்.


செவ்வாய், 22 ஜூலை, 2025

மும்மொழித் திட்டம், தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 

சென்னையில் கழகத் துணைத் தலைவர் பங்கேற்றுக் கண்டன உரையாற்றினார்


மும்மொழித் திட்டம், தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும்

ஒன்றிய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை, மே 21- மும்மொழித் திட்டம், புதிய தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, திராவிட மகளிர் பாசறை சார்பில் நேற்று (20.5.2025) மாலை சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில்: சமூகநீதிக்கு எதிராக ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் சட்டங்களும், நடவடிக்கைகளும் பிற்படுத்தப்பட்ட மற்றும்  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பேராபத்தாகவே உள்ளன.

தமிழ்நாடு

ஜாதியின் காரணமாக கல்வி மறுக்கப்பட்ட பெரும் பான்மை மக்களின் கண்களை திறந்து விட்டதிலும், கைகொடுத்து தூக்கி விட்டதிலும் இடஒதுக்கீட்டிற்கு முக்கிய பங்களிப்பு உள்ளது.

கல்விக் கண்ணொளி

இடஒதுக்கீட்டின் காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், சிறுபான்மையினரும் கல்விக் கண்ணொளி பெற்று எழுந்து நடமாடும் நிலையில் பார்ப்பனீயத்திற்கே உரித்தான நயவஞ்சகத் தன்மையோடு, “நீட்” என்றும், பொருளாதார அளவுகோல் (EWS) என்றும் கொல்லைப்புற வழியை தேர்ந்தெடுத்து சமூகநீதிக்கு எதிராக குறிப்பிட்ட கல்வியில், வேலைவாய்ப்பு துறைகளில் இடஒதுக்கீடு கிடையாது என்ற நிலையை ஏற்படுத்தி வருகிறார்கள்.

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கிறார்கள். இவற்றை நாம் ஒருங்கிணைந்து முறியடிக்காவிட்டால் மீண்டும் பார்ப்பனரல்லாத மக்கள் பார்ப்பனீய ஆதிக்கம் என்ற யானையின் காலில் மிதிக்கப்பட்டு நசுங்க வேண்டிய அவல நிலைதான் ஏற்படும்.

மருத்துவக் கட்டமைப்பைச் சிதைக்கும்

நீட் தேர்வில், தற்கொலைகள் தொடர்வதும், மாணவர்களும், பெற்றோரும் அலைக்கழிக்கப்படுவதும் நாளும் தொடர்கதையாகி வருகிறது. மருத்துவக் கல்வியையும், கட்டமைப்பையும் சிதைக்கும் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்களிக்கும் சட்டம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரு முறை நிறைவேற்றி அனுப்பப்பட்டும், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடுகள் மாநில உரிமைக்கும், அரசமைப்புச் சட்டத்துக்கும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கும் விரோதமானவையாகும்.

நீட் தேர்வு ஒழிப்புப் போர் கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இறுதி வெற்றி கிட்டும் வரை சற்றும் ஓயாமல், அயராமல் போராடி, நீட்டை ஒழித்து சமூக நீதியையும் மாநில உரிமையையும் மீட்கவும், மும்மொழிக் கொள்கையையும், தேசியக் கல்விக் கொள்கையையும், ஒன்றிய பா.ஜ.க. அரசு திணிப்பதைக் கண்டித்தும் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் ஆகியவை இணைந்து மாநிலம் முழுவதும் மே 20ஆம் தேதி அன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என கடந்த 11.5.2025 அன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற திராவிட மாணவர் கழக மாநிலக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது என துணைத் தலைவர் உரையாற்றினார்.

இதன்படி நேற்று (20.5.2025) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் நேற்று (20.5.2025) மாலை 4 மணியளவில் திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை வரவேற்புரையாற்ற, திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மண்டலத்தில் உள்ள மாவட்டத் தலைவர்கள் வழக்குரைஞர் தளபதிபாண்டியன், இரா.வில்வநாதன், தாம்பரம் ப.முத்தையன், வெ.கார்வேந்தன், புழல் ஆனந்தன், எண்ணூர் வெ.மு.மோகன், வே.பாண்டு.

மாவட்ட செயலாளர்கள் புரசை சு.அன்புச்செல்வன், செ.ர.பார்த்தசாரதி, கோ.நாத்திகன், க.இளவரசன், கும்மிடிப்பூண்டி பாஸ்கர், ந.இராசேந்திரன், விஜய் உத்தமன்ராஜ் மற்றும் கழக இளைஞரணி, மகளிரணி, திராவிட மாணவர் கழக மற்றும் திராவிட மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்ட முழக்கம்

ஆர்ப்பாட்டத்தில் பெரியார் களம் இறைவி, இர.சிவசாமி, பெரியார் யுவராஜ், ப.சக்கரவர்த்தி, இரா.சதீசு, ந.கார்த்திக் ஆகியோர் கீழ்க்கண்ட ஒலி முழக்கங்களை எழுப்பினர்.

காப்போம்! காப்போம்! சமூகநீதியைக் காப்போம்! ஒடுக்கப்பட்டோர் ஒற்றுமையை காப்போம்! மீட்போம்! மீட்போம்! ஒன்றிய அரசால் பறிக்கப்படும் உரிமைகளை மீட்போம்!

கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்! ஹிந்தியை சமஸ்கிரு தத்தையும் திணிக்கும் பாஜக அரசைக் கண்டிக்கிறோம்.

ஏற்கமாட்டோம்! ஏற்கமாட்டோம்! மும்மொழிக் கொள்கையை ஏற்கமாட்டோம். கை வைக்காதே கை வைக்காதே!  கை வைக்காதே! இருமொழிக் கொள்கையில் கை வைக்காதே!

சிதைக்காதே சிதைக்காதே! இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்காதே! தேசிக் கல்விக் கொள்கை என்னும் பெயரால் காவிக் கொள்கையைத் திணிப்பதா? தனியார் மயத்தை வளர்ப்பதா? சமூகநீதியைப் பறிப்பதா?

குலத்தொழில் செய்ய ஆசை காட்டும் விஸ்வகர்மா போஜனா, பார்ப்பனியத்தை ஆள வைக்கும் மனுதர்ம யோஜனா, அய்ந்தாம், எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு கட்டாயமாம்! பள்ளிக் கல்வியை முடித்த பின்னர் குலக்கல்விக்குப் பட்டாவாம்.

கொண்டுவா கொண்டுவா! கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வா! ஒழித்துக் கட்டுவோம் ஒழிக்கட்டுவோம்! தேசியக் கல்விக் கொள்கையை ஒழித்துக் கட்டுவோம்!

போராடுவோம் வெற்றி பெறுவோம்! வெற்றி கிட்டும் வரை போராடுவோம்!  – போன்ற ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

கண்டன உரை

இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்க உரையாற்றினார். துணைப் பொதுச் செயலாளர்கள் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, ச.பிரின்சு என்னாரெசு பெரியார், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற்றினர். நிறைவாக திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கண்டன உரை நிகழ்த்தினார்.

திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் பொறியாளர் தேவ.நர்மதா இணைப்புரை வழங்கினார். திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம் நன்றி கூறினார்.

கலந்து கொண்டோர்

வடசென்னை: கி.இராமலிங்கம், தி.செ. கணேசன், வழக்கு ரைஞர் மு.வேலவன், கோ. தங்கமணி, பா. கோபாலகிருட்டிணன், ச. இராசேந்திரன், சி.பாசுகர், நா. பார்த்திபன், கண்மணிதுரை, ஆ. துரைராவணன், ஏ. மோகன், பா. பார்த்திபன், ந. கார்த்திக், த. பரிதின், ச. சஞ்சய், சி. செல்லப்பன்.

தென்சென்னை:  கரு. அண்ணாமலை, டி.ஆர். சேதுராமன், ந. மணிதுரை, பெரியார் யுவராஜ், சா. தாமோதரன், ச. மகேந்திரன், இரா. மாரிமுத்து, கோ.வீ. ராகவன், எம்.டி.சி. இராஜேந்திரன், நல். இராமச்சந்திரன், நுங்கம்பாக்கம் சஞ்சய், மு. சண்முகப்பிரியன், டைலர் கண்ணன்.

தாம்பரம் மாவட்டம்:  தாம்பரம் சு. மோகன்ராஜ், பொழிசை, க. கண்ணன், பாலமுரளி, அரசன்கழனி குணசேகரன், மா. குணசேகரன், பழனிசாமி, சு.ம. இராமச்சந்திரன், இரா. உத்திரகுமாரன், கேளம்பாக்கம் லட்சுமணன், தனசேகர்.

ஆவடி மாவட்டம்: மு. ரகுபதி, க. தமிழ்ச்செல்வன், இரணியன் (எ) அருள்தாஸ், அ.வெ. நடராசன், துரை. முத்து கிருஷ்ணன், பூ. இராமலிங்கம், முரளி, ஜெயராமன், இரா. கோபால், எ. கண்ணன், கு. சங்கர், அரிகிருஷ்ணன், வி. சோபன்பாபு, சி. வஜ்ரவேல், பெரியார்மாணாக்கன், அய். சரவணன், வெங்கடேசன், வேல்சாமி, சந்திரபாபு, உடுமலை வடிவேல், வை. கலையரசன், வேல்முருகன், தங்கதுரை, இ. தமிழ்மணி.

கும்முடிபூண்டி மாவட்டம்: புழல் சோமு, வடகரை உதயகுமார்,  ஓவியர் ஜனாதிபதி, கசேந்திரன், சோழவரம் ப. சக்கரவர்த்தி, க.ச.க. இரணியன், செகத விஜயகுமார், அய். அருணகிரி (எல்லாபுரம் ஒன்றிய தலைவர்), அ. ஆகாஷ் (மா.இ. அணி செயலாளர்), அ. கலையரசன் (இளைஞர் அணி).

திருவொற்றியூர் மாவட்டம்:  பெ. செல்வராசு, எம்.ஆர்.எப். சேகர், இராவணன், சத்தீஷ்.

சோழிங்கநல்லூர் மாவட்டம்:  தமிழ் இனியன், அரசு, கலைச்செல்வன், குணசேகரன், பி.சி. ஜெயராமன்.

கழக மகளிரணி: சி. வெற்றிச்செல்வி (பொதுக்குழு உறுப்பினர்), பசும்பொன், தங்க தனலட்சுமி (பொதுக்குழு உறுப்பினர்), ச. இன்பக்கனி, டி. இளவரசி, த. திராவிடஎழில், த.யாழ்தமிழ், ஞானதேவி, கனிமொழி, த. தேவி, மோ. மீனாட்சி, மு. பவானி, கோ. குமாரி, தெய்வானை, ராதிகா, சி. அறிவுமதி, பூவை செல்வி, இ.ப. சீர்த்தி, சீ.ப. மகிழன், அன்புச்செல்வி, பகுத்தறிவு, யாழினி மற்றும் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் வேல்.சோ. நெடுமாறன், பெரியார் நூலக வாசகர் வட்டத் தோழர்கள் ஜெ. ஜனார்த்தனம், சோமசுந்தரம், மு.இரா. மாணிக்கம் உள்ளிட்ட ஏராளமானத் தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

- விடுதலை நாளேடு,21.5.25

திங்கள், 21 ஜூலை, 2025

‘வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார்’ – நூற்றாண்டு நிறைவு விழா, தந்தைபெரியார் நினைவகம் (ம) பெரியார் நூலகம் திறப்பு விழா (கேரளா –12.12.2024)


இந்தியா, தமிழ்நாடு

தந்தை பெரியார் நினைவகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் காட்சியையும், தந்தை பெரியார் நூலகத்தையும், தமிழ்நாடு மாநில முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி மற்றும் அமைச்சர் பெருமக்கள் பார்வையிட்டனர்.

இந்தியா, தமிழ்நாடு

கருநாடகாவை சேர்ந்த எழுத்தாளர் தேவனூர் மஹா தேவாவிற்கு இந்த ஆண்டிற்கான வைக்கம் விருதை 5 லட்சம் ரூபாய் காசோலையுடன் (முதல் விருது) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நினைவுப் பரிசினை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார்.

‘வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார்’ – நூற்றாண்டு நிறைவு விழா, தந்தைபெரியார் நினைவகம் (ம) பெரியார் நூலகம் திறப்பு விழா (கேரளா –12.12.2024)

இந்தியா, தமிழ்நாடு

தந்தை பெரியார் நினைவகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் காட்சியையும், தந்தை பெரியார் நூலகத்தையும், தமிழ்நாடு மாநில முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி மற்றும் அமைச்சர் பெருமக்கள் பார்வையிட்டனர்.

இந்தியா, தமிழ்நாடு

கருநாடகாவை சேர்ந்த எழுத்தாளர் தேவனூர் மஹா தேவாவிற்கு இந்த ஆண்டிற்கான வைக்கம் விருதை 5 லட்சம் ரூபாய் காசோலையுடன் (முதல் விருது) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களுக்கு கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நினைவுப் பரிசினை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார். கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து புத்தகத்தை வழங்கினார்.

- விடுதலை நாளேடு,13.12.2024

தென் சென்னையில் தந்தை பெரியார் -146ஆவது பிறந்த நாள் விழா

       17.09.2024 நண்பகல் 12.00 மணி அளவில் மயிலாப்பூர் நொச்சி நகர்    பகுதியில் தந்தை பெரியாரின் 146 வது பிறந்த நாளை முன்னிட்டு நெகிழித்திரை வைக்கப்பட்டு, அதன் அருகே தந்தை பெரியாரின் படம் அலங்கரித்து வைத்து மாலை அணிவிக்கப்பட்டது. 

பகுதி கழகத்தின் சார்பாக மாவட்டத் தலைவர் இர வில்வநாதன் தலைமையில், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி முன்னிலையில் 100 பேருக்கு கேசரி இனிப்பு வழங்கப்பட்டது.

மாவட்ட துணை செயலாளர் கோ.வீ. ராகவன், தொழிலாளர் அணி தலைவர் ச மாரியப்பன், இளைஞர் அணி செயலாளர் ந.மணிதுரை, இளைஞர் அணி துணைத் தலைவர் ச. மகேந்திரன், இளைஞர் அணி துணை செயலாளர் இரா.மாரிமுத்து, தரமணி ம.ராஜி, பெரியார் ஆதவன் மற்றும் இன்பக் கதிர் ஆகியோர் பங்கேற்றனர்.


சுயமரியாதைச் சுடரொளி அடையாறு கோ. அரங்கநாதன்

 


1925இல் அறிவு ஆசான் நம் அய்யா தொடங்கிய சுயமரியாதை இயக்கத்துக்கு இன்று 100 வயது. அய்யாவின் அடிச்சுவட்டில் தடம் பிறழாது நடந்த தகைமையாளர்கள் – மறைந்தும் மறையாதவர்களான அவர்களது வாழ்வினை இன்றைய தலைமுறையினர், இனிவரும் இளைஞர்கள் பலரும் படித்து பாடம் கற்க வேண்டும் என்பதற்காக அவர்கள் வரலாற்றுப் பாதை படம் பிடித்து காட்டப்படுகிறது.

அடையாறு கோ. அரங்கநாதன்

அடையாறு கோ. அரங்கநாதன் என்றால், அவர் ஓர் அசையாத ‘அடையாறு ஆலமரம்’ என்றே சொல்ல வேண்டும்.

கட்டுக்கடங்காக் கழகப் பற்றுடன் திராவிடர் கழகம் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறையும் சென்று இருக்கிறார்.

புதுச்சேரியில் 1928இல் (அக்டோபர் 10) பிறந்த இத்தோழரின் பெற்றோர் கோவிந்தராசு – முனியம்மாள்.

சிறுவயதிலேயே தந்தையைப் பறி கொடுத்த நிலையில்   தாயாரோடும்,  நான்கு சகோதரர் –  சகோதரிகளுடனும் சென்னை மயிலை வந்து சேர்ந்தார். கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் அவலம்.

மயிலையில் கழகத் தோழர்கள்  அமைத்த திருவள்ளுவர் மன்றமே (1946) அவருக்கு எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுத்தது. தையல் கலைஞர் மு. வெங்கடேசன்தான் அந்தப் பகுதியில் கழகத் தோழர்களை உருவாக்கிய ஆசான்.

‘விடுதலை’ வழியாக கல்விக் கற்றார்

‘விடுதலை’யை மற்றவர்கள் படிக்கச் சொல்லிக் கேட்டுக் கேட்டு அதன் வழியாகத்தான் எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார்.

தொடக்கத்தில், பக்தி சூழலில் அவர் கையில் அவரது தாயார் கிருஷ்ணர் உருவத்தை பச்சை குத்தி விட்டார். அத்தகைய ஒரு தோழர் கருஞ்சட்டை வீரராகி, பச்சை நாத்திகராகி விட்டார்.

முதலில் மயிலைப் பகுதி திராவிடர் கழகச் செயலாளராக பொறுப்பேற்றார். பின்னர் கிழக்கு சென்னை மாவட்ட செயலாளராகவும், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவராகவும் கழகத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார்.   ‘நவ இந்தியா’, ஈ.வெ.கி. சம்பத் நடத்திய தமிழ்ச் செய்தி, கி.வா.ஜெகநாதன் நடத்திய ‘கலைமகள்’ இதழில் அச்சுக் கோப்பாளராக பணியாற்றினார்.

‘செங்கோல்’ இதழை ம.பொ.சி. நடத்திக் கொண்டு இருந்தார்.  அங்கும் அரங்கநாதன் பணி செய்துள்ளார். கலைமகளில் அவர் 22 ஆண்டு காலம் பணியாற்றினார்.

1973இல் நடந்த ஒரு நிகழ்ச்சி – அரங்கநாதனின் தன்மானத்தைச் சீண்டக் கூடிய ஒரு சம்பவம்.

‘‘கலைமகள்’’ அச்சகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சந்திரசேகரன் என்னும் பார்ப்பனர் ஒருவர், (இவர் காஞ்சி சங்கராச்சாரியாராக இருந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் அண்ணன் மகன்).

அச்சுக்கோப்பாளரான அரங்கநாதன் அந்த அய்யரின் பக்கத்தில் சென்ற போது ‘‘டேய் சூத்திரா! என்ன பக்கத்தில் வருகிறாய்?’’ என்று கத்தினாராம். அவ்வளவுதான். அந்த இளைஞரின், மான மறவரின் கருஞ்சட்டை உள்ளம் கொதி நிலையை அடைந்தது. கையில் வைத்திருந்த கத்திரிக்கோலால் அந்தப் பார்ப்பனரின் சிண்டை நறுக்கித் தூக்கி எறிந்து விட்டார்.

அவ்வளவுதான் கலைமகள் அலுவலகமே ‘தீ’ பிடித்துக் கொண்டது. அய்ம்பதுக்கும் மேற்பட்ட பார்ப்பனர்கள் ஒன்றுகூடி விட்டனர். கி.வா. ஜெகநாதனும் இருந்தார்.

கி.வா.ஜெ. தோழர் அரங்கநாதனைப் பார்த்துக் கேட்டார். ‘‘என்ன அரங்கநாதன் இப்படி செய்து விட்டீர்களே!’’

அரங்கநாதன் சொன்ன பதில் ‘‘அய்யா இந்த அய்யர் என்னை  சூத்திரன் என்று சொன்னதால் உணர்ச்சி வசப்பட்டு இப்படி செய்து விட்டேன்’’ என்று கூறினார். (அப்படி அறுக்கப்பட்ட பார்ப்பனரின் சிண்டைக்கூட வெகு நாள் பத்திரப்படுத்தி வைத்திருந்தார் தோழர் அரங்கநாதன்.

இந்த இடத்தில் பார்ப்பனர்களின் சாமர்த்தியத்தைக் கவனிக்க வேண்டும். ‘‘சரி, சரி’ ஏதோ நடந்து விட்டது. இங்கே நடந்த சமாச்சாரம் வெளியில் தெரியக்கூடாது வெளியில் சொல்லக் கூடாது’’ என்று கேட்டுக் கொண்டார்களாம்.

இவர் இணையர் ராஜேஸ்வரி பள்ளிக்கூட ஆசிரியை ஆவார். மூன்று மகன்கள், ஒரு மகள் அனைவரும் கழகக் கொள்கையில் உறுதியானவர்கள். இயக்கத்தைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேசாத, பேசத் தெரியாத பிரச்சார வாகனம் என்று இவரைச் சொல்ல வேண்டும்.

25.12.2007 அன்று சென்னை மயிலாப்பூர் பகுதியில் பெரியார் படிப்பக திறப்பு விழா தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பங்கேற்று உரையாற்றினார். கூட்டம் முடிந்து காரில் வீடு திரும்பும்போது, அடையாறு அரங்கநாதன்   பேருந்தைப் பிடிக்க வேகமாக நடந்து சென்று கொண்டு இருந்தார். இதைப் பார்த்த கழகத் தலைவர் அவர்கள் காரை நிறுத்தச் சொல்லி தோழர் அரங்கநாதனை காரில் ஏற்றிக் கொண்டு சென்றார். இதை நினைவு கூர்ந்த அரங்கநாதன்   உணர்ச்சி மிகுதியில் கண்ணீர் விட்டார். இதுதான் திராவிடர் கழகம். இதுதான் கழகத்தின் தலைமை. இதுதான் இயக்கத் தொண்டர்களின் சிறப்பு.

மறைவிற்கு முதல் நாள் வளசரவாக்கத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு பேசினார். 1.10.2011 அன்று மறைந்தார்.

தொகுப்பாளர்:  தமிழ்க்கோ

(கவிஞர் கலி. பூங்குன்றன் எழுதிய ‘‘சுயமரியாதைச் சுடரொளிகள்’’ என்ற நூலிலிருந்து)

- விடுதலை நாளேடு,28.6.25

வியாழன், 17 ஜூலை, 2025

பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டித் தர முடிவு மகளிரணி – மகளிர் பாசறை கலந்துரையாடலில் தீர்மானம்- சென்னை பெரியார் திடலில்


Viduthalai

சென்னை, ஜூன் 21- சென்னை பெரியார் திடலில் 14.6.2025 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் வட சென்னை, தென் சென்னை, ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர் மாவட்டங்களில் மகளிரணி மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

மகளிர் அணியைச் சேர்ந்த திராவிஎழில் கடவுள் மறுப்பு கூறினார். மகளிர் பாசறை வளர்ச்சிப் பணிகள் குறித்தும், பெரியார் உலகத்திற்கு இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் தோழர்கள் பங்களிப்பு பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது. மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிர் பாசறை செயலாளர் பா மணியம்மை ஆகியோர் தங்கள் ஆலோசனைகளை வழங்கினர். மாதந்தோறும் மகளிர் தோழர்கள் சந்திக்க வேண்டியதன் அவசியம் பற்றியும், மகளிருக்கான சீருடை, பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுவதற்கான முறைகள் பற்றியும், பெரியார் பிஞ்சு  இதழ் சிறுவர்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய முறைகள் பற்றியும் மாநில மகளிரணி துணைச் செயலாளர் இறைவி, பொறியாளர் ச.இன்பக்கனி, மாநில மகளிளிரணி துணைச் செயலாளர் பெரியார் செல்வி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், தாம்பரம் மகளிர் அணி தலைவர் நாகவல்லி, தாம்பரம் மகளிர் பாசறை செயலாளர் உத்ரா, திருவொற்றியூர் மகளிர் பாசறை செயலாளர் யுவராணி, உமா செல்வராஜ் ஆகியோர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். பெரியார் உலகம் பற்றி கழகத் துணைத் தலைவர் கவிஞர்  அவர்களால் எழுதப்பட்ட அன்றைய விடுதலையில் வெளிவந்த கட்டுரை வாசிக்கப்பட்டது. மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை கூடுவது எனவும், ஒவ்வொரு மாவட்டமும் பெரியார் உலகத்திற்கு குறைந்தது 15 ஆயிரம் பணம் திரட்டி தமிழர் தலைவர் அவர்களைச் சந்தித்து வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் இந்த நிகழ்வில் பூவை செல்வி, சுமதி, முகப்பேர் செல்வி, அருணா, அஞ்சனா, சுசித்ரா, இந்திரா,ஞான தேவி,கனிமொழி, விஜயலட்சுமி பெரியார் பிஞ்சு  செம்மொழி ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோழர்களுக்கு சி. வெற்றிசெல்வி தேநீர் வழங்கினார். இறுதியாக இளவரசி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.


புதன், 16 ஜூலை, 2025

தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் சென்னையில் நடந்த மாபெரும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம்

 


தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி ஆய்வைத் தடுத்து நிறுத்தும் ஒன்றிய பிஜேபி – ஆர்.எஸ்.எஸ்.சின் போக்கைக் கண்டித்து

சென்னை, ஜூன் 18- தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் கீழடி ஆய்வைத் தடுத்து நிறுத்தும் ஒன்றிய பிஜேபி -ஆர்.எஸ்.எஸ்.சின் போக்கைக் கண்டித்தும், ‘கீழடி அகழாய்வு அறிக்கையை அங்கீகரிக்க முடியாது’ என்று ஒன்றிய பா.ஜ.க. அரசின் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளதைக் கண்டித்தும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இன்று (18.6.2025) காலை சென்னையில் மாபெரும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடந்தது.

பா.ஜ.க.வின் மனநிலை

“தமிழ்நாட்டில் நடக்கும் கீழடி அகழ்வாராய்ச்சி முடிவுகள், அறிவியல்பூர்வமாக, தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அங்கீகாரம் வழங்கு வதற்கு முன், அதிக நடைமுறைகள் உள்ளன. அதற்கு இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் அங்கீகாரம் வழங்கப்படும்” என்று 10.6.2025 அன்று செய்தியாளர்கள் மத்தியில் தமிழ்நாட்டின் இந்நாள், மேனாள் பா.ஜ.க. தலைவர்களை அருகில் வைத்துக்கொண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசின் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார். இதுதான் பா.ஜ.க.வின் உண்மையான மனநிலை!

அறிவியல் சான்றுகள்

கீழடி அகழாய்வின் முதல் இரு கட்டங்கள் முடிந்து, அவற்றின் ஆய்வு முடிவுகளை அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் முன்வைத்து, அறிக்கையை ஆய்வா ளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அனுப்பி வைத்து இரண்டாண்டுகளுக்குப் பிறகும், அதை ஏற்க மன மில்லாமல், எப்படியாவது, எதைச் சொல்லியாவது கீழடி அகழாய்வைப் புறந்தள்ளிவிட வேண்டும் என்னும் ஒற்றை நோக்கம் தானே தொடர்ந்து ஒன்றிய பா.ஜ.க. அரசிடமிருந்து வெளிப்படுகிறது.

முதுமக்கள் தமிழர்கள்

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை அமைச்சரும், நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு அவர்கள் “5,350 ஆண்டுகள் பழைமையானவர்கள். தொழில்நுட்பம் கொண்டவர்கள். மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் தமிழர்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக் கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக் கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்?” என்று சரியாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

என்ன ஆதாரம் இல்லை கீழடி அகழாய்வில்? கண்டெடுக்கப்பட்ட கரிமப் பொருள்களிலிருந்து, அதன் காலத்தைக் கணக்கிடுவதற்காக அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வகம் உள்பட பல ஆய்வகங்களுக்கும் அனுப்பப்பட்டு, அவற்றின் முடிவுகள் வந்திருக்கின்றன. வேறு என்ன ஆதாரம் வேண்டுமென்கிறார்கள்?

பொருந்தாத சாக்குப்போக்கு

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. முன்கூட்டியே திட்டமிட்ட முடிவுதான். அம்முடிவுக்கேற்ப, ஏதோ ஒரு பொருந்தாத சாக்குப்போக்கு, இது நியாயமானதல்ல!

கீழடியை ஏற்றால், திராவிட நாகரிகம் வேதகால நாகரிம் என்று இவர்கள் சொல்லி வருகின்ற கூற்றின் பொய் முகம் கிழிந்து திராவிட நாகரிகமே காலத்திற்கும் முந்தையது என்ற உண்மையை ஒப்புக்கொள்ள நேருமே என்ற காரணத்தால் தங்களது கருத்தினை மறைமுகமாக நிலைநிறுத்தவே மேலும் அறிவியல் சான்றுகள் தேவைப்படுகின்றன எனகிறார் ஒன்றிய அமைச்சர்.

மறுப்பதை ஏற்க முடியாது

பா.ஜ.க. -ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்காக, கீழடி அகழாய்வை, தமிழ்நாட்டின் தொன்மையை நிறுவும் பல்வேறு அகழாய்வுகளைப் பலி கொடுக்க முடியாது. ஆதாரப்பூர்வமான வரலாற்றுச் செய்திகளை மறைத்து, இந்திய வரலாற்றினைப் பொய்யான தகவல்கள், அனுமானங்கள், இதிகாசங்களின் அடிப்படையில் மாற்றி எழுத முயற்சிக்கும் ஒன்றிய அரசு, கீழடி அகழாய்வு முடிவை அங்கீகரிக்க மறுப்பதையும் ஏற்க முடியாது.

சான்றுகள்

இது ஒரு பண்பாட்டு அழிப்பு என்பதால் தமிழ்நாட்டின் வரலாற்று, பண்பாட்டுச் சிறப்புகளை சிறுமைப்படுத்த முயற்சிப்பதையும், காலத்தால் மூத்த தமிழி எழுத்து வடிவத்திற்குக் கிடைத்துள்ள சான்றுகளை மறுப்பதையும் கண்டித்து இன்று (18.6.2025) காலை 10.30 மணியளவில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கலைஞர் பொன்விழா நுழைவு வாயில் அருகில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மாபெரும் மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைவர்கள் கண்டன உரை

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வரவேற்பு ரையாற்றினார்.

‘திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் உமா, ஆதித்தமிழர் பேரவைத் தலைவர் இரா.அதியமான், தமிழ்நாடு விவசாயிகள் -தொழிலாளர்கள் கட்சி பொதுச் செயலாளர் எஸ்.ஜெகதீசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் துணைத் தலைவர் எம்.அப்துல் ரகுமான், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் குனங்குடி ஹனீபா,  ம.தி.மு.க. கொள்கை விளக்க அணி மாநிலச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்புக்குழு தலைவர் கே.வி.தங்கபாலு, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

நிறைவாக தமிழர் தலைவர் ஆர்ப்பாட்ட தலைமை  – கண்டன உரையாற்றினார்.

பங்கேற்றோர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர்கள் பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி, கழக ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், ஊமை.ஜெயராமன், வி.பன்னீர்செல்வம், மாநில கழக மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன் மாநில கழக இளைஞரணிச் செயலாளர் நாத்திக.பொன்முடி, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் செந்தூரபாண்டியன், திராவிட தொழிலாளர் பேரவைத் தலைவர் சிவகுருநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், ஆவடி மாவட்ட தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், கும்மிடிப்பூண்டி மாவட்ட தலைவர் புழல் ஆனந்தன், செயலாளர் பாஸ்கர், திருவொற்றியூர் மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், செயலாளர் ந.இராசேந்திரன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு, செயலாளர் விஜய் உத்தமன்ராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சிப் பொறுப்பாளர் வேணு கோபால் மற்றும் ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூறினார்.

விடுதலை நாளேடு, 18.06.25

கீழடி தொல்லியல் அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக வெளியிடவேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டம்

 

சென்னையில் நடைபெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரால் முன்மொழியப்பட்ட இரண்டு தீர்மானங்கள்!


தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்தும்
கீழடி தொல்லியல் அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக வெளியிடவேண்டும்!
தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிடை மாற்றத்தை உடனே ரத்து செய்க!

சென்னை, ஜூன் 18– தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றை வெளிப்படுத்தும் அறிவியல்பூர்வமான கீழடி தொல்லியல் அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு  உடனடியாக வெளியிடவேண்டும் என்றும், தொல்லியல் துறை அதிகாரி திரு. அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிடை மாற்றத்தை உடனே ரத்து செய்யவேண்டும்  என்றும் இரண்டு தீர்மானங்களை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் முன்மொழிந்தார்.

இன்று (18.6.2025) சென்னை சைதாப்பேட்டை கலைஞர்  பொன்விழா வளைவு (பனகல் மாளிகை) அருகே, தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயல்வதா? ஒன்றிய அரசின் அடாவடியைக் கண்டித்து நடைபெற்ற மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் முன்மொழியப்பட்டன. அதன் விவரம் வருமாறு:

இங்கே சிறப்பாக குழுமியுள்ள அருமைத் தலைவர்களே, தோழர்களே!  உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தின் மூலமாக இங்கே இரண்டு தீர்மானங்களை மக்கள் மன்றத்தின் சார்பாக நாங்கள் அனைவரும் முன்மொழிகிறோம்.

தீர்மானம் 1:

கீழடி தொல்லியல் அகழாய்வு அறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு  உடனடியாக வெளியிடவேண்டும்!

‘‘தமிழர் வரலாற்றை திராவிடர் வரலாற்றை உறுதிப்படுத்தும் கீழடி ஆய்வின் முதல் இரண்டு கட்ட அறிக்கைகளை வெளியிட மறுக்கும் ஒன்றிய பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். அரசை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

உலகளாவிய ஆய்வு நிறுவனமும், இந்தியாவினுடைய முதன்மை ஆய்வு நிறுவனமும் ஒப்புக்கொண்டு, அதன் காலத்தை, அறிவியல் பூர்வமாகக் குறிப்பிட்டுள்ள பின்னும், அதை ஏற்க முடியாது; போதிய ஆதாரம் இல்லை என்று கூறுவது, ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி. அரசினுடைய உள்நோக்கத்தை அம்பலப்படுத்துகிறது.

தமிழ்நாடு

தமிழ்நாட்டின் தொன்மை வரலாற்றை ஏற்க முடியாது என்ற அடாவடி செயலை– தமிழர்கள் என்றும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

அறிவியல்பூர்வமான கீழடியில், தொல்லியல் அக ழாய்வு அறிக்கையை ஒன்றிய பா.ஜ.க. அரசு  உடனடியாக  வெளியிடவேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.’’

தீர்மானம் 2:

தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிடை மாற்றத்தை உடனே ரத்து செய்ய

‘‘தமிழ்நாட்டின் தொன்மையை, தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றை நிறுவிய, கீழடி தொல்லியல் அகழாய்வை மேற்கொண்ட, தொல்லியல் துறை அதிகாரி திரு. அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு தொடர்ந்து அலைக்கழித்து வருகிறது. முன்பு, அசாமிற்குத் தூக்கியடித்தது. பிறகு, மற்றொரு இடத்திற்கு மாற்ற முனைந்தது.

தற்போது டில்லியில் பணியாற்றி வந்த நிலையில், இப்போது நொய்டாவிற்கு அவரை மாற்றியிருக்கிறார்கள்.

கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிட மறுக்கும், ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகத் தமிழ்நாடு போராடிக் கொண்டிருக்கும் சூழலில், எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல, அமர்நாத் ராமகிருஷ்ணாவின் பணியிட மாற்றத்திற்கு ஆணையைப் பிறப்பித்திருப்பது, அவருக்குத் தண்டனை கொடுத்ததைப்போல இருக்கிறது என்று சொல்வதற்கு யாருக்கும் தயக்கம் இருக்க முடியாது.

எனவேதான், ஒன்றிய அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கிற்கு இந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தின்மூலம் வன்மை யானக் கண்டனங்களைத் தெரிவிப்பதோடு, அவருடைய பணியிடை மாற்றத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கோருகிறது.’’

ஆகிய இரண்டு தீர்மானங்களும் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு இந்த ஆர்ப்பாட்டத்தின்மூலமாக நிறைவேற்றப்படுகின்றன.

எழுச்சித் தமிழரின் வேண்டுகோளும் –
தமிழர் தலைவரின் வழிமொழிதலும்!

இங்கே எழுச்சித் தமிழர் சொன்ன கருத்து மிகவும் முக்கியமானது.

கீழடி அகழாய்வைத் தொடருவதற்கு நிதி தரமாட்டோம்; ஆய்வை நிறுத்தவேண்டும் என்று சொல்லக்கூடிய ஓர் அடாவடி ஆளுநர் இங்கே இருக்கிறார். ஒன்றியத்தில், ஓர் அடாவடி அமைச்சரை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

‘‘தமிழ்நாட்டிலேயே, இனி ஏராளமான தொல்லியல் ஆய்வு செய்யப்பட வேண்டிய நிலையில், தொல்லியல் பொருள்களின் காலத்தைக் கணிக்கும் கரிம ஆய்வு மய்யத்தைத் (Carbon Dating Laboratory) தமிழ்நாட்டிலேயே அமைக்க தமிழ்நாடு அரசு ஆவண செய்ய வேண்டும்’’ என்று
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் போது வேண்டுகோள் விடுத்தார். அதனைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  வரவேற்று, ‘‘முதலமைச்சர் அவர்கள் அந்த ஆய்வு மய்யத்தை மக்கள் ஆதரவோடு அமைக்க அறிவிக்க வேண்டும். 40 முதல் 45 கோடி ரூபாய் வரை அதற்குச் செலவாகும் என்று எழுச்சித் தமிழர் அவர்கள் சொன்னார்கள்.

தமிழ்நாட்டின் உணர்ச்சியுள்ள மக்கள் சார்பாக சொல்கி றோம், வீதிமன்றத்தின் சார்பாக சொல்கிறோம், நாளைக்கு ஓர் அறிக்கையை, முதலமைச்சர் என்ற முறையில் வேண்டாம்; இந்தக் கூட்டணியினுடைய தலைவர் என்ற முறையில் வெளியிடட்டும்.

மக்கள் பெரு மகிழ்வோடு நிதி வழங்குவார்கள். அவர்கள் வழங்கும் நிதி, மக்களின் ஆதரவையும் வெளிப்படுத்துவதாக அமையும். அதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம்.’’

இதுவும் மாநில சுயாட்சியில் மிக முக்கியமான ஓர் அம்சமாகும்.

எனவே, சகோதரர் எழுச்சித் தமிழர் சொன்னதை நான் வழிமொழிகிறேன்; இந்தக் கூட்டமும் வழிமொழியும் என்று நம்புகிறேன்.

அனுமதி முத்திரைக் குத்தவேண்டுமே என்று சொன்னார் நம்முடைய எழுச்சித் தமிழர்.  அந்த முத்திரை இல்லாவிட்டாலும், நாம் போய்க்கொண்டே இருப்போம். மக்கள் கருத்தை முன்னால் திரட்டினால், சட்டம் நொண்டியடித்துக் கொண்டு தானே வரும் என்பதுதான் நடைமுறைப் பழமொழி.

மக்கள் அங்கீகாரத்தைக் காட்டுவோம்!

இதற்கு இரண்டு உதாரணங்களைச் சொல்லலாம்.

ஒன்று, சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது என்று நீதிமன்றம் சொன்னது. அதனால், அந்தத் திருமணங்களை நிறுத்திவிட்டார்களா? அதற்குப் பிறகு 10 ஆயிரம் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றன. பிறகு அண்ணா ஆட்சி, திராவிட ஆட்சி வந்தது, சட்டம் பின்னாலே நொண்டிக் கொண்டு வந்தது.

எனவே, சட்டம் பின்னால் வரும்; ஆனால், சமுதாயம் முன்னால் போகும்.

அதேபோன்று, தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்; இன்றைக்குத் தமிழைப்பற்றி பேகிறார்களே பலர், யாரும் செய்யாத பணியை செய்த ஒரே தலைவர் தந்தை பெரியார்தான்.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை 1935 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் அறிவித்தார். அப்படி அறிவித்ததோடு நிற்கவில்லை; தன்னுடைய ‘குடிஅரசு’ ஏட்டில் அதனை முழுமையாகச் செயல்படுத்தினார். பிறகு ‘விடுதலை’யில் பயன்படுத்தினார்.

1935 ஆம் ஆண்டு தொடங்கியது, 50 ஆண்டுகள் கழித்து, எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது, தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில், தமிழ் எழுத்துச் சீர்திருத்தம், பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் என்றே வந்தது.

ஆகவேதான், இன்றைக்கு அவர்கள் ஒப்புக்கொள்கி றார்களா, இல்லையா? அங்கீகரிக்கிறார்களா, இல்லையா? என்பதைப்பற்றி கவலைப்படாமல், மக்கள் அங்கீகாரத்தை முதலில் நாம் காட்டுவோம்.

இந்தத் தீர்மானங்களை அத்துணை பேரும் வழிமொழிந்தீர்கள் என்பதற்கு ஆதாரமாக, எழுந்து நின்று கையொலி எழுப்பி, இதற்குப் பெருமைச் சேர்க்கவேண்டும்.

ஆர்ப்பாட்டத்திற்கு வந்த தோழர்களுக்கு நன்றி!

–  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தீர்மானங்களை முன்மொழிந்து உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

மக்கள் மத்தியில் நிதி திரட்டுவதை ஆதரிக்கும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவர் கே.வி.தங்கபாலு கட்சியின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் அளிப்பதாக அறிவித்தார்.


- விடுதலை நாளேடு, 18.06.25