சனி, 27 டிசம்பர், 2025

எம்ஜிஆர் நகரில் முதலாவது விழிப்புணர்வு வட்டார மாநாடு

 26.12.14 மாலை தென் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் (அங்காடி அருகில்) முதலாவது திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு நடைபெற்றது. திருத்தணி பன்னீர் செல்வம் & நாத்திகன் இசைக்குழு இசை நிகழ்ச்சியை பார்வையாளர் பகுதியில் இருந்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேட்டு மகிழ்ந்தார்.
------------+++++++++------++++------++++---

தென் சென்னையில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு முதல் வட்டார மாநாடு

மத்தியில் ஆளும் பிஜேபி ஆட்சி ஜாதியைக் காப்பாற்ற இந்து மதத்தை, மனுதர்ம சாஸ்திரத்தைத் தூக்கிப் பிடிக்கிறது என சென்னையில் நடைபெற்ற திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாட்டில் தமிழர் தலைவர் ஆதாரத் துடன் எடுத்துக்காட்டி பேசினார்.

சென்னை எம்ஜிஆர்நகர் அங்காடி(மார்கெட் )பகுதியில் பாவாணர் திடலில் தென் சென்னை திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் விழிப் புணர்வு வட்டார மாநாடு சட்டத்துறை செயலாளர் வழக்குரை ஞர் த.வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டைத் திறந்துவைத்து வழக்குரைஞர் சு.குமாரதேவன் பேசினார். மாநாட்டில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், திருவிடைமருதூர் திமுக சட்டமன்ற உறுப் பினர் கோவி.செழியன், திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் உரையாற் றினார்கள். மாநாட்டில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி மாநாட்டு சிறப்புரையாற்றினர்.

பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வடமாவட்டங்களின் அமைப்புச்செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டலத் தலைவர் தி.இரா.ரத்தினசாமி, சென்னை மண்டலச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, பொதுக்குழு உறுப்பினர் சைதை எம்.பி.பாலு, தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தய்யன், தலைமைச் செயற்குழு உறுப் பினர் க.பார்வதி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திரு மகள், மகளிர் பாசறை மண்டல செயலாளர் உமா செல்வராசு, வடசென்னை மாவட்டத் தலைவர் தி.வே.சு.திருவள்ளுவன், ஆவடி மாவட்ட செயலாளர் பா.தென்னரசு, உதயக்குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன் வரவேற்றார்.

மாநாட்டுத் தொடக்க நிகழ்ச்சியாக திருத்தணி பன்னீர் செல்வம் மற்றும் நாத்திகன் வழங்கிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

கலந்துகொண்டவர்கள்

தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் டி.ஆர்.சேதுராமன் மற்றும் சி.செங்குட்டுவன், துணைச் செயலாளர் கோ.வீ.ராகவன் மற்றும் சா.தாமோதரன்,  சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் தமிழ்சாக்ரட்டீஸ், தென்சென்னை இளைஞரணித் தலைவர் கு.செல்வேந்திரன், செயலாளர் சண்முகப்பிரியன், அமைப்பாளர் ச.மகேந்திரன், தரமணி மஞ்சுநாதன், ந.இராமச்சந்திரன், கோடம்பாக்கம் மாரியப்பன், கோபால கிருஷ்ணன்,க.தமிழ்ச்செல்வன், க.பாலமுரளி, பொறியாளர் குமார், தளபதி பாண்டியன், ம.நடராசன்,அய்ஸ் அவுஸ் சேது, பொழிசை கண்ணன், கணேசன்,செந்துறை இராசேந்திரன், ஏழுமலை, பெரியார் மாணாக்கன், சிந்தாதிரிப்பேட்டை மாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் சைதை மு.ந.மதியழகன் நன்றி கூறினார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் உரையாற்றியபோது,

மத்திய ஆட்சி ஜாதியைக் காப்பாற்ற மனுதர்ம சாஸ்திரத்தை தூக்கிப்பிடிக்கிறது

சேலம் பொதுக்குழுவில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து திராவிடர் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்துவது என்றும் முதல் மாநாடாக சென்னையில் நடைபெறுகிறது. மக்களை விழுங்கி விடலாம் என்று மதவெறி, ஜாதி வெறி, மூடநம்பிக்கை, போலித் தேசியம் பேசுவோரை அடையாளப்படுத்தி திராவிடர் விழிப் புணர்வு மாநாட்டை ஆங்காங்கே நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

திராவிடர் கழகம் - சுயமரியாதைக்கான இயக்கம்

திராவிடர் கழகம் என்றாலே சுயமரியாதைக்கான இயக்கம் என்றுதான்பொருள். கொள்கையைச் சொல்லுவதில் யார் முந்திக்கொண்டார்கள் என்று இருக்க வேண்டும். புத்தகங்கள் வியாபாரத்துக்காக அல்ல. உண்மைகள் போய்ச்சேர வேண்டும்.  நாங்கள் சொல்லுகின்ற கருத்துகள் எதுவும் சொந்தக்கருத்துகள் அல்ல. ஆதாரபூர்வமானவை.

நம் சமுதாயத்தில் சிந்திக்கக்கூடாது. கேள்வி கேட்கக் கூடாது என்று மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் இருந் தால், ஆறறிவு இருந்தும் நாம் 5 அறிவு மிருகமாக நடத்தும் நிலையில் தான் இருப்போம்.

திராவிட இயக்கம் தோன்றி 95 ஆண்டுகள் ஆகின்றன. ஆட்சிகள் இருந்துள்ளன. திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற பேதைகள் உள்ளனர். திராவிடர் இயக்கம் இல்லை யென்றால் அவர்களின் நிலை என்ன? கோவணத்துடன்தான் வயல் வெளிகளில் காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும். வெள்ளை சட்டை போடமுடியாது. நினைத்துப் பார்க்க வேண்டும். யார் வேண்டுமானாலும் எங்கும் செல்லலாம். திராவிடர் என்ற உணர்வு என்று வரும்போது திராவிடர் என்றால் என்ன? அரசியல், ஜாதி, மதங்கள் பிடித்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள். ஒரு நூற்றாண்டுக்கு முன் 1900இலே இந்த இயக்கம் தோன்றுவதற்கு முன்னால் இதே சென்னையில் இருந்த நிலை என்ன? ஒற்றைவாடைத் தெருவில் (வால்டாக்ஸ் ரோடு) நாடகக்கொட்டகையில் அபிராமி சுந்தரி சரித்திர நாடகம் பெரிய துண்டறிக்கையில் பலவகைக் கட்டணங்கள் போடப்பட்டிருக்கும். கீழே குறிப்பு என்று இருக்கும். அதில் பஞ்சமருக்கு இடமில்லை என்று இருந்தது. ஆதாரத்துடன் கூறுகிறோம். அந்தத் துண்டறிக்கை நம்மிடம் இருக்கிறது. இப்படி சென்னை தலைநகரிலே போட்டிருந்தார்களே.

திராவிடர் இயக்கம் இல்லை என்றால் மாற்றம் ஏற்பட்டிருக்குமா?

ஒரு நூற்றாண்டுக்கு முன்னால், சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம் தோன்றுவதற்கு முன்னால் இலவசமாக அல்ல, கட்டணம் கொடுத்தாலும் பஞ்சமருக்கு இடமில்லை. திராவிடர் இயக்கம் இல்லை என்றால் மாற்றம் ஏற்பட்டிருக் குமா? இன்னமும் இரட்டைக் குவளைகள் இருக்கின்றன. கோயில்களில் நுழைய முடியாமல் இருக்கிறது. திராவிடர் இயக்கத்தின் பயணம், இலட்சியப் பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இன்று என்ன நிலை? பஞ்சமர்க்கு இடமில்லை என்று போட்டால் சட்டப்படி ஜெயிலில் இருக்கவேண்டும்.

மாமனிதர் பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் எல்லார்க்கும் எல்லாமும் என்ற சமூக நீதிக்குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். இப்போது மதவெறியர்கள் மறைமுகமாகத் தாக்கத் தொடங்கி இருக்கிறார்கள். கொஞ்சம் அசந்தால் நம் உரிமைகளைப் பறித்துவிடுவார்கள். திராவிடர் இயக்கத்துக்கு உள்ள வரலாறு மற்றவர்களுக்கு உண்டா? எண்ணிப்பார்க்க வேண்டும். தந்தை பெரியார் மீது செருப்பு, மலம், அழுகிய முட்டை வீசியபோதும், பிறவி பேதம் இருக்கக் கூடாது என்கிற உணர்வு பெரியாரால், திராவிடர் இயக்கத்தால் ஏற்பட்டது. இதே சென்னையில் தியாகராயர் நகரில் 19.12.1973 அன்று அந்த தன்மானச்சிங்கம் கர்ஜித்ததே. உங்களையெல்லாம் சூத்திரராக விட்டுச் செல்கிறேனே என்றாரே. 95 ஆண்டுக்காலம் மக்களுக்காக உழைத்தது எப்படிப்பட்டது? பிரித்துவைத்து ஆள்வது ஆரியம். ஏமாறுவது திராவிடம். திராவிடர் என்று கூறும்போது ரத்தப்பரிசோதனை வைத்துப் பார்க்க முடியுமா? என்கிறார்கள். இதை அன்றைக்கே பெரியார், அண்ணா தெளிவு படுத்திவிட்டார்கள். சொன்னாரே நம்முடைய கழகத் துணைத்தலைவர் கவிஞர். இந்த இயக்கத்துக்கு சூத்திரக் கழகம் என்றால் சூத்திரன் என்பது கவுரவப்பட்டமா? இந்து சட்டம் இன்னமும் சிவில் துறையில் ஜாதி இருக்கிறது. தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்றுதான் சட்டத்தில் உள்ளது. அதற்கு மூல காரணமான ஜாதி இருக்கிறது.

பிஜேபி ஆட்சி ஜாதியைக் காப்பாற்ற மனுதர்மத்தை தூக்கிப் பிடிக்கிறது

தந்தை பெரியார்தான் கேட்டார். சுதந்திரம் உள்ள நாட்டில் சூத்திரன் இருக்கலாமா?

பஞ்சமன், பறையன், பார்ப்பான் இருக்கலாமா? பிறக்கும்போதே கீழ் ஜாதி இருக்கலாமா? என்று கேட்டார். எல்லா ஜாதிக்கும் கீழாக பெண்கள்  என்று மனுதர்மம் அதைத்தான் சொல்கிறது. 1919இல் மனுதர்மம் புத்தகத்தை அப்படியே தமிழில் போட்டுள்ளோம். மத்திய ஆட்சி ஜாதியைக் காப்பாற்றத்தானே இந்து மதத்தை, மனுதர்ம சாஸ்திரத்தைத் தூக்கிப்பிடிக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதி 18 இடங்களில் உள்ளது.

கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்பதுபோல பகவத் கீதை வருணதர்மத்தை ஜாதியை ஆணி அடித்து. அதை நிலை நிறுத்தி மூளையில் போட்ட விலங்காக உள்ளது. அதை மாற்றவேண்டும் என்றால், மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது என்றால் அழிந்திருக்கும். அதைக் கடவுளே ஏற்படுத்திவிட்டதாகக் கூறிவிட்டார்கள்.

புத்தர், சித்தர்கள், இராமலிங்க அடிகள் என்று பலரும் கூறினார்கள். கடைவிரித்தோம் கொள்வாரில்லை என்றனர். தந்தைபெரியார்தான் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என் பதைப்பற்றிக் கவலை இல்லை, மானமும், அறிவும் பெற வேண்டும் என்றார்.

இன்றைக்கும் பேசுகிறார்கள். மனுதர்மம் முதல்வ அத்தியாயம் 87ஆவது சுலோகம்  அந்த பிர்மாவானவர் என்று தொடங்குகிறது. ஏதோ ரொம்பப் பழக்கமானவர்போல, பிர்மாவின் தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந் தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், பாதத்தில் பிறந்தவன் சூத்திரன் என்று இம்மைக்கும், மறுமைக்கும் கருமங்களின்படி பகுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

தந்தைபெரியாரிடம் தலை, தோள், தொடை, காலில் பிறந்ததாக சொல்கிறார்களே, பஞ்சமர்கள் எங்கு பிறந்தார்கள் என்று கேட்டபோது, அவர்கள்தான் முறையாக அப்பா, அம்மாவுக்கு பிறக்க வேண்டிய இடத்தில் பிறந்தார்கள். என்றார்.  அடுக்குமுறையில் சமத்துவமின்மை (Graded Inequality) சூத்திரன் என்றால் காலில் பிறப்பதாக சொல்பவனைப்பார்த்து புரட்சிக்கவிஞர்தான் கேட்பார் முகத்தில் பிறப்பதுண்டோ முட்டாளே, தோளில் பிறப்பதுண்டோ தொழும்பனே, தொடையில் பிறப்பதுண்டோ கடையனே என்று கூறுவார். இத்தனை இடங்களிலும் பிறப்புறுப்பு இருந்தால் பிர்மா எப்படி இருப்பான்?   (கைதட்டல்) கால், தொடை, கால்களில் பிறக்க முடியுமா?

தர்க்க ரீதியாக வாதிட்டவர்களில் பெரியார்போல் உலக சரித்திரித்தில் கிடையாது.

கடவுளை வணங்கும்போது பாதார விந்தங்களில் சேர்த்துக்கொள் என்கிறார்களே, அப்படியானால், பாதத்தில் பிறப்பவன் ஏன் சூத்திரன் என்று கேட்டார். புரியாமல் நம்புவது, ஏமாறுவது திராவிட இனமாக உள்ளது.   சாஸ்திரம், கடவுள், பகவத் கீதை என்று ஏமாற்றிவருவது ஆரியம். நாங்கள் இவற்றைப் படித்துத்தொலைத்ததுமாதிரி வேறு எவரும் இருக்கமாட்டார்கள். இந்த கருமத்தை நாங்கள் படித்திருக்கிறோம். அவதாரம் என்றால் மேலிருந்து கீழே இறங்கி வருவதாம். நாவலர்தான்கேட்பார் 10 அவதாரம் எடுத்தான் என்கிறீர்களே, ஏன் இங்கேயே ஏன் அவதாரம் எடுத்தான்? ஏன் அபீசீனியாவில் ஓர் அவதாரத்தை எடுக்கவில்லை? என்று கேட்பார். நன்முறை சொல்லும் காலக்கட்டத்தில், மதவெறியால் வன்முறையை ஏற்படுத்துகிறார்கள்.

கடவுள் அன்பு, கருணை வடிவானவர் என்றால், கொலை காரர்களிடம் இருப்பதுபோன்று ஆயுதங்கள் எதற்கு? ஏன்று கேட்டார் பெரியார். நடராஜர் காலைத் தூக்கி ஆடுமபோது, மிதித்திருப்பது மனிதனைத்தானே?

கிருஷ்ணாவதாரம் எடுத்த மகாவிஷ்ணு  சதுர்வர்ணம் மயாஸ்ருஷ்டம்; குணகர்ம விபாசக; தஸ்ய கர்த்தாரமபிமாம்; வித்திய கர்த்தார மவ்யம்....(பகவத் கீதை 4-13) என்று கீதையில் கூறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புராணங்களையெல்லாம் இப்போது விஞ்ஞானம் என்று கூறத் தொடங்கி விட்டார்கள்.

பாற்கடலில் பள்ளி கொண்ட மகாவிஷ்ணுவிடம் தேவர்கள் முறையிட்டார்களாம். மகாவிஷ்ணு தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கி போட்டானாம். ஒன்று கருப்பு, மற்றொன்று வெள்ளையாம். பலராமன், கிருஷ்ணன் அவதாரங்களாம்.  ரொம்ப பேர் கதைத் தெரியாமல் இருக்கிறார்கள். யாராவது மனம் புண்படுகிறது என்றால் வழக்கு போடட்டும். நீதிமன்றத்தில்தான் சரியாகப் பதிவு செய்யவேண்டும். கிருஷ்ணாவதாரம் என்றால் கருப்பு. பலராமன் அவதாரம் வெள்ளை மயிர், சத்திரியர்களை ஒழிக்க கோடாரியோடு பலராமன் அவதாரமாம். இப்படி அவதாரம் இருக்குமா? என்று பகுத்தறிவுள்ள யாரும் கேட்பார்கள். 10ஆவது சுலோகம் வேதம், ஸ்மிருதி, ஸ்ருதி என்ன கூறுகிறது என்றால், தர்க்கப்படி ஆட்சேபிக்கக் கூடாது என்கிறது.

சூத்திரன் என்றால் யார்? 8ஆவது அத்தியாயத்தில் சூத்திரன் என்றால், யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன்; பக்தியினால் வேலை செய்கிறவன். வேசி மகன். விலைக்கு வாங்கப்பட்டவன்; ஒருவனால் கொடுக்கப்பட்டவன்; குலவழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன்; குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என ஏழு வகைப்படுவர்.

தாயை வேசி என்று சொல்கிறான். இதை அறிவாசான் தந்தை பெரியார்தான் கேட்டார். அமைச்சர் ஒருவரும் மேடையில் இருந்தபோது பெரியார் பேசினார். இங்கு எல்லாருமே சூத்திரர்தான். அமைச்சராக உள்ள இவர் மாண்புமிகு சூத்திரர் ஆக இருக்கிறார். நாம் வெறும் சூத்திரனாக இருக்கிறோம் என்றார்.

வாஜ்பேயி அவருக்கு உள்ள உடல்நிலையில் பாரத் ரத்னா வழங்கப்படும் செய்தியைக்கூட அறியாதவராக இருப்பார். மனித நேயத்துடன் அவர் நன்றாக இருக்கவேண்டும் என்போம். 152ஆவது பிறந்த நாளில் பண்டிட் மாளவியாவுக்கும் பாரத ரத்னாவாம்.

மிஸ்டு காலில் மெம்பர் ஆகும் கட்சியால் மானத்தை மிஸ் பண்ணாதீங்க. மாளவியா ஜாதியை இருக்க வேண்டும் என்றவர். குழந்தைத் திருமணம் இருக்க வேண்டும் என்றவர்.

மண் உருண்டை மாளவியா

1930ஆம் ஆண்டில் இங்கிலாந்து வட்ட மேசை மாநாட்டுக்கு சென்றார். இந்து கடல் கடக்கக்கூடாது. அப்படிக் கடல் கடந்தால் கீழ் ஜாதி ஆவான் என்று உள்ளது. அப்போது காசியிலிருந்து மண்ணை உருண்டையாக்கி எடுத்துச்சென்றார். கடல் கடந்தாலும் மண் உருண்டை இருப்பதால் மண்ணைவிட்டு சென்றதாகாது என்றார்.

அதிலிருந்து மண் உருண்டை மாளவியா என்றழைக்கப்பட்டார்.

அவர்தான் இந்து மகா சபையை உண்டாக்கியவர். படிப்பதற்கு பல்கலைக்கழகம் என்றால் எல்லோருக்கும் பொதுவாகத்தானே இருக்க வேண்டும். அவர் இந்து பல்கலைக்கழகத்தை உண்டாக்கினார். அவருக்கு பாரத் ரத்னாவாம். பெரியார் சொல்வார், பிரசவத்தின்போது வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த குழந்தைகள் பிறந்தவுடன், தொட்டிலில் உள்ள குழந்தைகள் மாறிவிட்டால், மதம் என்ன ஆகிறது என்று கேட்பார்.

காந்தியைக் கொன்ற கோட்சேவுக்கு சிலை என்று கூறுகிறார்கள். கோயில் என்கிறார்கள். இன்னும் 11வது அவதாரம் என்பார்கள். காந்தியைக் கொன்ற கோட்சே ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் இல்லை என்றும் அவர் இந்து மகா சபையைச் சேர்ந்தவர் என்றும் கூறினார்கள். அந்த மகாசபையைத் தோற்றுவித்த மாளவியாவுக்கு பாரத் ரத்னா என்றால் காந்தியைக் கொன்றதற்கு பாரத் ரத்னாவா?
-இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டார்.
- விடுதலை நாளேடு 31.12.2014

ஞாயிறு, 21 டிசம்பர், 2025

திராவிடர் கழகம் கடுமையாக உழைக்கும் – பிரச்சாரம் செய்யும்! திராவிடர் கழக சிறப்புத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

 


சென்னை, டிச.18 2026 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ‘திராவிட மாடல்’ அரசாம் தி.மு.க. தலை மையிலான அரசை மீண்டும் மலரச் செய்ய வாக்காளர்கள் பேராதரவு தரவேண்டும்! அதற்காக திராவிடர் கழகம் கடுமையாக உழைக்கும் – பிரச்சாரம் செய்யும் என்பது உள்பட எட்டு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இன்று (18.12.2025) காலை சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக சிறப்புத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தமிழர் தலைவர் பாராட்டு!

திராவிடர் கழகம்

ஆஸ்திரேலியாவில் மாநாடு சிறப்பாக நடைபெறப் பெரும் பங்காற்றிய தோழர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில், மெல்பேர்னிலிருந்து வருகை தந்த அரங்க.மூர்த்தி அவர்களுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து சிறப்பித்தார் (சென்னை, 18.12.2025).

தீர்மானம் எண்: 1

இரங்கல் தீர்மானம்

கீழ்க்கண்ட கழகத் தோழர்கள், தமிழின முன்னோடிகளின் மறைவிற்கு இச் செயற்குழு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. இப் பெருமக்களின் பிரிவால் பெரும் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் உற்றார் உறவினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஆத்தூர் 104 வயதிலும் சீரிய முறையில் கழகப் பணியாற்றிய முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் ஏ.வி.தங்கவேல் (10.12.2025), பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் நீண்ட காலத் தலைவராக இருந்து, இயக்கத்திற்குப் பெருந்துணையாக இருந்த மயிலை நா.கிருஷ்ணன் (14.11.2025), பெரியாரியல் சிந்தனைக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் (வயது 92) (22.11.2025), பகுத்தறிவாளரும், ஆக்கப் பணியாளருமான தஞ்சை இரத்தினகிரி (வயது 85) (24.11.2025), மேனாள் மேட்டூர் மாவட்டக் கழகத் தலைவர் சாமிநாயக்கன்பட்டி க.கிருஷ்ணமூர்த்தி (வயது 72) (31.10.2025), திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் (4.12.2025), திருவிடைமருதூர் பெ.பெரு கோவிந்தராஜ் (23.10.2025), தாம்பரம் தி.இரா.ஆதிலட்சுமி (23.10.2025), எம்.சாந்தி (25.10.2025), திருப்பத்தூர் ஏ.டி.ஜி.கவுதமன் (25.10.2025), மதுரை எம்.ராஜகோபால் (26.10.2025), செல்வ.காளியம்மாள் (வயது 82) (28.10.2025), திருநெல்வேலி ஜி.சாமியடியான் செல்லத்துரை (28.1.2025), குடியாத்தம் இர.இலட்சுமி அம்மாள் (வயது 95) (29.10.2025),  காட்டுமன்னார்கோயில் அன்னமேரி (30.10.2025), மறைமலைநகர் காண்டீபன் (02.11.2025), வள்ளியூர் மிசா கா.சிவனுபாண்டியன் (03.11.2025), தஞ்சை இரா.அம்மாபொண்ணு, விருதுநகர் மாவட்ட கழக முன்னாள் தலைவர் வானவில்மணி (09.11.2025), அமெரிக்கா டெக்சாஸ் பிரவீன்குமார் (09.11.2025), மேட்டூர் பெ.பெரு சிந்தாமணியூர் எல்லப்பன் (10.11.2025), சோழபுரம் ஆ.கவுரி (15.11.2025), சிதம்பரம் கோ.வி.சுந்தரமூர்த்தி (17.11.2025), கொக்கூர் அ.முத்தையன் (வயது 93) (21.11.2025), லால்குடி மலர்க்கொடி (வயது58) (19.11.2025), இராமசாமி சங்கிலி (20.11.2025), ஆவடி இரா.திருநாவுக்கரசு (வயது 83) (21.11.2025), விருதுநகர் கா.கோமதியம்மாள் (வயது 86) (27.11.2025), பருகூர் ஜெ.சி.முருகன் (25.11.2025), அருப்புக்கோட்டை இலக்குமி அம்மாள் (29.11.2025), ஜி.வெற்றிவீரன் (29.11.2025), தேனி ச.மனோகரன் (29.11.2025), சோழிங்கநல்லூர் பி.ஆரோக்கியசாமி (வயது 84) (28.11.2025), கடலூர் நகர கழகச் செயலாளர் ச.மனோகரன் (28.11.2025), மதுரை மேலக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் கு.பால்சாமி (29.11.2025), நெடுவாக்கோட்டை கு.கோசலை அம்மாள் (30.11.2025),  வாழ்மானபாளையம் பெரியார் பெருந்தொண்டர் வெங்கடாச்சலம் (18.11.2025), வைத்தீசுவரன்கோயில் அக்ரி கலியபெருமமாள் (16.11.2025), பெரப்பூர் ஆர்.ஜனார்த்தனன் (13.11.2025), கோமதி சொக்கலிங்கம் (6.11.2025), நெல்லை மாவட்டம் சி.மணிமொழியன் (04.12.2025), கோவை ந.குருவாயூரப்பன் (06.12.2025),  கும்பகோணம் தி.விஜயராணி (10.12.2025), சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் தாண்டவன் (13.12.2025), எஸ்.பி.ஆத்மநாதன் (வயது 80) (14.12.2025), சட்ட எரிப்புப் போராட்ட வீரர் குடந்தை திருநாகேசுவரம் மொட்டையன் ஆகியோர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 2

2026 ஆம் ஆண்டுக்கான
கழக வேலைத் திட்டங்கள்

கழக அமைப்புப் பணிகள்

(1) மாவட்டக் கழகங்களில் எந்தெந்த ஒன்றி யங்களில் கழக அமைப்பு இல்லை என்பதை அறிந்து, அந்த ஒன்றியங்களில் கழக அமைப்பை ஏற்படுத்துதல்.

முதலில் அமைப்பாளர் என்ற ஒருவரை அறிவித்து, அவருடைய செயல்பாட்டின் அடிப்படையில் அவ்வொன்றியத்தில் இயக்க அமைப்பை மேம்படுத்துதல்.

(2) ஒன்றிய வாரியாகக் கணக்கெடுத்து, மாவட்ட அளவில் கழகத் தோழர்களின் எண்ணிக்கை, முகவரி, தொலைப்பேசி உள்பட சேகரித்தல்.

(3) மாவட்டக் கழகத் தலைவர் தங்கள் மாவட்டம் தொடர்பான விவரங்கள் அடங்கிய பதிவேடுகளைப் பராமரித்தல். தலைமைக் கழகத்தின் ஒப்புதலோடுதான் மாற்றங்கள் செய்யப்படவேண்டும்.

(4) அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்களின் முகவரி கள், தொலைப்பேசிகள், விவரங்களுக்கான கோப்புகள்.

(5) இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாவட்டக் கழகக் கூட்டம் கூட்டி – அந்தந்தப் பகுதிகளில் நடந்த கழக நடவடிக்கைகள் – அடுத்து பிரச்சாரம் உள்பட திட்டங்களை வகுத்தல்.

(6) ஒன்றிய வாரியாக ‘விடுதலை’ உள்ளிட்ட இயக்கச் சந்தாதாரர்களின் விவரம் அறிதல் – புதிய சந்தாக்கள் சேகரித்தல்.

(7) படிப்பகம் உள்ள இடங்களை அன்றாடம் சிறப்பாகச் செயல்படும் வகையில் பராமரித்தல், குறைந்த பட்சம் மாதம் ஒருமுறை ‘‘பெரியார் பேசுகிறார்’’ நிகழ்ச்சிகளை வாய்ப்புள்ள பகுதிகளில் நடத்துதல்.

(8) மாலை நேரங்களில் கழகத் தோழர்கள் படிப்ப கங்களில் அல்லது ஓரிடத்தில் சந்தித்தல்.

(9) கழகத்தில் உள்ள பல்வேறு அணியினரும், அந்தந்த அணியைப் பலப்படுத்த முயற்சிகளை மேற்கொள்ளுதல்.

(10) பொதுச் செயலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்டத் தலைவர்கள், செயலாளர்கள் மேற்கொண்ட பணிகளுக்கான அறிக்கையை மாதந்தோறும் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்தல்.

(11) ஜாதி, தீண்டாமை உள்ளிட்ட பல்வேறு பொதுப் பிரச்சினைகளில் உள்ளூரில் கழகம் தலையிடவேண்டிய அவசியம் வரும்போது, உடனடியாகத் தலைமைக் கழகத்திற்குத் தெரிவித்து, உரிய நடவடிக்கைகளில் ஈடுபடுதல்.

(12) தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவினையொட்டி, மாவட்ட அளவில் பேச்சுப் போட்டிகளை – பகுத்தறிவாளர் கழகத்தடன் இணைந்து செயல்படுததுதல்.

(13) சனி, ஞாயிறுகளில் அல்லது விடுமுறை நாள்களில் குறைந்தபட்சம் ஆண்டுக்கு இரண்டு முறை பயிற்சிப் பட்டறை நடத்துதல்.

(14) தமிழர் பண்பாட்டு விழாவாம் பொங்கல்  விழா வினைக் கழகத்தினர் – பல்வேறு போட்டிகளை நடத்தி, இளைஞர்களை ஈர்த்தல்.

(15) பேச்சாளரிடம் சேர்ந்தாற்போன்று சில நாள்க ளுக்குத் தேதி வாங்கி, தங்கள் மாவட்டங்களில் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துதல். நகரம், கிராமப் பகுதிகளில் அத்தகு கூட்டங்களை நடத்துதல். ‘மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சிகளை நடத்துதல்.

(16) சமூக வலைதளங்களுக்கான தொழில்நுட்பப் பயிற்சியை நடத்தி, இளைஞர்களைத் தயாரித்து, இயக்கக் கருத்துப் பிரச்சாரம், கழக செயல்பாடுகளை அதிக எண்ணிக்கையில் மக்களை அடையச் செய்தல்.

(17) கழக நிகழ்ச்சிகளைக் கழகத்தின் பல்வேறு அணியினரும் பகுத்தறிவாளர் கழக அமைப்புகளும் ஒன்றிணைந்து செயல்படுத்துதல்.

(18) சுவர் எழுத்துப் பிரச்சாரம், துண்டறிக்கைகள் விநியோகம் என்ற நமது கழகத்திற்கே உரித்தான செயல்பாடுகளை மீண்டும் பெரிய அளவில் ஊக்குவித்து நடைமுறைக்குக் கொண்டு வருதல்.

இத்தகு பணிகளை கழகத் தோழர்கள் ஒற்றுமைப் பலத்துடன் மேற்கொண்டு, மக்கள் இயக்கமாகக் காரி யத்தில் காட்டுவது என்று இந்தச் சிறப்புச் செயற்குழு ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண்: 3

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலும் –
நமது கடமையும்!

2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத்  தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி மகத்தான முறையில் வெற்றி பெறுவதற்குக் கடுமையாக உழைப்பது என்று இந்தச் சிறப்புத் தலைமைச் செயற்குழு தீர்மானிக்கிறது.

சமூகநீதி, மதச் சார்பின்மை, பெண்கள் நல வளர்ச்சி, கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, மருத்துவம் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் சமதர்மம், சமத்துவ நோக்கோடு இந்தியாவிலேயே முதன்மை இடம் வகிக்கும் ‘திராவிட மாடல்’ அரசு சாதனைச் சரித்திரம் படைத்து வருகிறது.

‘திராவிட மாடல்’ அரசின் நலத் திட்டங்களைப் பிற மாநிலங்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளும் கூட பின்பற்றும் அளவுக்குத் தமிழ்நாடு அரசின் செயல்பாடு கள் அமைந்திருப்பதை இச்செயற்குழு பெருமிதத்தோடு சுட்டிக்காட்டுகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளைத் தகர்க்கும் வகையிலும், ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற
ஆர்.எஸ்.எஸ். பிற்போக்குச் சித்தாந்தத்தை மூர்க்கத்த னமாக செயல்படுத்தும் வகையில் பி.ஜே.பி. தலைமையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது.

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில், ஹிந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பதில் தீவிர முனைப்புக் காட்டியும் வருகிறது.

பொருளதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு (EWS) என்ற பெயரால், 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை  –ஏற்கெனவே  கல்வி, உத்தியோகங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் உயர்ஜாதியினருக்கு, குறிப்பாகப் பாரப்பனர்களுக்கு மேலும் வாய்ப்பினை அதிகரிக்கச் செய்யும் – சமூகநீதியின் ஆணிவேரை வெட்டி வீழ்த்தும் – சமூகநீதிக்கு எதிரான வகையில் ஒன்றிய பி.ஜே.பி. அரசு அதிவேகத்தில் செயலாற்றி வருகிறது.

சட்டப்படியும், முறைப்படியும் தமிழ்நாட்டிற்கு அளிக்கவேண்டிய நிதியைக்கூட ஒன்றிய பி.ஜே.பி. அரசு அளிப்பதில்லை. இயற்கைப் பேரிடருக்குக்கூட நிதி அளிக்க மறுப்பது – ஒன்றிய பி.ஜே.பி. அரசின் மனிதநேய விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. மாநில உரிமைகளைக் கபளீகரம் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது.

இத்தகைய ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்துக்கு நேர் எதிரான விஷ முறிவு – தந்தை பெரியாரின் சுயமரியாதை – திராவிட சித்தாந்தமே என்பதை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி, அந்தத் திராவிட சித்தாந்தத்துடன் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான முற்போக்கு ‘திராவிட மாடல்’ மக்கள் நல அரசை தமிழ்நாட்டில் மீண்டும் மலரச் செய்யவேண்டியது, தமிழ்நாட்டு வாக்காளர்ப் பெருமக்களின் முழு முதற்கடமை என்பதை திராவிடர் கழகச் சிறப்புச் செயற்குழுக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

வாக்காளர் ஒவ்வொருவரும் தங்களுக்கும், எதிர்காலச் சந்ததியினரின் நலனுக்கும் விழிப்பாகச் செய்யக்கூடிய – செய்யவேண்டிய கடமை என்பதை மீண்டும் மீண்டும் இக்கூட்டம் வற்புறுத்துகிறது.

தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் கொடுக்கும் இந்த மகத்தான வெற்றி இந்தியத் துணைக் கண்டத்திற்கே வழிகாட்டக் கூடியதாக இருக்கவேண்டும்.

அரசியலமைப்புச்  சட்டத்துக்கு விரோதமாக மதவாத, ஜாதீய வாதத்தை முன்னிறுத்தி மக்களைப் பிளவுபடுத்தும், ஆட்சி நடத்தும் பி.ஜே. பி. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு இத்தேர்தலில் பெருந்தோல்வியைக் கொடுத்துப் பாடம் கற்பிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றும் இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 4

பெரியார் உலகம்!

தந்தை பெரியாரை உலகமயமாக்கும் பணியில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் நமது லட்சியத் திட்டமாக உருவாகி வரும் பெரியார் உலகத்திற்குத் தங்களது நன்றிக் கடனாக நன்கொடைகளை வழங்கி வரும்
தமிழ்ப் பெருமக்களுக்கு இச்செயற் குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இதற்காக அயராது பாடுபடும் நமது கழகத் தோழர்களையும் இச்செயற்குழு பாராட்டுகிறது.

சிறுகனூரில் அமையவிருக்கும் பெரியார் உல கத்தில், தந்தை பெரியாரின் பேருருவச் சிலையும், அதையொட்டிய அறிவியல், வரலாற்று, சமூக நீதிக் கண்காட்சிகளும், கருத்தரங்கக் கூடங்களும் அமைக்கும் இத்திட்டம் ஒரு மாபெரும் திட்டம் ஆகும்; அதற்கு தேவையான நிதியும் பெருந்தொகையே ஆகும் என்பதால் தமிழ் பெருமக்களும், உலகத் தமிழர்களும், சமூக நீதிச் சிந்தனையாளர்களும், பகுத்தறிவாளரகளும், பொது வாழ்வில் அக்கறை உள்ளவர்களும், வசதி வாய்ப்பு உள்ளவர்களும், சிறுதுளி பெரு வெள்ளம் என்பதற்கு ஏற்ப இயன்ற நிதியைத் தர வாய்ப்புள்ளவர்களை இத்திட்டத்திற்கு தங்கள் நன்கொடைகளை வாரி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தன்மானம் பாராது இன மானத்திற்காக உழைக்கும் கருஞ்சட்டைத் தொண்டர்கள் எல்லா தரப்பினரையும் அன்புடன் அணுகி, நன்கொடைகளைத் திரட்டி, தந்தை பெரியாரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாளுக்குள் ‘பெரியார் உலகம்’ பணிகள் முடிவடையக் கடமை ஆற்ற வேண்டும் என்றும் இச்செயர் குழு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண்: 5

சமூகநீதிக்கான நாடு தழுவிய
பிரச்சாரக் களம்

சமூகநீதி அனைத்து மட்டங்களிலும் கொண்டு வரப்படுவது அவசியமாகும். இவ்வாறு சமூகநீதி தழைப்பதற்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டுமானால், நீதித் துறையில் சமூக நீதி இருக்க வேண்டும். அதிலும், மிக முக்கியமாக உயர்நீதித் துறையில் மிக அவசியமாகும்.

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் சமூகநீதி இருக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றக் கொலீஜியமே கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், நீதிபதிகள் நியமனங்களில் சட்டபூர்வமாக சமூகநீதியை உறுதி செய்ய வேண்டும். இனியும் உயர்ஜாதியினரின், குறிப்பாகப் பார்ப்பனர்களின் கூடாரமாக உயர்நீதித் துறை (Higher Judiciary) இருப்பதை மாற்றி, அனைத்துத் தரப்பு மக்களுக்குமானதாக நீதித் துறை அமைய வேண்டும். பாலியல் நீதி (Gender Justice) என்பது சமூகநீதியும் (Social Justice) இணைந்ததாகவும் இருக்க வேண்டும்.

மண்டல் கமிஷன் அறிக்கை ஏற்கப்பட்டு ஏறத்தாழ 35 ஆண்டுகள் ஆனபின்னும் அதில் வழங்கப்பட்ட 13 பரிந்துரைகளில் பல நடைமுறைக்கு வரவில்லை. தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்துப் பரிந்துரைகளையும் நிறைவேற்றிட, இந்தியா முழுவதும் பிரச்சாரத்தையும், அறவழிப் போராட்டங்களையும், சட்ட முன்னெடுப்புகளையும் சமூக நீதியில் அக்கறையுள்ள சக்திகளையும் இணைத்து மேற்கொள்வது என்று இக் கூட்டம் தீர்மானிக்கிறது

தீர்மானம் எண்: 6

மாநில உயர்கல்வி நிறுவனங்களை ஒன்றிய அரசின் ஆளுமைக்குக் கொண்டு செல்வதற்குக் கண்டனம்!

‘‘தேசிய புதிய கல்விக் கொள்கை’’ என்ற பெயரால் கல்லூரிகளில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க அண்மையில் யூ.ஜி.சி. சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதனை இக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. எந்த வகையிலும் மொழித் திணிப்பை ஏற்க முடியாது.

மேலும், இந்தியாவின் உயர்கல்வியை வழிநடத்தும் நிறுவனங்களான பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (UGC), அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (AICTE), ஆசிரியர் படிப்புக்கான தேசியக் கவுன்சில் (NCTE) ஆகியவற்றைக் கலைத்துவிட்டு, அனைத்தையும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வந்து, அதன் மூலம் தேசியக் கல்விக் கொள்கையைத் திணிப்பதற்காக “விக்ஷித் பாரத் சிக்ஷா ஆதிக்ஷன்” என்ற பெயரில் ஒரு சட்டத்தைக் கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சிப்பது மாநில உரிமைகளைப் பறித்து, அனைத்தையும் காவி மயமாக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின் சூழ்ச்சியாகும். ஒற்றை ஆட்சித் திணிப்பின் மறைமுக நடவடிக்கையே இத்திட்டம்!

தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு ஏற்கவில்லை என்று உறுதிபடத் தெரிவித்தபின்னும் ஆர்.எஸ்.எஸ்.சின் முயற்சிகள் நின்றபாடில்லை. கல்லூரிகளுக்குள் பல பெயர்களில் காவிகள் நுழைவதையும், மொழித் திணிப்பையும் விழிப்புடன் கண்காணித்துத் தடுக்கவேண்டியது – தற்போது நமது முக்கியக் கடமையாகும் என்பதைத் தமிழ்நாடு அரசுக்கும், கல்வியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 7

தொழிலாளர் நலன் காப்போம்!

இந்திய நாட்டின் வெகுமக்களான உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்களை இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. ‘உழைப்புக்கேற்ற ஊதியம்’, தொடங்கி, ‘உழைப்பாளிக்கும் தொழிலில் பங்கு’ என்பதை நோக்கி முன்னேற வேண்டிய காலகட்டத்தில், உழைப்பு என்பது அவரவர் கடமை என்றும், பலனை எதிர் நோக்காது பணியாற்ற வேண்டும் என்றும் மனுதர்மப் பார்வையில் கட்டளையிடும் சட்டங்கள் தொழிலாளர் விரோதச் சட்டங்களே ஆகும். பணி நிரந்தரம், ஒரே பணிக்கு ஒரே சம்பளம் போன்றவற்றை உறுதி செய்யும் வகையில் சட்டம் இயற்ற வேண்டுமேயொழிய, தொழிலாளர் உரிமையைப் பறிக்கும் சட்டங்களை இயற்றக் கூடாது; அவற்றுக்கு எதிராகத் தொழிலாளர் அமைப்புகள் குரல் கொடுக்க வேண்டும் போராட வேண்டும் என்று இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான திருச்சி திருவெறும்பூர் பாரத் ஹெவி எலக்ட்ரிகல் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற பெயரில் நெடுங்காலமாக வஞ்சிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காகப் போராடி, நீதிமன்றத்தில் வழக்காடி அவர்களுக்குரிய உரிமையைப் பெற்றுத் தந்து, நிரந்தரப் பணியாளர்கள் என்ற நிலையையும் எட்ட வைத்துள்ள திராவிடர் தொழிலாளர் கழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு இச்செயற்குழு தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

இதைப்போல பல்வேறு நிறுவனங்களில் நடைமுறையில் இருக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் உரிமை அளிக்கப்பட வேண்டும் என்று இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 8

கிராமப்பற மக்கள் வேலைத் திட்டத்திற்கு மீண்டும் காந்தியார் பெயரையே சூட்டுக!

ஒன்றிய பாஜக அரசு அனைத்து மக்களுக்குமான அரசு என்பதை மறந்து ஆர்.எஸ்.எஸ்-சின் செயல் திட்டங்களை நிறைவேற்றுவதையே பெரும்பணியாகச் செய்து கொண்டிருக்கிறது. கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்குப் பெரும் உதவியாக, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரிலிருந்து, காந்தியார் பெயரை நீக்கி, அதற்குப் பதிலாக ‘‘ராம்’’ என்று வரும் வகையில் மாற்றி அமைத்து, அந்த நிதிச் சுமையையும் மாநில அரசுகளின் தலையில் திணிக்கும் வகையில் கொண்டுவரப்படுகின்ற சட்ட  முன் வரைவு – மதச்சார்பின்மையின் அடிப்படையிலும் மாநில உரிமைகளின் அடிப்படையிலும் ஏற்கத்தக்கது அல்ல. அச் சட்டத்திற்குத் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு தன் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. அத்திட்டத்திற்கு மீண்டும் காந்தியார் பெயரையே சூட்ட வேண்டும் என்றும் இக்கூட்டம் ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

-விடுதலை நாளேடு, 18.12.25

வியாழன், 18 டிசம்பர், 2025

திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் நியமனம்-பொறுப்பு மாவட்டங்கள் ஒரு முக்கிய அறிவிப்பு

 திராவிட மாணவர் கழகத்தின் நிர்வாக வசதிக்காக பின்வருமாறு  பொறுப்பு மாவட்டங்கள் மாற்றம் செய்யப்படுகின்றன.

இரா.செந்தூரபாண்டியன்
(திராவிட மாணவர் கழக
மாநிலச் செயலாளர்)

பொறுப்பு மாவட்டங்கள்:

  1. கன்னியாகுமரி
  2. தூத்துக்குடி
  3. திருநெல்வேலி
  4. தென்காசி
  5. ராஜபாளையம்
  6. மதுரை புறநகர்
  7. மதுரை மாநகர்
  8. ராமநாதபுரம்
  9. காரைக்குடி
  10. சிவகங்கை
  11. புதுக்கோட்டை
  12. அறந்தாங்கி
  13. பட்டுக்கோட்டை
  14. தஞ்சாவூர்
  15. திருச்சி
  16. லால்குடி
  17. துறையூர்
  18. கரூர்
  19. பழனி
  20. திண்டுக்கல்
  21. கம்பம்
  22. தேனி
  23. தாராபுரம்
  24. பொள்ளாச்சி
  25. கோயம்புத்தூர்
  26. மேட்டுப்பாளையம்
  27. நீலமலை
  28. திருப்பூர்
  29. கோபிச்செட்டிப்பாளையம்
  30. ஈரோடு
  31. நாமக்கல்
  32. ஆத்தூர்
  33. சேலம்
  34. மேட்டூர்

நாகை மு.இளமாறன்
(திராவிட மாணவர் கழக
மாநில இணைச் செயலாளர்)

பொறுப்பு மாவட்டங்கள்:

  1. கும்மிடிப்பூண்டி
  2. திருவொற்றியூர்
  3. வடசென்னை
  4. தென் சென்னை
  5. ஆவடி
  6. திருவள்ளூர்
  7. தாம்பரம்
  8. சோழிங்கநல்லூர்
  9. செங்கல்பட்டு
  10. காஞ்சிபுரம்
  11. ராணிப்பேட்டை
  12. ஓசூர்
  13. வேலூர்
  14. திருப்பத்தூர்
  15. கிருஷ்ணகிரி
  16. தருமபுரி
  17. அரூர்
  18. செய்யாறு
  19. திருவண்ணாமலை
  20. திண்டிவனம்
  21. விழுப்புரம்
  22. புதுச்சேரி
  23. கள்ளக்குறிச்சி
  24. விருத்தாசலம்
  25. கடலூர்
  26. சிதம்பரம்
  27. அரியலூர்
  28. பெரம்பலூர்
  29. மயிலாடுதுறை
  30. நாகப்பட்டினம்
  31. காரைக்கால்
  32. திருவாரூர்
  33. கும்பகோணம்
  34. மன்னார்குடி

திராவிடர் கழக இளைஞரணியின் மாநில இணைச் செயலாளராக வழக்குரைஞர் சோ.சுரேஷ் நியமிக்கப்படுகிறார்.

திராவிடர் கழக இளைஞரணி நிர்வாக வசதிக்காக பின்வருமாறு பொறுப்பு மாவட்டங்கள் மாற்றம் செய்யப்படுகின்றன.

நாத்திக.பொன்முடி
(திராவிடர் கழக மாநில இளைஞரணிச் செயலாளர்)

பொறுப்பு மாவட்டங்கள்:

  1. கன்னியாகுமரி
  2. திருநெல்வேலி
  3. தூத்துக்குடி
  4. தென்காசி
  5. ராஜபாளையம்
  6. விருதுநகர்
  7. மதுரை புறநகர்
  8. மதுரை மாநகர்
  9. கம்பம்
  10. தேனி
  11. திண்டுக்கல்
  12. பழனி
  13. திருச்சி
  14. துறையூர்
  15. லால்குடி
  16. புதுக்கோட்டை
  17. அறந்தாங்கி
  18. சிவகங்கை
  19. காரைக்குடி
  20. ராமநாதபுரம்
  21. பட்டுக்கோட்டை
  22. தஞ்சாவூர்
  23. கும்பகோணம்
  24. மன்னார்குடி
  25. திருவாரூர்
  26. நாகப்பட்டினம்
  27. காரைக்கால்
  28. மயிலாடுதுறை
  29. அரியலூர்
  30. விருத்தாசலம்
  31. சிதம்பரம்
  32. கடலூர்
  33. புதுச்சேரி
  34. பெரம்பலூர்

வழக்குரைஞர் சோ.சுரேஷ்
(திராவிடர் கழக இளைஞரணி மாநில இணைச் செயலாளர்)

பொறுப்பு மாவட்டங்கள்:

  1. கும்மிடிப்பூண்டி
  2. திருவொற்றியூர்
  3. வடசென்னை
  4. தென் சென்னை
  5. ஆவடி
  6. திருவள்ளூர்
  7. தாம்பரம்
  8. சோழிங்கநல்லூர்
  9. செங்கல்பட்டு
  10. காஞ்சிபுரம்
  11. ராணிப்பேட்டை
  12. வேலூர்
  13. செய்யாறு
  14. திருவண்ணாமலை
  15. திருப்பத்தூர்
  16. ஓசூர்
  17. கிருஷ்ணகிரி
  18. தருமபுரி
  19. அரூர்
  20. திண்டிவனம்
  21. விழுப்புரம்
  22. கள்ளக்குறிச்சி
  23. ஆத்தூர்
  24. சேலம்
  25. மேட்டூர்
  26. நாமக்கல்
  27. கரூர்
  28. ஈரோடு
  29. கோபிச்செட்டிப்பாளையம்
  30. திருப்பூர்
  31. தாராபுரம்
  32. பொள்ளாச்சி
  33. கோயம்புத்தூர்
  34. மேட்டுப்பாளையம்
  35. நீலமலை

– கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்

(கழகத் தலைவர் ஆணைப்படி)

-விடுதலை நாளேடு,12.12.25