ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

சென்னை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் -29.8.15

சென்னையில் எத்தனையோ மாவட்டக் கலந்துரை யாடல் கூட்டங்கள் நடந்துள்ளன; மண்டலக் கூட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் நேற்று (29.8.2015) மாலை கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல், புது நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது.
கழகப் பொறுப்பாளர்களுக்கு புதிய உந்துதலையும் ஊட்டியுள்ளது. இளைஞர்கள் பெரியார் திடல் முகவரியைத் தேடி வந்துள்ளனர்.
இன்னும் ஒரு தகவலைச் சொன்னால் வெளி மாவட்டத் தோழர்களின் புருவங்கள் ஏறி இறங்கும்; மற்றவர்கள் மத்தியிலும் சிந்தனை அலைகளைத் தட்டியும் எழுப்பும்.
ஆர்.எஸ்.எஸ். முகாமிலிருந்து...
ஆம், ஆர்.எஸ்.எஸ். முகாம்களில் பயிற்சி பெற்றதோடு மட்டுமல்ல; குறிப்பிட்ட அளவு பொறுப்புகளில் இருந்தவர் களும் அதனை உதறித் தள்ளிவிட்டு கழகப் பாசறையைத் தேடி வந்துள்ளனர்.
பார்ப்பன நெடியைத் தாள முடியவில்லை; சமஸ்கிருத கலாச்சாரக் கலாட்டாவை ஏற்க முடியவில்லை என்பதே இந்தப் புதிய வரவுகளின் மொழியாக இருந்தது.
இது ஒரு காலகட்டம் தோழர்களே! அதிகார பீடத்துக்கு வந்த ஆணவத்தில் ஆர்.எஸ்.எஸ். குழாம் கக்கும் ஆபாச அரட்டைகளும், ஆணவக்குரலில் அலரும் அநாகரிகப் பேச்சுகளும், மனிதரை மனிதராகப் பார்க்காமல் அவன் சார்ந்த மதத்தினைத் தேடிக் கண்டுப்பிடிப்பதும், கண்டு பிடித்தபின் காழ்ப்புணர்வு அனலைக் கொட்டித் தீர்ப்பதும், இன்னொரு கட்டத்தில் அவர்கள்மீது தாக்குதலைத் தொடுப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. மனிதம் மாய்ந்த அந்த இடத்தில் மதம் பிடித்து ஆட்டுகிறது.
சகோதரத்துவத்துக்கு இடமில்லை; மாறாக சனாதனம் கற்பிக்கும் காழ்ப்புக் குணம்தான் காலாட்டி நிற்கிறது.
ஒற்றுமைக்கு இடமில்லை; உறுமும் ஓநாய்களின் காடாக மாற்றப்படுகிறது.
ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக நாம் சாப்பிடும் உணவில் கூட மூக்கை நீட்ட ஆரம்பித்து விட்டனர்.
மாட்டுக் கறியை சாப்பிடாதே என்று அம்மா என்று கத்துகிறார்கள்.
பொருளாதாரத்தில் மாற்றத்தைக் கொடுக்க முடியாது என்று முற்றிலும் உணர்ந்த நிலையில், கலாச்சாரத் துறைகளில் கலகம் விளைவிக்க ஆரம்பித்துவிட்டனர்.
ஓராண்டுக்குள்ளேயே உண்மை உருவம் வெளுத்து விட்டது. இதுதான் தருணம் தோழர்களே! இந்துத்துவம் வந்தால் இன்னலைத்தான் கொடுக்கும் - மக்களிடையே மதக்கலாச்சாரத்தைத்தான் ஏற்படுத்தும் - அமைதிக்கு விடை கொடுத்து கலவரத்துக்குக் கத்தி தீட்டுவார்கள் என்பது இப்பொழுது புரிந்து விட்டது.
இந்த இந்துத்துவ நோயை விரட்டும் மாமருந்து ஈரோடு மூலிகைதான் என்பதை எடுத்துச் சொல்வோம்.
மனுதர்மம் வந்தால்...
மனுதர்மம் வந்தால் மாடு மேய்க்கத்தான் போக வேண்டும்; தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு வெளிச்சத்தால், வளர்ச்சியின் படிக்கட்டுகளில் பயணிப் போம் என்று பக்குவமாய் எடுத்துக் கூறுவோம்.
வளர்ச்சி வேண்டும் - வீழ்ச்சி வேண்டாம் என்ற முடிவுக்கு வாருங்கள் தோழர்களே என்று முச்சந்தியில் எல்லாம் நின்று முழங்குவோம் - அதுதானே நாம் அறி முகப்படுத்திய தெருமுனைக் கூட்டம். (நேற்றைய கலந்து ரையாடலில் கழகத் தலைவர் இதனையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.) தலைநகரில் இளைஞர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் புத்துணர்வுதான் பரவலாக நாடு தழுவிய அளவில் எதிரொலிக்கும் - இது ஓர் உளவியல் மதிப்பீடு - தேர்தல் கருத்துக் கணிப்பென்னும் திணிப்பல்ல.
மாணவர்களைச் சந்திப்போம் - இளைஞர்களின் சங்கமத்துக்கு ஏற்பாடு செய்வோம் - இது காலத்தின் கட்டாயம் கருஞ்சட்டைத் தோழர்களே!
புதிதாக இயக்கத்திற்கு வந்த தோழர்கள் தங்கள் பழைய கதைகளையும் எடுத்துக் கூறினர் - கழகத்துக்கு வந்ததற்கான காரணங்களையும் குறிப்பிட்டனர்.
அவர்கள் கூறும் காரணம் அவர்கள் பெற்ற உணர்வு களும் ஒரு மாவட்டத்துக்கு மட்டுமல்லாது மாநிலம் முழு மைக்குமே  பொருந்தக் கூடியவைதான்.
மாணவரணித் தோழர்களே, பொறுப்பாளர்களே! விடுதிகளின் கதவுகளைத் தட்டுங்கள், நமது வெளியீடு களைத் தாருங்கள். கல்வி நிறுவனங்களின் நுழைவு வாயிலில் வரிசையாக நில்லுங்கள், துண்டறிக்கைகளை விநியோகியுங்கள்.
எதிர்ப்பு வந்தால்...
சென்னை அய்.அய்.டி.யில் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் தோன்றிய கதையைச் கச்சிதமாக எடுத்துக் கூறுங்கள். அங்கே தடை விதிக்கப்பட்டதால் மும்பை அய். அய்.டி.யிலும், டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழ கத்திலும் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் பூத்துக் குலுங்கும் போக்கினையும் பக்குவமாய் எடுத்துக் கூறுங்கள்.
எல்லாக் கல்வி நிறுவனங்களிலும் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டங்கள் வேகவேகமாகக் கிளம்பட்டும் - விரைவில் மிகப்பெரிய மாற்றம் வெடித்துக் கிளம்பும் என்பதை மனதில் வையுங்கள்.
தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் பதி னேழை, ஒரு மய்யப் புள்ளியாக வைத்து செயலாக்கத்திற் கான வரைபடத்தைத் தீட்டுங்கள்.
கழகம் கொடுக்கும் இந்தக் கதிர் ஒளி, காரிருளைக் கிழிக்கும். அரசியல் மாற்றத்திக்குக் கூட ஓர் அச்சாரமாக இருக்கும். பெரியார் ஆயிரம் வினா விடை என்னும் விதைகள் எங்கும் ஊன்றப்படட்டும்.
புத்தருக்குப் பின்னால் புதிய சகாப்தம், தந்தை பெரியார் காலத்தில் உருவாயிற்று. அவருக்குப் பின்னால் அது மங்கி விட்டது என்ற பழி நமக்கு வரவேண்டாம் - நல்ல தருணம் இது - உழவுக்குத் தயாராகுங்கள்.
இணையதளம்தான் இளைஞர்களை ஈர்க்கும் என்றால் அந்தக் கலையிலும் அத்துப்படி ஆகுங்கள்; கணினிப் பயிற்சியையும் கழகம் ஆங்காங்கே தந்து கொண்டுதானே இருக்கிறது.
இன்னொரு திட்டத்தையும் கழகத் தலைவர் எடுத்துக் கூறினார் - அதுதான் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை!
பெரியார் பயிற்சிப் பட்டறைகள்
சனி ஞாயிறுகளில் மாணவர்களுக்குப் பயிற்சி பட்டறை நடத்துவது என்பது அறிவுப்பூர்வமான அணுகுமுறை என்றாலும் (சென்னையில் இரு நாட்கள் விரைவில் நடைபெறும்) நிரந்தரமாக மாநிலத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை என்று நிர்ணயிக்கப்பட்டுவிட்டது.
குற்றாலத்தில், குமுளியில், ஒகேனக்கல்லில் என்ற வரிசையில் நாமக்கல்லும் இணைக்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 2, 3, 4 மூன்று நாட்களும் விடுமுறை நாட்கள் (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் நாமக்கல்லில் நடைபெறவுள்ளது. தமிழ்ப் பண்பாட்டின் மீட்டுருவாக்கம் என்பது பயிற்சிப் பட்டறையின் பொருளாக இருக்கப் போகிறது.
கழகத் தலைவர் இரு நாட்கள் பட்டறையிலே தங்கி வகுப்புகளை நடத்தும் வாய்ப்பு, பேராசிரியர் பெருமக்களின் சிறப்பான வகுப்புகளுக்கும் பஞ்சமில்லை.
இளைஞர்கள் கெட்டு விட்டார்கள், கெட்டு விட்டார் கள், தறிகெட்டுப் போய்விட்டார்கள், திசை தெரியாமல் அல்லாடுகிறார்கள் என்று வெறும் குற்றப் பத்திரிகை படிப்பதால் எந்தப் பயனும் இல்லை.
மாற்றாக நாம் காட்டும் வழி எதுவாக இருக்கப் போகிறது என்பதுதான் முக்கியம்! பெரியாரியல் சிந்தனைகள் என்னும் அந்த உயர் எண்ணங்கள் மலரும் சோலைக்குள் அவர் களை நடமாட விடவேண்டாமா? அதில் முதன்மையானது பயிற்சி முகாம்தானே.
இந்தப் பட்டறைகளுக்கு இளைஞர்களைத் திரட்ட வேண்டியது இளைஞரணி, மாணவரணி பொறுப்பாளர் களுக்கு மட்டும்தான் என்று எண்ணிவிடக் கூடாது, கழகத் தில் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் (பகுத்தறிவாளர் கழகத்தினர் உட்பட) கூடுதல் பொறுப்பு இருக்கிறது.
அங்கு இங்கு எனாதபடி பெரியார் வியாபகம்!  வியாபம் ஊழல் புகழ் மத்தியப் பிரதேசத்துக்கும் கூட பெரியார் தேவைப்படும் காலம் இது.
குஜராத்தில் நடப்பது என்ன?
குஜராத்தில் இப்பொழுது என்ன நடக்கிறது? இடஒதுக் கீடு கேட்டு படேல்கள் அங்கு போர்க்கொடி தூக்கியுள்ள னர் - ஒரு 22 வயதுடைய இளைஞரின் தலைமையிலே.
இடஒதுக்கீடே கூடாது என்று ஒரு காலத்தில் பிள்ளையார் சுழி போட்டவர்கள் (அவர்கள் மொழியில்) குஜராத்துக்காரர்களான இதே படேல் சமூகத்தினர்தான் 1980-1981 ஆண்டுகளில்.
அதேபடேல்காரர்கள் இன்று குஜராத்தில் இட ஒதுக்கீடு கேட்கிறார்களே. இது நமக்கு வெற்றி தானே! இடஒதுக்கீட்டை எதிர்த்த பார்ப்பனர்கள் இப்பொழுது தங்களுக்கும் இடஒதுக்கீடு கேட்கவில்லையா?
அவரவர்களுக்குரிய சதவீதத்தில் இடஒதுக்கீடுதானே தந்தை பெரியார் கூறிய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்.
இடஒதுக்கீட்டை வீழ்த்த ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் தான் குஜராத்தில் போராட்டம் நடக்கிறது என்ற ஒரு கருத்தும் இழையோடிக் கொண்டு இருக்கிறது - நாம் மறுக்கவில்லை.
பத்து லட்சம் மக்களைத் திரட்டி இட ஒதுக்கீட்டைக் கேட்டுவிட்டு, இடஒதுக்கீட்டுக்கு குழி வெட்டுவார்களேயா னால் அந்தப் பத்து லட்சம் மக்கள் என்ன பைத்தியக் காரர்களா? எதிர்ப்புரட்சியில் இறங்க மாட்டார்களா?
அரசே ஆதரவு கொடுப்பதாக வைத்துக் கொள்ளுங்கள் - அதன் விளைவு என்னவாகும்? இடஒதுக்கீடு கோரிக்கை யாளர்களின் ஆக்ஞைக்கு அடிபணிந்துதானே ஆகவேண்டும்.
இதில் தந்திரங்கள் எல்லாம் எடுபடாது - பக்கத்து மாநிலத்தில் பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பது அவர்களுக்குத் தெரியாதா? விஷப் பரீட்சையில் ஈடுபட்டாலும் வட்டியும் முதலுமாக விபரீதக் கடும் சுமையை கழுத்து உடைய சுமக்க வேண்டியல்லவா நேரும்?
எல்லாவற்றையும் மீறி அவர்கள் மாறினார்கள் என்று வைத்துக் கொள்வோம் - அதற்கு மாற்று எது என்று நமக்குத் தெரியாதா? நாம் நமது அணுகு முறையை மாற்றிக் கொள்ள முடியாதா - தெரியாதா? என்று அழகாக விளக்கம் அளித்தார் ஆசிரியர்.
சுயமரியாதைக் குடும்பங்கள் விருந்து
தநதை பெரியார் பிறந்த நாளையொட்டி ஒரு நாள் சென்னை மண்டலத்தில் சுயமரியாதைக் குடும்பங்களின் விருந்தினை ஏற்பாடு செய்ய வேண்டும் - மகளிர் அணியினர் அதற்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் தமிழர் தலைவர் அறிவித்தார்.
சென்னையில் பல இடங்களில் நூல்கள் விற்பனையகம்
கருத்துப் பரப்புதலில் நமது புத்தகங்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு. நூல்களைக் கொண்டு சேர்ப்பதுதான் நமது வேலை - அது சென்று விட்டால் அது அதன் வேலையைப் பரிசுத்தமாகவே செய்து விடும். அதில் ஒன்றும் அய்யம் வேண்டாம்.
தாம்பரம் - ஓர் முக்கியமான மய்யம் - அந்தப் பகுதியில் நமது நூல்களுக்கு எப்பொழுதுமே எதிர்ப்பார்ப்புண்டு, விரைவில் தாம்பரம், திருவொற்றியூர் அல்லது எண்ணூர் பகுதியில் நூல்கள் விற்பனையகம் ஏற்பாடு செய்யப்படும் என்ற அறிவிப்பினைக் கொடுத்தார் கழகத் தலைவர்.
விடுதலையைப் பரப்புவீர்
சென்னையைப் பொறுத்தவரையில் விடுதலை விநியோகத்துக்கு சில ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி யிருக்கிறது என்று குறிப்பிட்ட ஆசிரியர் அவர்கள் ஓர் இடத்தில் 10 விடுதலையை வாங்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சொன்னால் அந்த இடத்திற்கு செலவைப் பற்றிக் கூடப் பொருட்படுத்தாமல் அங்கெல்லாம் விடுதலையை விநியோகம் செய்யத் தயார் என்றும் குறிப்பிட்டார்.
2ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!
குஜராத் மாநிலம் என்பது இந்துத்துவாவின் பரிசோதனைக் கூடமாகப் பயன்படுத்துகிறார்கள். பாட திட்டமெல்லாம் இந்து மயம் ஆக்கப்படுகிறது. அண்ணல் அம்பேத்கர் - இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு, புத்த மார்க்கம் தழுவியபோது, 22 உறுதிமொழிகளை எடுத்தார். அந்த உறுதி மொழிகளைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்கி இருக்கிறார்கள். (இவர்கள் அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாடுவது யாரை ஏமாற்ற என்பதை நம் மக்களுக்கு விளங்க வைக்க வேண்டும்).
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கருத்துகளை இருட்டடிக்கும் குஜராத் மாநில அரசைக் கண்டித்து கழக - இளைஞரணி மாணவரணி அமைப்புகளின் சார்பாக செப்டம்பர் 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடத்தப்படும். இதில் ஒத்தக் கருத்துள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் கழகக் குடும்பத்தினர் - அவர்களின் வீட்டுப் பிள்ளைகள் அனைவரும் கண்டிப்பாய் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கழகத் தலைவர் கேட்டுக் கொண்டார்.
கழகத்தினருக்கு வேண்டுகோள்
சென்னைப் பெரியார் திடலில் நடக்கும் சிறப்புக் கூட்டங்களுக்கு கழகத்துக்கு அப்பால் உள்ளவர்கள்தான் பெரும்பாலோர் வருகிறார்கள். ஆனால் கழகத் தோழர்களின் வருகை குறைவாகவே இருக்கிறது. இந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டது.
நேற்று மாலை நடைபெற்ற சென்னை மண்டலக் கலந்துரையாடல் என்பது இதுவரை நடைபெற்ற கலந்துரையாடல்களிலேயே மிகப்பிரம்மாண்டமானது. கருத்துகளை எடுத்துச் சொன்னவர்கள் 18 பேர் என்றாலும் ஒரு மணி நேரத்திலேயே இரத்தினச் சுருக்கமாக - ஒரு கமிட்டிக் கூட்டத்தில் என்ன பேச வேண்டும் என்ற இலக்கணப் படிப்பேசியது பாராட்டத்தக்கது.
சென்னை மண்டலக் கூட்டத்தில் பேசப்பட்டது என்றாலும் அவை இந்த மண்டலத்துக்கு மட்டும் உரிய வையல்ல; அனைத்துக் கழக மாவட்டங்களுக்கும், மண்டலங்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும், தோழர்களுக்கும் உரித்தானவைதான் - தேவையானவைதான்.
தோழர்களே இவ்வாண்டு பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா உலகின் பல நாடுகளிலும் நடைபெறுகிறது. குறிப்பாக அமெரிக்கா, சிங்கப்பூர் நாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சி நிரல்கள் நமக்குக் கிடைத்துள்ளன.
அமெரிக்காவில் நடைபெறும் அய்யா விழாவில் அமெரிக்க வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது, பல்வேறு மொழி பேசுவோரும், இனத்தவர்களும், அறிஞர்களும் பங்கேற்கிறார்கள்.
சிங்கப்பூரில் நவம்பர் முதல் தேதி, சிந்தனைச் சிகரமாம் நமது அய்யாவின் விழா, சிறப்பான அம்சங்கள் பூத்துக் குலுங்க நடைபெற உள்ளது. தந்தை பெரியார் பொன் மொழிகள் ஒப்புவிக்கும் போட்டியைக் கூட பள்ளி மாணவர்களுக்கு நடத்துகிறார்கள்.
இவ்வாண்டு தமிழ்நாட்டில் அய்யா விழா ஒரு புதிய உத்வேகத்தோடு - பொதுமக்களின் கவனத்தைக் கவரும் வகையில் - குறிப்பாக இளைஞர்களைச் சுண்டி இழுக்கும் தன்மையில் வீறுகொண்டு நடக்க வேண்டும். அய்யா படத்தை அலங்கரித்து, கட்சிக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் பங்கேற்கும் வகையில் அது அமைய வேண்டும்.
சென்னையைப் பொறுத்தவரை பெரியார் திடலில் தந்தை பெரியார் பிறந்த வரலாற்றுச் சிறப்பு நாளான செப்டம்பர் 17ஆம் தேதி அன்று 20 அடி உயரத்தில் நிர்மாணிக்கப் பட்டிருக்கும் பகுத்தறிவுப் பகலவன் பேருருவச் சிலை திறப்பு விழா நடைபெறும் - மகளிர் கருத்தரங்கம் உட்பட பல அம்சங் களுடன் கருத்து விருந்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
செப்டம்பர் 20ஆம் தேதி அன்று சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட வடசென்னை, தென்சென்னை, தாம்பரம், ஆவடி, கும்முடிப்பூண்டி கழக மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளிலும் ஊர்வலங்களும், கொடி ஏற்றும் நிகழ்ச்சிகளும் களேபரமாக நடத்தப்படவேண்டும்.
செப்டம்பர் 4ஆவது வாரத்தில் கழக வழக்குரைஞரணி சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு சட்ட உதவி - மற்றும் கருத்தரங்கம் நடைபெறும் என்று கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் அறிவித்தார்.
-விடுதலை,30.8.15












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக