ஞாயிறு, 16 ஜூலை, 2023

வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பதா?

 

 தமிழ்நாடெங்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து 

திராவிடர் கழக இளைஞரணியினர்  பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம்

1

சென்னை, ஜூலை 14 அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுவதைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் வேலை வாய்ப்புகளை தமிழர்க்கென்று உறுதிப்படுத்து என்ற முழக்கத்துடன் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து இன்று (14.7.2023) காலை தமிழ்நாடெங்கும் மாபெரும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் கிளார்க் பணிகளுக்கு, அந்தந்த மாநில மொழிகளைப் படிக்க, எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக இருந்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில், அரசு வங்கிகளில் கிளார்க் பணிகளில் தமிழ் நாட்ட வர்க்கும் இதுவரை வாய்ப்புகள் இருந்து வந்துள்ளன.

இந்நிலையில், வங்கித் தேர்வு நடத்தும் வங்கிப் பணியாளர் தேர்வுக் கழகம் (IBPS) சார்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியிடப்படும் விளம்பரத்தில், மாநில மொழிகளில் தேர்ச்சி என்பது கட்டாயம் இல்லை; அது ஒரு முன்னுரிமை மட்டுமே (Not Mandatory; it is Preferable)  என்று விளம்பரப்படுத்தி வருகிறது.

வெளி மாநிலத்தவர்கள் அதிகரிப்பு!

இதன் காரணமாக வேறு மாநிலங்களில் உள்ளோர் தமிழ்நாட்டில் தேர்வு எழுதி, கிளார்க் பணிகளிலும் சேரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வெளி மாநிலத்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது 2022-2023ஆம் ஆண்டுக்கான கிளார்க் பதவி நியமனங்களுக்குத் தேர்வுகள் நடைபெற்று, 288 பேர் கிளார்க் பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன் விவரம்: யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா - 87, கனரா வங்கி - 100, பாங்க் ஆஃப் இந்தியா - 17, சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா - 66, யூகோ வங்கி - 16, பஞ்சாப் & சிந்த் வங்கி  - 2 மொத்தம் - 288.

ஆறு அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் 288 பேர் கிளார்க்குகளாக பணி நியமனம் செய்யப்பட்டுள் ளனர். இதில் இந்த ஆண்டும் வெளி மாநிலத் தவர்கள், தமிழ்மொழி தெரியாதவர்கள் பணியில் சேர உள்ளனர்.

தமிழ் தெரியாமல்...

தொடர்ந்து 2017 முதல் இதே போன்று வெளி மாநிலத்தவர், கிளார்க் பதவிகளுக்கு விண்ணப்பித்து, தமிழ் தெரியாமல் வேலை பார்க்கின்றனர். சென்ற ஆண்டு ஏறத்தாழ 400 வெளி மாநிலத்தவர் இவ்வாறு வங்கிகளில் பணியில் சேர்ந்துள்ளனர்.

வங்கிகளில் கிளார்க் பணிபுரிவோர் வாடிக்கை யாளரிடம் நேரடி தொடர்புடையவர்கள். குறிப்பாக கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் இவர்களின் சேவை மாநில மொழியில் இருப்பது அவசியம்.

ஆனால், வங்கிப் பணியாளர் தேர்வுக் கழகம் (தனியார் நிறுவனம்) நடத்தும் தேர்வு மூலமாக தமிழ் தெரியாதவர்கள், பெரும்பாலும் ஒடிசா, கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து கிளார்க் பணியில் சேரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இவர்கள் அனைவருக்கும் தமிழ் மொழி பேச, எழுத படிக்கத் தெரியாது.

மாநில மொழி கட்டாயம்

ஒன்றிய அரசின் நிதித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி, மாநில மொழி கட்டாயம் என வலியுறுத்துகிறது. ஆனால், பொதுத் துறை வங்கிகள் அதற்கு நேர்மாறாக செயல்படுகின்றன.

ஒன்றிய அரசின் நிதித்துறையில் ஓர் அங்கமாக இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் நேஷனல் இன்ஸுரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்ஸுரன்ஸ், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் போன்ற அரசு காப்பீட்டு நிறுவ னங்களில், கிளார்க் பணிகளில் சேருவதற்கு, அந்தந்த மாநில மொழிகளில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதி, முறையாகக் கடைப் பிடிக்கப்படுகிறது.

ஆனால், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் மட்டும் குறிப்பாக கிளார்க் பணிகளுக்கு, இந்த விதி தளர்த்தப்பட்டதால், மொழி தெரியாதவர்களும், கிளார்க் பணிக்கு சேரும் நிலை ஏற்பட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

நிரந்தரத் தீர்வாக...

வங்கித் தேர்வு நடத்தும் நிறுவனம் கிளார்க்  பணிக்கு மாநில மொழி அறிவு கட்டாயம் என ஏற்கெனவே இருந்த விதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதே நிரந்தரத் தீர்வாக அமையும்.

இப்பிரச்சினை குறித்து, ஒன்றிய அரசின் நிதியமைச்சர் மற்றும் வங்கித்துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசும் அதனை வலியுறுத்த வேண்டும் என்றும் 6.7.2023 அன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடை பெற்ற தலைமைச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வங்கிப் பணிகளில் தமிழ்நாடு இளைஞர்களின் வேலை வாய்ப்புப் பறிப்பைக் கண்டித்து ஜூலை14இல் தமிழ்நாடெங்கும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழர் தலைவர் அறிவித்தார். அதன்படி இன்று (14.7.2023) தமிழ்நாடெங்கும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் மாபெரும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. 

சென்னையில்....

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (14.7.2023) காலை 11 மணியளவில் திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர், ச. பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், தி.மு. கழக மாணவரணி இணைச் செயலாளர் எஸ். மோகன், அனைத்திந்திய இளை ஞர் பெரு மன்ற (கிமிசீதி) மாநிலத் தலைவர் தோழர் த.கு. வெங்கடேசன்,   விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநில செயலாளர் தோழர் சங்கத் தமிழன் ஆகியோர் ஆர்ப்பாட்ட கண்டன உரை நிகழ்த்தினர்.

பெருந்திரள் ஒலி முழக்கம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரண்டிருந்த தோழர்கள் எழுப்பிய முழக்கங்கள் வருமாறு:

* பறிக்காதே! பறிக்காதே! தமிழ்நாட்டு இளைஞர் களின் வாழ்வுரிமையைப் பறிக்காதே! வேலை வாய்ப்பைப் பறிக்காதே!

* அரசுடைமை வங்கிகளில் தமிழ்நாட்டில் பணி யாற்ற வடநாட்டவர்க்கு முன்னுரிமையா? வங்கிச் சேவைக்கு தமிழ் மொழி தேவையில்லையா?

* நடைமுறைப்படுத்து! நடைமுறைப்படுத்து! வங்கி எழுத்தர் பணிகளுக்கு மாநில மொழிகள் அவசியமென்பதை நடைமுறைப்படுத்து!  

* திணிக்காதே திணிக்காதே! மறைமுகமாக ஹிந்தி மொழியைத் திணிக்காதே! திணிக்காதே! தமிழ்நாட்டு வங்கிகளிலும் வடநாட்டவர்க்கே வேலை என்றால் படித்து முடித்து வேலைக்காகக் காத்திருக்கும் தமிழர்களுக்கு எதிர்காலம் இருளாவதா?

* உறுதிப்படுத்து! உறுதிப்படுத்து! தமிழ்நாட்டின் வேலைவாய்ப்புகள் தமிழர்க்கென்று உறுதிப்படுத்து! தமிழ்நாட்டின் வங்கிச் சேவை தமிழில் என்று உறுதிப்படுத்து!  ஏடிஎம் இயந்திரங்களிலும் தமிழ்ச் சேவையை உறுதிப்படுத்து!

* நடைமுறைப்படுத்து!  நடைமுறைப்படுத்து! அரசுப் பணிகள் அனைத்திலும் உயரதிகாரப் பதவி களிலும் இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப் படுத்து! நடைமுறைப்படுத்து!   ஒன்றிய அரசே! தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்து!  

* ரத்து செய்! ரத்து செய்! இடஒதுக்கீட்டில் பொரு ளாதார அளவுகோலை ரத்து செய்! ரத்து செய்! வெல்லட்டும் வெல்லட்டும் சமூகநீதிப் போராட்டம்! ஓங்கட்டும் ஓங்கட்டும் ஒடுக்கப்பட் டோர் போராட்டம்!

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் நா. பார்த்திபன் வரவேற்புரையாற்ற, மாநில இளைஞ ரணி துணைச் செயலாளர் மு.சண்முகப்பிரியன் தொடக்க வுரையாற்றினார். 

தென் சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் துரை. அருண், செயலாளர் ந. மணிதுரை, தாம்பரம் மாவட்ட இளைஞரணி செயலாளர் தே. சுரேஷ், வடசென்னை மாவட்ட இளைஞரணி செய லாளர் சு.  அரவிந்தகுமார், திருவொற்றியூர் மாவட்ட இளைஞரணி தலைவர் இரா. சதீஷ்குமார், த. கவுதம், சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணி தலைவர் நித்தியானந்தம், செயலாளர் தமிழரசன், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்கள் பொறியாளர் ச. இன்பக்கனி, வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி, மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரை ஞர் பா. மணியம்மை, பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் ஆ. வெங்க டேசன்,  தலைமை கழக அமைப்பளார் தே.செ. கோபால், மாவட்ட தலைவர்கள் எண்ணூர் வெ.மு. மோகன், வழக்குரை ஞர் தளபதி பாண்டியன், இரா. வில்வ நாதன், தாம்பரம் ப. முத்தையன், நீலாங் கரை ஆர்.டி. வீரபத்திரன்,  வளர்மதி, இறைவி, த. மரகதமணி,  உத்ரா பழனிச் சாமி ஆகியோர் முன் னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர் இர. சிவசாமி நன்றி கூறினார்.

பங்கேற்றோர்

மகளிரணி தோழர்கள் சி.வெற்றி செல்வி, தங்க.தனலட்சுமி, பூவை செல்வி, கொடுங்கையூர் கோ. தங்கமணி, ஆயிரம் விளக்கு சேகர், கோ.வீ. ராகவன், சூளை இராஜேந்திரன், அரும்பாக்கம் தாமோ தரன், சி.காமராஜ், வேலூர் பாண்டு, எஸ்.டி. செல்வராஜ், சேலம் மணிவண்ணன், வட சென்னை மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற செயலாளர் ஆ.சுரேஷ், சென்னை வடக்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் சத்தியநாராயணன், சென்னை மேற்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப் பாளர் ஓம்.குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை பொறுப்பாளர்கள் எழும்பூர் தொகுதி சேத்துப்பட்டு கோ.இளங்கோ, கு.வில்லான், சு.அன்பு தாசன், துறைமுகம் தொகுதி வட்ட செயலாளர்கள் ச.ராஜ்(60ஆவது வட்டம்), அ.கமல்(55ஆவது வட்டம்) ,பி.தென்னவன் (56ஆவது வட் டம்), மாவட்ட அமைப்பாளர்கள் துறை முகம் வ.முகிலன், வழக்குரைஞர் பூ.குமார், வீர.ரவிக்குமார், கோ.தமிழ்மணி, வழக் குரைஞர் நெப்போலியன், ராம்குமார், பாலு, சாய்ராம் உள்ளிட்ட பொறுப்பாளர் களும் ஏராளமான தோழர்களும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பொறுப் பாளர்கள் பங்கேற்றனர். திமுக மாணவரணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை, அனைத் திந்திய இளைஞர் பெருமன்றம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்   கலந்துகொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக