வெள்ளி, 23 ஜனவரி, 2026

முனைவர் பட்டம் பெற்ற கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜுக்கு டி.கே.நடராஜன் குடும்பத்தினர் ரூ.1 லட்சம் நன்கொடை

முனைவர் பட்டம் பெற்ற கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜுக்கு டி.கே.நடராஜன் குடும்பத்தினர் ரூ.1 லட்சம் நன்கொடை
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்
வீ. அன்புராஜ் முனைவர் பட்டம் பெற்றதை யொட்டி டி.கே. நடராஜன் குடும்பத்தினர் சார்பில் கண்ணுசாமி – சுசிலா ஆகியோர் பாராட்டுத் தெரிவித்து ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினர். அவர்களுக்கு நன்றி தெரிவித்த கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தனக்கு அளிக்கப்பட்ட நன்கொடை தொகை
ரூ.1 லட்சத்தை திராவிடர் கழக அறக் கட்டளைக்கு அப்படியே நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்றி.
- விடுதலை நாளேடு, 23.01.26

சனி, 17 ஜனவரி, 2026

தந்தை பெரியார் விருதினை வழக்குரைஞர் அ.அருள்மொழிக்கு முதலமைச்சர் வழங்கினார்

தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், சென்னை, வள்ளுவர் கோட்டத்தில், திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், 2025 ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது மற்றும் விருதுத் தொகையாக 5 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களுக்கு வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார். உடன், நீர்வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் மரு.நா.எழிலன், தலைமைச் செயலாளர் .நா.முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர்
ந. அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர் (சென்னை, 16.1.2026).
- விடுதலை நாளேடு, 17.01.26 

தென் சென்னை திராவிடர் கழகம் சார்பில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாடினர்


திராவிடர் கழகம்

தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு 15.01.2026 அன்று காலை 10:30 மணி அளவில், தென் சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் தியாகராயர் நகர் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டாடினர்.

தென்சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, துணைத் தலைவர் டி .ஆர். சேதுராமன் மற்றும் மு. சண்முகப்பிரியன், சா.தாமோதரன், மாவட்ட இளைஞரணி தலைவர் ந.மணிதுரை, இளைஞரணி செயலாளர் பெரியார் யுவராஜ், துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து, ச.மாரியப்பன், ஈ.குமார், சைதை ரா.ரவி, மா. இனியவள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

- விடுதலை நாளேடு, 17.01.26

அமைந்தகரை மோகன் அவர்களும் கலந்து கொண்டார்.

யூ டியூப் காணொலி





வியாழன், 8 ஜனவரி, 2026

பெரியார் களம் நடத்திய சட்ட விழிப்புணர்வு பயிலரங்கத்தில் கழகத் தலைவர் ‘‘ஜனநாயகம்” எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்!

 

ஜனநாயக முறையில் சர்வாதிகாரி ஆனவர்தான் ஹிட்லர்
இந்தியாவும் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது

ஆசிரியர் உரை

சென்னை.டிச.28. ‘‘சட்டப் பயிலரங்கம் என்பது அகல உழுவதை விட ஆழமாக உழுவதாக அமைய வேண்டும்” என பயிலரங்கு ஒருங்கிணைப்பாளர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

சட்ட விளக்க வகுப்புகள்

சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் குளுமை அரங்கில், 27.12.2025 அன்று காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும், பெரியார் களம் சார்பில் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஒரு நாள் சட்ட விழிப்புணர்வு பயிலரங்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை ஏற்று உரையாற்றினார். பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தொடக்க உரை நிகழ்த்தினார். முதல் வகுப்பாக, “சமூக மாற்றமும் – பெண்ணுரிமைக்கான சட்டங்களும்” எனும் தலைப்பில், கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, இரண்டாம் வகுப்பாக, ”சமூகநீதி – சட்டமும், போராட்டமும்” எனும் தலைப்பில், கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, மூன்றாம் வகுப்பாக, “மதச்சார்பின்மை – ஜனநாயகம் – மாநில உரிமை – அரசியல் அமைப்புச் சட்டம்” எனும் தலைப்பில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, நான்காம் வகுப்பாக, “இந்துசமய அறநிலையத்துறை சட்டமும் – கோயில் உரிமைகளும்” எனும் தலைப்பில் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி, அய்ந்தாம் வகுப்பாக, “தீண்டாமை ஒழிப்பும் முக்கிய வழக்குகளும்” எனும் தலைப்பில் வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆகியோர் காலை 10:30 மணி முதல் மாலை 5 மணி வரை பாடம் நடத்தினர். ஊடகவியலாளர் முரளிகிருஷ்ணன் சின்னதுரை மேடை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

டாக்டர் அம்பேத்கரின் கணிப்பு!

‘‘மதச்சார்பின்மை – ஜனநாயகம் – மாநில உரிமை – அரசியல் அமைப்புச் சட்டம்” எனும் தலைப்பில் வகுப்பெடுத்த திராவிடர் கழகத் தலைவர், சட்டம் தொடர்பான ஆழமான கருத்துகளை முன் வைத்துப் பேசினார். முதலில் இது போன்ற பயிலரங்குகள் நடத்துவதை வரவேற்ற அவர், “அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்” என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி, ” அதிகமான தலைப்புகளில் வகுப்புகளை ஏற்பாடு செய்வதைத் தவிர்த்து, ஆழமான கருத்துகளை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பற்றி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் அதிகம் பகிரப்படாத கருத்தை மாணவர்கள் முன்வைத்தார். அதாவது, “Even though i bounded by the supreme court judgment. But, i’m not respect to the same” என்று ஆழமாக சொன்னதை நினைவுபடுத்தினார். மேலும் அவர், Secularism, Socialism ஆகிய சொற்கள் பற்றி அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக்குழு விவாதங்களில் வரைவுக் குழுவின் தலைவர் அம்பேத்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசிய முக்கியமான, ஆழமான கருத்துகளை, புத்தகத்தை ஆதாரமாகக் கொண்டு கற்பித்தார்.

சட்டப்படி நடக்க வேண்டியவர்கள் அதனை மீறலாமா?

மதச்சார்பற்ற சட்டத்தின் அடிப்படையில் நடக்க வேண்டியவர்கள், ”என் மதம் தான் – இந்து மதம் தான் ஆளவேண்டும்” என்று வெளிப்படையாகப் பேசுவதைக் சுட்டிக்காட்டினார். Secularism, Socialism ஆகிய இரண்டும் இடைச்செருகல் என்று, ஒன்றிய அரசின் விளம்பரத்தில் அந்த இரண்டும் சொற்கள் இல்லாமல் வெளியிட்டதை நினைவுபடுத்தி, ”இடைச்செருகலாக இருந்தாலும், அந்த சட்டத்தின் மீதுதானே பிரமாணம் எடுத்துக் கொண்டு பதவி ஏற்றனர். அதை எப்படி மீற முடியும்?” என்ற ஆழமான கேள்வியை  மாணவர்களின் உள்ளத்தில் பதிய வைத்தார். தொடர்ந்து, அதைவிட மோசமான ஒரு தகவலை சுட்டிக்காட்டிப் பேசினார். அதாவது, “இந்தியா என்றாலே இந்து நாடுதான். இதை அரசியலமைப்புச் சட்டம் ஒப்புக்கொண்டால் என்ன? ஒப்புக் கொள்ளாவிட்டால் தான் என்ன?” என்று இதுவரை மறைமுகமாக பேசிக்கொண்டிருந்தவர்கள் வெளிப்படையாக பேசுவதை நினைவூட்டி, இதே சிந்தனைப் போக்கில், “ஜனநாயக முறையில் தேர்வாகித்தான் ஹிட்லர் சர்வாதிகாரி ஆனார். அந்த திசையில்தான் இந்தியாவும் சென்றுகொண்டிருக்கிறது” என்று சட்டக் கல்வி மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நிலைமையை புரியவைத்து தமது வகுப்பை நிறைவு செய்தார்.

சான்றிதழ் வழங்கல்!

நிகழ்வில் சட்டம் பயிலும் மாணவர்கள் உள்பட 50 மாணவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு வகுப்பு முடிவிலும் கேள்வி பதில் பகுதி நடைபெற்றது. சட்டக் கல்வி பயிலும் மாணவர்களும் மற்றவர்களும் இதை சரியாக பயன்படுத்திக் கொண்டனர். இறுதியாக அனைத்து மாணவர்களும் நடைபெற்ற பயிலரங்கம் பற்றி தங்களது கருத்துகளை மேடையில் பகிர்ந்துகொண்டனர். கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் ”பெரியார் களம்” அமைப்பு சார்பில் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

பங்கேற்றோர்

கழகத்தின் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, திராவிடர் கழகத்தின் வழக்குரைஞர் அணியின் மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் துரை.அருண், கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர்; வழக்குரைஞர் சு.குமாரதேவன் ஆகியோர் சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கி சிறப்பித்தனர்.  பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன்  வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.மரகதமணி, வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் நா.பார்த்திபன், க, கலைமணி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் குறிப்பேடு, எழுதுகோல் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் குழு ஒளிப்படம் எடுத்து கொண்டனர். இறுதியில் உடுமலை வடிவேல் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

-விடுதலை நாளேடு,28.12.25



கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமாக தொழிலாளர் சட்டங்களை மாற்றுவதா? திராவிடர் கழக வழக்குரைஞரணி கண்டனம்

 

பெரியார் உலகத்திற்கு நன்கொடை! காணொலி மூலம் மாதம் ஒரு முறை கலந்துரையாடல்
மதுரை – திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சினையை திறமையாகக் கையாண்ட தி.மு.க. அரசுக்குப் பாராட்டு!

திராவிடர் கழக வழக்குரைஞரணி கண்டனம்

சென்னை, டிச.28 27-12-2025 அன்று பெரியார் திடலில் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கலந்துரையாடல் கூட்டம் காலை 11 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தின் தொடக்க உரையாற்றிய  கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் கூட்டத்தின் நோக்கத்தினையும், கழகத்தின் உயிர்ப்புடன் திகழ்ந்து வரும் வழக்குரைஞரணியின் செயல்பாடுகள் அனைத்திலும் அதிகமாக இருக்க வேண்டும் என்றும், வருகின்ற தேர்தல் மிக முக்கியத்துவமான தேர்தலாகும். தமிழ்நாடு முழுவதும் நம்முடைய வழக்குரைஞர்கள் அந்தந்த மாவட்டத்தில் காவல்துறை கூட்டங்களுக்கு அனுமதி மறுப்போ, தோழர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அதற்கு தீர்வு காண வேண்டும் என்று கூறி வருகை தந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். சமூகநீதி களத்தில் இன்னும் தந்தை பெரியார் தேவைப்படுகிறார் என்றும் சமுதாய பிரச்சினைகளில் வழக்குரைஞரணி அதிகமாக ஈடுபட வேண்டும் என்றும் எடுத்துரைத்து உரையாற்றினார்.

திராவிடர் கழகத்தின் வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், வழக்குரைஞரணி செயலாளர் மு.சித்தார்த்தன் ஆகியோர் வழக்குரைஞரணியின் செயல்பாடுகளை எடுத்துக் கூறினார்.

வருகைதந்து சிறப்பித்த வழக்குரைஞர்கள் அனைவரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

கழகத் தலைவர் தலைமை உரை

‘‘நமது கழகத்தின் வழக்குரைஞர்கள் நேர்மையாக பணியாற்றகூடியவர்கள் – நம்பகத்தன்மையோடு செயல்பட்டு வருபவர்கள். திருப்பரங்குன்றத்தில் ஜாதி, மத மோதல்களை நீதிமன்றத்தை வைத்து அரசியல் செய்து வரும் சங்பரிவார் கும்பல்களின் திட்டங்களை முறியடிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்த வேண்டும்.

நீதிமன்றத் தீர்ப்புகளை நமது வழக்குரை ஞர்கள் ஆழ்ந்து படிக்க வேண்டும். படித்து ஒவ்வொரு பிரச்சினையிலும் கழக வழக்குரை ஞர்கள் தெளிவாக கருத்தினை ஆழமாக பேச வேண்டும்.

வலதுசாரி அமைப்பினர் நீதிமன்றங்களை கையில் வைத்துக் கொண்டு கோேலாச்சி வருகிறார்கள். இடதுசாரி அமைப்புகளை போல தொடர்ந்து களத்தில் நின்று பணியாற்ற வேண்டும்’’ என்று கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையேற்று உரையாற்றினார்.

முக்கியமான – காலத்திற்கு தேவையான 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கலந்துக் கொண்ட வழக்குரைஞரணி பொறுப்பாளர்கள் – தோழர்கள் :  வழக்குரைஞர்கள் அ.அருள்மொழி, ஆ.வீரமர்த்தினி,  ஆ.பாண்டியன்,  சு.குமாரதேவன், மு.க.இராஜசேகரன், சி.அமர்சிங், கே.வீரமணி, ஜெ.துரைசாமி, மு.சென்னியப்பன், எஸ்.நாகநாதன், எஸ்.வாஞ்சிநாதன்,  துரை.அருண், மாரிமுத்து, வே.கனிமொழி, ரட்சனா, ஆர்.மணிகண்டன், மனோஜ்குமார், வெங்கடேசன், பிரியா, ஆர்.சக்திகுமரன், தம்பி.பிரபாகரன், மு.சண்முகப்ரியன்,  மு.ராசா, கே.பாலகிருஷ்ணன், ஆர்.அண்ணாமலை, எம்.நடராசன், சோ.சுரேஷ், சு.சிங்காரவேலன், பாஸ்கர், திலகவதி, சூரியா.

வழக்குரைஞரணி புதிய பொறுப்பாளர்கள்:

வழக்குரைஞர் துரை.அருண் (கழக வழக்குரைஞரணி மாநில துணைச் செயலாளர்)

வழக்குரைஞர் வே.கனிமொழி  (மதுரை மாவட்ட கழக  வழக்குரைஞரணி அமைப்பாளர்)

வழக்குரைஞர் டி.ரமேஷ் (குடந்தை மாவட்ட கழக வழக்குரைஞரணி அமைப்பாளர்)

பத்து தீர்மானங்கள்

பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்குவது, திருப்பெருங்குன்றம் பிரச்சினையை சாதுரியமாகக் கையாண்ட தி.மு.க. அரசுக்குப் பாராட்டு உள்ளிட்ட தீர்மானங்களோடு, கார்ப்பரேட் முதலாளிகள் கொழுக்கும் வண்ணம் தொழிலாளர் சட்டங்களை மாற்றியமைத்தஒன்றிய தொழிலாளர் விரோத சட்டத்திற்குக் கண்டனம் உட்பட 10 தீர்மானங்களை திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில்  ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம்: (1)  மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மிக உறுதியாகவும் சரி யாகவும் செயல்பட்டு வருவதோடு இந்து காவி அமைப்புகள் உண்டாக்க நினைத்த மத கலவரத்தை ஒடுக்கி, சமூக நல்லிணக்கத்தை உருவாக்கிய தமிழ்நாடு அரசை இக்கூட்டம் பாராட்டுகிறது. இதற்குக் காரணமானவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: (2)  தமிழ்நாடு முழுவதும் வழக் குரைஞர்களுக்கு இடையூறை ஏற்படுத்தி உள்ள  E-Filing (இபைலிங்) மனுத்தாக்கல் முறையினை மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்றும், வழக்குரைஞர்கள் சங்கங்கள் போராடி வருவதை  அக்கறையுடன் பரிசீலித்து, உள்கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென்றும் மாண்பமை தலைமை நீதிபதி அவர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. மேலும், தமிழ்நாடு அரசும், உயர்நீதிமன்றமும், வழக்குரைஞர்களுடன் கலந்து பேசி நடை முறைக்கு சாத்தியமான வழிகளை கண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் படியும், அனைத்துக் கிழமை நீதிமன்றங்களிலும் பணி யாற்றும் வழக்குரைஞர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் தீர்வு காண இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம்: (3)  நீண்ட காலமாக நடைபெற்று வரும் சிதம்பரம் நடராஜர் ஆலயப் பிரச் சனைக்கு தனிச்சட்டமியற்றி அதை இந்து அறநிலையத்துறையே மீண்டும் கையகப்படுத்த  தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது.

பெரியார் உலகத்திற்கு நன்கொடை!

தீர்மானம்: (4) பெரியார் உலகத்திற்கு மாநில வழக்குரைஞரணி சார்பில் பத்து இலட்சத்திற்கு மேல் வழங்குவது என முடிவெடுக்கப்படுகிறது.

தீர்மானம்: (5) சாலையோர அரசு இடங்களில் அனுமதியின்றி  கட்டப்பட்டுள்ள அனைத்து மத சின்னங்களையும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளின்படி அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை இக்கூட்டம் கேட்டுக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்: (6) கழக வெளியீடுகளான விடுதலை, உண்மை, தி மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆண்டு சந்தாக்களை வழங்குவதென முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம்: (7) நமது அறக்கட்டளை சார்பில் தனியே சட்டக்கல்லூரி ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அதற்குத் தமிழர் தலைவர் அவர்கள் ஆவன செய்ய வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

மாதம் ஒரு முறை காணொலி மூலம் கலந்துரையாடல்

தீர்மானம்: (8) மாதம் ஒருமுறை காணொலி (ZOOM  Meeting) மூலம் மாநில அளவில் கலந் துரையாடல் கூட்டம் நடத்துவதென்றும் முடிவெடுக்கப்படுகிறது.

தீர்மானம்: (9) ஒவ்வொரு மாவட்டத்திலும் வழக்குரைஞரணி விரைவில் கட்டமைக்கப்படும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்: (10) தொழிலாளர்களுக்கு நன்மை அளித்து வந்த – ஏற்கெனவே நடைமுறைலிருந்த சட்டங்களை ரத்து செய்து தொழிலாளர்கள் உரிமைகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட் முதலாளிகள் பயன்பெறும் வகையில் தொகுப்பு சட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ள, பி.ஜே.பி. அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டிப்பதுடன், பழைய சட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்திட கேட்டுக் கொள்ளப் படுகிறது.

- விடுதலை நாளேடு,28.12.25




வெள்ளி, 2 ஜனவரி, 2026

அ. அன்பரசன் – பொ. மந்த்ரா அபிநயா ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினைத் தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்